மதுமிதாவின் கேள்விகள்

வலைப்பதிவர் பெயர்: நா.கண்ணன்

வலைப்பூ பெயர் : 'க'வினுலகம் (ஒருங்குறி); என் மடல் (தஸ்கி); முதுசொம், மூன்றாம் கண், கவிநயம்

சுட்டி(url) :

'க'வினுலகம் = http://emadal.blogspot.com/
என் மடல் = http://nkannan.rediffblogs.com/
மூன்றாம் கண் = http://photo-view.blogspot.com/கவி நயம் (ஒருங்குறி) = http://kavinayam.blogspot.com/
Poems in focus (தஸ்கி) = http://kavithai.rediffblogs.com/
முதுசொம் = http://thf-central.e-mozi.com/blogcms/

ஊர்: கோஜே (தென் கொரியா); பூர்வீகம் = திருப்பூவணம் (பழைய இராமநாதபுர மாவட்டம், சிவகங்கை தாலுகா), தமிழ்நாடு

நாடு: தென் கொரியா; குடியுரிமை = ஜெர்மனி

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திசைகள் மின்னிதழ்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : செப்டம்பர், 2003 (என்று நினைக்கிறேன்)

இது எத்தனையாவது பதிவு: 'க'வினுலகம் = 380; என் மடல் = மூன்று வருடப்பதிவுகள்..600 க்கு மேல் இருக்கும்; நா.கண்ணன் என்றொரு பதிவில் 100க்கு மேலிருக்கும். மொத்தம் 1000 பதிவுகளுக்கு மேலிருக்கும் (சரியான விவரம் எடுக்க முடியவில்லை)

இப்பதிவின் சுட்டி(url): http://emadal.blogspot.com/2006/05/blog-post_114890699274610952.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எண்ணங்களை எழுதுவதால் எண்ணம் சீர் அடைகிறது. நல்ல எண்ணங்கள் பிறரை மாற்றவல்லவை. நாம் தனித்தனி என்றாலும் எண்ணங்கள் நம்மை சங்கமித்து இயங்க வைக்கின்றன. நான் உன்னில் ஒருவன் என்பதற்காக எழுதுகிறேன்.

சந்தித்த அனுபவங்கள்: வலைப்பதிவு வருவதற்கு முன்னமே தமிழ் இணையம் மூலம் நல்ல பல சர்வதேச நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். இணையம் என் தமிழ் ஆர்வத்தை பன்மடங்கு வளர்த்தது. இணையம் மூலம் பல்வேறு நல்ல காரியங்கள் சமூகத்திற்கு செய்ய முடிகிறது. உம். முதுசொம் எனும் இலக்கப்பாதுகாப்பு இயக்கம் தொடங்கியது. பின்னூட்டங்கள் நம்மை பிறருடன் தொடர்பு படுத்துபவை. பின்னூட்டத்திற்காகவே எழுதிய காலங்களுண்டு. எனக்காக எழுத ஆரம்பித்து உனக்காக எழுத வேண்டியதாகிப் போனதுதான் வலைப்பூ அனுபவம்

பெற்ற நண்பர்கள்: நிறைய. இணையம் தொடங்கிய காலமட்டும் எண்ணில. வலைப்பூ கூட சில நண்பர்களைத் தந்தது.

கற்றவை: மின்வெளியில் சொர்க்கமுமுண்டு, நரகமுமுண்டு என்பதை. மின்வெளி அகப்பாட்டுடன் (ஈகோ) உரசும் ஊடகம். இதில் எதிர் நீச்சல் போடுவது சாமர்த்தியமான வேலை.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கமே விட்டுப்போச்சு! எண்ணம் எழுந்த சில நிமிடங்களில் அது மின் ஊடகத்தில் வெளிவரும் மகிழ்வை பத்திரிக்கைகள் தரமுடியாது. சுதந்திரம் என்பது ஒரு பொறுப்பு. என் எழுத்து என்னையறியாமல் ஆயிரக்கணக்கானோரால் வாசிக்கப்படுகிறது என்று எண்ணும் போது பொறுப்பு கூடுகிறது. வலைப்பதிவு 'ஏனோதானோ' ஊடகம் போல் வெளித்தோற்றம் தந்தாலும், பத்திரிக்கைக்குரிய தார்மீகம் இதற்கும் பொருந்தும்.

இனி செய்ய நினைப்பவை: மின்வெளி பல்லூடகத்தன்மை கொண்டது. இதுவரை ஒற்றைப் பரிமாணத்தில் இயங்கி வந்த தமிழ் இலக்கியத்தைப் பல் பரிமாணத்திற்கு மாற்றுவது.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: 70களில் எழுத ஆரம்பித்தேன். சிறுவயது கிராமத்து வாழ்வு என் தமிழை என்னுடன் தக்க வைத்தது. 60 களில் எழுந்த மாணவர் போராட்டம், தமிழ் மொழி உணர்வு என்னைத் தமிழின் பால் ஈர்த்து நிறுத்தியது. அரவிந்தர் போல் முதலில் போராளியாக (குமுகாய எதிர் உணர்வு) ஆரம்பித்து பின் ஆன்மீகவாதியாக மாறியவன். இணையம் என் எழுத்தை மெருகேற்றியது. சமூகக் கூச்சமுள்ள என்னை ஐரோப்பிய ஈழ நண்பர்கள் மேடைக்கு இழுத்து ஒளிக்குவிப்பில் வைத்தனர். இணையத்துடனான என் வாழ்வு ஈழத்துடன் இணைந்து இன்றும் செயல்படுகிறது. ஈழக்கவிஞர் ஜெயபாலன் சொல்கிறார் என் சரிதத்தை எழுதினால் அது தமிழ் இணையத்தின் சரிதத்தைச் சொன்ன மாதிரியுமாகுமென்று. இப்படி நண்பர்கள் தரும் பொறுப்பு, இணையம் வழங்கும் பொறுப்பு இவை என் ஆய்வு, என் தொழில், என் குடும்பம் இவைகளுக்கான நேரத்துடன் உரசுகின்றன. இப்போராட்டம் வேலை ஓய்வு பெறும் வரை இருக்கும். அல்லது தமிழ்துறையில் இப்புதிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பான வேலை கிடைக்கப் பெற்றால் ஓயலாம்.

