புதுமனை புகு(ந்த) விழா!

இந்த புளோகரோட மாரடிச்சு அலுத்துப்போச்சு. ஒவ்வொருமுறையும் ஒரு வலைப்பூ அனுப்புவதற்குள் 'டங்குவாரு' அந்துபோது! (இந்த டங்குவாருன்னு என்னனென்ன இதுவரைக்கும் தெரிஞ்சுக்காமலே உபயோகிக்கிறேன்!). இதற்கு ஒரே முற்றுப்புள்ளி நம்ம வலையகத்திலேயே ஒரு புளோக் உருவாக்கிவிடுவதுதான். காசி எனக்கு முன்னமே ஒரு வரம் கொடுத்திருந்தார். கேட்டேன்! அவர் மதியிடம் அனுப்பினார். மதியிடம் ஒரு பட்டாளமே இமமாதிரி கோரிக்கையோடு இருப்பதை பின்னால்தான் அறிந்தேன். என்னமோ பண்ணினார். இங்க தட்டு, அங்க தட்டுன்னார். இப்போ நம்ம புளோக் வந்தாச்சு!


எனது அடுத்த வலைப்பூ .இந்தப் புதுவீட்டில் மலர்ந்திருக்கிறது! வந்து பார்த்து வாழ்த்திவிட்டுப் போங்கள்! அத்தோடு இது எல்லார் கணினியிலும் ஒழுங்காகத்தெரிகிறதா? என்றும் சொல்லுங்கள். அங்கு பின்னூட்டம் இடமுடியாவிடில் இங்கே இடவும்!

ரா,ரா! சரசுக்கு ரா,ரா!மாமா! சந்திரமுகி பார்த்துட்டீங்களா? என்று வேலை மெனெக்கெட்டு ஷார்ஜாவிலிருந்து பேசும் அனு கேட்டாள். மெரினா ரேடியோவைத் திறந்தால் அமெரிக்காவில் எங்கெங்கு சந்திரமுகி ஓடுகிறது என்றொரு பட்டியல்! ஜெர்மனித் தமிழர்கள் தவம் கிடந்து சந்திரமுகி பார்ப்பதாகத் தகவல். ரொம்பத்தான் கிளப்பி விட்டு விட்டார்கள்! கொரியாவில் நான் எங்கு போவேன் சந்திரமுகி பார்க்க? படம் பார்ப்பதென்றால் போகும் ஒரே தமிழ் நண்பர் கணினியும் படுத்துவிட்டதாம்! வேறு வழியில்லாமல் ஒரு அழுதுவழியும் படத்தை தமிழ்டொரண்டில் கீழிறக்கம் செய்து பார்த்தேன்.

படம் பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டேன். சிற்சில காட்சிகளுக்காக இரண்டுமுறை கூடப்பார்த்தேன். கொஞ்சம் விட்டலாசார்யா (அட! ராமச்சந்திர ஆச்சார்யா படத்தில் வருவது சூசகமோ!) கொஞ்சம் ஓமன், எக்ஸ்சாரிர்ஸ்ட், கொஞ்சம் உளவியல் என்றொரு கலவை. புருடா என்றால் படு புருடா! சூப்பர் ஸ்டார் படத்தில் அதெல்லாம் கண்டுக்கக்கூடாதுதான். தமிழ்கூறும் நல்லுலகமே அந்தவழி என்னும் போது எனெக்கேன் தனிவழி? :-)

இந்தப்புதுக் கதாநாயகி யாரோ போல சாயல். அட, பழைய நடிகை ரேவதி சாயல்! பாட்டெல்லாம் படையப்பா சாயல் :-) பார்முலா மாறாத படம்! ஜோதிகாவிற்கும் நர்த்தனத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த முண்டக்கண்ணுக்காக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் போல! மும்பாய் எக்ஸ்பிரஸ் பாட்டுக்களைக் கேட்கும் போது விதயாசாகர் ஏமாற்றவே இல்லை. "அட என்னடி ராக்கம்மா!' பாட்டு, சங்கராபரணம், சலங்கை ஒலி நர்த்தனகீதங்கள் என்று அப்பட்டமான காப்பி என்றாலும், ஒரிஜினல் டூப் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம்! எந்த டாப் 10 லிஸ்டிலேயும் வராமல் என் இதயத்தைக் கொள்ளைக் கொண்ட பாட்டு, 'கொஞ்ச நேரம், கொஞ்சம் நேரம்' எனும் பாட்டு. இதுவும் பழைய பாட்டு காப்பிதான். அதுதான் பிடிச்சிருக்கு போல :-) ஹிந்திக்காரர்களுக்கு நாக்கில் சரஸ்வதியே வந்து எழுதினாலும் தமிழ் உச்சரிப்பு வராது என்பது பொது விதி! சினி பீல்டிலே கிழவியாறவரைக்கும் குப்பை கொட்டிய ஆஷாபோன்ஸ்லே இத்தனை நாளில் தமிழ் கத்திருக்கலாம்! காந்தி கூட கத்துக்கிட்டாரு! போனா போறது. அவங்க சாதாரணமாப் பாடறது நமக்கு கொஞ்சிக் கொஞ்சிப் பாடற மாதிரி இருக்கு. அவங்க தமிழ் உச்சரிப்பிற்காகவே அந்தப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

சந்திரமுகி கேளிக்கை எனும் ஒரே தகுதியை வைத்துப் பார்த்தால் பாஸாகி விட்டது. அடுத்து 'மும்பாய் எக்ஸ்பிரஸ்'!