எதிர்ப்புறம் தாவுதல்

எதிர்ப்புறம் தாவுதல் இயற்கை போலும். இரண்டு வாத்துகள். மாலையில் கடற்கரை பக்கம் போனால் என்னைக் கண்டவுடன் வேக, வேகமாக கடலுக்குள் நீந்தும். அது எதிர்க்கரை. அங்கு நான் வரமுடியாது என்று அதற்கு யார் சொன்னார் என்று தெரியாது. ஒரு பெரிய நாரை (செங்கால் நாரையல்ல!). அது 300 மீட்டர் இடைவெளி இருக்கும் போதே காட்டுக்கத்தல் கத்திவிட்டு நான் போகும் திசைக்கு எதிர்திசையில் பரந்துவிடும். ஆபத்திலிருந்து விலக வேண்டுமெனில் எதிர்த்திசை இடைவெளியைப் பெருக்க வேண்டுமென்பது இயற்கை விதி போலும். இதை நன்கு அறிந்த சிங்கம், இதையே ஒரு வேட்டைத் தொழில் நுணுக்கமாகப் பயன்படுத்துவதாக படித்திருக்கிறேன். அதாவது சிங்கம் தன் தலையைக் கவிந்து கொண்டு தரையை நோக்கி கர்ஜிக்கும் போது அந்த ஒலி சிங்கத்தின் பின் வழியாகச் சென்று மான் போன்ற எதிரிகளின் பின்புறம் ஒலிக்குமாம். எதிர்த்திசை தாவல்தானே தப்பிக்கும் உபாயம். உடனே அவை எதிர்த்திசையில் தாவ, நம்ம ஆள் ரெடியாக வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்திருக்க, டைனிங் டேபிளுக்கு உணவு வந்து சேருமாம். எப்படி இருக்கு கதை!

ஆனா, இந்த மண்புழு இருக்கே அது பாதுகாப்பான தரையை விட்டு தார் ரோட்டிற்கு வந்து விடுகிறது. பாவம் போனால் போகிறது என்று எடுத்துவிடப்போனால் ஒரே துள்ளல். மீண்டும் ரோட்டில் விழுந்து காய்ந்து போய் உயிரை மாய்க்கிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு ஜந்துக்கள். உச்சிக் கோடையில் நண்டுகள் குஞ்சும் குளுவானுமாக வழியெல்லாம் அலைந்து கொண்டிருக்கும். அது எப்படித்தான் பக்கவாட்டில் இந்த ஓட்டம் ஓடுகிறதோ! அப்புறம் கோடை முடியும் தருவாயில் பூரான்கள் நடமாட்டம். இதைக் கண்டால் நாமே ஒதுங்கிப் போய்விட வேண்டியதுதான். ஏன் என்று கேட்காதீர்கள். பயம் என்பது காட்சியில் எழுவதுதானே! அப்படியொரு இயற்கை விதி! அப்புறம் இலையுதிர் காலத்தில் இந்த மண்புழு. பனிக்காலத்தில் நடமாட்டம் குறைவு. இந்தப் பறவைகள் மட்டும்தான் என் தோழர்கள். என்ன தோழர்கள்? அது இரவில் ஓரமாய் நின்று கொண்டு மீன் பிடிப்பது என் கண்களுக்குப் புலப்படுவதில்லை. நான் பாட்டுக்கு தேமேனெனப் போகும் போது எங்கிருந்தோ ஒரு அலறல்! அதன் அமைதியைக் கெடுத்ததற்காக எழும் அலறல். குலை நடுங்கிப் போகும். நாரைகள் டனோசார் வாரிசுகள் என்பதுதான் எவ்வளவு உண்மை!

இப்படித்தான் இருக்கிறது என் தினப்படி வாக்கிங்!

2 பின்னூட்டங்கள்:

Vasudevan Letchumanan 2/13/2006 02:14:00 PM

அன்பு டாக்டர் ந.கண்ணன்,

ஆக மொத்தத்துல இந்த நண்டுங்களுக்கு மட்டும் "பக்கவாட்டில் தப்பித்தல்" கலையை இயற்கை வழங்கியிருக்கிறது.

அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்,
மலேசியா.

நா.கண்ணன் 2/13/2006 02:25:00 PM

சென்ற பதிவில் உங்களுக்கு பதில் சொல்லியுள்ளேன்!