தூர கிழக்கில் பௌத்தம்!


அப்போது நான் ஜப்பானில் வாழ்ந்து வந்த சமயம். என் குழந்தை பிரசவத்திற்கு என் மாமியார் வந்திருந்தார். அவர் "மறந்தும் புறம் தொழா" வைஷ்ணவர். பாவம் வயதான காலத்தில் பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கிறார், வந்தவருக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று, "பெருமாள் கோயிலொன்று இருக்கிறது, வருகிறீர்களா? என்று கேட்டேன். முகம் மலர்ந்து உடனே வந்து விட்டார். அருகிலிருக்கும் புத்தர் ஆலயத்திற்கு அழைத்துப் போனேன். "அண்டர்கோன் அணியரங்கன்! - என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!" என்று சொல்லுமாற்போல அவரது கண்கள் அணியரங்கனை அங்கு தேடிக்கொண்டிருந்தன. ஆனால் சாமவேதம் ஓதுவது போல் புத்த பிட்சுக்கள் பௌத்த மந்திரம் ஓதிக்கொண்டிருந்தனர். 10 அவதாரத்தில் இவரும் ஒருவர்தானே! என்று சமாதானம் செய்து பார்த்தேன். புத்தரை ஒரு அவதாரமாக ஆழ்வார்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, ஆச்சார்யர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. என் மாமியாரும் ஏற்றுக் கொள்ளவில்லை!!


கொரியக் கலைஞர்கள் ஜப்பான் நாரா-நகரில் அமைத்த மாபெரும் புத்தர் கோயில்


பௌத்தம் தழைத்திருந்த நாடுகளுக்கெல்லாம் 17ம் நூற்றாண்டு தொடக்கம் கிறிஸ்தவம் வர ஆரம்பித்தது. இன்று கொரியாவில் எங்கு திரும்பினாலும் கிறிஸ்தவ தேவாலயங்களே! அவை ஊருக்கு நடுவே இருக்கின்றன. புத்தர் கோயில்கள் ஊருக்கு புறத்தே மலையில் இருக்கின்றன. 21ம் நூற்றாண்டிலிலேயே அடர்ந்த காடுகளுக்கிடையில் இருக்கும் இக்கோயில்களுக்கு போவது கடினமாக இருக்கிறது...(சபரிமலை மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்) 17ம் நூற்றாண்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். துறவு என்பதை முக்கியக் குறிக்கோளாக பௌத்தம் வலியுறுத்துவதை இன்று கூடக் காணமுடிகிறது. இல்லறம், துறவறம் என்பதைப் பற்றி நம்மவர் ஏன் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பேசத் தொடங்கிவிட்டனர் என்று இப்போது புரிகிறது! சமயங்கள் குடும்பஸ்தனுக்கு அருகாமையில் இருக்கவேண்டும். மனது கஷ்ட்டப்படும் போது கோயிலுக்கு போகக்கூடியதாய் இருக்க வேண்டும். சுவாமி, மலையில் போய் உட்கார்ந்து கொண்டால் பக்தன் என்ன செய்வான்? பௌத்த, சமண மதங்களுக்கு எதிரான போரில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இதை முன்னிறுத்தி வென்றும் இருக்கின்றனர். வெங்கடேச சுப்ரபாதம் நாரணனை 'லோக பந்து' என்கிறது. இவன் உலகத்திற்கு நண்பன். அவர்களை விட்டு விலகிப் போவதில்லை. அவர்கள் அருகாமையில் இருப்பவன். திருநெல்வேலிச் சீமையிலிருக்கும் பெருமாள் கோயில்களெல்லாம் வயல்காட்டின் நடுவே அமைந்திருக்கின்றன. வயலில் உழைப்பவன் கோயிலுக்கென்று வேறெங்கும் போக வேண்டாம். குளித்து, அப்படியே ஒரு கும்பிடு போட்டால் போதும். (இந்தக் கும்பிடு போடுவது பற்றி அடுத்ததில்!)


நாரா புத்த பெருமான். இவரது மூக்கு ஓட்டைக்குள் ஒரு மனிதன் நுழைந்து வரும் அளவு மிகப்பெரிய சிலை


லௌகீக வாழ்விற்கு இந்த அருகாமை மிகவும் முக்கியம். ஆனால் தூர கிழக்குவரை தனது தத்துவ வலிமை ஒன்றை மட்டும் பலமாகக் கொண்டு பரவிய பௌத்தம் 'மெலிந்து' கிடக்கிறது. நட்பு, தோழமை, ஒரு கிளப் மனப்பான்மை இவைகளை நடைமுறையில் கொண்டுள்ள இஸ்லாம், கிறிஸ்தவம் - மலேசியா, இந்தோனிசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பௌத்தத்தை வென்று விட்டது. அடுத்துக் கொரியா என்று தோன்றுகிறது!

அரசுகள் பௌத்தத்தை ஆதரித்தவரை பௌத்தம் வளர்ந்தது. இன்று அரசு ஆதரவு இல்லாத நிலையில் அது வழக்கொழிய ஆரம்பித்துள்ளது. இந்தியச் சமயங்கள் 'நிறுவனப்படுத்துதலை' (institutionalizing Truth) என்றும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே அங்கு ஒரு 'போப்பாண்டவர்' 'இமாம்' இல்லை. அதனால் சமயங்கள் தழைக்க அரசு ஆதரவை அவை நம்பியிருந்தன. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பவை இறுக்கமான கட்டமைப்பு கொண்ட சமயங்கள். அரசு ஆதரவின்றியே அவை தன் காலில் நிற்கக்கூடியவை! அடுத்த நூற்றாண்டின் சமயமாக கிறிஸ்தவமே இருக்கும் என்று தோன்றுகிறது! அதனுடைய பிரச்சார வலிமை பௌத்தத்திற்கும், பிற இந்தியச் சமயங்களுக்கும் இல்லை. காலம் மாறி வருகிறது. இதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

11 பின்னூட்டங்கள்:

manu 5/16/2006 08:51:00 AM

நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் கண்ணன். நமக்கு பலம் போதாது தான். ஒற்றூமை இருந்தாலாவது சமாளிக்கலாம்.
தமிழ் வளர்ச்சி அடைந்தாலே நாம் காப்பாற்றபடுவோம் என்று நினைக்கிறென்.
புதிதாக தமிழ் ஃபாண்ட்ஸ் கிடைத்து இருக்கிறது. பிழை இருக்கும். மன்னிக்கவும்.
மனு

ஜீவா (Jeeva Venkataraman) 5/16/2006 01:23:00 PM

கோவிலுக்குப்போய்த்தான் கோவிந்தனை தரிசிக்க வேண்டும் என்றில்லையே.
கோவிந்தா கோவிந்தா என்று ஓலமிட்டாலே, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவானே மணிவண்ணன்!
அரசு ஆதரவோ, பிராசார வலிமையோ தேவையில்லை என்று நினைக்கிறேன்.

நா.கண்ணன் 5/16/2006 01:40:00 PM

ஜீவா: நீங்கள் சொல்வது இந்தியாவைப் பொறுத்த மட்டுமே உண்மை. நம் முன்னோர்கள் நம்மை அப்படிப் பழக்கியிருக்கிறார்கள். பிற மதங்கள் எல்லாவற்றிலும் தொழுகைக்கு கோயில் செல்ல வேண்டும். பௌத்தமும் அவ்வாறே. எனவே பிரச்சார பலம் என்பது இந்தியா தவிர எல்லா இடங்களுலும் வலிமையாக உள்ளது. இந்தியக் கோட்டையை உடைக்கும் திட்டமும் வாட்டிகனிலுண்டு :-)

Vajra 5/16/2006 03:42:00 PM

//
அரசுகள் பௌத்தத்தை ஆதரித்தவரை பௌத்தம் வளர்ந்தது. இன்று அரசு ஆதரவு இல்லாத நிலையில் அது வழக்கொழிய ஆரம்பித்துள்ளது. இந்தியச் சமயங்கள் 'நிறுவனப்படுத்துதலை' (institutionalizing Truth) என்றும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே அங்கு ஒரு 'போப்பாண்டவர்' 'இமாம்' இல்லை. அதனால் சமயங்கள் தழைக்க அரசு ஆதரவை அவை நம்பியிருந்தன. ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்பவை இறுக்கமான கட்டமைப்பு கொண்ட சமயங்கள். அரசு ஆதரவின்றியே அவை தன் காலில் நிற்கக்கூடியவை! அடுத்த நூற்றாண்டின் சமயமாக கிறிஸ்தவமே இருக்கும் என்று தோன்றுகிறது!
//

சிறப்பான பதிவு,

தென் கொரியாவில் பௌத்தமா அல்லது கிறுத்துவமா ? (Official state religion or Majority)

மதம் அடிப்படையில், வட கொரியாவின் நிலை என்ன ? (அது கம்யூனிஸ்டு என்பது போக, மக்கள் அனைவரும் பௌத்தத்தைத் துரந்து விட்டனரா?)

கிறுத்துவத்தின் ஆணி வேரான ஐரோப்பாவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறதே?

//
அதனுடைய பிரச்சார வலிமை பௌத்தத்திற்கும், பிற இந்தியச் சமயங்களுக்கும் இல்லை. காலம் மாறி வருகிறது. இதைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
//

நீங்க வேறெ, பிரச்சாரம் என்றால், சும்மா வீடு வீடாகப் போய் கேட்பதைவிட்டுவிட்டு, இப்போதெல்லாம், Lattitude, longitude கணக்கின் படி, belt கள் அமைத்துக் கொண்டு "பாவ ஆத்மாக்களை" அறுவடை செய்துகொண்டிருக்கின்றனர்.

ஜப்பான் ஒன்று தான் பௌத்த நாடாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இதை முடிவுக்குக் கொண்டுவர வழி என்ன?

இந்த "செகுலரிஸத்தினால்" தான் கிறுத்துவமும், இஸ்லாமும் பரவியது/பரவுகிறது.

நன்றி,
வஜ்ரா ஷங்கர்.

நா.கண்ணன் 5/16/2006 05:40:00 PM

அன்பின் ஷங்கர்:

+++தென் கொரியாவில் பௌத்தமா அல்லது கிறுத்துவமா ? (Official state religion or Majority)+++

இப்போதைய நிலமை 50:50. பௌத்தம் விரைவில் விழுந்துவிடும். வடகொரிய நிலமை என்னவென்று தெரியவில்லை. விசாரிக்கிறேன்.

++++ஜப்பான் ஒன்று தான் பௌத்த நாடாக இருக்கும் என்று தோன்றுகிறது+++

ஜப்பான் இந்த விஷயத்தில் உதவாக்கரை. அங்கு 'காசேதான் கடவுளடா!' பௌத்தம் உப்புக்கு சப்பாணி. செத்த பிறகு சொர்க்கம் போக பௌத்தம் வேண்டியிருக்கு. அவ்வளவே!

++++இதை முடிவுக்குக் கொண்டுவர வழி என்ன? ++++

ஏதும் செய்யவியலாது. கிறிஸ்தவமும், Open market economy-ம் இரண்டறக் கலந்திருக்கின்றன. அமெரிக்க/ஐரோப்பிய வல்லரசுகள் கிறிஸ்தவ மத சார்புடையவையாக இருக்கும்வரை கிறிஸ்தவ வளர்ச்சியைத் தடுக்கவியலாது.

இதுவரை இந்தியா விழுமியம் சார்ந்த நாடாக இருந்து வந்திருக்கிறது. இப்போதைய சந்தைப் பொருளாதாரம் இந்தியாவை வெகுவாக பாதித்து வருகிறது. விழுமியம் சார்ந்த பண்பாடு, மதம் (வாழ்வியல்) எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.

மஞ்சூர் ராசா 5/16/2006 06:17:00 PM

இந்தியக் கோட்டையை உடைக்கும் திட்டமும் வாட்டிகனிலுண்டு

ஏற்கனவே பலகாலமாக அந்த முயற்சி நடந்துக்கொண்டுத்தான் இருக்கிறது. அதில் அவர்கள் வெற்றியும் பெற்று வருகிறார்கள் என்பது உண்மை. மேலும் இந்து மதம் யாரையும் எப்பொழுதும் கட்டாயப்படுத்துவதில்லை. தொழுவதற்காக கோயிலுக்கு செல்லும் கட்டாயம் இந்து மதத்தில் இல்லை. யாரையும் இந்து மதத்தில் சேர சொல்லி அழைப்பதில்லை. வேறு மதத்தில் இணைபவர்களையும் கண்டுக்கொள்வதில்லை. அடுத்து இந்துமதம் இன்னாரால்தான் தோற்றுவிக்கப்பட்டது என்பதை யாராலும் கூற முடியாது. அது இயற்கையாக வந்த ஒரு மதமாகத்தான் கருத வேண்டியுள்ளது. யேசுவை போலவோ, நபியை போலவோ இந்து மதத்தில் ஒருவரை குறிப்பிட நம்மால் முடியாது. எனக்கென்னமோ நமது மதத்தில் இருந்து தான் மற்ற மதங்கள் தோன்றியிருக்குமோ என்று ஒரு தோணல்.

உங்கள் ஆக்கம் நன்றாக இருக்கிறது.
நன்றி.

நா.கண்ணன் 5/16/2006 06:48:00 PM

அன்பின் மஞ்சூர் ராசா:

ஜோசப் கேம்பல் போன்ற அமெரிக்கத் தத்துவவியலர் உலகின் அனைத்து மதங்களுக்கும் தோற்றுவாய் இந்தியா என்று சொல்வதுண்டு.

இந்து 'மதம்' என்று ஏதுமில்லை. 'மதமென்ற பேய் பிடியாதிருத்தல் வேண்டும்' என்று வள்ளலார் சொல்லும் போதே அவர் சைவ மதம் பற்றிப்பேசவில்லை. சைவ 'நெறி' பற்றிப் பேசுகிறார் என்பது புரியும். இந்திய தத்துவம் செறிந்த வாழ்வியலை பிறர் இந்து 'மதம்' என்று சொல்கின்றனர். பிறப்பவன் எல்லோரும் இந்துதான். பின்னால் அவன் சீக்கியனாகவோ, சைவனாகவோ, வைணவனாகவோ, கிறிஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ மாறுகிறான். அறிவியல் மனிதனுக்கு பிறப்பிலேயே சமய ஒழுங்கு வந்துவிடுகிறது என்கிறது. அதைத்தான் இந்தியவர்கள் வளர்த்து எடுக்கின்றனர். இதைப் பல தமிழ்ப் பாசுரங்கள் கொண்டு நிறுவ முடியும்.

johan -paris 5/16/2006 07:07:00 PM

நமது மதத்துள் உள்ள காலத்துக்குதவாக் கொள்கைகளையும் கடாசவேண்டும். குறிப்பாகச் சாதி!!
தமிழில் தமிழன் வழிபட உரிமை கேட்டாலும்,எவருமே துள்ளவும் கூடாது;சங்கராச்சாரியார் உட்பட; அதிலுள்ள தார்மீகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். காஞ்சி மடம் ,மற்றும் ஏனையவும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.
சங்காராச்சாரி பிராமணருக்குழைப்பவராக மாத்திரம் இருக்கக் கூடாது. அவர் எல்லாத்தரப்பு இந்துக்களின் நம்பிக்கையும் பெறவேன்டும்.
இல்லையோ வத்திக்கானில் எண்ணம் இலகுவாக ஈடேறும். நம் பிள்ளைகளுக்குக் கூட சரியாக் புரியவைக்க முடியாமல் உள்ளது.ஒரு கேள்வி;;;; கிருஸ்தவ, இஸ்லாமிய,புத்த மற்றும் ஏனைய மத வழிபாட்டை நடத்துபவர், எந்த தொழில் செய்பவரின் பிள்ளையாக இருக்கும் போது; இந்துவுக்கு மட்டும் ஏன்? இந்தப் பிராமணர் மாத்திரம்.
யோகன்
பாரிஸ்

நா.கண்ணன் 5/16/2006 07:24:00 PM

யோகன்

ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தே!

