சி.புஸ்பராஜா
இறப்பவர்க்கில்லை துக்கம்
அது இருப்பவர்க்கே!

இன்னொரு நண்பனை இழந்திருக்கிறேன் என்று இரண்டு நண்பர்கள் ஜெர்மனியிலிருந்து செய்தி அனுப்பியிருந்தனர். புஸ்பராஜா ஒரு போராளி. களத்தில் மட்டுமல்ல, தன் உடலுடனும் போராடியவர். இரண்டு இதய அறுவை சிகிச்சை, கடைசியாக கல்லீரல் சிகிச்சை. ஆனால் அதெற்கெல்லாம் பயப்படாதவர். அதையும் வாழ்வின் ஓட்டமாக எடுத்துக்கொண்டு செல்பவர். ஒரு இரவில் கவி ஜெயபாலன், இவர் வடக்கிருக்க இந்தியா சென்றுவிட்டார் என்றார். ஈழம் இல்லையென்றானவுடன் எத்தனையோ போராளிகளுக்கு தமிழகமே தாய் வீடானது. என்னைப் போன்ற ஊர் சுற்றிகளுக்கு, வெளிநாட்டில் வந்து வாழும் ஈழச் சமூகமே தமிழகமானது! முதன் முதலாக பெர்லின் இலக்கிய சந்திப்பில் பார்த்த தமிழ் முகங்கள் அப்படியே நெஞ்சில் பதிந்துள்ளன. கலைச்செல்வனும், புஸ்பராவும் என்னை முதன் முதலாக பாரிஸ் வட ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்தது நேற்று போலுள்ளது. இப்போது இருவரும் இல்லை. அவர்களின் நினைவுகளும், அன்பும் மட்டுமே நிற்கின்றன. புஸ்பராஜா பலா போன்றவர். வெளியே தோற்றத்தில் முரடணாக இருந்தாலும் உள்ளத்தில் மிகவும் கனிவானவர். அவர் தோழமையில் ஒரு சிறு மாசு கூட இருந்ததில்லை.

எங்கோ பிறக்கிறோம், எங்கோ இணைகிறோம். இந்த ஓட்டத்தின் பொருள் என்ன? எங்கோ பிறக்கிறோம் எங்கோ இறக்கிறோம். இத்தோற்றத்தின் பொருள்தான் என்ன?

நேற்று அதிசயமான ஒரு கனவு. அதில் இறப்பு என்பது ஒரு தோற்றப்பிழை என்று வந்தது. இறந்த பின்னும் நாம் வாழ்கிறோம். இதே உணர்வுகளுடன். இதே தோழமையுடன். ஆனால் அது இருப்பவர்க்குப் புரிவதில்லை.

சி.புஸ்பராஜா வாழ்கிறார்.

****************************

பெர்லின் நண்பர் நடராஜா சுசீந்திரன் திரு.புஸ்பராஜா பற்றிய பல அறிய தகவல்களை தனது சமீபத்திய வானொலி செவ்வியில் அளித்துள்ளார். அதைக் கேட்க இங்கே சொடுக்குக!

0 பின்னூட்டங்கள்: