ஒலிக்கும் மின்னஞ்சல்

'யோகியின் சரிதம்' எனும் புத்தகம் எழுதிய பரஹம்ச யோகானந்தர், விவேகாநந்தர் வாழ்வில் நடந்ததாக ஒரு நிகழ்ச்சியைக் குறிக்கிறார். விவேகாநந்தர் சரித்திரப்புகழ் பெற்ற தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு கப்பல் வழியாக இந்தியா திரும்பும் வழியில் சூயஸ் கால்வாயை நெருங்கும் போது ஏசு நாதர் நிகழ்த்திய குன்றுப் பிரசங்கத்தைக் கேட்டதாக எழுதுகிறார். அதாவது, நமது ஒலி அலைகள் என்றென்றும் காற்றில் மிதந்து கொண்டு இருக்குமாம். 'நெஞ்சம் மட்டும் மறப்பதில்லை போலும், காதும் மறப்பதில்லை!' என்பது பாடம் :-)

ஆனால் சாதாரண வாழ்வில் நாம் பேசிய பேச்சுக்கள் பதிவு செய்யப்படாவிடில் மீண்டும் கேட்கமுடியாத வண்ணமே இருக்கின்றன. பேசிப்பதிவு பெற்ற பேச்சுக்களும் காலத்தை வென்று நிற்கும் எனும் உத்திரவாதமில்லை! பாரதிதாசன், வா.ரா போன்றவர்கள் நிகழ்த்திய வானொலிப் பேச்சுக்கள் பின்னால் வந்த நிறுவாகத்தால் அழிக்கப்பட்டு விட்டதாக 'மணிக்கொடி' சிட்டி சுந்தரராஜன் எழுதுகிறார். அண்ணா நிகழ்த்திய வானொலி உரைகள், அவர் இறந்த போது கலைஞர் நிகழ்த்திய கவிதாஞ்சலி இவைகளை மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டுமென்ற ஆசை யாருக்குத்தான் வாராது? இது பொது வாழ்வு ஏக்கங்கள். ஆனால், தனிப்பட்ட வாழ்வில் நாம் இழந்துவிட்ட உறவுகளின் குரலை நம்மோடு வைத்துக் கொள்ளக்கூடாதா என்ற ஏக்கம் எவ்வளவு இயல்பானது, ஆறுதல் தருவது. இது இன்று இணையத்தின் மூலம் சாத்தியமாகிறது.

உண்மையில் இணையமெனும் தொழில் நுட்பம் வந்த பிறகு மின்வெளி என்ற சூட்சும உலகம் மானுடத்திற்கு கிடைத்திருக்கிறது. இந்த வெளியில் காலம், இடம், தேசம் போன்றவை பொருள் இழந்து விட்டன. இலத்திரன் வேகத்தில் நடக்கும் செயல்களில் காலம் என்பது அடிபட்டுப் போகிறது. இடம், தேசம் போன்றவை இருப்பதாகவே நாம் உணர்வதில்லை. இணையம் தரும் விர்ச்சுவல் உலகில் கணினித் தொடர்புள்ள எவரும், எப்போது அருகிலேயே இருக்கிறார்கள். இப்படிப் பட்ட ஆசாதரணமான தொழில்நுட்பம் இப்போது மின்னஞ்சல் போல் 'ஒலி அஞ்சல்' எனும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சலில் நாம் காணும் அத்தனை வசதிகளும் இருப்பதுடன் நமது பேச்சைப் பதிவு செய்து அனுப்பவும் முடிகிறது.

யாகூ மெசென்சர், கூகுள் சாட், ஸ்கைபி போன்றவை தராத வசதிகளா? என்று கேட்கலாம். உண்மைதான், அவை ஒலி, காட்சி நிகழ்கின்ற அதே தருணத்தில் அவைகளை நமக்களிக்கும் வசதிகளை இலவசமாகத் தருகின்றன. ஆயினும் பேசி முடித்தவுடன், எல்லாம் ஏசுவின் குன்றுப் பிரசங்கமாகிவிடும்! மீட்க முடியாது. [இதெற்கென தனியான செயலிகள் கொண்டு பதிவு செய்தால் ஒழிய]. மேலும் யகூ சொல்கின்ற ஒலி அஞ்சல் (Voice Mail) என்பது வெறும் ஒலிப்பதிவு மட்டுமே. வீட்டிலுள்ள தொலைபேசி/ஒலிப்பதிவான் (answering machine) போன்றே செயல்படுகிறது. ஒலிப்பதிவு செய்த பின் அனுப்புவதை தவிர பிற வசதிகள் கிடையாது. அனுப்பிய நகல் கூட நமக்குக் கிடைக்காது! ஆனால், ஒலி அஞ்சல் என்பது அப்படியல்ல. அது கடிதம் எழுதுவது போன்றது. ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டுமென்ற உணர்வு வந்தவுடன் கையில் பேனாவை வைத்துக் கொண்டு எழுதுவது போல், இதில் கணினியில் நம் பேச்சைக் கடிதம் போல் பாவித்துப் பேசி அனுப்ப வேண்டியது. கணினி 'ஆன் லைன்' என்று வரும் போது நமது பேச்சு குறிப்பிட்ட நபருக்கு அனுப்பப்படும். இப்படிச் செய்வதில் பல அனுகூலங்களுண்டு.

1. நமது குரல், நமக்கு வேண்டப்பட்டவர் குரல் எப்போதும் நமக்கு அருகிலேயே இருக்கும். ஒரே குடும்பத்தில் இருக்கும் போது இதன் அவசியம் புரியாது, ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் போது ஒலி அஞ்சலுக்கு 'emotional appeal' அதிகம்.
2. எப்போதும், எல்லோருடனும் பேச முடியாது. காலம், தேசம் போன்றவை குறுக்கிடலாம். அதனால், பேச வேண்டுமென்று தோன்றும் போது பேசி, பின்னால் அனுப்பி வைக்க முடியும். மேலும், சில உணர்வுகளை நேரில் பார்க்கும் போதோ, பேசும் போதோ கூடச் சொல்ல முடிவதில்லை ('சொல்லத்தான் நினைக்கிறேன்...') அவைகளை நாம் சொல்ல நினைக்கும் பாவத்தில் பேசி ஒலிப்பதிவாக அனுப்பி வைக்க முடியும்.
3. எவ்வளவுதான் எழுதினாலும், பேச்சுக்கு இருக்கும் சக்தி எழுத்திற்குக் கிடையாது. பிறந்தவுடன், ஏன் பிறக்கும் முன்னமே, கேட்கும் ஒலிதான் நம் உணர்வில் ஒட்டி நிற்கிறது. எழுத்து என்பது பின்னால் கற்றதே. எனவே எழுத்தறிவில்லாதவர் கூட இந்த தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தலாம். உதாரணமாக, இந்த தொழில்நுட்பத்தை மிக நூதன முறையில் திருநெல்வேலி மாவட்ட அதிகாரி டாக்டர். ராதாகிருஷ்ணன் பயன்படுத்திய விதம் நினைவு கொள்ளத்தக்கது. அதாவது, எழுதப்படிக்கத் தெரியாத கிராமவாசிகள் கூட ஒலிப்பதிவின் மூலம் தங்கள் குறைகளை மாவட்ட அதிகாரிக்கு அனுப்பி வைக்கலாம் எனும் ஒரு சம்பிரதாயத்தை அவர் அமுல் படுத்தியுள்ளார்.
4. நமது இலக்கியங்கள் எல்லாம் பேச்சை அடிப்படையாகக் கொண்டவையே. தமிழ் மொழி இசையுடன் இயைந்து போவது. செவ்விலக்கிலக்கியங்கள் இந்த சூட்சுமங்களைப் புரிந்து கொண்டிருப்பதாலேயே காலம் கடந்து நிற்கின்றன. இப்படிப்பட்ட தமிழ் இலக்கியச் செல்வங்களை ஒலி வடிவிலும் நாம் காக்க முடியும். உதாரணமாக, ஒரு நல்ல உரையைப் பேச்சுப் பதிவாக்கி முதுசொம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கலாம்! அங்கு அது நிரந்தரப்படுத்தப்படும்.

பிற அனுகூலங்களைப் பேசுமுன், இந்த ஒலி அஞ்சல் முறையை எப்படி நாம் பெறுவது என்று விளக்கிவிடுகிறேன். ஒலி நறுக்கு (VoiceSnap) எனும் சென்னை/அமெரிக்க நிறுவனம் இந்த வசதியை இலவசமாக வழங்குகிறது. இவர்களது வலைத்தளமான http://www.voicesnap.com சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்யும் போது வேலை செய்யும் ஒரு மின்னஞ்சல் முகவரியைத் தரவேண்டும். அங்கு உங்கள் கடவுச் சொல் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் முகவரியே உங்கள் ஒலி அஞ்சல் முகவரியாகவும் அவர்கள் வழங்கும் செயலியில் பயன்படும். எனவே, பதிவு செய்த பின் அவர்கள் இலவசமாக வழங்கும் செயலியை (மென்பொருளை) இறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிருவி விடுங்கள். அந்தச் செயலியை நீங்கள் இயக்கியவுடன் அது உங்கள் ஒலி அஞ்சல் முகவரி, கடவுச் சொல் இவைகளைக் கேட்கும். அவைகளை அளித்து உட்சென்றால் நீங்கள் ஒலிப்பதிவு செய்து மகிழலாம். ஆனால், இது ஆங்கிலத்தில் இயங்குவதால் அடிப்படை ஆங்கில அறிவு தேவை. சில எளிய வகையில் இதை ஆங்கிலம் அறியாதோரும் பழகும் வகை செய்ய முடியும். இதுவொன்றும் கம்ப சூத்திரமல்ல. பதிவு செய்யும் போது உங்கள் தாய்மொழி எதுவென்று மறக்காமல் குறிப்பிடுங்கள். அதன் மூலமே ஒலி நறுக்கு (VoiceSnap) வழங்கும் சில பிற வசதிகளை அனுபவிக்க முடியும்.

உதாரணமாக, ஒலி நறுக்கு (VoiceSnap) நிறுவனம், குமுதம் பத்திரிக்கையுடன் சேர்ந்து சினிமா நடிகைகளுடன் நீங்கள் உரையாடும் வாய்ப்பைத் தருகிறது. உங்கள் கேள்விகளுக்கு நடிக, நடிகையர் பதிலளிகின்றனர். மேலும் கனடாவிலிருந்து வெளிவரும் ஒலிFM எனும் வானொலி ஒலிஅஞ்சல் முறையைப் யன்படுத்தி நேயர் விருப்பத்தைப் பதிவு செய்து ஒலியாக்குகிறது.

நாங்கள் செயல்படுத்தும் முதுசொம் காப்பகம் ஒலி நறுக்கு (VoiceSnap) தரும் வசதிகளைப் பயன் படுத்தி தமிழை எப்படி மேலும் வளம் பெறச்செய்யலாமென யோசித்து வருகிறது. நிறையத் தமிழர்கள் இவ்வசதியைப் பயன் படுத்தும் போது,

