அமெரிக்காவில் முக்குரிணிப் பிள்ளையார்அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற ஆசை எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் விதைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவொரு அமெரிக்கப் பாதிரிமார்கள் கல்லூரி. ஆங்கில வாத்தியார் அமெரிக்கர். அறிவியல்துறைத் தலைவர் அமெரிக்கர். ஆங்கிலத்துறையில் பாடம் போதித்த பலர் துரைத்தனமாக நடந்து கொண்டனர். கிறிஸ்தவர்களான அவர்களுக்கு அது இயல்பாகவும் இருந்தது. ஆனால் ஆசைப்பட்ட மாதிரி இந்தியாவிலிருந்து நேரடியாக அமெரிக்கா செல்ல முடியவில்லை என்னால். மூக்கைச் சுற்றி நாக்கைத் தொட்ட கதையாகி, ஜப்பான் முதலில் போய், அங்கிருந்து விட்டு ஜெர்மனி வந்து வேலை பார்த்த போதுதான் அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் அது எல்லோரும் ஆசைப்படும் சுற்றுலாப் பயணமாக அமையவில்லை. வேலை நிமித்தமாக சில கருத்தரங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜெர்மன் பல்கலைக் கழகங்கள் வேலைக்குப் போகுமிடத்தில் சில நாட்கள் கூடுதல் வேலை ஓய்வை அனுமதித்தன. எனவே சில நாட்களை சுற்றுப்புறம் பார்க்க செலவிட்டேன்.

எல்லா இந்தியர்கள் போல புதிதாக போகுமிடத்திற்கு அருகில் நம்ம ஊர் ஆட்கள் இருக்கிறார்களா எனப்பார்த்து அறிந்து கொண்டே சென்றேன். அந்தக் காலத்து இதயம் பேசுகிறது கட்டுரையில் அது பெரும்பாலும் இந்தியாவில் சுவைத்த புளியோதரை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அல்ப பயத்தின் காரணம் என்று காட்டப்படும். உண்மையாகச் சொல்லப் போனால் இந்தியர்களுக்கு சுற்றுலா என்றால் என்னவென்றே தெரியாது. எப்படிப் பயணப்படுவது, வரைபடத்தைப் பார்த்து எப்படி இடம் காண்பது, புதிய ஊர் பற்றிய செய்திகளை எப்படி சேகரிப்பது போன்ற ஆயத்த வேலைகள் நமக்குத் தெரியாத ஒன்று. எனவே அந்த கலாச்சாரத்தில் வளர்ந்திருந்த நான் எதற்க்கு வீண் சிரமமென்று எனக்கு அமெரிக்கன் கல்லூரியில் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரொருவர் டென்னிசி மாநிலத்தில் இருப்பதாகக் கண்டறிந்து அவர் வீட்டிற்குப் போய் விட்டேன். கல்லூரியில் மிகவும் பிரபலமான வாத்தியார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். அவரும் சில நாட்கள் தங்க அனுமதித்து பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். அப்போதுதான் அமெரிக்க வாழ்வின் சுகம் தெரிந்தது. மஞ்சு (ஸ்மோக்கி) மலையை காரிலேயே வலம் வந்தோம். அங்கு வாக்கிங்கூட காரிலேயே போவதாக வாத்தியார் ஜோக் அடித்தார். பிரம்மாண்டமான ஒரு தோட்டத்தை, அதாவது பெங்களூர் லால்பாக், ஊட்டி தோட்டம் இவை போன்ற ஒரு உஷ்ணப்பிரதேசத்து தோட்டத்தை மாபெரும் கட்டிடத்தின் உள்ளே 'பச்சை வீட்டில்' வைத்திருந்தனர். அதிசயமாகத்தான் இருந்தது. இந்தியாவில் அறிவியல் பயணம் செய்து காண வேண்டிய தாவரங்களெல்லாம் ஒரே கூரையில்! இப்படிப் போய்க் கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் 'கண்ணா! இன்னிக்கு தீபாவளி தெரியுமா?' என்றார். அட! வெளி நாட்டில் வசிக்கும் போது பொங்கலாவது? தீபாவளியாவது? எனக்கு மறந்தே போயிருந்தது. காரிலிருந்து எட்ட பார்த்தபோது ஒரு கோபுரம் தெரிந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன். ஏனெனில் ஐரோப்பிய சூழலில் கோபுரம் கொண்ட இந்துக் கோயில்களெல்லாம் கிடையாது (இப்போது வந்திருக்கின்றன). 'சார்! இது நிஜமாவே கோயிலா? இல்லை, பாரதி சொல்லற 'தோற்றப்பிழையா?' என்று கேட்டேன். 'குற்றமும் இல்லை! பிழையுமில்லை!' இதோ பார் கோயில் என்று காரை ஒடித்து வளைத்து கோயில் வாசலில் இறக்கிவிட்டார். அது மறக்கமுடியாத தீபாவளி!

"உள்ளே வா! மதுரைவாசி! இன்னும் ஆச்சர்யமிருக்கு!" என்றார் அவர். கோயிலுக்குள் போன நான் அப்படியே ஸ்தம்பித்து விட்டேன். அத்தனை பெரிய பிள்ளையாரை மீனாட்சி கோயிலில்தான் பார்த்திருக்கிறேன். 'சார்! முக்குருணிப் பிள்ளையார் எப்போ அமெரிக்கா வந்தார்?' என்று கேட்டேன். அச்சாக அதே பிள்ளையார். உடம்பு வெல, வெலத்துப் போச்சு. எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் (அது தீபாவளியென்றே தெரியாத நேரத்தில்) பிள்ளைப்பிராயத்தில் பார்த்துப் பழகிய பிள்ளையார், கண் எதிரே! எங்கிருந்தோ ஒரு நேசம் வந்துவிட்டது. மட, மடவென்று சந்நிதிக்குள் போய் பிள்ளையாருக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அது அப்படியே தியானத்திற்கு இட்டு செல்லுமென்று தெரியாது. நான் கண் விழித்த போது ஆள் அரவமில்லை. எனக்கு முன் பிள்ளையார் பிரசாதம் இருந்தது. குருக்கள் என்னை எழுப்பாமல் வைத்துவிட்டுப் போயிருக்கும் அழகு தெரிந்தது. நடை சாத்தி விட்டார்களோ என்ற பயம் வந்துவிட்டது. ஈ, காக்காய் இல்லை (உண்மையாக இல்லை என்பதும் உண்மை!). வெளியே மெதுவாக வந்து பார்த்தேன், பேராசிரியர் ஓரமாக எனக்காகக் காத்திருந்து உறங்கிவிட்டார். இப்படிக்கூட நடக்குமா? என்ன என்று எனக்கே ஆச்சர்யம். கீழே விழுந்து வணங்காத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். "என்ன! உன்னை கீழே நடக்கும் தீபாவளி விருந்திற்கு அழைத்துச் செல்லலாமென நினைத்திருந்தேன், நீ என்னடாவென்றால் 'பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும்' பிள்ளையாரிடமே பெற்றுக் கொண்டாய் போல் தெரிகிறது" என்றார். என்னால் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய விருந்தும் போச்சு.

பின் நான் ஜெர்மன் மீண்டு சில வருடங்கள் ஆச்சு. நண்பர்களிடம் இதைச் சொன்னால், "ஆமா! உனக்கு ஊர் ஞாபகம் வந்திருக்கும். ஊருக்குப் போகாமல் வெளிநாட்டிலேயே இருப்பதால் அப்படியொரு மயக்கம். வேறொன்றுமில்லை" என்று சொல்லிவிட்டனர். அது அப்படித்தானா? என்று எனக்கு நிச்சயமில்லை. சரி, ஊருக்குப் போய் பார்த்துவிடுவது என்று இந்தியா கிளம்பினேன். மதுரை வெகுவாக மாறியிருந்தது. முன்பு வீதி போல் தெரிந்த தெருக்கள் எல்லாம், புதிய வீடுகளின் வருகையால் குறுகிச் சிறுத்திருந்தன. கோயிலே பெரிய கடை வீதி போல் இருந்தது. எங்கு பார்த்தாலும் ஜனங்கள். கோயிலுக்கு அப்படியே ஜாலியா 'ஷாப்பிங்' போய்ட்டு வரலாம் என்று வந்து போய்க் கொண்டிருந்தனர். முக்குருணிப் பிள்ளையார் இருந்தார் (நல்லவேளையாக!). ஒரு நிமிடம் கண்மூடி தியானிக்க முடியவில்லை. ஜன நெருசலில் ஒரே இடிசல். சரி, அம்பாளைப் போய் தரிசித்து வருவோமென்று உள்ளே போனால் (எப்படிப் போனேன் என்பது வேறு கதை), மீனாட்சி, திருப்பதி போல் ஆகியிருந்தாள். கிட்டயே போக முடியவில்லை. 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் கிட்ட இருந்தார்கள். உள்ளே போனாலும் எட்டவே இருந்தேன் நான். சரி, கூட்டம் விலகுமா என்ற நப்பாசையில் இருந்த என்னை 'கல்தா' பிடித்துத்தள்ளாத குறையாக சிப்பந்தி வெளியே தள்ளினான். எது சிறை? சிறைக்குள் நானா? இல்லை வெளியேவா? மீனாட்சி எங்கிருக்கிறாள்?

குழந்தைப் பிராயத்தில் இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தான அறக்கட்டளை கணக்கு வழக்குகளை என் தந்தை பார்த்து வந்தார். எனவே ஆடி வீதி என் 'ஆடல் வீதியானது'. மீனாட்சியின் கிளிப்பிள்ளை என் தோழிகள் ஆகின. நினைத்தால் தரிசனம், நினைத்தால் பொற்றாமரைக் குளம் என்று இருந்த காலங்கள் ஓடி மறைந்தன. இப்போது வெளிப்பிரகாரத்தில் கூட நிம்மதியாக உட்கார முடியாமல் கூட்டம் இல்லை பிச்சைக்காரர்கள். அப்போதுதான் புரிந்தது நண்பர்கள் சொன்னது பிழையென்று. ஆயிரம் வருடங்களுக்கு முன் கோயில் கட்டிய போது இருந்த செழுமை, மரபு இப்போது இல்லை. அப்போது கோயிலுள் வியாபாரம் இருந்திருக்காது. கோயில் வழிபடும் இடமாகவும், மண்டபங்கள் தியானம் செய்யும் இடமாகவும் இருந்திருக்கும். கோயிலுக்கு போனால் நிம்மதி வந்திருக்கும். ஆனால் இப்போது அது இல்லை. பக்கத்து ஈழ தேசத்தவர்கள் நாம் கோயில் வைத்திருக்கும் அழகை பரிகசிக்கின்றனர். மதுரையில் கோயில்கள் அதிகம். பல கோயில்களில் சுற்றுச் சுவரைச் சுற்றி சின்னச் சின்ன சந்நிதிகள். 'என்னங்கய்யா! இருக்கிற சின்ன வீதியையும் இப்படிக் குறைக்கிறீங்களே!' என்று கேட்டால், அவர்கள் சொன்ன பதில் என்னை கவலையுற வைத்தது. 'தம்பி! இப்படி சாமியைக் கொண்டு வந்து இங்கேயும் வைக்கலைன்னா! கோயில் சுவரிலே ஒண்ணுக்கு அடிச்சு வைச்சுறானுக! நாத்தம் தாங்கலே!' என்று பதில் சொன்னார்.

இந்தியாவிலிருந்து மீண்டு வந்த என்னை நண்பர்கள் அழைத்து விசாரித்தார்கள். 'என்ன மச்சி! இனிமே வருஷா, வருஷம் இந்தியான்னு சொல்லு!' என்றார்கள். 'இல்லை' என்று சொன்னதுகூட அவர்களுக்கு அதிர்ச்சியில்லை, 'இனிமேல் வருடா வருடம் நான் அமெரிக்கா போகப்போகிறேன். அங்கு போய் ஒவ்வொரு கோயிலாக இருந்து அனுபவிக்கப் போகிறேன். எனக்கு அமெரிக்கா போவதில் செலவும் மிச்சம், சிரமம் மிச்சம்' என்றேன். அவர்களுக்கு இது புரியவே இல்லை!போதி மரம் - திசைகள் மின்னிதழ் மார்ச்,2006

8 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 3/10/2006 12:56:00 PM

அன்புள்ள கண்ணன்,

இப்பத்தான் 'திசைகள்' இதழில் உங்க கட்டுரையைப் படிச்சுட்டு அருணாவுக்கு ஒரு 'மயில்' அனுப்புனேன்.
'கண்ணனோட 'பார்வை'தான் எனக்கும் நம்ம கோயில்களைப் பத்தி'ன்னு. இதப் பத்தி ஒரு பதிவே போடணும்.
அடுத்தமுறை அமெரிக்கக்கோயிலுக்குப் போகுமுந்தி சொல்லுங்க. நானும் வர்ரேன். எனக்கும் 'மாலிபு' கோயில்லே
ஒரு நேர்த்திக்கடன் இருக்கு. எல்லாம் 'மொட்டை'தான்:-)

என்றும் அன்புடன்,
துளசி

Anonymous 3/10/2006 03:18:00 PM

Dear Sir

Good one. Please read my comments on Meenakshi Amman Temple and Pudhu Mandapam here http://blog.360.yahoo.com/strajan123?p=49Thanks
Sa.Thirumalai

மணியன் 3/10/2006 03:31:00 PM

கண்ணன், உங்களுக்கு ஏகாந்தம் பிடிக்கிறது. ஆனால் அமெரிக்கர்களுக்கு கூட்டம்தான் பிடிக்கிறது.
சமீபத்தில் வாரணாசியில் இரு அமெரிக்கர்கள் அந்த குழப்பத்திலும் கூட்டத்திலும் தான் tranquility கிடைப்பதாக ஒரு டீவி செவ்வியில் சொல்லியிருந்தார்கள்.

நா.கண்ணன் 3/10/2006 10:24:00 PM

துளசி: உங்க்ளுக்கு நூறு ஆயுசு. கொஞ்ச நேரம் முன்னதான் நானும் மீனாவும் (மலேசியா) உங்களைப் பத்தி பேசிக்கொண்டிருந்தோம். உங்களது சமீபத்திய இந்தியப் பயணக்குறிப்புகள் மிகச்சிறப்பாக அமைந்திருப்பது குறித்து. அமெரிக்காவில் போயும் மொட்டையா? முதலில் இந்த புஷ்க்கு மொட்டை அடிச்சா உலகம் அமைதியா இருக்கும். நடக்குமா? :-)

திரு.திருமலை:

உங்கள் கட்டுரை வாசித்தேன். மிக ஆழமான கட்டுரை. ரசித்தேன், உங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். நன்றி.

திரு.மணியன்:

ஏகாந்தம் எல்லோருக்கும் பயன் தரக்கூடியது. கூட்டத்திலும் அது கிடைக்கும், அரிய சில பொழுதுகளில். அதற்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், அல்லது அச்சமயம் இறையருள் கிட்டினால். மற்றபடி இந்த அமெரிக்கர்கள் வாரனாசியின் கூச்சலில் அமைதி கிட்டியதாகச் சொல்வது ஒருவகையான கலாச்சார மயக்கம் என்று தோன்றுகிறது. நன்றி.

கண்ணன்

கீதா சாம்பசிவம் 3/11/2006 12:04:00 AM

neengal ponathu Nashville pillaiyar koil enru ninaikiren. Ange Gurukkal migavum nanraaga arachani abisheham seivar.Ellam mudinthathum oru Bajanai nadakkum parungal Maduraila iruntha Rajammal Sundararajan Thiruppavai class Bajanai pannarathai vida migavum nanraga irukkum.

நா.கண்ணன் 3/11/2006 08:38:00 AM

Hello Ms.Sambasivam

ஆமாம் அது நாஷ்வெல் பிள்ளையார்தான். என்ன பிரம்மாண்டம்! நான் முதலில் கேட்டது அந்த பஜனை ஒலிதான். வட இந்திய பாணி. எனக்கு பிடித்த கீர்த்தன். நானும் துளசியும் வட அமெரிக்காவில் க்ஷேத்ராடணம் செய்ய உள்ளோம் :-) அவ்வளவு அழகான கோயில்கள் உள்ளன. மாலிபு பெருமாள் பற்றி எழுதவேண்டும்...

கண்ணன்

பத்மா அர்விந்த் 3/11/2006 08:54:00 AM

நானும் நாஷ்வில் பிள்ளையார் கோவிலுக்கு சென்றிருக்கிறேன். நல்ல கட்டுரை. எங்கே நியுவர்க் வருவதாக சொல்லிவிட்டு வரவில்லை?

நா.கண்ணன் 3/11/2006 11:09:00 AM

பத்மா!

அமெரிக்கா அழைக்கிறது :-)

நானும் என் பெண்ணும் வருகின்ற ஜூலை அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளோம். நியூசெர்சியில்தான் இருப்பு. கிட்டதானே இருக்கிறீர்கள். கட்டாயம் சந்திப்போம். பிட்ஸ்பெர்க் பெருமாள் கோயில் போகவேண்டும் (மொட்டை அடிக்க இல்லை :-))

மிக்க அன்புடன்
நா.கண்ணன்