தமிழ் படிக்க ஆசை வந்துச்சே!

பல நாட்களாக எழுத வேண்டுமென்று தள்ளிப்போட்டு வந்த ஒரு விஷயம் சமீபத்திய தினமணியில் வந்த ஒரு சேதியால் இன்று எழுத வேண்டியதாயிற்று.
லீ ஹூ ஜின் எனும் கொரியப்பெண் சரளமாகத் தமிழ் பேசுவதாக ஒரு சேதி வந்துள்ளது. புடவை கட்டி குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்தச் சிறப்புச் சேதியில் விட்டுப்போயுள்ள ஒரு முக்கிய விஷயம் கொரிய மொழிக்கும் (ஹன்குல்) தமிழுக்குமுள்ள தொடர்பு பற்றியது. கொரியாவில் வாழும் பல தமிழர்கள் சரளமாக ஹன்குல் பேசுகின்றனர். ஒரு தமிழ் மாணவர் எனக்கு ஒரு மணி நேரத்தில் கொரிய மொழியை எப்படி வாசிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்.

கொரியாவிற்கும் இந்தியாவிற்குமுள்ள தொடர்பு ரொம்ப ஆதியானது. புத்தம் தோன்றிய சில நூற்றாண்டுகளூக்குள் அது கொரியா வந்துவிட்டது. அப்படியெனில் சங்ககாலத்தில் எப்படி பௌத்தம் தமிழ் மண்ணில் கோலோட்சியதோ அதே போல் கொரியாவிலும் கோலோட்சியிருக்கிறது. பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இரண்டு நகரங்களில் பிரபலமாக இருந்திருக்கின்றன. வடக்கே நாளந்தா. தெற்கே காஞ்சிபுரம். தமிழ் அங்கு போனதற்கான முதல் ஆதி காரணமிது.

கொரிய மொழி ஆசிய மொழி. பெரும்பாலான ஆசிய மொழிகளில் சமிஸ்கிருத, தமிழ் ஆளுமை தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. பர்மா, தாய், கம்போடியா, இந்தோனிஷியா போன்ற நாடுகளில் பாமரனுக்குக் கூட புரியும் வகையில் அத்தொடர்பு வெளிப்படையாகவே உள்ளது. ஆனால், கொரிய, ஜப்பானிய மொழியில் அது பூடகமாக உள்ளது. காரணம் கொரியா ஒரு காலத்தில் சீனாவின் துறைமுக நாடாக இருந்திருக்கிறது. சேரநாடு தமிழ்நாட்டிற்கு இருந்தது போன்று. இவர்கள் அடிப்படையில் சீன, மங்கோலிய இனத்தவர். ஆனால், முன்பு சொன்ன அத்தனை நாட்டு மக்களும் இந்தியக் கலப்பு உள்ளவர்கள். கொரியாவிலும் இந்திய ஜீன் உள்ளது. ஆனால் குறைந்த சதவிகிதத்தில். [நம்ம ஊர் அய்யங்கார் அம்பிகள் கொரியர்கள் போல இருப்பது எதேச்சையானதல்ல]

எழுத்தச்சன் மலையாளத்திற்கு செய்தது போல இங்கு ஒரு அரசன் 15ம் நூற்றாண்டில் ஹன்குலுக்கு தனி வரிவடிவம் கொடுத்து அதைச் சீன ஆளுமையிலிருந்து பிரித்துவிடுகிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மாடல் மொழி தமிழ் என்று தோன்றுகிறது. ஹன்குலும் உயிரெழுத்து, மெய்யின்மீது மேவ பிறப்பதே. க்+அ=க என்று பலுப்புகிறோம். அங்கும் அதே! என்ன, அவர் புத்திசாலித்தனமாக ஒன்று செய்துவிட்டார். க்+அ என்று உள்ளுக்குள் அமைப்பு இருந்தாலும் தமிழில் இவ்வொலிக்கென 'க' என்ற வரிவடிவம் கொடுத்திருக்கிறோம். ஹங்குலில் அப்படியே எழுதிப் படித்து விடுகிறார்கள். இது பல சிக்கலைத் தவிர்கிறது. 12+18=30 எழுத்தோடு தமிழ் முடிந்திருக்க வேண்டியது. ஹங்குலில் இதைவிட எழுத்துக் குறைவு. சீன அடுக்கு முறையைக் கையாண்டு இவர்கள் இந்த விகிதங்கள (அதாவது, க் அ என்று எழுதிவிடுவர். க என்று உச்சரித்துப்பழக வேண்டும்).