ஜி.டி.நாயுடு, டி.வி.எஸ் ஐய்யங்கார் இவர்கள் போல் உழைப்பால் முன்னுக்கு வந்தவன் நான். வளர்ச்சியடையாத இந்தியாவில் கனவுகளுடன் உலாவியவன். வெற்றிப் படிக்கட்டுகளை சீரமைப்பதில் வாழ்வின் பல சுகங்களை இழந்தவன். வைகை துயில் கொண்ட ஆற்றோரக் கிராமத்தில் பிறந்து இன்று கண்டம் விட்டு கண்டம் அறிவு ஒன்றின் பலம் கொண்டு போய் வருவதை நினைத்தால் எண்ணங்களின் பலம் புரிகிறது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்துப் பேசிய பொழுதெல்லாம் இதே எண்ணம்தான். பிறக்குமிடம் பெரிதல்ல, 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்'.

ஒரு ஆசையுண்டு. எல்லாக் கலைஞர்கள் சொல்வது போலும், என் எழுத்து அது பெற்றிருக்க வேண்டிய கவனத்தைப் பெறவில்லை என்ற வருத்தமுண்டு. ஆயிரமாயிரம் மின்பக்கங்கள் எழுதிக்குவிச்சாச்சு. அவையெல்லாம் என்றாவது ஒரு நாள் ஆய்விற்கு உட்படுதப்பட வேண்டும். அதன் பொருட் செறிவு புரிந்து கொள்ளப்பட வேண்டும். எடுத்த முயற்சிகளுக்கான பலன் தமிழ் சமூகத்திற்கு சென்றடைய வேண்டும். இணையம் வீறுகொண்டு எழும் ஒரு புதிய தமிழனை உருவாக்கித்தர வேண்டும். 'வல்லமை தாராயோ'!

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: சீரியசான பேச்சுக்கள் ஒருபுறம் இருக்க...இணையம் பல குஷியான பொழுதுகளைத் தந்திருக்கிறது. வலைப்பூ உணர்வுள்ள ஓரிடம். உணர்வு மரத்துப் போனவர்கள் இங்கு வந்து எழுதுங்கள். உணர்வு பெறுவீர். வேலை ஓய்வு பெற்றோர் இங்கு வந்து எழுதுவீர். உங்கள் அனுபவம் மற்றோருக்கு கல்வியாகட்டும். உங்களை வாழ்வு புறக்கணித்துவிட்டதான எண்ணம் ஓடிப்போகும். இளைஞர்களே இங்கு வந்து எழுதுங்கள். ஏனெனில் இதுவொரு தொட்டுணர் பட்டறை (interactive workshop).

5 பின்னூட்டங்கள்:

கால்கரி சிவா 5/31/2006 12:35:00 PM

//உணர்வு மரத்துப் போனவர்கள் இங்கு வந்து எழுதுங்கள். உணர்வு பெறுவீர்//

உயர்திரு கண்ணன் அவர்களே, இந்த வாக்கியங்கள் எவ்வள்வு உண்மை என கடந்த 4 மாதங்களாக உணர்கிறேன்.

உங்கள் எழுத்துகளை தூரத்திலிருந்து ரசிப்பவன் நான்.

உங்களைப் போன்றவர்களிடன் பேச முடிவதே ஒரு பாக்கியமாக கருதுகிறேன்

துளசி கோபால் 5/31/2006 05:57:00 PM

1000க்கும் மேலேயா?

ஹய்யோடா......

வாழ்த்து(க்)கள் கண்ணன்.

நல்லா இருங்க.

நா.கண்ணன் 5/31/2006 06:01:00 PM

நன்றி சிவா.
நன்றி துளசி. உங்கள் பாந்தமே உங்களைப் பிடிக்க வைக்கிறது. அதுசரி, ஜூலையில் அமெரிக்க க்ஷேத்ராடணம் முடிவாகிவிட்டது. வரீங்களா? தேன்துளி ரெடி :-)

கால்கரி சிவா 6/02/2006 07:40:00 AM

//அதுசரி, ஜூலையில் அமெரிக்க க்ஷேத்ராடணம் முடிவாகிவிட்டது. வரீங்களா? தேன்துளி ரெடி :-)
//

கண்ணன் சார், முடிந்தால் கால்கரி பக்கம் வாருங்கள்.

நா.கண்ணன் 6/02/2006 07:55:00 AM

சிவா! மிக்க நன்றி. கால்கரியில் என் பெண்ணின் தாய் வழி உறவு உண்டு. அவள் ஒரு கோடை விடுமுறைக்கு அங்கு வந்துள்ளாள். நானும் கால்கரி சமீபம் வந்திருக்கிறேன். மிக அழகான பிரதேசம். இம்முறை கிழக்குக்கரையில் காண்பது என்று ஏற்பாடு. அதுசரி, கால்கரி சிகாகோவிலிருந்து எவ்வளவு தூரம்? காரில் வரமுடியுமா?