சிட்னியும், தமிழர் வாழ்வும் (1)

இணையம் எல்லையில்லா உலகின் மூலை முடுக்குகளில் வாழும் மனிதர்களைக் கூட இணைக்கிறது. ஒரு அவசர கதியில் ஆஸ்திரேலியா செல்ல வேண்டுமென்ற வாய்ப்பு வந்தவுடன் நினைவில் வந்தவர் இருவர், சிட்னி பாலா, நியூசிலாந்து நந்தன். நந்தன் இ-சுவடியில் அவ்வப்போது எழுதுவதால் அவரைத் தொடர்பு கொண்டேன். பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி அவர் சிட்னியில் இருந்தார் (அவர் எப்படி நியூசிலாந்து விட்டு சிட்னி வந்தார் என்பது ஈழத்தமிழ்ர்களுக்கு மட்டுமே உள்ள சுவாரசியமான கதை :-) அவரைத் தொடர்பு கொண்டு, பாலா இன்னும் சிட்னியில் இருக்கிறாரா? என்று கேட்டேன். பாலா அது சமயம் மலேசியா போய் விட்டார். இல்லையெனில் யூகி சேதுவுடன் இருவரும் சென்னையில் கலக்கியவாறு சிட்னியிலிலும் கலக்கலாமென்றிருந்தேன்!

நந்தன் சிட்னி வங்கியில் வேலை செய்வதால் நான் போய் சேர்ந்த வெள்ளி மதியம் வர கொஞ்சம் தாமதப்பட்டது. எப்படியோ விடுமுறை வாங்கிவிட்டு விமானநிலையத்திற்கு வந்திருந்தார். அவரும் சாப்பிடவில்லை, எனக்கும் பசி. எனவே நேரே ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றோம் (இதயம் பேசுகிறது மணியன் ஸ்டைலில் இருக்கிறதோ!) இரண்டே தெரு அதில் நான்கு இந்திய உணவகங்கள். கொடுத்து வைத்தவர்கள். கிம்சி கண்டு 'வாடினேன், வாடி வதங்கினேன்' என்று இருக்கும் எனக்கு அது சொர்க்கமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கையில் உணவருந்தும் வாய்ப்பு கிடைத்தது (குச்சி வைத்து சாப்பிட்டு, சாப்பிட்டு கோழியுடன் உறவு போல் தோன்றுகிறது :-)) நல்ல பாசுமதி அரிசி. அப்பளம் வகையறா. கொஞ்சம் தயிர் வேண்டுமென்றேன் கொடுத்தார்கள். நந்தன் கூட இருந்ததால், உணவகப்பெண் தமிழென்று அவளிடம் தமிழில் கதைக்க அவள் முழித்தாள். நந்தன் அது வடநாட்டு உணவகம், ஆனால் தமிழர்கள் நடத்துவது என்றார். இப்போதெல்லாம் தமிழர்கள் முன்னேறிவிட்டார்கள். சோல் நகரிலும் (கொரியாவில்) இப்படித்தான் 'சக்கரா' எனும் உணவகம் சென்னையைச் சேர்ந்த தம்பதியர் நடத்துகின்றனர். எல்லாம் வட நாட்டு உணவுதான்! 'குக்' கெல்லாம் தமிழர்கள் :-)

அப்படியே காலறத் தெருவில் நடந்தால் ஒரே இந்தியர்கள். Ecological succession என்றொரு phenomenon உண்டு. அது போல், முதலில் வெள்ளையன் கண்டு பிடிக்க வேண்டியது. பின் உழைக்க கருப்பர்களும், பிறரும் போக வேண்டியது. அப்புறம் இந்தியர் வந்து சேர்வர். ஆக, உலகில் எங்கெல்லாம் வெள்ளையன் போனானோ அங்கெல்லாம் இந்தியர் இருப்பர். அதே புடவை, மூக்குத்தி, பொட்டு, தங்கநகை! இந்தியா போலவே குழந்தைகள் ஆங்கிலம், தமிழும்/குஜராத்தி/ஹிந்தியும்! ரொம்ப இயல்பாக இருந்தது. பள்ளியில் குழந்தைகள் ரகளை. இந்தியத் தாய்மார்கள் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, பேசிச்சிரித்துக் கொண்டு குழந்தைக்காகக் காத்திருத்தல், அப்படியே பல காலம் என்னைப் பின் தள்ளி திருப்புவனத்திற்கு இட்டுச் சென்றது. என்ன! புளி உருண்டை, கொடுக்காபுளி இவையெல்லாம் விற்கும் கூடைக்கார கிழவி அங்கே இல்லை அவ்வளவுதான் வித்தியாசம்!!

மாலையில் கோயில் போகலாமா? என்றார். போகுமிடமெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் போது தல உலா செய்வது வழக்கமாகிவிட்டது. எனவே சரி என்றேன். கோயிலைப் பார்த்தவுடன் தூக்கி வாரிப்போட்டது, மாலிபு (கலிபோர்னியா-எல்லே) கோயில் போலவே அமைப்பு. மாலிபுவில் பெருமாள். இவரும் பெருமாள்தான், ஆனால் 'அருணகிரியின்' பெருமாள். ஈழத்தமிழர்களின் ஆர்வத்தில் கட்டிய கோயில். சைவ ஆகம முறைப்படி பூஜை நடந்தது. இரண்டு தமிழர்கள் தேவாரம் பாடினர் (இந்தப் பழக்கம் தமிழகத்தில் இல்லை. ஓதுவார் இல்லையென்றால் யாரும் பாடுவதில்லை. நான் பார்த்தவரை ஈழக்கோயில்களில் பக்தர்களே தேவாரம் ஓதுகின்றனர்). என் கண்கள் 'என் கண்ணனைத் தேடின'. சிவன், முருகன், பிள்ளையார், பார்வதி சந்நிதிகள். அவ்வளவுதான். தூரத்தே நந்தன், பிள்ளையார் சந்நிதியில், ஒரு குருக்களிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அங்கு சென்றேன். குருக்களிடம், 'ஸ்வாமியின் பூர்வீகம்?' என்றுதான் கேட்டேன்.

திருநாகை என்று சொல்லிவிட்டு, திருமங்கை ஆழ்வாராக மாறிவிட்டார்,

"செஞ்சுடராழியும், சங்குமேந்தி
பாகட மெல்லடி யார்வ ணங்கப்
பன்மணி முத்தொடி லங்குசோதி
ஆடகம் பூண்டொரு நாண்டு தோளும்
அச்சோ! ஒருவர் அழகியவா!"

என்று 'பொன்னிவர் மேனி' என்னும் நாகப்பட்டிணத்து சௌந்தர்ராஜப் பெருமாள் மீதுள்ள பத்துப் பாசுரமும் பாடிவிட்டார். நான் இருப்பது பெருமாள் சந்நிதியா? பிள்ளையார் சந்நிதியா என்ற சந்தேகம் வந்துவிட்டது! அது மட்டுமில்லாமல், பட்டர்பிரானை மேற்கோள் காட்டி நீராடல் சம்பிரதாயம் சொல்லி, சைவ வழிபாட்டு முறைகளுக்கும், வைணவ வழிபாட்டு முறைகளுக்குமுள்ள வித்தியாசங்களை விளக்கி. முற்றுப்புள்ளியாய் திருவாய்மொழி ஒன்று சொன்னார். அதில் என் தேடலுக்கான விடை இருந்தது!

அவரவர் தமதம தறிவறி வகைவகை
அவரவர் இறையவர்எனஅடி யடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர்; இறையவர்
அவரவர் விதிவழி யடையநின் றனரே. 1.1.5

0 பின்னூட்டங்கள்: