புறக்கணிக்கப்பட்ட தென்னகம்

இப்பதிவை வாசிக்க உங்களுக்காகும் நேரம் 60 நிமிடங்கள். ஏனெனில் இப்பதிவு 52 நிமிடங்கள் ஓடும் ராஜராஜ சோழன் எனும் ஆவணப்படத்தைப்பற்றியது.

அப்படம் தேசிகனின் பக்கத்தில் உள்ளது!

சரி, முழுப்படத்தையும் பார்த்துவிட்டு வாருங்கள்!

1. தென்னகத்தை உலகம் மறந்ததற்கான காரணமாக இந்த ஆவணம் சொல்லும் காரணம், விக்டோரியன் கிறிஸ்தவர்களுக்கு காமசாஸ்திரம் முகப்பில் தென்படும் இந்துக் கோயில்கள் அருவருப்பைத் தந்தன. அவர்கள் வணங்கும் தெய்வம் எனவே உயர்வானதாக இருக்க முடியாது என்பது. அதே நேரத்தில் எந்த சிற்பங்களும் இல்லாத முஸ்லிம் சமாதிகளும் (தாஜ்மகால்), அல்லா என்ற ஒரே கடவுளும் அவர்களுக்கு ஏற்புடையதாக இருந்தது என்பது.

இதில் முரண்நகை என்னவெனில் காம சாஸ்திரம் வாயிலில் இருந்தாலும் தமிழர்கள் எவ்வளவு பாஷாண்டிகள் என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் போனது! 20ம் நூற்றாண்டில் யு.ஆர்.அனந்தமூர்த்தி இந்த பாசாங்குத்தனத்தைக் கேலி செய்து 'சம்ஸ்காரா' எழுதி சாகித்ய அகாதெமி விருதும் வாங்கிவிட்டார். ஆங்கிலேயர்கள் பயப்பட்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆங்கிலேயரை விட நாம் puritanical :-)

2. இரண்டாவது, அசோக மன்னன் போல் போர்கள் செய்து உயிர்பலி வாங்கிய ராஜராஜன், அந்த பாவத்தைக் கழுவிக்கொள்ள கோயில் கட்டினான் என்பது. நம்மவர் என்ன சொல்கிறார்கள் என்றறிய அவா (அடுத்த பிறவியில் ஒரு புழுவாய் பிறக்காமல் தவிர்க்கவே கோயில் பூஜைகளை நிருமாணம் செய்தான் என்கிறது இப்படம்)

3. முஸ்லிம் படையெடுப்பிற்கும், அவர்களது சமயப் போர்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியக் கோயில்களில் இருந்த பல சிலைகள் ஏறக்குறைய 700 வருடங்கள் புதையுண்டும், ரகசிய அறைகளில் மூடிவைக்கப்பட்டும் இருந்து 1965-ல் பெரிய அகழ்வாராச்சிக் கண்டுபிடிப்பாக பல நூறு சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக ஆவணப்படம் சொல்கிறது. அப்படியெனில் இன்னும் கண்டுபிடிக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் இருக்கின்றன எனத்தோன்றுகிறது. சரியான அரசு கவனிப்பிலும், ஆசார்ய/பக்தர்களின் கவனிப்பிலும் எல்லாக்கோயில்களின் எல்லா அறைகளும் திறந்து பார்க்கப்பட வேண்டும். என்ன கிடைக்குமோ? (இப்படி திருப்பதியில் செய்த போது அன்னமாச்சாரியரின் பல ஆயிரம் கீர்த்தனைகள் செப்பேடுகளில் கிடைத்தன).

4. ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய பிரம்மிப்பான சித்தரிப்பு. ஆனாலும், கோயிலைக் காட்டிவிட்டு சிவலிங்க வழிபாட்டைக் காட்டுவது குழப்பமாக உள்ளது. தேசிகன் போன்ற ஸ்ரீவைஷ்ணவர்களை ஆலோசித்திருந்தால், 'அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே' என்று எம்பெருமானின் அழகை உலகு காணச் செய்திருக்கலாமே!

5. அன்று ஆங்கிலேயர் செய்த புறக்கணிப்பு காலம் காலமாக தென்னகத்தைப் புறம் தள்ளியே வைத்திருப்பது கண்கூடு. தமிழர்களின் புகழை தரணியெங்கும் பரப்ப வேண்டுகோள் விடுப்பது அவ்வளவு பொறம்போக்குத்தனமான செயல் அல்ல என்பதை இந்த ஆங்கிலப்படம் செப்புகிறது. நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்ள, மற்றவர்க்கும் சொல்ல நல்ல தருணமிது.

3 பின்னூட்டங்கள்:

Srirangam V Mohanarangan 6/27/2006 02:42:00 AM

கண்ணன், படத்தைப் பற்றிய உங்கள் கருத்தைப் பார்த்தேன். அதில் இரண்டு வார்த்தைகள் நீங்கள் பயன் படுத்துகிறீர்கள். ஒன்று பாஷண்டிகள், இரண்டு puritanical. பாஷண்டிகள் என்றால் வேதத்தை ஒத்துக் கொள்ளாமல், ஒழுக்கத்தில் வேதநெறிக்கு புறம்பாகச் செல்கிறவர்களை பாஷண்டிகள் என்ற வார்த்தை குறிக்கும். ஒருவேளை ஆஷாடபூதிகள் என்பதை மனத்தில் கொண்டு இந்தச் சொல்லை பயன் படுத்துகிறீர்களோ? அடுத்தது, ப்யூரிடானிக்-- இந்த சொல்லே காமம் பாவம், டாபூ, முதல் பாவத்தில் மனிதன் விழுந்தான் என்பது போன்ற கிறித்துவ மதக் கூறுபாடுகளைக் கொண்டிருப்பது. நம் மக்களிடையே காமம் என்பது பாவம் என்ற எண்ணம் கிடையாது. வாழ்க்கையின் நான்கு இலட்சியங்களில் ஒன்றாக காமத்தைக் கொள்கினறனர். ஆனால் என்ன வீடுபேறு என்று பார்க்கும்பொழுது, காமம் தடையாக ஆகிறது. தடையை விலக்கி இலட்சியத்தின்பால் கருத்து செலுத்துமாறு வீடுபேற்றில் நாட்டம் கொண்டவர்களைக் கூறுகிறது. இவை உங்களுக்கு தெரிந்ததாகத்தான் இருக்கும். இருந்தாலும் நினைவு படுத்தவேண்டி சொன்னேன்.

நா.கண்ணன் 6/27/2006 04:08:00 PM

நன்றி ரங்கன்:

ஆஷாடபூதி என்ற பதம் சரியானதே! அப்போது தோன்றவில்லை. Puritanical விளக்கத்திற்கு நன்றி. இவ்வளவு காம சாஸ்திர போதனை நம் தத்துவத்தில் இருந்தும் பலர் puritanical-ஆக இரூபது போலவே படுகிறது. அவர்களுக்கு காமப்படிப்பு காணாது என்று தோன்றுகிறது. ஒரு பிறழ்ந்து பட்ட மனோநிலையில்தான் தமிழன் வாழ்வு இந்தியாவில் செயல்படுகிறது. அதை இலக்கியமும், நடைமுறை வாழ்வும் நிரம்பவே சுட்டுகிறது. தத்துவார்த்தமாக நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். யதார்த்தமாக இல்லை :-)

Srirangam V Mohanarangan 6/27/2006 10:50:00 PM

கண்ணன், கருத்துகளை நிதானத்துடன் அணுகியதற்கு நன்றி. தாங்கள் இரண்டாவது பகுதியில் கூறுகிறீர்களே, யதார்த்தத்தில் தமிழனின் வாழ்வு, ஏன், இந்தியனின் வாழ்வு என்று கூட சொல்லலாம், ஒரு பிறழ்ந்துபட்ட மனோநிலையின்பால் காமத்தைப் பொறுத்தவரை ஆகிவிட்டிருக்கிறது என்று, இதற்கு, இந்த கருத்தை நூல் பிடித்துக்கொண்டு போனீர்கள் என்றால், மடத் தாபனத்தை முக்கியமாக முன்னிறுத்திய கொள்கைகள், புத்த மதம், சங்கரர், போன்றோர் இந்த இயல்பான கொள்ளுதல் அல்லது தள்ளுதல், காமத்தைப் பொறுத்தவரை என்பதை இந்த நிலைக்கு வர சமுதாயநிலையில் காரணங்களாக அமைந்துவிட்டனர் ென்றே சொல்லவேண்டும்.