1. தமிழில் செயல்படும் ஒரு ஒலியாடற்குழுவை உருவாக்கலாம். இப்போதுள்ள மடலாடற்குழுக்கள் (eMail forums) போலவே இது செயல்படும், ஆனால் அவரவர் குரலில். இதற்கென 'தமிழ்குயில்' எனும் ஒரு அமைப்பை உருவாக்கி வருகிறோம். இதுவே தமிழின் முதல் ஒலியாடற்குழுவாக அமையும்.
2. ஒலி அஞ்சல் மூலமாக தமிழ் கொண்டிருக்கும் அளப்பரிய முதுசொம் (முந்தைய சொத்து, பாரம்பரியச் சொத்து) என்னவென்று தமிழ்கூறும் நல்லுகம் (tamil diaspora) அறியச் செய்யலாம். உதாரணமாக, ஒலி அஞ்சல் மூலமாக 'திருலோக சீதாராம்' எனும் தமிழ்க் கவிஞன் பற்றி ஸ்ரீரங்கம் V.மோகனரங்கன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை முதுசொம் காப்பகம் புதிதாகத் துவங்கியுள்ள 'முதுசொம்' எனும் வலைப்பதிவில் இட்டிருக்கிறது.
'மாகவிஞன் திருலோகம்' எனும் பேச்சு
'இருள் முயக்கு' எனும் அவரது கவிதை கேட்கக் கிடைக்கிறது.
3. தமிழின் உண்மையான வளம், அதன் உயிர் 'பேச்சு வழக்கில்' இருக்கிறது. இந்தப் பேச்சு வழக்கு தன்னுள் காலம் கடந்த தமிழ் கலைச் சொற்களை வைத்திருக்கிறது. இன்றைய தலைமுறையின் அறியாமை இந்தப் பேச்சு வழக்குகளை அறியாமல் இருப்பதே. எனவே 'தமிழ் வட்டார வழக்குகள்' 'வீட்டுப் பேச்சு' இவைகளை ஒலி அஞ்சல் மூலமாக பதிவு செய்து பாதுகாக்க வேண்டுமென்ற ஆவலிலுள்ளோம். இது அதிகப்படியாக தமிழர்கள் இத்திட்டத்தில் பங்கேற்பதின் மூலமே செயற்படும். வட்டாரத் தமிழ் அகராதிகளை ஒலிவடிவில் தயாரிக்க முடியும்.
4. வெளிநாட்டில் வாழும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதென்பது பெரிய சவால். போதிய பாடத்திட்டம் இல்லாமை, போதிய நல் ஆசிரியர்கள் இல்லாமை இவை பெறும் தடைகள். இவைகளை ஒலி அஞ்சல் மூலமாக நிவர்த்திக்க முடியும். ஒரு 'தொலைத்தூரக் கல்வி' முறையாக ஒலி அஞ்சலைப் பயன் படுத்த முடியும். 'தமிழ் குயில்' அமைப்பிம் மூலமாக ஆர்வமுள்ள தமிழ் ஆசிரியர்கள் தமிழ் பாடம் சொல்லித் தரலாம்.
5. ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற ஞானத்தை என்றும் அழியாத வண்ணம் முதுசொம் காப்பகத்தில் ஒலி அஞ்சல் மூலமாக இடலாம். உதாரணமாக, தமிழ் வைத்தியமுறைகள் பற்றி முனைவர்.இரா.வாசுதேவன் அவர்கள் வழங்கியுள்ள உரைகள் இப்படி சேமிக்கப்பட்டுள்ளன. இது போன்ற உரைகளை மற்றோரும் அனுப்பி வைத்தால் சேகரித்து எல்லோரும் பயன்பெறும் வகையில் செய்ய முடியும். உதாரணமாக, சங்கத் தமிழ் பற்றி லண்டனில் வாழும் திரு.நடராஜன் அவர்கள் ஆற்றிய உரைகள் முதுசொம் காப்பகத்தில் உள்ளன
6. முன்பள்ளிச் சிறார்களுக்கு (கிண்டர்கார்டன்) தமிழ் பெண்கள் எளிய தமிழ் பாட்டுக்கள் (ரைம்ஸ்) சொல்லித் தரலாம்.
7. சமையற் குறிப்புகள் வழங்கலாம்.
8. ஒரு தமிழ் இலக்கிய படைப்பாளி தனது ஆக்கத்தை தன் குரலிலேயே பதிவு செய்து நிரந்தரப் படுத்தலாம். உதாரணமாக, பாரதி இனிமையாக தனது பாடல்களைப் பாடுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், அவர் இப்போது இருந்திருந்தால் அவர் குரலிலேயே ஒலிப்பதிவாக்கியிருக்கலாம். எழுத்தாளர் ஜெயகாந்தன் பாரதியின் பாடல்களைத் திறமையுடன் சொல்லத் தக்கவர் என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி. அவரது பாரதி பக்தியை இப்படி ஒலிப்பதிவாக்கி நிரந்தரப்படுத்தலாம்.

இப்படி எத்தனையோ வகையில் தமிழ் ஒலி அஞ்சல் நமக்கு பயன்பட உள்ளது. இது பரவலாகும் போது தமிழ் வளம் பெரும் என்பது உறுதி.

முதற்பதிவு: திசைகள் மின்னிதழ்

2 பின்னூட்டங்கள்:

SK 4/07/2006 10:56:00 PM

A very useful and important post .

Thank you!

But, i am sure it will not be receiving any 'rejoinders' as people are busy with other more important things like 'ina, madha, saathi arasiyal'!

நா.கண்ணன் 4/07/2006 11:27:00 PM

I could not get your question? Are you pointing to the general use of Voice Mail or specific to Tamil Kuyil?

Kannan