புதிய ஊடகம், புதிய வழிமுறைகள்!

தூரத்து மணியோசை 1 (ஒலிப்பத்தி)

நா.கண்ணன், தென்கொரியா

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் தமிழ் சிஃபியில் நா.கண்ணனின் ஒலிப்பத்தி தொடங்குகிறது. தமிழைத் தெளிவாக உச்சரிக்கக் கூடிய நா.கண்ணன், நேயர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மையில் பேசக் கூடியவர். தொழில்நுட்ப அறிவும் தமிழறிவும் இணைந்து பெற்றவர். அவருடைய பார்வையில் பல முக்கிய செய்திகளை அவரின் அனுபவத்துடன் இணைந்து இங்கே பெறலாம்.

இணைய உள்ளடக்கத்தைப் பல்லூடகத் தன்மையுடனும் மேலும் இனிமை நிரம்பியதாகவும் ஆக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், இந்த முதல் பத்தியிலேயே பின்னணியில் மெல்லிய புல்லாங்குழல் இசையை இழைய விட்டுள்ளார்.

தொழில்முறை விஞ்ஞானியான இவர், உலகைச் சுற்றிய வண்ணம் இருப்பவர். ஜப்பான், ஜெர்மனியில் வாழ்ந்துவிட்டு தற்போது தென்கொரியாவில் வசிக்கிறார். அங்கு கடல்சூழல் விஞ்ஞான மையத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

2001இல் கோலாலம்பூரில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் 'ஆண்டின் சிறந்த மனிதர்' என்ற விருதுடன் தமிழ் மரபு அறக்கட்டளை ஒன்றை அமைக்கும் பணிக்கான பரிசையும் பெற்றவர். அன்றிலிருந்து மின்வெளியில் 'முதுசொம் காப்பகம்' எனும் இணைய இலக்கச் சேமிப்புத் தளத்தை நடத்தி வருகிறார். தமிழ்மரபு அறக்கட்டளை, வரி விலக்குப் பெற்ற ஒரு கழகமாகச் சென்னையில் பதிவு செய்யப்பட்டு, செயலாற்றி வருகிறது.

இவர், ஒரு பன்முக படைப்பாளி. இவரது ஆக்கங்கள் கணையாழியில் கவிதைகளாக முதலில் தொடங்கிப் பின் சிறுகதைகள், குறுநாவல்கள் எனத் தமிழ்நாட்டு இலக்கிய இதழ்களிலும் புகலிட இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இதுவரை மூன்று தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். அவை, உதிர் இலை காலம், நிழல் வெளி மாந்தர், விலை போகும் நினைவுகள் ஆயின.

நிறையக் கவிதைகள் இயற்றி, மின்னுலகில் வைத்திருக்கிறார். தொடர்ந்து மின்னிதழ்களிலும், வலைப்பதிவிலும் எழுதி வருகிறார். தமிழ் இணையம் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு மடலாடற் குழுக்களில் எழுதி அறிமுகமானவர். ஆழ்வார்கள் பற்றிய இவரது தொடர், இவருக்கு "பாசுர மடல் கண்ணன்" என்ற பட்டப் பெயரை பெற்றுத் தந்துள்ளது. மின்வெளியில் மடலாடற்குழு மட்டுறுத்தல், வலைபதிதல், வலையகம் உருவாக்கல் போன்ற பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

இவை தவிர இவர், புகைப்படக் கலைஞரும்கூட. ஓவியப் பரிச்சயமும் உண்டு. இவரது பல்வேறு தமிழ்ப் பணிகளையும் தொழில்முறை அனுபவங்களையும் அறிய, கீழ்க்காணும் தளத்திற்குச் சென்று பாருங்கள்:

சொடுக்கு!

இவருடைய குரல் பத்தியை இங்கு கேட்டு மகிழுங்கள்:

this is an audio post - click to play


இந்த ஒலிப்பத்தியில் குறிப்பிடப்படும் கட்டுரை: தமிழுக்குத் தகவல் புரட்சி தரும் புதிய திணை

நன்றி: சிஃபி.வணி

0 பின்னூட்டங்கள்: