அவத்தை

இடைவெளிகளை இல்லை எனச்
சொல்லவில்லை!

வாழ்விற்கும் சாவிற்கும்
பல நேரம் இடைவெளியே
இருப்பதில்லை.
இரைதேடும் புலியும்
இரையாடும் மானும்
ஒன்றாகவே வாழ்கின்றன
ஆப்பிரிக்க வெளிகளில்.

இக்கடிதம் தோன்றும்
பொழுதும் மின்வெளியில்
பரக்கும் போதும் இடைவெளி
இருப்பதும் தெரிவதில்லை.

சித்தமும் பித்தமும்
கலந்தே இருக்கின்றன
பித்தத்தைப் பிரதாபித்து
சித்தம் பேசும்
தருணமுமுண்டு.

அட! நீ கனவில் வருவதும்
கலந்து பின் போவதும்
நனவில் வேருரு கொண்டு
சிரித்து மகிழ்வதும்
கனவா நனவா என்று
கேள்விகள் எழுவதுண்டு

இடைவெளியை இல்லையென்று
சொல்லவில்லை நான்
இரண்டையும் காண்பது
நான் என்கிறேன்
பொருள் என் கைவசம்
இருக்கும் வரை
அர்த்தமே ஓர்
அவஸ்தைதான் போ!

கண் பாவை

ஒளியற்ற உலகில்
நிழலற்று இருக்கலாம்
கண்ணுள்ள உலகில்
கனவின்றி இயலுமோ
அன்று நீ வந்தாய்
மீண்டும் இன்று நீ வந்தாய்
கனவின் எழிலில்
கற்பனை கடந்த நிலையில்
கட்டுண்டோம்
களித்திருந்தோம்
எல்லைகளற்ற நிலையில்
வேலியற்று
சாதியற்று
மேலற்று
கீழற்று
சமவெளியில்
சமத்துவமாய்
ஞாலத்தின் ஈர்ப்பின்றி
பரவெளியில் பறவைபோல்
கூடியிருந்தபோது
இது கனவென்றான்
கண் விழித்தோன்
கண் இனி எதற்கென்று
கனவில் நிலைத்துவிட்டேன்
கண்ணின் பாவையாய்
என்றும் நிலைத்துவிடு
உள்ளத்தின் உள்ளே.


தூரக்கிழக்கு-கலாச்சார ஒற்றுமைகள்

கொரியா எங்கு இருக்கிறது! தமிழகம் எங்கு இருக்கிறது?
இவைகளுக்குள் கலாச்சார பறிமாற்றம் நடந்திருக்க வழியுண்டா?
தமிழ்-கொரிய தொடர்பு பற்றி இனிமேலாவது சீரிய ஆய்வு வருமா?
கொறிக்க கொஞ்சம் அவல், பொறி.....

வடக்கிருத்தல்

இது பொதுவான
தனிக்கடிதம்
நேரு இந்திராவிற்கு
எழுதியது போல்
உன் தேசியக்கவி சொன்னான்
நீ வடக்கிருக்க தமிழகம்
போய் விட்டாயென்று
கேட்டால்
உடல் மண்ணிற்கு
உயிர் தமிழுக்கு என்பாய்
இரண்டும் தமிழுக்கு என்று
அங்கு போய்விட்டாய் போலும்
அந்நிய மண்ணில்
பெய்யும் பனியை வெறிக்க வெறிக்க
எத்தனை நாள் பார்ப்பது?
உன் நாட்கள் கணக்கெடுப்பில் என்றான் கவி
உங்கள் எல்லோர் வாழ்வுமே
கணக்கிலுண்டு என்று எனக்குத் தெரியும்
எனவே இரண்டோடு இது மூன்று
வாழ்விற்கும் பொருளில்லை
சாவிற்கும் பொருளில்லை
என்றாகிப்போன வாழ்வில்
வடக்கிருத்தல் ஒரு குறையோ நண்பா?
ரத்தம் சிந்தா நூற்றாண்டு
புத்தம் புதிதாய் மலரலாம்
அப்போது சிந்த ரத்தம் மண்ணில் இருக்குமோ?
வடக்கிருந்து தென்திசைக் கடவுளாகப் பார்க்கிறாய்
கணக்கெடுப்பு எல்லோருக்கும் உண்டு
வந்து பார்ப்போம் தென் திசை வானில்
ஓர் நாள்.

