புத்தனும், மன்மதக்குஞ்சுகளும்!
பௌத்தம் நமக்கு அந்நியமல்ல! நமது சங்ககால முன்னோர்களில் பலர் பௌத்தர்களே. ஆனாலும் நான் ஜப்பான் வரும்வரை ஒரு புத்தர் கோயிலுக்குப் போனதில்லை. அதே போல் வள்ளுவன் தொடக்கம் பல அறிவிஜீவிகள் சமணர்களே. ஆனாலும் உங்களி யாராவது ஒரு சமணக் கோயிலுக்குப் போனதுண்டா? மிகச் சமீபத்தில்தான் தஞ்சையில் ஒரு சமணக் கோயிலுக்குப் போனேன். நமக்கு அவையெல்லாம் அந்நியமாகிவிட்டன.


வித்தியாசமான துவார பாலகர்!

அந்த வகையில் யோசித்தால் ஒரு இந்தியருக்குக் கோயில் கட்டி பிற நாட்டவர் வழிபடுகின்றனர் என்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும் (ஆனால், புத்தர் ஒரு 'நேபாளி' என்று சண்டைக்கு வருவதாக கொரியன் டூர் கைட் என்னிடம் சொன்னார்!). சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் சுவர்க்கம் எங்கிருக்கிறது என்று கேட்டால் இந்தியா இருக்கும் தென் மேற்குத்திசையைக் காட்டுகின்றனர். இது மகிழ்ச்சியான விஷயமே. ஆனால் பாவம் அவர்களுக்கு சுவர்க்கவாசிகள் கோயில்களை எப்படி வைத்திருக்கின்றனர் என்று தெரியாது! பாதிக்கு மேற்பட்ட பிரம்மாண்டமான கோயில்களில் விளக்கேற்ற எண்ணெயில்லை. பல ஆயிரம் கோயில்கள் புணரமைப்பற்ற நிலையில் புல்லும், மரமும் வளர்ந்து இடிபடும் நிலையிலுள்ளன. வழிபாட்டிலுள்ள கோயில் சுற்று கழிப்பறை போல் இருக்கிறது. கோயிலுக்குள் போனால் எல்லா வியாபாரமும் செழித்து வளருகின்றன. சுவர்க்கம் என்றோ மாறிவிட்டது! சுவர்க்கம் அமைத்துத்தந்த புத்தனை இந்தியர்கள் என்றோ விரட்டிவிட்டனர் என்று பாவம்! அவர்களில் பலருக்குத் தெரியாது!


நுழை வாயில்

நேற்று புசான் என்னும் நகரிதிலிருக்கும் புத்தர் ஆலயத்திற்குச் சென்றேன். இது 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இராஜராஜ சோழன் இன்னும் பிறக்கவில்லை. பெரிய கோயில் பற்றிய பிரக்ஞை கூட இன்னும் எழவில்லை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் பௌத்தத்தை தமிழ் மண்ணிலிருந்து விரட்டுவதில் மும்முரமாக இருக்கின்றனர். திருமங்கையாழ்வார் வாழ்ந்த காலம்! புத்த சிலையை உருக்கி ரங்கனுக்கு பொன்வேய்ந்த சமயம்! இங்கு கொரியாவில் மிகப்பெரிய புத்தர் கோயில் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது! பெரும்பாலான கோயில்கள் மலை உச்சியிலேயே அமைந்துள்ளன. உண்மையின் மீது ஆர்வமும், சங்கத்தில் பிடிப்பும் உள்ளவர்கள் மட்டுமே வந்து காணக்கூடிய தூரத்தில் இவை அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு போவது கடினம். போய்விட்டால் திரும்புவது கடினம். அவ்வளவு அழ்கான location! இயற்கை தன் அழகை, சௌந்தர்யத்தை தனிமையில் மனிதனுக்குக் காட்டும் இடங்கள். லயித்துப் போய் விடுவோம். அங்கு போய் சந்நியாசியாக இரு என்று சொல்வது கொடுமை. கூடி வாழ வேண்டிய இடத்தில் துறவறம்! ஐந்திணை வகுத்தவன் அங்கு முருகனை வைத்தான். அவளுக்கு தெய்வயானை மட்டும் போதாது என்று (சம்ஸ்காரா ஞாபகம்தான் வருகிறது :-) குரப்பெண் வள்ளியையும் சேர்த்து வைத்தான். வள்ளிக்குத்தான் தெரியும் மலையின் நெளிவு சுளிவுகள். தேய்வானை பாவம் urban girl.


அழகிய மலைக்காட்சியில் கோயில்

நிறைய டூரிஸ்ட் வந்திருந்தார்கள். இடையிடையே பௌத்த பிட்சுக்களைக் காணக்கூடியதாய் இருந்தது. கோயில் மிக சுத்தமாக இருந்தது. மலையேறிக் களைத்து வருபவருக்கு சுனைநீர் காத்துக் கிடந்தது. கொரியா, ஜப்பான் நாடுகளில் கோயிலுக்கு வருபவர் வாய் கழுவி கொஞ்சம் நீர் அருந்திவிட்டே உள்ளே போகின்றனர். உள்ளே பிரதான சந்நிதி. புத்தரும் அவரது இரு சகாக்களும். புத்த ஜாதகக்கதைகள் உள்ளும், தத்துவம் சொல்லும் நாட்டு வழக்கு கதைகள் வெளியிலும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. உள்ளே போனால் கோயில் ஒரு இந்தியனுக்கு மிக அருகில் வந்து விடுகிறது. தெரிந்த கதைகள். தெரிந்த புத்தர். வணங்கும் முறை கூட இந்தியத்தன்மை கொண்டுள்ளது. நாம் சாஷ்ட்டாங்கமாக விழுந்து எழுவோம், இவர்கள் சின்னத் தலையணை போன்ற ஒன்றில் அமர்ந்து, குனிந்து, எழுந்து, அமர்ந்து, குனிந்து என்று பலமுறை செய்து கொண்டே இருக்கின்றனர். கைகள் ஒவ்வொருமுறையும் கூப்புகிறது. கொஞ்சம் பழகிக் கொண்டால் செய்து விடலாம். ஏறக்குறைய 1500 வருடப்பழசு அந்தக் கோயில். பார்த்தால் தெரிகிறது. புரணமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.


நுணுக்கமான மர வேலைப்பாடு!

புசான் நகரிலும் ஒரு China Town உண்டு! வேடிக்கை என்னவெனில் இந்த சைனா டவுனில் எல்லாம் ஒரே ரஷ்யன் மயம்! ஒரே ரஷ்யர்கள். அமெரிக்கப் பயணிகள் தங்கள் திமிர்த்தனம் தெரியும் வண்ணம் இந்தத்தெருவில் மட்டும் உலவமுடிகிறது. நான் போனபோது நாலைந்து அமெரிக்க இளைஞர்கள் (இராணுவம்?) தாய், சகோதரி என்று வகை வகையாய் புணர் சொற்களை வீசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தனர். சாதாரண சம்பாஷணையில் இவ்வளவு கொச்சைத்தனம் அவசியமா என்றிருந்தது. ஆனால், தமிழ்க் கிராமங்களில் இப்படியான கொச்சைப் பேச்சு சகஜம். ஆக, the most sophisticated country-ன் சாதாரணக் குடிமகன் பேச்சும், the unsophisticated கிராமத்தான் பேச்சும் ஒன்றாக இருப்பது ஒரு முரண்நகை! தெருவெங்கும் மத்தியானப் பொழுது என்றும் பாராமல் பரத்தையர் நின்று கொண்டிருந்தனர் - மார்புகள் தெரியும் வண்ணம். வெள்ளையர் இன்னும் சங்ககாலத்தில் இருப்பது அவர்கள் ஆசியாவிற்குள் இருந்தாலும் தெரிகிறது. தினம் அவர்களுக்கு இந்திரவிழாதான்!!

2 பின்னூட்டங்கள்:

Kanags 5/20/2006 08:49:00 AM

//ஆனால் பாவம் அவர்களுக்கு சுவர்க்கவாசிகள் கோயில்களை எப்படி வைத்திருக்கின்றனர் என்று தெரியாது!//

சுவர்க்கக் கோயில் சிதம்பரத்தை சென்று பாருங்கள் ஐயா!

இங்கு அவுஸ்திரேலியாவிலும் ஒரு பௌத்தக் கோயில் உண்டு. மிகப் பிரம்மாண்டமான அழகிய கோயில். இதனைப் பற்றி என்னுடைய பதிவில் விரைவில் எழுதுவேன். அவுஸ்திரேலியாவில் உள்ள இந்துக் கோயில்களைப் பற்றி அறிய என்னுடைய விக்கி கட்டுரைகளைப் பாருங்கள்.

உங்கள் பதிவுக்கு நன்றிகள் ஐயா.

நா.கண்ணன் 5/20/2006 09:04:00 AM

உங்கள் பதிவு கண்டேன். நன்றி. இலங்கையர் பலர் தமிழ் சினிமாக் காட்சிகள் பார்த்துவிட்டு, பாடத்தில் படித்துவிட்டு தமிழகம் ஒரு சொர்க்கபூமி என்று வந்து ஏமாறுவதுண்டு. தமிழன் அடிப்படை நாகரீகம், தன்மானம் இவை இழந்து நிற்கிறான். இல்லையெனில் கோயில் சுவரில் கழிவு, கோயிலுக்குள் பிராத்தல், கோயிலுக்குள் அடாவடித்தனம், ஏமாற்று, பிச்சை இவை செய்யமாட்டான். எனக்கு பல நேரங்களில் எழும் கேள்வி..இம்மண்ணில் எப்படி இத்தனை ஞானிகளும், தத்துவங்களும் பிறந்தன என்று. ஒரு காலத்தில் நாகரீக வளர்ச்சியில் இருந்திருக்கலாம் அல்லது அவன் நாகரீகமடையவேண்டுமென்று ஞானிகளும், தத்துவங்களு பிறக்கலாம் "நோயுள்ள இடத்தில்தானே வைத்தியனும் இருப்பான்" [இது வெறுப்பால் எழுந்ததல்ல. ஒரு சுயவிமர்சனம் எனக்கொள்க]