மணமாகி வாழ்தல்

அவளை அள்ளி அணைத்து உச்சி
முகர்ந்தபோது விளித்தாள்:
இத்தனை ஆசையும் கிளறிவிடற
சமாச்சாரம்
எதுன்னு எனக்குத்
தெரியும்! என்று.
சிரித்து அவளை மீண்டும்
முகர்ந்தபோது
பின் தள்ளிப் போனான்....
அந்த வீட்டிற்கு நிலைப்படி
கூடக் கிடையாது
சாற்றிய ஓலைத் தட்டிதான்.
இவன் பள்ளி போய்
வந்தபிறகுதான் வருவாள்.
சோறு வைக்கப்போறவளை
பின்னிருந்து
அணைத்து முகர்வான்.
அவ்வளவும் மல்லிகை.
அவள் மனம் போலவே மணமும்.
தோட்டத்தில் மல்லிகையுடன்
உலாவி
மல்லிகை கிள்ளி,
மல்லிகை அள்ளி
மல்லிகை அளந்து
மணத்துடன் வீடு
திரும்புவாள் தலையில்
பூகூட இல்லாமல்.
குளித்துவிட்டு வரேண்டா என்றால்
விடமாட்டான்.
மல்லிகை குளித்தால் மணம் போய்விடும்!
முன் தள்ளிப் போனவளை
மீண்டும் அணைத்து பின் முகர்ந்தான்.
அவன் அன்னையாகவும்
அவளே இருந்தாள்
அன்று.

3 பின்னூட்டங்கள்:

Anonymous 2/16/2006 09:37:00 PM

too good!
vinoth

Anonymous 2/16/2006 09:38:00 PM

too good! keep up the work!
K.V

நா.கண்ணன் 2/16/2006 09:59:00 PM

நன்றி.