மணமாகி வாழ்தல்

அவளை அள்ளி அணைத்து உச்சி
முகர்ந்தபோது விளித்தாள்:
இத்தனை ஆசையும் கிளறிவிடற
சமாச்சாரம்
எதுன்னு எனக்குத்
தெரியும்! என்று.
சிரித்து அவளை மீண்டும்
முகர்ந்தபோது
பின் தள்ளிப் போனான்....
அந்த வீட்டிற்கு நிலைப்படி
கூடக் கிடையாது
சாற்றிய ஓலைத் தட்டிதான்.
இவன் பள்ளி போய்
வந்தபிறகுதான் வருவாள்.
சோறு வைக்கப்போறவளை
பின்னிருந்து
அணைத்து முகர்வான்.
அவ்வளவும் மல்லிகை.
அவள் மனம் போலவே மணமும்.
தோட்டத்தில் மல்லிகையுடன்
உலாவி
மல்லிகை கிள்ளி,
மல்லிகை அள்ளி
மல்லிகை அளந்து
மணத்துடன் வீடு
திரும்புவாள் தலையில்
பூகூட இல்லாமல்.
குளித்துவிட்டு வரேண்டா என்றால்
விடமாட்டான்.
மல்லிகை குளித்தால் மணம் போய்விடும்!
முன் தள்ளிப் போனவளை
மீண்டும் அணைத்து பின் முகர்ந்தான்.
அவன் அன்னையாகவும்
அவளே இருந்தாள்
அன்று.

பௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில்

நேற்று பௌர்ணமி. புதிதாகப் பிறந்திருக்கும் சந்திர ஆண்டு (நாய்) துவக்கவிழாக்கள் நேற்று முடிவடைந்தன. அது போது நம்ம ஊரில் கொளுத்தும் சொக்கப்பான் போலவே இங்கும் கொளுத்தினார்கள். அந்தப் பந்தல் தீப்பிடிக்கும் முன் நமது ஆசைகளை, எண்ணங்களை எழுதிச் செருகிவிடலாம். எரிந்து எண்ணங்கள் வின்னில் பறந்து நாம் நினைத்தது நடந்துவிடலாமாம். நான், "பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர் சாபம்" என்று எல்லொருக்கும் மங்களாசாசனம் தமிழில் எழுதி செருகிவிட்டேன் (ரத்தம் சிந்தா நூற்றாண்டு, புத்தம் புதிதாய் பிறக்கட்டும் என்றுகூட எழுதியிருக்கலாம்). நகர மேயர் வந்திருந்தார். கை குலுக்கினார். ஒரு அழகான பட்டம் செய்து அதிலும் எழுதினார்கள். எனக்கும் வாய்ப்புத் தந்தனர். "மண்ணில் இருப்பதும், வின்னில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே" என்று பட்டத்தில் எழுதினேன். தமிழ் எழுத்துக்களை வேடிக்கையாகப் பார்த்தார்கள், நான் சீன எழுத்துக்களை வேடிக்கை பார்த்தது போல் (பெரியவர்கள் இன்னும் முக்கிய நிகழ்வுகளில் சீனத்தில்தான் எழுதுகிறார்கள்).

நேற்று சந்திரன் இக்காட்சி காண சீகிரமே வந்துவிட்டான். ஒரு பக்கம் நிலவு. மறுபக்கம் மாலை மயக்கம். நடுவில் தீப்பந்தம்! அற்புதமாக இருந்தது. பாலு மகேந்திரா என்று நினைத்துக் கொண்டு கைக்கேமிரா கொண்டு சுட்டுத்தள்ளினேன். கிராமத்தில் சொக்கப்பனை கொளுத்தும் போது சில கில்லாடிகள் பனைக்கருக்கும், கரிப்பொடியும் கொண்டு ஒரு தீப்பொறி இயந்திரம் செய்து சுழற்றுவார்கள். பொறி, பொறியாக இரவில் நெருப்பு கக்கும் போது மாயாபஜார் போல இருக்கும். இங்கு விட்ட வாண வெடிக்கையும் பிடித்துவிட்டேன். கொட்டு மேளம் கொட்ட அக்னிவலம் வந்த காட்சியைப் படமாக்கியுள்ளேன். கண்டு களியுங்கள்.

இந்தா புடி வாலண்டின்...

ஆத்தா! நீ பொறந்த போது நவநீதசுந்தரியா இருந்துருக்கணும்
அதான் அப்பன் ஆத்தா அப்படிப்பேரு வச்சாக
பள்ளிப்புள்ளையா பாத்தப்போ நீ எனக்கு அப்படித்தான் இருந்தே
பூ, ரவிக்கை கொடுக்கற வயசா என்ன? அப்போ?
ஏதோ ஒரு கொலுசைத் தூக்கிட்டு உங்கிட்ட கொடுத்துடணும்ன்னு
ஒம்பின்னாலயே அலைஞ்சேன்! யாராவது பாத்துப்பிட்டா?
ஆத்து மணல பதிஞ்ச உன் தடத்தை அப்படியே கையிலே வச்சு
பாத்துக்கிட்டே இருப்பேன். அப்புறம் நீ சடங்காயிட்டே,
பள்ளிகூடம் வரவே இல்லை, நானும் படிக்க பட்டணம் போயிட்டேன்.
வந்து நான் கைபிடிச்சுரிந்தா சாதிக்கலவரமே வந்திருக்கலாம்.
உம் பிள்ளையை பார்வர்டுலே போடறதா? பேக்வர்டா? அதி பேகவர்டான்னு
நமக்குள்ளே சண்டையே வந்திருக்கலாம். சண்டையிலே பிரிஞ்சு கூட
போயிருக்கலாம். ஆனா, அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்கலே!
நான் ஊர் திரும்பி வந்த போது நீ பிடி மண்ணாப் போயிருந்தே.
அப்பவும் கொடுக்கல, இப்பவும் கொடுக்கல கை நிறைய பூ ஒனக்கு.
ஆனாலும் இன்னிவரைக்கும் நீதான்
என் வாலண்டைன்.

எதிர்ப்புறம் தாவுதல்

எதிர்ப்புறம் தாவுதல் இயற்கை போலும். இரண்டு வாத்துகள். மாலையில் கடற்கரை பக்கம் போனால் என்னைக் கண்டவுடன் வேக, வேகமாக கடலுக்குள் நீந்தும். அது எதிர்க்கரை. அங்கு நான் வரமுடியாது என்று அதற்கு யார் சொன்னார் என்று தெரியாது. ஒரு பெரிய நாரை (செங்கால் நாரையல்ல!). அது 300 மீட்டர் இடைவெளி இருக்கும் போதே காட்டுக்கத்தல் கத்திவிட்டு நான் போகும் திசைக்கு எதிர்திசையில் பரந்துவிடும். ஆபத்திலிருந்து விலக வேண்டுமெனில் எதிர்த்திசை இடைவெளியைப் பெருக்க வேண்டுமென்பது இயற்கை விதி போலும். இதை நன்கு அறிந்த சிங்கம், இதையே ஒரு வேட்டைத் தொழில் நுணுக்கமாகப் பயன்படுத்துவதாக படித்திருக்கிறேன். அதாவது சிங்கம் தன் தலையைக் கவிந்து கொண்டு தரையை நோக்கி கர்ஜிக்கும் போது அந்த ஒலி சிங்கத்தின் பின் வழியாகச் சென்று மான் போன்ற எதிரிகளின் பின்புறம் ஒலிக்குமாம். எதிர்த்திசை தாவல்தானே தப்பிக்கும் உபாயம். உடனே அவை எதிர்த்திசையில் தாவ, நம்ம ஆள் ரெடியாக வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்திருக்க, டைனிங் டேபிளுக்கு உணவு வந்து சேருமாம். எப்படி இருக்கு கதை!

ஆனா, இந்த மண்புழு இருக்கே அது பாதுகாப்பான தரையை விட்டு தார் ரோட்டிற்கு வந்து விடுகிறது. பாவம் போனால் போகிறது என்று எடுத்துவிடப்போனால் ஒரே துள்ளல். மீண்டும் ரோட்டில் விழுந்து காய்ந்து போய் உயிரை மாய்க்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு ஜந்துக்கள். உச்சிக் கோடையில் நண்டுகள் குஞ்சும் குளுவானுமாக வழியெல்லாம் அலைந்து கொண்டிருக்கும். அது எப்படித்தான் பக்கவாட்டில் இந்த ஓட்டம் ஓடுகிறதோ! அப்புறம் கோடை முடியும் தருவாயில் பூரான்கள் நடமாட்டம். இதைக் கண்டால் நாமே ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். ஏன் என்று கேட்காதீர்கள். பயம் என்பது காட்சியில் எழுவதுதானே! அப்படியொரு இயற்கை விதி! அப்புறம் இலையுதிர் காலத்தில் இந்த மண்புழு. பனிக்காலத்தில் நடமாட்டம் குறைவு. இந்தப் பறவைகள் மட்டும்தான் என் தோழர்கள். என்ன தோழர்கள்? அது இரவில் ஓரமாய் நின்று கொண்டு மீன் பிடிப்பது என் கண்களுக்குப் புலப்படுவதில்லை. நான் பாட்டுக்கு தேமேனெனப் போகும் போது எங்கிருந்தோ ஒரு அலறல்! அதன் அமைதியைக் கெடுத்ததற்காக எழும் அலறல். குலை நடுங்கிப் போகும். நாரைகள் டனோசார் வாரிசுகள் என்பதுதான் எவ்வளவு உண்மை!

இப்படித்தான் இருக்கிறது என் தினப்படி வாக்கிங்!

பழைய குருடி கதவைத் திறடி!

அங்கே இங்கே சுத்திட்டு மீண்டும் புளோகருக்கே வந்துட்டேங்க. காரணம் இதிலேதான் நம்ம தமிழ் மணம் பட்டை சரியா வேலை செய்யுதுங்கோ! பட்டையக் கிளப்ப இந்தப் பட்டையவிட்டா வேற வழி இல்லையே!