பெரிய ஆப்பிள்


அமெரிக்க ஐக்கியநாடுகளின் வாணிப கேந்திரம் 'பெரிய ஆப்பிள்' என்றழைக்கப்படும் நியூயார்க் நகரம். பல நூற்றாண்டுகளாக சுற்றுலாப்பயணிகளைக் காந்தம் போல் இழுக்கும் நகரம். அமெரிக்காவின் நாடி பிடித்து பார்க்க உதவும் உயிருள்ள நகரம். உலகின் அனைத்து மனித இனங்களும் சங்கமிக்கும் நகரம். எவ்வளவோ பேர் தாஜ்மகாலைப் பற்றிச் சொல்லிச் சென்றாலும் நாம் சென்று பார்க்கும் வரை நம்பமுடியாது. அதுபோல்தான் நியூயார்க்! எப்படி ஒரு காலத்தில் கிரேக்க ரோமானிய பேரரசுகளின் உன்னதத்தைக் காட்ட ஒரு ரோம், ஒரு அலெக்ஸாண்டிரியா, ஒரு பாபிலோன் இருந்ததோ அது போல் நவீன மனிதனின் வளர்ச்சியை, அவனது செல்வச் செழிப்பைக் காட்ட நியூயார்க். ஒரு காலத்தில் நமது காஞ்சியை, மதுரையை, தஞ்சையை அக்காலத்தின் உன்னதமென்று பயணிகள் வர்ணித்துள்ளனர். ஆனால் அது பல நூற்றாண்டுகளுக்கு முன். ஒரு தஞ்சைக் கோவிலே நமக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. இங்கு சும்மா, தடிக்கி விழுந்தால் ஒரு தஞ்சை என்றளவில் கட்டியுள்ளார்கள். எவ்வளவு செலவு, எவ்வளவு மனித வளம், எவ்வளவு முயற்சி, கனவு இவைகளுக்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும். பிரம்மிப்பாக உள்ளது!

அமெரிக்காவிற்குள் நுழைவது மேலும், மேலும் சிக்கலாகி வருகிறது. 80 களில் நான் பயணப்பட்ட போது என்னை வழியனுப்ப வந்த நண்பர்கள் விமானம்வரை வந்தது எங்குமில்லாத அதிசயமாக இருந்தது. இப்போது வருபவரின் கைநாட்டு வாங்கி, போட்டோ எடுத்து ஆயிரம் கேள்விகள் கேட்டு, 'எண்டா படவா! இங்கே வரே!' எனும் பாவத்தில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒண்ட வந்த பிடாரிகள் நம்மைக் கேட்பது இன்னொருவகையில் அதிசயமாக உள்ளது. சுதந்திரம் என்ற பெயரில் தனிமனித சுதந்திரம் என்றுமில்லாத அளவில் அரசின் கையில் இருப்பது எவ்வகையில் சிலாக்கியம் என்று தெரியவில்லை. நம்ம போட்ட கைநாட்டு, மற்றும் பிற விவரங்கள் இணையத்தில் காசுக்குக் கிடைக்கிறதாம்! கிழிஞ்சது போ!!

0 பின்னூட்டங்கள்: