முந்நீர்

இன்று மெயின்லாண்டிலிருக்கும் பூசான் என்ற நகரத்திற்கு கடல் வழியாகப் போய் வந்தேன். கடல் மாலை வெய்யிலில் புனல் நீர் போல் கொஞ்சம் மஞ்சள் கலந்த பச்சையிலிருந்தது. கடல் எப்போதும் பிரம்மிக்க வைக்கும் விஷயம். கடலைத் தரையிலிருந்து பார்த்தாலும், கடலை கடலிலிருந்து பார்த்தாலும் பிரம்மிப்புதான். கடலை "முந்நீர்" என்றனர் நம் முன்னோர். எல்லா நீருக்கும் முந்திய நீர் என்று பொருள்! கொரியாவின் தென்முனை ஏகப்பட்ட தீவுகள் கொண்ட பகுதி. இந்தத்தீவுகளெல்லாம் ஒரு காலத்தில் பெரும் மலைகளாக இருந்திருக்க வேண்டும். கடல் நீர் கொட்டிக் கொட்டி இவைகளை அமுக்கி வைத்திருக்கிறது என்பது அறிவியல் தெரிந்தவருக்கு மட்டுமே புரியும். அதுவும் இந்த ஆச்சர்யத்திற்குக் காரணம். இந்தத் தீவுகளில் பல இன்னும் மக்கள் குடியேறாத தீவுகள்! கடற்பறவைகள் மட்டும் சுதந்திரமாக போய் வருவதைப் பார்த்தால் எனக்குள் ஆசை பெருகிறது. எனக்கும் பறக்கும் திறமையிருந்தால் இத்தீவுக்கூட்டங்களுக்கு மாலை வேளையில் போய் வருவேன். கனவுகளில் அடிக்கடி பறந்து இப்படி சஞ்சாரிப்பேன். ஒருமுறை பறந்து இலங்கையிலுள்ள அனுராதபுரத்திற்குப் போய் வந்தேன் (அது எப்படி கரெக்கெட்டா அனுராதபுரம்ன்னு கேட்கக்கூடாது. புத்த விகாரம் இருந்தது. அதனால்). எனக்கு ஏதோ சம்சயம் எனக்கும் பௌத்ததிற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.

4 பின்னூட்டங்கள்:

`மழை` ஷ்ரேயா(Shreya) 5/18/2006 01:48:00 PM

வடகிழக்காசியாவின் ஒரு முக்கிய துறைமுகம் புசான். "புசான்" ஆ அல்லது "பூசான்" ஆ? எது சரி?

பறந்து போய் அனுராதபுரத்தில் என்ன பார்த்தீர்கள்? எனக்கு அடிக்கடி உயரத்திலிருந்து விழுவது போல (ஆனால் தரையிறங்கும் போது மெதுவாய்த்தான்..காயம்படாமல்) அல்லது தண்ணீரில் அகப்படுவது போலத்தான் கனவு வரும். இப்போ கொஞ்ச நாளாய்க் கனவு காணவில்லை.

நா.கண்ணன் 5/18/2006 07:08:00 PM

கொரிய நெடுங்கணக்கில் நெடில் கிடையாது. எனவே அது புசானுக்கும்-பூசானுக்கும் இடைப்பட்ட ஒலியாக வருகிறது. அவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுதும் போது இன்னொரு பிரச்சனை Pusan என்றும் எழுதுகிறார்கள் Busan என்றும் எழுதுகிறார்கள். ஏனெனில் ஹங்குல் (கொரிய மொழியில்) ப - bha வித்தியாசம் கிடையாது (தமிழ் போல்).

நேரடியாக சின்ன விமானங்களில் பறந்திருக்கிறேன். ஒரே சத்தம், புரட்டல். என் கனவில் நான் மிதப்பேன், தவழ்வேன், எம்பிப் பறப்பேன். எந்த ஓசையுமில்லாமல். அது சுகம்!

Vajra 5/19/2006 05:35:00 AM

ஃபோடோ போட்டு படம் காட்டுங்க சார் அப்ப தான் நல்ல இருக்கும்...

நன்றி,

வஜ்ரா ஷங்கர்.

நா.கண்ணன் 5/19/2006 08:16:00 AM

ஷங்கர்:
நிறையப் படங்கள் முன்பு இட்டிருக்கிறேனே! முடிந்தால் எனது புகைப்பட வலைப்பதிவிற்கு ஒரு நடை போய் வாருங்கள்!. ஆனாலும் படமெடுக்க அலுப்பதில்லை. ஒரு வீடியோ எடுத்தேன். இன்று சீர் செய்து நாளை வெளியிடுகிறேன்.