இந்து நெறியில் பல்வேறு பெரியவர்கள் தோன்றிக் காலம், காலமாகச் சொல்லக்கூடிய கருத்துத்தான் இது. வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் இப்படித் தோன்றிய சீர்திருத்தவாதிகள் நிறைய உண்டு. புத்தனே ஒரு சீர்த்திருத்தவாதிதான். பின்னால், ஆழ்வார்கள் தோன்றினர். வள்ளலார் தோன்றினார். பாரதி தோன்றினான். விவேகாநந்தர், பரமஹம்ச யோகாநந்தர் போன்ற பல வங்காளர்கள். நெறிகளில் குறையில்லை. நடைமுறைப்படுத்தும் சமூகவியலியல் நிறையக்குறை இருக்கிறது. காலம் தமிழனை மாற்றும் என்று வேண்டுவோம்.

Dr.Anburaj 5/03/2013 04:49:00 PM

01.கிறிஸ்தவம் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு .யுதமக்களை தங்களை உன்னதப்படுத்த கிறிஸ்து அல்லது மேசியாவை இறைவன் அனுப்புவான். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர சுழல்காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீர்க்க தரிசி மீண்டும் பிறப்பார்.எலியாவிற்குப் பின் கிறிஸ்து பிறப்பார் என்பது கிறிஸ்து குறித்த தீர்க்கதரிசனம். இயேசு தன்னை கிறிஸ்து என்றார்.யோவானை எலியா என்றார். யுதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.எனவே வேதப்புரட்டன் எனக்குற்றம் சுமத்தி சிலுவையில் அடித்தனர்.மறுநாள் யுதர்களுக்கு சப்பாத் பண்டிகை. எனவே நாள்பிறப்பதற்கு முன் சிலுவையில் உடல் தொங்கக்கூடாது எனவே இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட இரு கள்ளர்களையும் காலைமுறித்து, அந்நாட்டின் வழக்கப்படி தரையில்குழிதோண்டி புதைத்துவிட்டனர். இறந்த ? ??? இயேசுவை மண்ணில்புதைக்காமல் குகையில் வைத்தது ஏன் ?ஏன் ?ஏன்?
இயேசு சாகவில்லை. காப்பாற்றப்பட்டார்.பிற நாடுகளில் வாழ்ந்த யுத மக்களை காண போனவர் இந்தியாவில் மரணம் அடைந்தார் என்றெல்லாம் செய்திகள் உள்ளது. ஆக இயேசு 1)உலகமக்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார் 2) இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கும் என்பது - இயேசுவின் போதனைக்கும் வரலாறுக்கும் முரண்பட்டது. மத்தேயு அதிகாரத்தில் இயேசு ” சீடர்களுக்கு இட்ட கட்டளை என்னவென்றால் ” நீங்கள் புரசாதியினர் வீட்டிற்குச் செல்லக்கூடாது.புறசாதியினர் பட்டணங்களில் பிரவேசிக்கக் கூடாது.இஸ்ரவேலர் சந்நதியினர் வீடுகளுக்கேச் செல்ல வேண்டும். இப்படி போதித்த இயேசு உலகை ரட்சகர் என்று சொல்வது சரியா? இந்துக்கள் நான் அனைவரும் கிறிஸ்தவ மதம்குறித்து சரியான செயல்பாட்டைக் கொள்ளவில்லை. தங்கள் வலைதளம் இனிமேல் அதுபோன்ற கட்டுரைகளை வெளியிடவேண்டும்.

Dr.Anburaj 5/03/2013 04:55:00 PM

பௌத்தம் தேவைக்கு அதிகமாக துறவறத்தை வலியுருத்துகின்றது. எனவேதான் அங்கு தகுதியற்ற பிட்சுக்களால் சீரழிவு.ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் போல் பௌத்த அமைப்புகளும் செயல்பட்டால் -இந்தியாவில் உள்ள அனைத்து மடங்களும் - செயல்பட ஆரம்பித்தால் -வாத்திகானின் திட்டமும் அரேபிய ஆதிக்கவாதிகளின் நயவஞசகமும் தோல்வி அடையவைக்க இந்துக்களால் முடியும்.