கும்மாங்குத்து! (+ blogiterature)

நமது மரபு 'கதைகள்' கொண்ட மரபு. எதற்கெடுத்தாலும் ஒரு கதை இருக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் சுவையானது என்பது நமது பண்பாட்டு விழுமியங்களுள் ஒன்று. உலகின் மிகப்பெரிய இதிகாசமான 'மகாபாரதம்' நம்மிடம்தான் உள்ளது. நாம் மதிக்கும் தமிழ் இலக்கியவாதிகள் எல்லோரும் மகாபாரதத்தைப் பாராட்டாது இருக்கமாட்டார்கள். இன்று பேசும் மாஜிக்கல் ரியலிசம், அறிவியல் புனைவு போன்ற பல நவீன இலக்கியத்தடங்கள் அன்றே மகாபாரதத்தில் காணக்கிடைப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். கதைகள் ஏன் சொல்ல வேண்டும்? நற்பண்புகளை கதைகள் மூலம் சொல்லலாம். சமூகம் ஒழுங்காக நடப்பதற்காக நீதிக்கதைகள் உருவாயின. இப்படி எத்தனையோ காரணம் சொன்னாலும், கதையின் முக்கியப் பயன் காலத்தைப் போக்குவதுதான்!

இதை உணர்ந்துதான் ஹரிகதா காலாட்சேபம் என்றார்கள். ஹரி கதை கேட்டு காலத்தைப் போக்கு! காலத்தை ஏன் போக்க வேண்டும்? ஏனெனில் காலம் கைவசமிருக்கு. அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரிவதில்லை. இதுவே எல்லாவற்றிற்கும் அடிப்படை. இந்தப்பொழுதை நல்ல படியாக, மற்றவருக்கு துன்பம் தராதவாறு, அதே நேரத்தில் தனக்கும், பிறருக்கும் களிப்பளிக்கும் வண்ணம் எப்படிச் செலவிடுவது என்பதுதான் நம் முன்னால் இருக்கும் சவால்! "வாய்மை" என்றாலே யாருக்கும் "தீது இலாத சொலல்" என்பது வள்ளுவன் கருத்து. இப்படியெல்லாம் யாரும் இருப்பதில்லை. கனியிருப்ப காய் கவர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். இருப்பினும் தமிழ் வாழ்வின் முக்கிய இலக்கிய உந்துதலாக இந்தப் பண்பு (principle) இருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

இந்தக் கதை கேட்கும் குணமே நமது வலைப்பதிவையும் நடத்திச் செல்கிறது! சரி, அவர் என்ன 'சொல்றார்ன்னு பாப்போம்' என்று காலாட்சேபம் செய்து கொண்டு இருக்கிறோம். அதில்தான் எத்தனை போட்டிகள், பொறாமைகள் :-) என் கதை கேளுடா! அவன் கதை உனக்கெதுக்கு என்று பலர் இணையத்தில் உலாவுவதைக் காண்கிறோம்! இப்படிக் கதை கேட்கும் குணத்தை அறிந்து கொண்டு சிலர் பெரிய தொண்டர் குழாத்தை உருவாக்கி தானொரு கடவுள் என்று கதை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். பிறந்தவுடனே நாம் செய்யும் முதல் வேலையே 'கவன ஈர்ப்பு'தான். பின் அழுகை எதற்காக? அன்று ஆரம்பித்தது சாகும்வரை தொடர்கிறது. நம்மை யாராவது கவனித்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். நாம் எல்லோருக்கும் முன்னால் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதைச் சிலர் விளையாட்டாகச் செய்கின்றனர். சிலர் வன்மத்துடன் செய்கின்றனர். விளையாட்டாகச் செய்வது நம்ம உஷா செய்வது போல். தனது பதிவு முதல் பத்தில் விழுந்துவிடவேண்டுமென்ற 'முதல் மரியாதை' syndrome :-)) சில விஷமிகள், கஷ்டப்பட்டு ஒருவன் புகழடையும் போது அவனைத்தாக்குவதன் மூலம் அவனடையும் அதே கவன ஈர்ப்பைப் பெறுகின்றனர். ஜெர்மனியில் கொஞ்ச காலம் இத்தகைய கவன ஈர்ப்பு 'போர்க்குணம்' என்ற பேரில் இலக்கிய வட்டத்தில் வலம் வந்தது. காரணம் யாரும் புகழடையக்கூடாது. உடனே அஸ்திவாரத்தை நொறுக்கிவிட வேண்டும். இப்படியொரு சிந்தனை!

ஆனால் பெரும்பாலோனோர் தனக்குத் தெரிந்ததை மற்றவருக்குச் சொல்லவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே எழுதுகின்றனர். சிலருக்கு நமக்கு என்ன தெரியும்? நம்ம என்னத்தை மற்றவருக்கு சொல்ல இருக்கிறது? என்று மவுனமாக இருக்கின்றார்கள். சிலர் வாசகர்களாக உள்ளே இறங்கி வாசிக்க, வாசிக்க, பின்னூட்டம் தரத்தர, 'அட! இவங்களெல்லாம் எழுதற மாதிரி, நம்ம கூட எழுதலாமே' என எழுதத் தொடங்குகின்றனர். உண்மையில் சிந்திக்கும் எவரும் எழுதலாம். எழுத ஆரம்பித்த பின்தான் பல கேள்விகள் வரும்? அந்தக் கேள்விகளுக்கு இத்தனை நாள் பதில் தெரியாமல் உட்கார்ந்திருந்தோமே என்று தோன்றும்! எழுத்து சிந்தனையைக் கூர் செய்யும் நல்ல பயிற்சி. எழுத ஆரம்பித்த பின் இருப்பது 'காலிக்குடம்' என்று அறிந்து விட்டால், அவன் ஞானி! ஆயினும் எழுதுவதற்குக் காரணம் எழுத்து ஒரு சுகம். சிந்திப்பது சுகம்! 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற நல்ல புத்தி! இதுதான் மவுனமாக இருந்துவிட வேண்டும் என்று எண்ணுபவர்களையும் எழுத வைப்பது.

வலைப்பதிவிற்கு அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் இலத்திரன் உலகின் அடிப்படைக் குணாம்சம் வேகம். வாயு வேகம், மனோ வேகமென நடக்கும் காரியத்தில் சிந்த்தித்து செயல் பட வேண்டுமென்ற அவசியமில்லை. சிந்தனைச் சிதறல்களை வீசி விட்டால் கூட அதற்கு மறுமொழி கிடைக்கும். பின் அதை வைத்து 'காலத்தை ஓட்டலாம்'. அப்படியெனில், இந்த அவசர கதி எழுத்து ஏதாவது புதிய இலக்கிய வடிவத்தை, பாதையைத் தமிழுக்குத் தருமா? யோசிக்க வேண்டிய தருணம். வலைப்பதிவாளர்களின் பலம், பலவீனமும் அவர்களுக்கு ஆழமான தமிழறிவு இல்லை என்பதுதான் (என்னையும் சேர்த்து). பெரும்பாலோர் தொழில்துறை வல்லுநர்கள். அவர்களின் ஈர்ப்பு தொழில்நுட்ப வளர்ச்சியே தவிர தமிழ் அல்ல. ஆயினும் முதன்முறையாக அவர்கள் சிந்தனை தமிழில் பதிவாகிறது. இணையம் தோன்றிய உடனே என்னைக் கவர்ந்தது, இணைய வாசகர், எழுத்திலுள்ள quality. இவர்கள் சர்வ தேசத்தமிழர்கள் என்பதால் இவர்களின் standard மற்றோரைவிட பல மடங்கு உயரத்திலிருப்பதே! இப்போது கூடப்பாருங்கள், வலைப்பதிவிலிருக்கும் அறிவியல் பின்புலம், வேறு எந்தத்தமிழ் வாசிப்புலகில் கிடைக்கிறது? இந்தப்பின்புலம் இருந்தால் தமிழ்நாடு எவ்வளவுதூரம் சுய கவுரவத்துடன்் முன்னேறியிருக்கும்?

'வலைப்பதிவுத் தமிழ்' போடும் தடம் எப்படியிருக்கும் என்று இன்றிலிருந்து ஒரு ஐம்பது ஆண்டுகள் தாண்டிக் காண ஆசை. உங்களில் சிலர் அதை நிச்சயம் காண்பீர்கள்.

3 பின்னூட்டங்கள்:

காசி (Kasi) 3/01/2005 11:25:00 AM

//எழுத ஆரம்பித்த பின்தான் பல கேள்விகள் வரும்? அந்தக் கேள்விகளுக்கு இத்தனை நாள் பதில் தெரியாமல் உட்கார்ந்திருந்தோமே என்று தோன்றும்! எழுத்து சிந்தனையைக் கூர் செய்யும் நல்ல பயிற்சி. //ஆமாம் சரியாச் சொன்னீங்க, இதை உணர்ந்திருக்கிறேன். இன்னொண்ணு, அரைகுறையாய்த் தெளிவில்லாமல் தெரிந்துவைத்திருக்கும் விஷயங்கள், நாலுபேர் முன் எழுதவேண்டி வரும்போது மீண்டும் படித்து தெளிவடைகிறதையும் உணர்ந்திருக்கிறேன்.

Suba 3/01/2005 11:18:00 PM

நல்ல அலசல் கண்ணன். உங்களுக்கு இருக்கும் தமிழ் இணைய அனுபவம் ரொம்ப ரொம்ப சுவராசியமானது. போட்டிகளும் பொறாமைகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.அது குறையாது. அது நல்ல நோக்கத்தோடு இருக்கும் போது வளர்ச்சியைத் தருகிறது. ஆனால் தனி மனித தாக்குதலாக அமையும் போதுதான் அது நோக்கம் மாறி பிறரைத் துன்புருத்துவதாக அமைந்து விடுகிறது. சில நேரங்களில் சிலரது செயல்களுக்கு காரணமே புரிவதில்லை. இணையத்தில் கூட காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் காட்டுகின்றவர்கள் (இவர்கள்) பரிதாபத்துக்குறியவர்களே! இவர்களுக்கு மன வளர்ச்சி (பக்குவம்) குறைவு என்று எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

-/பெயரிலி. 3/02/2005 06:30:00 AM

/சில விஷமிகள், கஷ்டப்பட்டு ஒருவன் புகழடையும் போது அவனைத்தாக்குவதன் மூலம் அவனடையும் அதே கவன ஈர்ப்பைப் பெறுகின்றனர். /என்ன இருந்தாலும், மாலடிமை, திருமாவளவன் போன்றவர்களைத் தாக்கும் பதிவுகளை இடுவதையே தம் வாழ்வின் சமூகசேவை என்றெண்ணும் தமிழ்வலைப்பதிவாள நடிகர்தாஸ¤களை இந்த அளவுக்கு நேரடியாகத் தாக்குவதற்கு உங்களுக்கு நிறையத் துணிவுதான் ;-)