தமிழ் படிக்க ஆசை வந்துச்சே!

பல நாட்களாக எழுத வேண்டுமென்று தள்ளிப்போட்டு வந்த ஒரு விஷயம் சமீபத்திய தினமணியில் வந்த ஒரு சேதியால் இன்று எழுத வேண்டியதாயிற்று.
லீ ஹூ ஜின் எனும் கொரியப்பெண் சரளமாகத் தமிழ் பேசுவதாக ஒரு சேதி வந்துள்ளது. புடவை கட்டி குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்டுள்ள போட்டோ பார்க்க சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்தச் சிறப்புச் சேதியில் விட்டுப்போயுள்ள ஒரு முக்கிய விஷயம் கொரிய மொழிக்கும் (ஹன்குல்) தமிழுக்குமுள்ள தொடர்பு பற்றியது. கொரியாவில் வாழும் பல தமிழர்கள் சரளமாக ஹன்குல் பேசுகின்றனர். ஒரு தமிழ் மாணவர் எனக்கு ஒரு மணி நேரத்தில் கொரிய மொழியை எப்படி வாசிப்பது என்று சொல்லிக்கொடுத்தார்.

கொரியாவிற்கும் இந்தியாவிற்குமுள்ள தொடர்பு ரொம்ப ஆதியானது. புத்தம் தோன்றிய சில நூற்றாண்டுகளூக்குள் அது கொரியா வந்துவிட்டது. அப்படியெனில் சங்ககாலத்தில் எப்படி பௌத்தம் தமிழ் மண்ணில் கோலோட்சியதோ அதே போல் கொரியாவிலும் கோலோட்சியிருக்கிறது. பௌத்தப் பல்கலைக்கழகங்கள் இரண்டு நகரங்களில் பிரபலமாக இருந்திருக்கின்றன. வடக்கே நாளந்தா. தெற்கே காஞ்சிபுரம். தமிழ் அங்கு போனதற்கான முதல் ஆதி காரணமிது.

கொரிய மொழி ஆசிய மொழி. பெரும்பாலான ஆசிய மொழிகளில் சமிஸ்கிருத, தமிழ் ஆளுமை தொன்று தொட்டு இருந்து வந்திருக்கிறது. பர்மா, தாய், கம்போடியா, இந்தோனிஷியா போன்ற நாடுகளில் பாமரனுக்குக் கூட புரியும் வகையில் அத்தொடர்பு வெளிப்படையாகவே உள்ளது. ஆனால், கொரிய, ஜப்பானிய மொழியில் அது பூடகமாக உள்ளது. காரணம் கொரியா ஒரு காலத்தில் சீனாவின் துறைமுக நாடாக இருந்திருக்கிறது. சேரநாடு தமிழ்நாட்டிற்கு இருந்தது போன்று. இவர்கள் அடிப்படையில் சீன, மங்கோலிய இனத்தவர். ஆனால், முன்பு சொன்ன அத்தனை நாட்டு மக்களும் இந்தியக் கலப்பு உள்ளவர்கள். கொரியாவிலும் இந்திய ஜீன் உள்ளது. ஆனால் குறைந்த சதவிகிதத்தில். [நம்ம ஊர் அய்யங்கார் அம்பிகள் கொரியர்கள் போல இருப்பது எதேச்சையானதல்ல]

எழுத்தச்சன் மலையாளத்திற்கு செய்தது போல இங்கு ஒரு அரசன் 15ம் நூற்றாண்டில் ஹன்குலுக்கு தனி வரிவடிவம் கொடுத்து அதைச் சீன ஆளுமையிலிருந்து பிரித்துவிடுகிறார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட மாடல் மொழி தமிழ் என்று தோன்றுகிறது. ஹன்குலும் உயிரெழுத்து, மெய்யின்மீது மேவ பிறப்பதே. க்+அ=க என்று பலுப்புகிறோம். அங்கும் அதே! என்ன, அவர் புத்திசாலித்தனமாக ஒன்று செய்துவிட்டார். க்+அ என்று உள்ளுக்குள் அமைப்பு இருந்தாலும் தமிழில் இவ்வொலிக்கென 'க' என்ற வரிவடிவம் கொடுத்திருக்கிறோம். ஹங்குலில் அப்படியே எழுதிப் படித்து விடுகிறார்கள். இது பல சிக்கலைத் தவிர்கிறது. 12+18=30 எழுத்தோடு தமிழ் முடிந்திருக்க வேண்டியது. ஹங்குலில் இதைவிட எழுத்துக் குறைவு. சீன அடுக்கு முறையைக் கையாண்டு இவர்கள் இந்த விகிதங்கள (அதாவது, க் அ என்று எழுதிவிடுவர். க என்று உச்சரித்துப்பழக வேண்டும்).

அடுத்து தமிழுக்கு உள்ள 'க' (நான்கு வித பலுப்பல்), ச, ஸ, ஷ, ஜ வித்தியாசம் ஹன்குலில் கிடையாது. 'ச' என்று எழுதிவிட்டு 'ஜ' என்று உச்சரிப்பர். அது இடத்திற்கு ஏற்றவாறு மாறும். முருக, முருஹ என்று நாம் பலுப்பதுபோல்.

அடுத்தமுறை சென்னை வந்தால் லீ ஹூஜின்னைப் பார்த்துப் பேச வேண்டும். அதைவிடச் சரளமாகத் தமிழ் பேசும் அவர் பெண்களிடம் பேச வேண்டும்.

4 பின்னூட்டங்கள்:

Thangamani 4/24/2005 10:37:00 AM

நானும் கொரிய-தமிழ் ஒற்றுமைகளை பாலு சொல்லக்கேட்டிருக்கிறேன்.
:)

இராதாகிருஷ்ணன் 4/24/2005 07:14:00 PM

//தமிழ்நாட்டில் இவருக்கு அதிர்ச்சியான சம்பவமாக இருப்பது, தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாமல் இருப்பதுதான்// [தினமணி] :-(
இதைப்பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளாதவர்களாயிற்றே நம்மக்கள்!

தமிழ்-கொரிய ஒற்றுமை பற்றிய தகவல்கள் ஆய்வுக்குரியனவாகத் தெரிகின்றன. 'கம்பராமாயணத்தில் காக்காய்' ;-) என்றெல்லாம் ஆய்வு செய்யும் பண்டிதர்கள் இவற்றைப் பற்றியும் கவனித்தால் பயனுண்டு.

நா.கண்ணன் 4/24/2005 10:08:00 PM

தங்கமணி உங்கள் நண்பர்களெல்லாம் சரளமாகக் கொரியன் பேசுகின்றனர். அவர்களுக்கு பல்கலைக்கழகம் தரும் வாய்ப்பு எங்கள் ஆய்வகத்தில் கிடையாது, எனவே எனது கொரியன் ஒரு இஞ்ச் கூட முன்னேறவில்லை. ஜப்பானிஸ் தெரிவதால் என்ன பேசுகிறார்கள் என்பது பூடகமாகப் புரியும். இது போதாது.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இராதகிருஷ்ணன்: ரொம்ப அழகாகச் சொன்னீர்கள். நம்ம பல்கலைக் கழகங்கள் வெட்டித்தனமாக முனைவர் ஆய்விற்கு தலைப்புக் கொடுத்து UGC காசை வீணடிக்கின்றனர். கொரிய-தமிழ் தொடர்பு ஆழமான ஆய்விற்குரியது. அதே போல்தான் தமிழ்-ஜப்பானியத் தொடர்பும் (இதிலாவது கொஞ்சம் ஆய்வு நடந்திருக்கிறது). ஹுயுந்தே (ஹுண்டாய்!) இந்தியச் சந்தையைக் குறி வைக்கும் இந்நேரத்தில் இம்மாதிரி ஆய்விற்கு காசு கேட்டால் நிச்சயம் கொடுப்பார்கள். நம்மவர்கள் முயல வேண்டும். இனிமேலும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் ஜெர்மன், பிரென்ஞ்ச் இரண்டாம் மொழியாகச் சொல்லித்தரும் காலனித்துவ பாரம்பரியத்தை உடைத்து வளர்ந்துவரும் ஆசிய நாட்டு மொழிகளைத் தமிழ் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். என்னைக் கேட்டால், தமிழன் ஆங்கிலம் படித்து குப்பை கொட்டுவதை விட சீனம், ஜப்பானிஸ், ஹன்குல் (கொரிய) கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு அதிகமுண்டு!

மாயவரத்தான்... 5/08/2005 02:06:00 PM

ஆமாம்.. உள்நாட்டு மொழியெல்லாம் கத்து முடிச்சிட்டோம்.. இப்போ கொரியாவுக்கு போறோம்..!! கொரியா காரணெல்லாம் தமிழ் கத்துகிட்டானா என்னா அப்படீன்னு சிலர் கேக்குறாங்க பாருங்க..!