பௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில்

நேற்று பௌர்ணமி. புதிதாகப் பிறந்திருக்கும் சந்திர ஆண்டு (நாய்) துவக்கவிழாக்கள் நேற்று முடிவடைந்தன. அது போது நம்ம ஊரில் கொளுத்தும் சொக்கப்பான் போலவே இங்கும் கொளுத்தினார்கள். அந்தப் பந்தல் தீப்பிடிக்கும் முன் நமது ஆசைகளை, எண்ணங்களை எழுதிச் செருகிவிடலாம். எரிந்து எண்ணங்கள் வின்னில் பறந்து நாம் நினைத்தது நடந்துவிடலாமாம். நான், "பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர் சாபம்" என்று எல்லொருக்கும் மங்களாசாசனம் தமிழில் எழுதி செருகிவிட்டேன் (ரத்தம் சிந்தா நூற்றாண்டு, புத்தம் புதிதாய் பிறக்கட்டும் என்றுகூட எழுதியிருக்கலாம்). நகர மேயர் வந்திருந்தார். கை குலுக்கினார். ஒரு அழகான பட்டம் செய்து அதிலும் எழுதினார்கள். எனக்கும் வாய்ப்புத் தந்தனர். "மண்ணில் இருப்பதும், வின்னில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே" என்று பட்டத்தில் எழுதினேன். தமிழ் எழுத்துக்களை வேடிக்கையாகப் பார்த்தார்கள், நான் சீன எழுத்துக்களை வேடிக்கை பார்த்தது போல் (பெரியவர்கள் இன்னும் முக்கிய நிகழ்வுகளில் சீனத்தில்தான் எழுதுகிறார்கள்).

நேற்று சந்திரன் இக்காட்சி காண சீகிரமே வந்துவிட்டான். ஒரு பக்கம் நிலவு. மறுபக்கம் மாலை மயக்கம். நடுவில் தீப்பந்தம்! அற்புதமாக இருந்தது. பாலு மகேந்திரா என்று நினைத்துக் கொண்டு கைக்கேமிரா கொண்டு சுட்டுத்தள்ளினேன். கிராமத்தில் சொக்கப்பனை கொளுத்தும் போது சில கில்லாடிகள் பனைக்கருக்கும், கரிப்பொடியும் கொண்டு ஒரு தீப்பொறி இயந்திரம் செய்து சுழற்றுவார்கள். பொறி, பொறியாக இரவில் நெருப்பு கக்கும் போது மாயாபஜார் போல இருக்கும். இங்கு விட்ட வாண வெடிக்கையும் பிடித்துவிட்டேன். கொட்டு மேளம் கொட்ட அக்னிவலம் வந்த காட்சியைப் படமாக்கியுள்ளேன். கண்டு களியுங்கள்.

1 பின்னூட்டங்கள்:

சிறில் அலெக்ஸ் 2/13/2006 11:59:00 PM

நல்ல பதிவு. ஆசிய கலாச்சாரங்களுக்குள் இருக்கும் பல ஒற்றுமைகள் மலைக்க வைக்கின்றன.