அடுத்து தமிழுக்கு உள்ள 'க' (நான்கு வித பலுப்பல்), ச, ஸ, ஷ, ஜ வித்தியாசம் ஹன்குலில் கிடையாது. 'ச' என்று எழுதிவிட்டு 'ஜ' என்று உச்சரிப்பர். அது இடத்திற்கு ஏற்றவாறு மாறும். முருக, முருஹ என்று நாம் பலுப்பதுபோல்.

அடுத்தமுறை சென்னை வந்தால் லீ ஹூஜின்னைப் பார்த்துப் பேச வேண்டும். அதைவிடச் சரளமாகத் தமிழ் பேசும் அவர் பெண்களிடம் பேச வேண்டும்.

Garage Cinema in Tamil

சினிமாத் தொழில்நுட்பம் மெல்ல, மெல்ல குட்டி ஆர்வலர்கள் கைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கணினி சார்ந்த இணையம் தன் பல்லூடகத்தன்மையால் இதைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது.

முன்னேப்போதுமில்லாத அளவு டிஜிட்டல் வீடியோ கேமிரா சொல்ப சம்பாத்யம் உள்ளவர்கள் கூட வாங்கும் அளவிற்கு உள்ளது. என் பெண் பிறந்த போது ஜப்பானில் இருந்தேன். அப்போது டிஜிட்டல் கேமிரா கிடையாது. அனலாக் கேமிரா மட்டும்தான். அதுகூட விலை. அவள் ஆரம்பப்பள்ளி போகும் போதுதான் என்னால் ஒரு அனலாக் கேமிரா வாங்க முடிந்தது. அவள் பிஞ்சு நடையை மீண்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணும் போது காசைப் பார்க்காமல் அப்போதே கேமிரா வாங்கியிருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இந்த செண்டிமெண்ட் ஒரு புறமிருக்க, இம்மாதிரிக் கேமிராக்கள் சில அசர்ந்தப்பங்களில் பெரிய பலனைக் கொடுத்துவிடுகின்றன. செப்டம்பர் 11 நிகழ்ச்சியைப் பல கேமிராக்கள் பிடித்ததனால்தான் நமக்கு தத்ரூபமாக அந்த நிகழ்ச்சியைக் காணமுடிந்தது. இப்போதெல்லாம் டூரிஸ்ட்கள் கைகளில் சின்ன டிஜிட்டல் கேமிரா இல்லாமல் இருப்பதில்லை. பார்ப்பதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருப்பார்கள். இதன் விபரீத பலன் பற்றி 'சதி லீலாவதியில்' கமல் அருமையாகக் காட்டியிருப்பார் :-)

இம்மாதிரிக் குறு, குறும்படங்கள் எடுப்பதை Garage Cinema என்கிறார்கள். இந்தப் பெயர் அறிமுகமாவதற்கு முன்பே நான் சின்னச் சின்னப் படங்கள் எடுத்து குறு, குறும்படங்கள் தயாரித்து இருக்கிறேன். இவைகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை வீடியோ செக்ஷனில் வைத்துள்ளேன். அதில் டைட்டில், இசை என்று விளையாடியிருப்பேன். அது சுயதம்பட்டம் அடிப்பதற்காகச் செய்ததல்ல. அதைப் பார்த்துவிட்டு மற்றவரும் கலாச்சாரப் படங்களை எடுத்து அனுப்புவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படிச் செய்தேன். ஆனால், கூச்ச சுபாவமுள்ள தமிழர்கள் இதை வேடிக்கை பார்த்துவிட்டு, இன்னும் புரபஷனலாகச் செய்திருக்கலாமென்று எழுதிவிட்டனர். Garage Cinema என்பதே கற்றுக்குட்டிகளுக்கான மீடியம். இப்போது Microsoft Movie Maker தரும் சௌகர்யங்களை வைத்துக் கொண்டு நம்மால் முடிந்த அளவு சினிமா தயாரிப்பதே இதன் நோக்கம்.

கேமிரா உள்ள தமிழர்கள் தமிழகத்தில் சுற்றிய வண்ணமே உள்ளனர். படமும் எடுக்கிறார்கள். அவைகளைப் படமாக்க அதிக சிரமமில்லை இப்போது. இப்படி நீங்கள் தயாரிக்கும் படங்களை நாம் முதுசொம் சேகரித்திலடலாம். என்னென்ன படங்களை நாம் சேகரிக்கலாம்?

1. கிரகப்பிரவேசம்
2. பூப்புனித நீராட்டுவிழா
3. கல்யாணம்
4. கோயில் திருவிழா
5. கிராமிய விழாக்கள்
6. சுற்றுலாத்தலங்கள் (கோயில், இயற்கை, கல்வெட்டு, குகை ஓவியங்கள்)
7. நாட்டுப் பாடல்கள் (கிராமியக் கலைஞர்கள் அல்லது நண்பர்கள், சுற்றத்தார்)

இப்படிப்பல...

சமீபத்தில் நான் அங்கோர் கோயிலில் எடுத்த சில காட்சிகளை திசைகள் சுற்றுலா இதழில் இட்டிருந்தேன். இக்காட்சிகளை உங்களுக்காக மீண்டும் இங்கு இடுகின்றேன்.

1. படுகு சவாரி
2. அங்கோர் கோயிலில் காலை உதயம்

வலைப்பதிவில் இது பற்றிய ஒரு புதிய பிரக்ஞையை காசி உருவாக்கி வருகிறார். இப்படங்களை எப்படி எடுப்பது, எப்படி எடிட் செய்வது என்பது பற்றி அவர் கட்டுரை எழுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது பயனுள்ள முயற்சி.

எங்கே உங்கள் படங்களை தமிழுலகிற்குத் தாருங்களேன்!

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!



திடீரென்று பழைய படங்களின் வீடியோ பார்க்க வேண்டும் போல் ஆசை வந்து விட்டது. "இனியவை நாற்பது, இன்னா நாற்பது" என்பது போல் இப்போதெல்லாம் பழயவை இனியவை என்று எத்தனையோ வீடியோக்கள் வந்துவிட்டன. எல்லாம் கருப்பு, வெளுப்புப் படங்கள். தியேட்டரில் பார்க்கும் போதே சரியாகத்தெரியாது, வீடியோவிற்கு வரும் போது உள்ளதும் மங்கிப்போய் விடுகிறது. ஆனாலும் தமிழ் சினிமாவின் வசீகரமே தெரிந்தும் தெரியாமலும் காட்டுவதுதானே! அதுவும் நமது அந்தக்காலத்து நடிகைகள் இக்கலையில் தேர்ந்தவர்கள். கண்ணால் கூப்பிடுவர், கை தொட்டால் விலகிடுவர். முகபாவத்தை வைத்துக்கொண்டு மட்டுமே தமிழ் சினிமா பல தசாம்சங்கள் ஓட்டியிருக்கிறது. இப்போது பார்க்கும் போதுதான் தெரிகிறது எல்லா நடிகர்களும், நடிகைகளும் உச்சத்தை எட்டும் போது பாதிக்கிழடு ஆகியிருக்கின்றனர். யௌவனம் என்பது மட்டுமில்லை, நடிகைகளெல்லாம் தளுக்கு மினுக்கு என்று தள, தள என்று இருக்கிறார்கள். பெரிய வயிறை வைத்துக் கொண்டு அரைப்பாவடையில் நடிகைகள் நடனம் ஆடுகின்றனர். ஏற்றிக்கட்டிய கச்சை, பள, பளவெனும் சாட்டின் ரவிக்கை....வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ் சினிமா இப்போது எவ்வளவு மாறிவிட்டது! உண்மையிலேயே இளைஞர்கள் நடிக்கிறார்கள் (ஆனால், சார்லி, விவேக் என்ற சகபாடிகள் மட்டும் 30-40 எட்டிவிட்டார்கள்!) சிலுக்கு, ஜோதி போன்ற போர்னோ நடிகளைகளை ஓரம் தள்ளிவிட்டு சிம்ரன், ரம்யா என்று செக்ஸைப் பிழிந்து காட்டும் கட்டழகுகள் வந்து விட்டன. ஐஸ்வர்யராய் நடிகைகளின் ஆதர்சமாக இருக்கிறார். சிவாஜி ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சைஸில் இருப்பார். அவர் குரல், முகம் இதை மட்டும் வைத்தே அவர் காலத்தின் பெரும்பகுதி ஓடிவிட்டது (எவ்வளவு சௌந்தர்யமான நடிகர் அவர். உடலைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அவர் காலத்தை ஓட்டிவிட்டார்). எம்ஜியார் மட்டும் எப்போதும் ஒரே மாதிரி பூசிய உடம்பை வைத்திருந்தார்.

இன்றையப் படங்களைக் காணும் போது இல்லாத ஒரு அன்னியோன்யம் பழைய படங்களில் வருகிறது. காரணம் சம வயது போன்ற ஒரு பாவனையால் கூட இருக்கலாம் :-) யார் கண்டது?

லலிதா, பத்மினி, ராகினி, சாவித்திரி, சரோஜாதேவி, கமலா லட்சுமணன்......ம்ம்ம்ம்ம்

குட்நைட்!

கொரியாவில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு

சமீபத்திய தினமணியில் இதுபற்றிய எழுதிய என் கட்டுரை வந்துள்ளது. வாசித்துப் பயன்பெறுங்கள்.

கொசுறு: தமிழர்களின் பெரிய லொள்ளு இவர்கள் தங்களை ஆங்கிலேயர்கள் போல் பாவித்துக்கொண்டு ஆசிய மொழியின் மென்மையான உச்சரிப்புகளை தடா,புடாவென்று ஆங்கிலேயன் போல் உச்சரிப்பது. திருவனந்தபுரம் என்று நம்மவர் சொல்லமாட்டார் 'றிவாண்றம்' என்று சொல்லுவர். அதுதான் இந்த கட்டுரைக்கு நடந்துள்ளது. நான் சரியான உச்சரிப்பை தமிழில் எழுதினால் இவர்கள் ஆங்கில உச்சரிப்பில் திருத்தி எழுதியுள்ளார்கள் (என்னை மடையனாக்கி விட்டார்கள்!).

சரியான உச்சரிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Hyundai = ஹேஉந்தே (ஹுண்டாய் அல்ல!!)
Toyota = தொயோத்தா (டொயோட்டா அல்ல)
Honda = ஹோந்தா (ஹோண்டா அல்ல)
Samsung = சாம்சொங் (சாம்சங் அல்ல)
Nazi = நாட்சி (நாஜி அல்ல) [இது கட்டுரைக்கு சம்மந்தமில்லாதது]

அதே போல் அதீத கற்பனையை தமிழனுக்குள் உருவாக்குவது. நான் கொடுத்த உண்மையான படங்களை விட்டு, விட்டு ஏதோ கற்பனைப் படங்களைப் போட்டுள்ளார்கள்! தமிழ் பதிப்புத்துறை என்று திருந்தும்?

You've Got Mail

இணையம் புத்தம் புதிதாய் வந்தபோது தொழில்வல்லுநர்களை உற்சாகப்படுத்தியது போல் எழுத்தாளர்களையும் ஆர்வப்படுத்தியது. இணையத்தைக் களமாய் வைத்து புதிய இலக்கியம் பிறந்தது. 1998-ல் வெளியான ஒரு படம்தான் You've Got Mail. எனது அபிமான நடிகர் டாம் ஹாங்ன்ஸ்் நடித்தது. மின்னஞ்சல் கிளப்பும் மந்திர உலகில் பிரவேசித்து காதலர்களாகும் கதை. வெறும் மின்னஞ்சல் மட்டுமே தூள் கிளப்பிக்கொண்டிருந்த காலம். இப்போதுபோல் வெப்காம், வாய்ஸ் சாட் இல்லாத காலம். அடுத்த முனையில் உள்ள இலத்திரன் யார் என்று தெரியாத காலம (அங்குதான் கற்பனைக்கு இடமுள்ளது!)்.

7ம் வருடம் கழித்து இந்தப்படத்தைப் பார்க்கும் போது நனவிடை தோய்கிறது. இணையம் பற்றிய எனது முதல் காதல் கதையும் இக்காலத்தில்தான் வெளியாகியது. "காதலெனும் சோலையிலே" எனும் அக்கதை புதிய பார்வையில் வெளியாகியது. பின்னால் காதலர் தினம் எனும் படத்திற்கு உந்துதலும் ஆகியது. இந்தக் கதை எனது முதல் சிறுகதைத்தொகுதியான "உதிர் இலை காலம்" -இல் இடம் பெற்றது. காதலி என்று நம்பி ஒரு செயலியிடம் ஏமாந்து போவதாய் கதை போகும். அதன் பின்னாலும் இணையம் பற்றிய காதல் எழுதினேன். அது எதிரச்்சாதியம் பற்றியது. அதுவே எனது இரண்டாவது சிறுகதைத்தொகுதியின் தலைப்பும் ஆனது "நிழல்வெளி மாந்தர்". இக்கதை பற்றிய அருமையான ஒரு கணிப்பை மாலன் வழங்கியுள்ளார். இப்புத்தகங்கள் (கடைசி இரண்டு தொகுதிகள்) மதி நிலையம் தளத்தில் இணைய் விற்பனையில் உள்ளது. (கிழக்கு பதிப்பகம் இவைகளை அதிரடி மின்விற்பனை செய்யும் என்று பத்ரி சொன்னார் (மதி நிலையம் ரொம்ப சாவதானம்). இன்னும் அது நடக்கவில்லை)

பழைய படங்களை பார்க்கும் போதுதான் நாம் எத்தனை நல்ல படங்களைக் காணத ்தவறியிருக்கிறோம் என்று தெரிகிறது. டாம் ஹான்ங்ஸ் பின்னால் அகாதமி விருது பெற்றார்.