வெகுளிகள்

நீண்ட வருடங்களுக்குப் பின் தூரக் கிழக்குத் தேசத்தில் வாழ்வது புத்துணர்ச்சி ஊட்டுவதாய் உள்ளது. இன்னும் இவர்களிடன் நிறைய வெகுளித்தனம் எஞ்சி நிற்கிறது. எப்படி இன்னும் இந்த உலகில் இது சாத்தியப்படுகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறது. சந்தைக்குப் போய் சாமான் வாங்குவதெல்லாம் மறந்து போன ஒன்று. திருப்பூவணம் சந்தை மிகச் சத்தமாக இருக்கும். ஆனால் இங்கு சந்தை என்பது அந்த வகையில் இல்லை. சென்னை காய்கறி மார்க்கெட் போல என்று சொல்லலாம். ஜெர்மனியில் வாழ்ந்தவரை இந்த வகையான Open market -ல் சென்று காய்கறி வாங்குவதில் காசு சேர்க்க முடியாது. பேசாமல் Super Market- போய் சாமான் வாங்குவதே மேல். மொத்தமாக வாங்கி-விற்பதால் அங்கு விலை குறைவாக இருக்கும். ஜெர்மன் விவசாயிகளெல்லாம் ரொம்ப sophisticated (பதிவுசு)! இவர்கள் விலையெல்லாம் யானை விலை, குதிரை விலையிருக்கும். எனவே கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் சூபர் மார்க்கெட்டில் காய்கறி வாங்கியே பழகி விட்டது. நான் இருப்பது ஒரு provincial area. கிராமம் இன்னும் இருக்கிறது. வயலையும், மலையையும், கடலையும் பார்த்துக் கொண்டு ஒரு மரத்தடி கோஷ்டி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் எங்கோ போய்விட்டது மனது. பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன். அப்போதும் உள்ளம் துள்ளி அந்த மரத்தடிக்கு ஓடியது. இந்த சூழலில் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்குவது சுகமாக இருக்கிறது. சும்மா சொல்லக் கூடாது தூரக்கிழக்கு மக்களுக்கு சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இந்தியாவைத் தாண்டி, மலேசியா, சிங்கப்பூர் என்று வரும் போதே மாகள் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது புரியும். இந்திய மார்க்கெட்டுகளில் அழுகிய பழமும், புதிய காய்கறியும் ஒரே இடத்தில். கடைக்கு வெளியே என்பது கழிப்பிடம். வீட்டிற்கு வெளியே கழிப்பிடம். இந்த மனோநிலை என்று மாறும் என்று தெரியவில்லை. கொரியாவில் இந்த பாட்டிமார்கள் பாவமாக இருக்கிறார்கள். குட்டையாக, தடித்த முகத்துடன், கூன் விழுந்து. இவர்கள் காலை நீட்டிக் கொண்டு காய்கறிகளை விரித்து வைத்து விற்கும் போது வாங்கு, வாங்கு என்கிறது. விலை மார்க்கெட்டைவிட மலிவு. கீரை வகைகளை இவர்கள் கழுவி மிக அழகாக வைத்து விற்கிறார்கள். காய்கறிக்கடை முழுவதும் பெண்கள் சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது. ஒரு ஆண் கண்ணில் படவில்லை. வியாபார நுணுக்கமெல்லாம் பெண்களுக்குத்தான் தெரியும் போல!

நேற்று பஸ் நிற்பதற்கு முன் ஒரு டாக்சி வந்து மறித்தது. பஸ் ஓட்டுநர் ஒன்றும் சொல்லாமல் கதவைத் திறந்தார் - திறந்த கதவுடன் பயணிப்பதெல்லாம் இந்தியாவில்தான்! ஒரு கிழவன் என்னவோ பேசிக் கொண்டு வந்தான். இரண்டாவது சீட்டில் ஒரு பள்ளி மாணவன் உட்கார்ந்திருந்தான். கிழவன் வந்து அந்த சீட்டின் பக்கத்தில் கைவிட்டு எதையோ தேடினான். ஒரு பர்ஸ் கிடைத்தது. சிரித்துக் கொண்டே கீழே இறங்கி டாக்சி ஓட்டுநரிடம் காசு கொடுக்க திறந்த போது காசு இல்லை!! திரும்ப புலம்பிக் கொண்டே உள்ளே வந்து தேடினான். டிரைவர் ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே? பொறுமையாக கதவைத் திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இதற்குள் டாக்சி டிரைவர் 'கைப்பேசியில்' யாருடனோ பேசிக்கொண்டு பந்தாவாக பஸ்ஸிற்குள் வந்து தேடினான். ஏதோ இவன் வந்தால் காசு கிடைத்துவிடும் போல. இப்போதாவது யாராவது ஒரு வார்த்தை பேச வேண்டுமே? இதுவே ஜெர்மனியாக இருந்திருந்தால் வேறு மாதிரி இருந்திருக்கும். அவனுக்கு நேரம் தவறக்கூடாது. எனவே இதையெல்லாம் அனுமதிக்க மாட்டான். அவரவர் பொருளை பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு. கிடைத்தல் அதைக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கொடுத்துவிடுவர். அங்கு போய் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு! இந்தியாவாக இருந்தால் இதற்குள் ஒரு நாடகமே நடந்திருக்கும். பொது மக்கள் ஒரு பேச்சு, டிரைவர் ஒரு பேச்சு, தொலைத்தவன் ஒரு பேச்சு, டாக்சி டிரைவர் ஒரு பேச்சு என்று. கடைசியில் ஓட்டுநர் குரலே ஓங்கி நிற்கும். வண்டி எப்போதோ போயிருக்கும். ஆனால் வண்டி நின்று கொண்டே இருந்தது. ஒரு வார்த்தை. ஒரே ஒரு வார்த்தை. ஊகூம், இந்தப் பொறுமையை நான் உலகிலேயே பார்த்ததில்லை. முத்தாற்பாய், டாக்சி கிளம்பி பஸ்ஸை சுற்றிக் கொண்டு போகும்வரை பஸ் காத்திருந்தது. சத்தியமாய் இவர்கள் வேறு சாதி!! புத்தன் தவறிப் போய் இந்தியாவில் பிறந்து விட்டான். அவன் இவர்களுடன் பிறந்திருக்க வேண்டியவன்!

ஆய்வுப்பட்டறைக்கு வந்திருந்த ஒரு சீன விஞ்ஞானி காலை உணவின் போது என்னிடம் "தான் இதுதான் முதன் முறையாக மிகவும், அன்பாகவும், பண்பாகவும் பேசும் ஒரு இந்தியனைப் பார்க்கிறேன்" என்று என்னைப் பார்த்துச் சொன்னார். தூக்கிவாரிப் போட்டது. அவர் பார்த்தவரைக்கும் இந்தியர்கள் மூக்குத் தூக்கிகளாகவும், அராத்துகளாகவுமே இருந்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து புதிதாக வரும் மாணவர்கள் கூட மிகவும் arrogant-ஆக இருப்பதாகச் சொன்னார். என்னால் முழுவதும் மறுப்பதிற்கில்லை. நாம் வேறு சாதி. கோபதாபங்கள், சந்தக்கடைச் சத்தம், அழுக்குப் பிடித்த தெருக்கள், கூவமென்று வாழ்வென்று வாழ்ந்து வரும் போது இந்தியர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அந்த இந்தியாவில் உலகு மெச்சும் தத்துவங்கள் வந்தது எப்படி என்பது பெரிய கேள்வி? அப்படியிருப்பதால்தானோ என்னவோ அத்தகைய தத்துவங்களும் தேவைப்படுகின்றன?

0 பின்னூட்டங்கள்: