கொரியாவில்-ஜப்பானில் தமிழ்


தமிழ்சிஃபி தயாரித்துள்ள தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழின் முதன்மையான கருப்பொருள், நாடுகள்தோறும் தமிழ் என்பதே. இதன்படி ஒவ்வொரு நாட்டிலும் தமிழ் எவ்விதம் வாழ்கிறது? தமிழர் எவ்விதம் வாழுகிறார்கள் என அலச எண்ணியது.

இந்த வரிசையில் கொரியாவில் தமிழ் என்ற தலைப்பில் நா. கண்ணன் உரையாற்றியுள்ளார். கட்டுரையை எழுத்து வடிவில் அளிக்கலாம்; அல்லது உரையாகப் பதிவுசெய்து குரல் அஞ்சலிலும் அனுப்பலாம் எனத் தமிழ்சிஃபி அறிவித்தது. இணைய வெளியில் பல்லூடகத் தமிழ் உள்ளடக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நா. கண்ணன், கொரியா, ஜப்பான் பற்றிய தன் இரண்டு பதிவுகளையும் ஒலிக் கோப்பாகப் பேசியே அனுப்பியுள்ளார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வாயிலாகவும் இன்னும் பல அமைப்புகளின் வழியாகவும் தமிழ்ப் பணி ஆற்றி வரும் நா. கண்ணன், கொரியாவில் வசித்து வருகிறார். பல நாடுகளுக்குப் பயணித்துள்ள இவர், கொரியாவில் தமிழும் தமிழரும் உள்ள விதம் பற்றி இங்கு அழகுறப் பேசியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

கொரியாவில் தமிழ்

this is an audio post - click to play


ஜப்பானில் தமிழ்

this is an audio post - click to play


நன்றி: சிஃபி.வணி

4 பின்னூட்டங்கள்:

கமல் 6/10/2006 01:05:00 AM

திரு.நா.கண்ணன் அவர்களுக்கு,

வணக்கம்.

என் பெயர் கமலக்கண்ணன். தற்பொழுது ஜப்பானில் ஓஸகாவில் வசித்து வருகிறேன். இன்றுதான் தங்களின் 'ஜப்பானில் தமிழ்' உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக இருந்தது. 85-89ல் இருந்ததைப் போலப் பல விஷயங்கள் இன்னும் மாறாமல் இருக்கின்றன. ஆனால், கோயில்களில் சைவ உணவு மட்டுமே உண்பதென்பது இப்போது மாறிவிட்டதென்று நினைக்கிறேன். தோக்கியோவில் யசுகுனி ஜிஞ்சா, நராவில் தொதாய்ஜி ஆகிய கோயில்களில் வழிநெடுக மாமிச உணவுக்கடைகள் இருக்கின்றன.

ஜப்பான் பயண அனுபவங்களைப் பற்றி எங்கள் மின்னிதழில் கட்டுரைகளை எழுதி வருகிறேன்.

http://www.varalaaru.com/default.asp?articleid=298

http://www.varalaaru.com/default.asp?articleid=318

http://www.varalaaru.com/default.asp?articleid=343

தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள ஒற்றுமை பிரமிக்க வைக்கிறது. இதைத் தமிழர்களை விட ஜப்பானியர்கள்தான் அதிகம் ஆய்வு செய்திருக்கிறார்கள் என்பது கொஞ்சம் வருத்தத்தையும் கொஞ்சம் ஏக்கத்தையும் அளிக்கிறது.

நன்றி
கமல்

நா.கண்ணன் 6/10/2006 08:43:00 AM

நன்றி கமல்:

மிக விரிவாக, மிக அழகான படங்களுடன் எழுதியிருக்கும் உங்கள் கட்டுரைகளை வாசித்தேன். வாழ்த்துக்கள். நான் அங்கு வாழ்ந்து அனுபவித்த காலங்களில் இணையம் தோன்றவில்லை! டிஜிட்டல் கேமிராவும் தோன்றவில்லை. இதை இப்போது பயன்படுத்தி நிறைய விஷயங்கள் சொல்ல முயலும் உங்கள் ஆர்வம் பாரட்டற்குரியது.

ஒரே, ஒரு சின்ன வருத்தம். பிற கலாச்சாரங்களை ஆதரவுடன் அணுகுங்கள். நமது இந்துத் தெய்வங்கள் உரு மாற்றப்பட்டு இரண்டாம் நிலையில் புத்தர் ஆலயங்களில் உள்ளன என்பதைக் காழ்ப்புடன் காணாதீர்கள். புத்த ஆலயங்களும், சமண ஆலயங்களும் இந்துக் கோயில்களான வரலாறு நம் மண்ணிலேயுமுண்டு. இந்து மதம் எல்லாவற்றையும் கபளீகரம் பண்ணிவிடும். விண்ணெறி உயர்ந்தபோது இந்திரன் இரண்டாந்தர தெய்வமானான். பௌத்தம் உயர்ந்தபோது விஷ்ணு இரண்டாம்தர தெய்வமானார். சிவன் கோயில் விஷ்ணுவிற்கு இரண்டாம் நிலை, விஷ்ணு ஆலயங்களில் சிவனுக்கு அதே நிலை. இது மனிதன் தெய்வங்களைக் காண்பதிலுள்ள குறை என்பதே தவிர, தெய்வகளுக்குள் ஏற்றத்தாழ்வுகள் உண்டென்று இல்லை.

நிறைய எழுதுங்கள். 'வரலாறு' இதழை எங்கள் மின்னிதழ் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஏன்?

கமல் 6/10/2006 05:37:00 PM

திரு.நா.கண்ணன் அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

இன்னும் சில நண்பர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். அக்கோயிலைப் பார்த்தபோது உள்ளத்தில் தோன்றியதை அப்படியே வெளிப்படுத்தி விட்டேன். இது மனிதன் தெய்வங்களைக் காண்பதிலுள்ள குறை என்பது மெதுவாகப் புரிந்து வருகிறது. காலம், நண்பர்கள் மற்றும் பயணங்கள் ஆகியவைதான் மனிதனின் அனுபவத்தைப் பெருக்கிச் செம்மைப் படுத்தும் காரணிகள் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இந்த வகையில் தங்களின் கருத்தை மிக முக்கியமாகக் கருதுகிறேன். மீண்டும் நன்றி.

நானும் நண்பர்கள் தி.ம.இராமச்சந்திரன்(லலிதா), மா.இலாவண்யா மற்றும் சே.கோகுல் ஆகியோரும் திருச்சிராப்பள்ளி டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களிடம் கற்றுக்கொண்ட/கொண்டிருக்கும் வரலாற்றாய்வு தொடர்பான விஷயங்களை மற்ற வரலாற்று ஆர்வலர்களுடன் பகிர்ந்து கொள்ள இலாப நோக்கின்றி நடத்தி வரும் மின்னிதழ் இது. அதனால்தான் எங்கள் மின்னிதழ் எனக் குறிப்பிட்டேன்.

நன்றி
கமல்

நா.கண்ணன் 6/10/2006 05:49:00 PM

அன்புள்ள கமல்:

மிக நேர்த்தியான பதில். வாழ்க.

டாக்டர்.இரா.கலைக்கோவன் அவர்களுக்கு என்னைத் தெரியும். சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் இருவரும் ஒரே மேடையில் (பாலச்சந்தரும், அமைச்சர் சிதம்பரமும் கூட). பின் பேரூர் தமிழ்க் கல்லூரி நடத்திய தொல்லியல் கருந்தரங்கிலும் சந்தித்து இருக்கிறேன். அவரைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.

ஜப்பான் அருகில்தான் உள்ளது. தமிழ் பேசும் ஜப்பானியருடன் சேர்ந்து ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யுங்கள். வருகிறேன். ஓசாக்காவில் வேலை நிமித்தமாக வரமுடியும்.