நம்பிக்கை தரும் பிலிபைன்ஸ் (மணிலா)

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 16)

தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை அளித்ததோடு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளையும் அழகுற அலசினார். ஜப்பானிலும் கொரியாவிலும் தமிழ் உள்ள விதம் பற்றிக் கூறினார். சீனாவின் ஷாங்காய் மாந கரத்தையும் ஆஸ்திரேலிய பயண அனுபவங்களையும் படங்களுடன் விவரித்தார். கடந்த வாரம், தன் அமெரிக்கப் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

அவருடைய அறிவிக்கப்படாத உலகப் பயணத்தில் இப்போது, பிலிப்பைன்ஸின் முறை. பிலிப்பைன்சின் தலைநகரான மணிலாவின் மனசாட்சியை நா.கண்ணன் எடுத்துக் காட்டியுள்ளார். இந்தியாவைப் போன்ற வளரும் நாடான அதற்கும் நீண்டதொரு வரலாறு உண்டு. வறுமையும் சேரிகளும் பிச்சைக்காரர்களும் அங்கும் உண்டு.

ஆயினும் உலகின் மிக அழகான மனிதர்களாக அவர்கள் விளங்கக் காரணம், இனக் கலப்புதான். இந்தோனேசிய, சீன, ஐரோப்பியக் கலப்பின மனிதர்களால் பிலிப்பைன்ஸ் உள்ளது. அவர்களின் மொழியில் ஸ்பானிஷ் கலப்பு அதிகமுள்ளது. அங்குள்ள அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்துள்ளது. இந்த ஆங்கிலம்தான் அவர்களுக்கு ஒரு வகையில் சோறு போட்டு வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மக்கள், மொழி, வாகன வசதிகள், போக்குவரத்து, செல்வ நிலை, சுய ஒழுங்கு, அங்கிருந்து வழங்கப்படும் மகசேசே விருது .... எனப் பலவற்றையும் நா.கண்ணன் அருமையாகப் பேசியுள்ளார். தோளில் கைபோட்டுக்கொண்டு பேசும் நண்பரைப் போன்ற அவரின் எளிமையான தோழமை, அவரின் உரைக்கு வலிமை சேர்க்கின்றது.

வித்தியாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்த உரையைக் கேட்டு மகிழுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 13.35 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

மணிலாவாவ்!
அடடா! எங்கேயோ பார்த்தமாதிரி இல்லை?

ஏன் நமது புறநகர் போக்குவரத்தை இப்படி சுத்தமாக வைத்திருக்க முடியவில்லை? சுத்தம் என்பதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லையோ?

மெரினாவும் இன்னும் 50 வருடங்களில் இப்படி ஆகிவிடும் (Bay Walk in Manila)

ரிக்ஷா? நோ! Pedicab!

இங்கு சுத்தமாக, நம் விருப்பத்திற்கு ஏற்ற உணவுப் பொருளை வாங்கி, சமைத்துக் கொடு என்றால், சமைத்துத்தரும் உணவகங்கள் உள்ளன. நம்ம மெஸ்ஸில் இந்த திட்டத்தைக் கொண்டு வந்தால் என்ன? இன்னக்கி சமையலில் ஊத்த காத்திரிக்காய், அழுகின பூசணி! போன்ற கம்ளெய்ண்ட் வராது பாருங்க!!

இந்தச் சமையலகங்களுக்கு யார் ஏஜெண்டு என்று பாருங்கள். பொதுவாகவே கிழக்கு ஆசியாவில் 'அலிகள்' சமூகத்தின் ஒரு அங்கமாக வெட்கமில்லாமல் உலவுகிறார்கள். இந்தியா இன்னும் ரொம்ம்ம்ப மாற வேண்டி இருக்கு!


கொஞ்சம் கோவாப்பழம், கொஞ்சம் அன்னாச்சி, கொஞ்சம் வாழை. எல்லாம் கலந்தால் இந்த சீதப்பழம் போன்ற கோயபானோ! நம்ம ஊர் சீதாப்பழம் இங்கே ஆட்டிஸ்!


சந்தால் எனப்படும் இப்பழம் நிறைய நார் சத்து கொண்ட பழம். கொஞ்சம் புளிப்பு, கொஞ்சம் இனிப்பு!மணிலா பற்றிய என் பேச்சு விரைவில் சிஃபியில் வரும். இங்கும் இடுகிறேன்.வைகைப் புயல் வடிவேலும், வைகைக்கரைக் கண்னனும்

எதுக்கு கனவு வருதுன்னு தெரியலை. வாழ்விலே மூணுல இரண்டு பங்கு தூங்கிக் கழிக்கிறோம். தூங்குகிற எல்லா ஜீவனும் கனவும் காணுது!

கனவு மூளையின் பிறட்சி..அது இயற்கையின் ஒரு இயல்பான செயல் என்று சொல்வாருண்டு. இல்லை, கனவுகளுக்குச் சிறப்புப் பொருளுண்டு என்று அர்த்தம் புகட்டுவாருண்டு.

எல்லாவற்றிற்கும் பொருளுண்டு என்று காண்பதில் இன்பம் பயப்பவன் நான். அன்னையின் அன்பிற்குப் பொருளில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? சும்மா ஜீன்கள் தங்களை பரப்பிக்கொள்ள மனித உடலைக் காவு வாங்குகிறது என்பது போன்ற வரட்டு சித்தாந்தங்கள் இப்போது ருசிப்பதில்லை!

சரி..இவ்வளவும் எதற்கு?

நேற்று 'கோக்குமாக்கா' ஒரு கனவு!

வைகைப் புயல் வடிவேலு நேற்று கனவில் வந்தார். ஒரு விருந்து அதில் வெள்ளைக்காரர்களும் கலந்து கொண்டனர். வடிவேலும் வந்திருந்தார். திடீரென்று, அவர் வெள்ளைக்காரர்கள் இருக்கும் டேபிளுக்கு வந்து 'முதல்ல இவங்களை பல்லு விளக்கச் சொல்லுங்கைய்யான்னு' அவருக்கே உரிய ஸ்டைலில் சொன்னார். கொல்லென்று தமிழ் தெரிந்த எல்லோரும் சிரித்துவிட்டனர். இந்த வெள்ளைகள் அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தனர். அப்புறம் அப்படியே என் டேபிளுக்கு வந்தார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்!

ரொம்ப ஆச்சர்யாமா இல்லை? இப்படிப் பிரபலங்கள் சில நேரம் என் கனவில் வருவதுண்டு. இந்திரா காந்தி வந்திருக்கிறார், ராஜீவ் வந்திருக்கிறார். இப்போ வடிவேலு!

இம்சை அரசன் 23ம் புலிகேசி பற்றி இங்கு எழுத வேண்டுமென்று எண்ணியதுண்டு. அதற்காகவா? இப்படி? மனது எப்படியெல்லாம் கற்பனை செய்கிறது பாருங்கள்!! காட்சி உருவாக்கும், இயக்கம், ஜோடனைகள், கதை, உரையாடல் இன்ன பிற..

இத்தனைக்கும் அந்தப் படம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. வடிவேலுவின் திறமைக்குக் குறைவில்லை. இருந்தாலும் கொஞ்சம் 'கொச்சை' யாகப் பட்டது. தமிழ்நாட்டு ஸ்டாண்டர்ட்டுக்கு எவ்வளவோ தேவலை என்றாலும்! சில இடங்களில்தான் மனம் திறந்து சிரிக்க முடிந்தது!

ஆனாலும் ஒருமுறை பார்க்கலாம்.

அமெரிக்கா வாட்ச் (8)

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 15)


தூரத்து மணியோசை என்ற தலைப்பில் 2006 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒலிப்பத்தி தொடங்கிய நா.கண்ணன், தெற்காசிய நாடான கொரியாவில் வசிக்கிறார். படைப்பூக்கமும் சிந்தனைத் திறமும் மிக்க அவர், கொரியாவின் பல காட்சிகளை அளித்ததோடு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளையும் அழகுற அலசினார். ஜப்பானிலும் கொரியாவிலும் தமிழ் உள்ள விதம் பற்றிக் கூறினார். மேலும் ஆஸ்திரேலிய பயண அனுபவங்களையும் படங்களுடன் விவரித்தார்.

அவருடைய அறிவிக்கப்படாத உலகப் பயணத்தில் இப்போது, அமெரிக்காவின் முறை. பெரியண்ணன், உலகத்தின் ஒரே வல்லரசு, பூலோக சொர்க்கம் எனப் பலவாறாக அழைக்கப்படும் அமெரிக்காவிற்கு நா.கண்ணன் அண்மையில் சென்று வந்துள்ளார். தனது அமெரிக்க அனுபவங்களை இந்தப் பதிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

அனுபவங்களுடன் கூடவே அமெரிக்காவின் வரலாறு, வாஷிங்டன் டிசி உருவான கதை, நியூயார்க்கின் பிரமாண்ட கட்டடங்கள், லாஸ்ஏஞ்சலீஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகியவற்றில் உள்ள கட்டடங்களின் பின்னணி, அமெரிக்காவில் இங்கிலாந்தின் தாக்கம், அமெரிக்கர்களின் மனோபாவம், அமெரிக்க இந்தியர்களின் நிலை, அமெரிக்காவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளின் குறைபாடுகள், செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பிறகான அமெரிக்கர்களின் அச்சம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அமெரிக்கர்களின் பிற்போக்குத் தனம்.... எனப் பலவற்றையும் நா.கண்ணன் அருமையாகப் பேசியுள்ளார். தோளில் கைபோட்டுக்கொண்டு பேசும் நண்பரைப் போன்ற அவரின் எளிமையான தோழமை, அவரின் உரைக்கு வýமை சேர்க்கின்றது.

வித்தியாசமான பின்னணி இசையுடன் கூடிய இந்த உரையைக் கேட்டு மகிழுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 23.07 நிமிடங்கள்

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

ஜன கண மன என மனனம் செய்யடா!ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
சரி, இந்தப் பாட்டைச் சத்தியமா தப்பில்லாமப் பாடத் தெரிஞ்சவங்க கைதூக்குங்க பாப்போம்?
அர்த்தம் புரிந்து சரியாப் பாடத் தெரிஞ்சவங்க கை தூக்குங்க?

எப்படியோ இந்தப் பாட்டைக் கேட்டா, 'எம் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறப்பது' என்னவோ உண்மை! அந்த அழகான விழுமியங்கள் அவசர யந்திர வாழ்க்கையில், நுகர் கலாச்சார உலகச் சந்தை பேரம் பேசலலில் காணாமல் போய்விடாமல் இருக்க எம் தந்தையர் இன்னருள் வேண்டும்!

குரங்கு சேட்டைசுட்டியான பையன்களை 'சரியான குரங்கு சேட்டை' என்று சொல்வதுண்டு. சேட்டை பண்ணும் குரங்களை அதிகமாக பார்க்கும் அள்விற்கு வனாந்திரங்கள் குறைந்துவிட்டன. இந்தியா சுதந்திரமடைந்தபோது 40% காடுகள் 60களில் 18% குறைந்துவிட்டன. போகும் ஜனத்தொகை வேகத்தில் இந்தியாவில் வனவிலங்குகளுக்கு இருப்பிடம் இல்லாமல் போகலாம்.

இப்படத்தில் இரண்டு சிறு புலிகள் விளையாடுகின்றன. 1. குரங்கிற்கும் விளையாட ஆசை. ஆனால் வேறு இனம். அடித்துச் சாப்பிட்டுவிடும் (அது எப்படித் தெரிகிறது ஜீவராசிகளுக்கு?). எனவே அது மரத்தில் இருந்து கொண்டும், புலிகள் நிலத்தில் இருந்து கொண்டும் விளையாடுகின்றன. இது ஒரு விளக்கம். 2. குரங்கிற்கு புலிகள் தன் வனாந்திரப்பரப்பில் இருப்பது பிடிக்கவில்லை. குட்டி பெற்ற தாயோ அல்லது சிறு குரங்குகளோ இருக்கலாம். எனவே பாதுகாப்பாக இருக்கட்டுமென்று அங்கு வந்த புலிகளைத் தொந்திரவு செய்து விரட்டி விடுகிறது.

எப்படியாயினும் அக்குரங்கின் துள்ளல், தாவும் திறன் வியப்பளிக்கிறது. என்ன வேகம், என்ன திறமை! இதைப் பார்க்கும் போது ராமயணத்தில் வரும் குரங்குக் கதைகளெல்லாம் உண்மையென்றே தோன்றுகின்றன. சிந்திக்கும் திறன் இல்லாமல் இப்படிச் செயல்படமுடியாது. விஞ்ஞானிகள் 'மொட்டையாக' ஒரு விளக்கம் தருவார்கள், காவியத்தில் உயிருள்ள விளக்கம் தருகிறார்கள், அவ்வளவே! காட்டிற்குள் சென்று பார்க்கும் போதுதான், அறிவு, ஞானம் என்பது எப்படி எல்லா ஜீவராசிகளிடத்தும் மண்டிக் கிடக்கிறது என்பது புரிகிறது. சேதனம், அசேதமெனப் பிரித்து, அவை இரண்டிலும் உள்ளிருந்து செயல்படுவது இறைவன் என்று காண்பது எவ்வளவு ஆரோக்கியமான நோக்கு!

அமெரிக்கா வாட்ச் (7)

நியூயார்க்..நியூயார்க்!!

ஜேஎப்கே வந்து இறங்கியவுடன் கண்கள் மன்ஹாட்டன் ஸ்கை வியூவைத்தான் தேடும். அதிர்ஷ்டமிருந்தால் விமானம் சுற்றிவரும் போதே ப்ரூக்ளின் பாலம் மற்றும் நியூயார்க் தெரியும். இல்லை என்றால் இறங்கிய பின் போய் பார்த்தால்தான் தெரியும். நியூயார்க் தெருக்களில் நடக்கும் போது ஏதோ பழைய ரோமானியப் பேரரசின் தலை நகரில் நடப்பது போல் உணர்வு தோன்றும். காரணம் பிரம்மாண்டம், பிரம்மாண்டம்...இதுதான் நியூயார்க். கட்டிடங்களைப் பார்த்துப் பார்த்து கழுத்து நோகும். கழுத்தை ஒடிக்கவே கட்டிய கட்டிடங்கள். சுற்றுலாக்காரர்களைத் தவிர உள்ளூர் ஆசாமிகள் மேலே, கீழே பார்க்காமல் அவரவர் வேலையைக் கவனித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பர். மும்பாய், தோக்கியோ போன்ற நகரங்களில் வாழ்ந்தவர்களுக்கு இது ஓரளவு புரியும்.

முதல் பார்வையில் இது ஆப்பிரிக்காவோ எனுமளவு கருப்பர்கள் ஜனத்தொகை! பாதிக்கு மேலேயே! எங்கு பார்த்தாலும் அவர்களே! பெட்டிக்கடைகள் படேல் (குஜ்ஜூ) வசம். தெருவில் மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்கர்கள். முன்பு நான் காணத அளவு இப்போது அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி ஆளுமை! அமெரிக்காவின் நியூயார்க் ஒரு மாஜிக் நகரம்.


"New York, New York" sheet music excerpt signed by Kander & Ebb.


ஆக்ராவிற்கு போய்விட்டு தாஜ்மகால் இல்லையென்றால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் இப்போது நியூயார்க், உலக வர்த்தக மையக்கோபுரங்கள் இல்லாமல்!


Manhatten Skyline from Ellis Island
Photo by N.Kannan


சுமார் 11 வருடங்கள் (1966 to 1977) எடுத்துக்கொண்டு பீடுடன் கட்டிய கட்டிடம். அப்போது வெளியிட்ட ஆவணப்படம் இதோ!இப்படிப் பாடுபட்டுக் கட்டிய கட்டிடம் 9 நொடிகளில் இடிந்து விழுந்து தூளாகியது (முந்தையப் பதிவின் வீடியோ பாருங்கள்). ஒரு விமானம் தாக்கினால் இப்படித் தவிடு பொடியாகுமென்று பாமரன் கூட நம்பமாட்டான். ஆனால் அமெரிக்க நிருவாகம் எல்லோரையும் நம்பச் சொல்கிறது! மத்திய கிழக்கின் அளுமைக்கும், உலக காபந்திற்கும் ஒரு திட்டம் மறைமுகமாக இருப்பது ஊர்ந்து கவனித்தால் புரியும். இங்கிலாந்தின் பலத்த ஜால்ரா, ஏதோ பின் காலனித்துவ முஸ்தீபு இதில் இருப்பது போல் சந்தேகப்பட வைக்கிறது! யூதர்கள் ஒருவர்கூட சாகாமல் முன்னமே கட்டிடத்தை விட்டு வெளியேறிவிட்டனர் என்றொரு வதந்தி. இந்த சம்பவத்திற்குப் பின்னுள்ள மர்மம் எப்போதாவது வெட்ட வெளிச்சமாகுமா? இறவனுக்கே வெளிச்சம்!


Ground 0 - ஒரு காலத்தில் உயர்ந்த கோபுரங்கள் இருந்த இடம்
Photo by N.Kannan

அமெரிக்கா வாட்ச் - 6

நிழல் யுத்தம்

சேர சோழ பாண்டியர் காலத்திலிருந்து, ஏன் பிரித்தானிய காலனித்துவ காலத்திலிருந்தும் உலகம் மாறிவிட்டது. அப்போதெல்லாம் ஒருவனைப் பிடிக்காதென்றால் படையெடுப்பர். முன் நின்று சண்டை போடுவர். வீட்டிற்கு வந்தால் அம்மாவோ, மனைவியோ எத்தனை வெட்டு என்று கணக்குப் போட்டு விழுப்புண் வங்கியில் போடுவாள். இப்போது கோழைகள் நிரம்பிய உலகமாகிவிட்டது. ஜியார்ஜ் புஷ் ஈராக் மீது படையெடுக்கிறார் என்றால், அவர் வெள்ளை மாளிகையில் சொகுசாகக் குடியிருக்க யார் பெத்த பிள்ளையோ அங்கு போய் மடிய வேண்டியிருக்கு (போன பதிவில் பிள்ளைகள் திரும்ப வேண்டுமென ஒரு தாய் வெள்ளை மாளிகை முன் உண்ணாவிரதம் இருக்கும் காட்சியைப் படம் பிடித்துப் போட்டிருந்தேன்). இது ஒருபுறம்.

ஆனால், தீவிரவாதமென்ற பேரில் மக்கள் கூடும் சந்தையில் வெடி வெடிப்பது, விமானத்தைத் தூளாக்குவது, இரயிலில் குண்டு வைப்பது போன்ற கொடுஞ்செயல்கள் நிழல் யுத்தமாக ஆரம்பித்துவிட்டன. இதை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. 9/11 க்குப்பிறகு விமானப் பயணமென்பது இன்பம் என்பது போய் 'கொடுமை' என்றளவிற்கு வந்து விட்டது. இதைக் காட்டு, அதைக்காட்டு என்று பிடுங்குவதைப் பார்த்து விட்டு ஒரு தமிழ்த் தந்தை 'இனிமேல் கோவணத்தைக் கட்டிக்கொண்டுதான் அமெரிக்கா வரணும் போல' என்று சொன்னாராம். அது மிகையல்ல,. ரொம்பவே பிடுங்குகிறார்கள். நான் வந்த போதாவது ரெண்டு, மூணு கைப்பை கொண்டு வர முடிந்தது. இன்றைக்குப் பயணிப்பவர் எந்தக் கைப்பையும் இல்லாமல், குடிக்க நீர் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை. பயணிக்கும் முன்னரே பயணிகளின் பெயர்கள் ஊர்ஜிதமாகத் தெரிய வேண்டுமென அமெரிக்கா இப்போது உலக விமானக் கம்பெனிகளை நிர்பந்திக்கிறது. முன்போல விமானம் வரை வரமுடியாது, கடைசி நிமிடத்தில் அவசர காரியமாக விமானம் ஏற முடியாது!

இங்கிலாந்து விமான தளங்கள் சிவப்பு எச்சரிக்கையில் இருந்த போதும், வாஷிங்டன் வந்த விமானத்தில் ஒரு பெண் ஸ்கூரு டிரைவர் கொண்டு வந்திருந்தாளாம். இவளைக் கண்காணிக்க இரண்டு அமெரிக்க போர் விமானங்கள், கடைசியில் விமானம் பாஸ்டனில் இறக்கப்பட்டதாம். என்னடா? என்று கேட்டால் அவளுக்கும், சிப்பத்திக்கும் வாக்குவாதமாம். அவளுக்கு ஒரே அறையில் உட்கார்ந்திருக்க முடியாதாம்! இதற்குப்போய் இவ்வளவா? ஆமாம்! இப்ப எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையில் அமெரிக்கா இல்லை.

தண்ணீர் கொண்டு போகக் கூடாதாம். ஏன்? தண்ணீர் போல் வெடி மருந்து இருக்காம். சரி, சீனாவில் என்ன செய்கிறார்கள்? குடிக்கச் சொல்கிறார்கள். எவ்வளவு எளிய வழி. ஆனால் அமெரிக்கா குடி பொருள் எதையும் இனி எடுத்துச் செல்லக் கூடாது என தடை விதிக்கிறது.

மடிக்கணினி, செல்பேசி கொண்டு செல்லக்கூடாதாம்? ஏன்? அதன் மூலம் வெடிக்க வைக்க முடியுமாம். சரி, கொரியாவில் என்ன செய்கிறார்கள்? மடிக்கணினியை ஆரம்பித்து வைக்கச் சொல்கிறார்கள். செல்பேசி மூலம் கூப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்கா தடை செய்யச் சொல்கிறது

நிழல் யுத்தத்தை யார் செய்கின்றனர் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அவன், செய்கிறான் இவன் செய்கிறான் என்று எல்லோரும் செய்கின்றனர் இம்சைகள். வெடித்தாலும் அவதிப்படுவது பொது மக்களே! வெடிக்காவிடினும் அவதிப்படுவது பொதுஜனமே! இனிமேல் ஆத்திர அவசரத்திற்கு விமானம் ஏறிப்போக முடியாது. 3லிருந்து 4 மணி நேரம் முன்னே வரச் சொல்கின்றனர்.

சும்மாவே நம்ம ஊர் அப்பாக்கள் அமெரிக்கா வர பிகுப்பண்ணுவார்கள். இனிமேல் அதுவும் போச்சு. அமெரிக்கா போய் விட்ட பிள்ளை மார்கள் 15 நாளில் விடுமுறைக்கு வருவதிலும் இந்தக் கெடுபிடிகள் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டன. எங்கேயும் போகாமல் இருக்கும் ஊரிலேயே இருந்தால் போதும் என்றாகிவிடும்.

பிக்கு ஐயர் அவரது பத்தியொன்றில் இத்தலைமுறை 'விமானத்தளம் தாவும்' தலைமுறை என்று எழுதினார். இனிமேல் விமானத்தில் ஏறுவதே சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

வேடிக்கை என்னவென்றால் சுதந்திரம், சுதந்திரம் என்று பேசும் அமெரிக்கா, இங்கிலாந்தில் கெடுபிடிகள் கம்யூனிஸ்டு நாடுகள் போலுள்ளன. ஆனால் கம்யூனிஸ்டு நாடான சீனாவில், முன்னாள் சோவியத் யூனியனில் சுந்தந்திரமாகப் பயணிக்க முடிகிறது.

ஜேஎப்கே விமானதளம் தாண்டி நரித்தா விமான தளம் பின் அப்பாடா! என்றிருந்தது. ஜப்பானில், கொரியாவில் எல்லாமே சகஜமாக உள்ளன. எந்தக் கெடுபிடியுமில்லை. இவர்கள் உலகைக் காபந்து பண்ணுகிறேன் என்று சொல்வதற்குப் பதில் இந்நாடுகளை ஆசியர்களிடம் கொடுத்து விடலாம். ஒழுங்காக நடத்துவார்கள்.இந்த இடைப்பட்ட இடத்தில் உலகின் உயர்ந்த இரு கோபுரங்கள் இருந்தன (Ground 0)

கோகுலாஷ்டமி பட்சணங்கள்

சிஃபி டாட் காம் கிருஷ்ண ஜெயந்தி மலரிலிருந்து எடுத்தது.
அடுத்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு உதவுமே என்ற நோக்கில்.....கை முறுக்கு

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
உளுந்து 1 ஸ்பூன்
உப்பு 1/4 ஸ்பூன்
பெருங்காயம் மிளகளவு
வெள்ளை எள் 1 ஸ்பூன் (வறுத்தது)
வெண்ணெய் ஒரு பெரிய ஸ்பூன்/ பொறிக்கும் எண்ணெய் 1 லிட்டர்.

முதலில் அரிசியை நீரில் நனைத்து, வடிகட்டி, நிழலில் காயவைத்து ஓரளவு ஈரத்துடன் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கல் இருக்கக்கூடாது. உளுந்தை வறட்டு வாணலியில் சிவப்பாக வறுத்துப்பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை மிக்ஸிசியில் மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். நீரில் பெருங்காயத்தைக் கரைத்து மாவில் போட்டுக் கொள்ளுங்கள். இதிலேயே வறுத்த உளுந்துப் பொடியைச் சேர்த்து உப்பு, வெண்ணெய், எள் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைத்து, அவ்வப்போது எடுத்து கையால் முறுக்குச் சுற்றலாம். கையால் சுற்றத் தெரியாதவர்கள், கைமுறுக்கு அச்சு என்று கடையில் விற்கும் அச்சினை (இதை நாழி என்றும் சொல்வார்கள்) பயன்படுத்தி வாணலியில் காயும் எண்ணெயில் பிழிந்து சிவக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் இரண்டு மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெண்ணெய், உளுத்தமாவு ஆகியவை அளவுக்குக் கொஞ்சமும் அதிகமாகக்கூடாது. அப்படிச் செய்தால் மொறமொறப்பு வராது. எண்ணெய் புகையக்கூடாது. அரிசி அதிகப் பழசாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் முறுக்கு சிவந்து விடும்.முள் முறுக்கு

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு (பாசிப்பருப்பு) 1/4 ஆழாக்கு
சீரகம்/எள் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1/2 கிலோ அல்லது லிட்டர்

அரிசியையும் பயத்தம்பருப்பையும் கலந்து மெஷினில் மாவாக்கிக் கொள்ளுங்கள். சீரகமானால் வறுக்காமலும் எள்ளானால் வறுத்தும் போட்டுக் கொள்ளுங்கள். உப்பு போட்டுக் கொள்ளுங்கள். விருப்பமிருந்தால் பெருங்காயத்தூள் கலந்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெயை பொரியப் பொரியக் காய வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கரண்டியை எடுத்து மேற்கூறிய மாவில் போட்டுக் கொள்ளுங்கள். பிசைந்து, மேலும் நீர்விட்டுப் பிசைந்துக் கொள்ளுங்கள். முறுக்கு நாழி (அச்சு)யில் போட்டு எண்ணெயில் பிழிந்து சிவக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.


சீடை (உப்பு)

கைமுறுக்குக்குரிய அதே முறையில் மாவைத் தயாரித்து சின்னஞ்சிறு உருண்டைகளாக்கி புகையும் எண்ணெயில் போட்டால் சீடை தயார். ஆனால் மாவு சரியாக சலிக்கப்படாமல் இருந்தால் சீடை வெடிக்கும். கவனம் தேவை.வெல்லச் சீடை

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
உளுந்து 1 ஸ்பூன்
வெல்லம் 1/2 ஆழாக்கு
எள் 1 ஸ்பூன் (வெள்ளை எள்)

அரிசியைக் களைந்து நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உளுந்தை வறட்டு வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளுங்கள். எள்ளை வறுத்துக் கொள்ளுங்கள். அரிசியையும் உளுந்தையும் மட்டும் நன்றாய் மாவாக்கிக்கொண்டு அதில் வறுத்த எள்ளைப் போட்டுக் கொள்ளுங்கள்.

வெல்லத்தைச் சிறிதளவு நீரில் கரைத்து, மண் இல்லாமல் மேலோடு எடுத்து, மேற்சொன்ன மாவுடன் சிறிது சிறிதாக விட்டுப் பிசைந்து கொள்ளுங்கள். சின்ன எலுமிச்சை அளவுக்கு உருட்டி ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் போட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய்யை வாணலியில் வைத்து அடுப்பில் ஏற்றி, அது புகையாமல் காய்ந்தவுடன் உருண்டைகளை மெல்லப் போடுங்கள். அது லேசாய் வாய் பிளந்தால் கவலை வேண்டாம். பிரவுன் நிறமானவுடன் எடுத்து விடுங்கள்.தட்டை

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
உளுந்து 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப/ மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப
வேர்க்கடலை 1/4 ஆழாக்கு
பொட்டுக்கடலை 1/4 ஆழாக்கு
எள் 1 ஸ்பூன்

அரிசியைக் களைந்து உலர்த்திக்கொள்ளுங்கள். உளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் மாவாக்கி நன்கு சலித்துக் கொள்ளுங்கள். உப்பு, விருப்பமிருந்தால் பெருங்காயப்பொடி, மிளகாய்த்தூள், தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வறுத்த வெள்ளை எள், ஆகியவற்றைப் போட்டு கெட்டியாகப் பிசைந்து பிளாஸ்டிக் தாளில் வட்டமாகத் தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்தவுடன் தட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.அப்பம்

தேவை:

மைதா மாவு 1/4 கிலோ
கோதுமை மாவு 1 ஸ்பூன்
வெல்லம் 11/2 ஆழாக்கு
ஏலக்காய் 2
எண்ணெய் 1/2 லிட்டர்

வெல்லத்தை வெந்நீரில் போட்டு நன்கு கரைந்தவுடன் வடிகட்டிக்கொண்டு மைதா மாவையும், கோதுமை மாவையும் போட்டு, ஏலக்காயை நசுக்கி அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரைசலைக் குறைந்தது அரை மணியாவது ஊற வைத்தப் பிறகு, அடுப்பில் எண்ணெய் வைத்து, ஒவ்வொரு கரண்டி எடுத்து ஊற்றி, சிவந்தவுடன் வடிகட்டி எடுத்து வைக்கவும். எண்ணெய் புகையக் கூடாது. புகைந்தால் அப்பம் ஊற்றியவுடன் பிரிந்துபோய்விடும்.

அப்பம் இன்னொரு முறையிலும் செய்யலாம். அரிசியை ஊறப்போட்டு, 20 நிமிடம் ஊறிய பிறகு ஒரு ஆழாக்குக்கு முக்கால் ஆழாக்கு என்கிற கணக்கில் வெல்லமும், தேங்காயும் போட்டு மிக்ஸியில் மைபோல் அரைத்தும் ஊற்றலாம்.

சுகியன் (அ) சிற்றுண்டை

தேவை:

மைதாமாவு 1/4 கிலோ
வெல்லம் 1/4 கிலோ
தேங்காய்த் துறுவல் 1 மூடி
ஏலக்காய் 2
எண்ணெய் 1/2 லிட்டர்

மைதா மாவை பஜ்ஜிக்குக் கரைப்பதுபோல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துறுவி, வெல்லத்தோடு அடுப்பில் வைத்து ஐந்து நிமிஷம் கிளறி, ஒட்டாமல் வருவதற்கு ஒரு ஸ்பூன் நெய்விட்டு இறக்கிக் கொண்டால் பூரணம் போல் வரும். இதைக் கொஞ்சநேரம் ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிடிக்குமுன்பே ஏலக்காய் தூள் போடலாம்.

அடுப்பில் எண்ணெய் வைத்து, உருண்டைகளை மாவில் தோய்த்துப் போடவேண்டும். சிலர் மைதாவுக்குப் பதிலாக, அரிசி, உளுந்து ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அந்த மாவில் தோய்த்துப் போடுவார்கள்.மேற்சொன்ன பட்சணங்கள் தவிர, அனைத்து வகைப் பழங்களும் கிருஷ்ணனுக்குப் பிரியமானவை. பிரப்பம் பழம், நாவல் பழம் ஆகியவற்றைக் கொடுத்தால் அவன் அகமகிழ்ந்து அருள் புரிவான். அவல், வெண்ணெயுடன் கலந்து நாட்டுச்சர்க்கரை ஆகியவையும் கிருஷ்ண ஜெயந்திக்கு வெகு விசேஷம்.

எதுவுமே முடியாவிட்டால் (பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி) துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம் அதுவும் முடியாவிட்டால் சிறிதளவு நீர் இவற்றை வைத்துப் பூஜை செய்தாலும் ஏற்றுக்கொண்டு இறைவன் வருவது நிச்சயம்.

அந்த நாள் ஞாபகம் வந்ததோ குசேலா?

உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜியும், மேஜர் சுந்தரராஜனும் சேர்ந்து பாடுவதுபோல் வரும் 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! நண்பனே!' என்ற பாடல் எல்லொருக்கும் நினைவில் இருக்கும். அதுபோல், கண்ணன், குசேலனிடம் பாடுவதாக ஒரு கீர்த்தனை உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம்!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 1907-ல் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூலிலிருந்து இப்பாடலைக் கண்டு எடுத்து முதுசொம் வலைப்பதிவில் இட்டுள்ளார்.

முதுசொம் வலைப்பதிவு

என்னுடைய ஆசையெல்லாம், நன்றாக பாடக்கூடியவர்கள் சென்னையில் இருந்தால், இப்பாடல்களை இசைத்துத் தரலாமே! அவர்களுக்கு வேண்டிய கவன ஈர்ப்பை உலக அளவில் தமிழ்மரபு அறக்கட்டளை பெற்றுத்தரும். அதே நேரத்தில் இம்மாதிரி பழைய தமிழ் கீர்த்தனங்கள் அழிவுறாமல் காப்பாறிய மாதிரியும் ஆகும். Any taker?

சுதந்திரமான கோகுலாஷ்டமி

இன்று இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. சஷ்டியப்த பூர்த்தி. தாத்தாவிற்கு வாழ்த்து. எம் தந்தையர் நாடு!

இன்று கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். என்ன பொருத்தம். தாத்தாவிற்கு 60 வயதானாலும் இந்தியா ஒரு இளமையான நாடு. இந்திய சுதந்திரம் இன்னும் வளரும் கன்னி. கோகுலம் என்பது சுதந்திரத்தின் குறியீடு. எம் எல்லோருக்குமே இளமைக்கால நினைவுகளே மிச்ச நாட்களை ஓட்ட உதவுகின்றன. ஒரு வகையில் கோகுலாஷ்டமி என்பது யசோதை தினம். அம்மாக்கள் நாள். அப்படியொரு தாய், அப்படியொரு பிள்ளை. மானாமதுரையில் கோகுலாஷ்டமியன்று ஒயிலாட்டம். ஏதோ ஒரு கிராமத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஆடிக்கொண்டிருந்தோம். அம்மா அனுப்பிசாங்கன்னு ஒரு சிப்பந்தி வந்து பை நிறைய வெல்லச் சீடை, முருக்கு, அப்பம் கொடுத்துவிட்டுப் போனார். அப்படியொரு அன்னை. அப்படியொரு கோகுலாஷ்டமி. கோகுலாஷ்டமி என்றால் அந்த சின்னச் சின்ன பாதங்களை மறக்க முடியுமா? கண்ணன் அல்லால் சரன் இல்லை கண்டீர் என்பதைச் சுட்டும் வண்ணம் சின்னப் பாதங்கள்.

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போலெங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே!
ஒண்ணுதலீர்! வந்து காணீரே!

(பெரியாழ்வார் திருமொழி)

பிருந்தாவனம், கண்ணன் பிறப்பு எல்லாமே சுந்தந்திரக் குறியீடுகள். கண்ணன் பாலகன். ஆயின் அவனைக் கொல்ல எத்தனை சதிகள்! ஆனால் மாயக்கண்ணன் எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் தப்பித்து ஆயர்பாடி மக்களைக் காக்கிறான். இந்தியா என்ற சுதந்திரக் குழந்தைக்கும் தினந்தோரும் ஆபத்துக்கள். ஆயின் தெய்வ பலத்தாலும், ஒற்றுமை உணர்வாலும் இந்தியா வன்முறை ஒழித்து செம்மையாய் உயர்ந்து நிற்கும்.

முடிந்தால் ஒரு நடை சிஃபி டாட் காம் போய் சுந்தந்திர தின சிறப்பிதழைக் காணுங்கள்.

வாழ்க எம் கண்ணன்!
வாழ்க இந்திய சுதந்திரம்!

அமெரிக்கா வாட்ச் (5)


வாஷிங்டன் டி.சி. கேபிடொல் கட்டிடம்


ஒரு நாட்டின் தலைநகர் எப்படி இருக்க வேண்டுமென்று கேட்டால் அது வாஷிங்டன், டி.சி போல் இருக்க வேண்டுமென்று தயங்காமல் சொல்லுவேன். ஆனால், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமென்று கேட்டால் அமெரிக்கா போல் இருக்க வேண்டுமென்று சொல்லத் தயங்குகிறது. 70/80களில் நான் அப்படி சொல்லியிருக்கலாம். 9/11க்குப் பிறகு அமெரிக்காவே மாறிவிட்டது! இனம் புரியா கலவரம் அவர்கள் மனதில்! யாரும், யாரையும் இனிமேல் நம்பத்தயாராக இல்லை. எல்லோரையும் முஸ்லிம் வன்முறையாளர் என்றே பார்க்கின்றனர். பாவம், டர்பன் வைத்திருந்த நம்ம நாட்டு சீக் ஒருவரை முஸ்லிம் என்று கொன்றுவிட்டனர். அது உச்சக் காச்சலின் குறி. கமலஹாசன் கூட அமெரிக்கா நுழையமுடியாமல் திரும்பிவிட்டார் என்பார்கள். பெயர் முஸ்லிம் பெயர் போல் உள்ளது என்று! உண்மையில் முஸ்லிம்கள் வில்லன்களா? என்பதை கீழே கொடுத்திருக்கும் வீடியோ காட்டும். அதற்கு முன்..

90 களின் ஆரம்பத்தில் கூட அமெரிக்கா வித்தியாசமாக இருந்தது. உள்நாட்டு விமான நிலையத்தில், விமானம் வரை பயணிகளின் நண்பர்கள்/உறவினர்கள் வந்து விடை கொடுக்கலாம். ஐரோப்பாவிலிருந்து சென்ற எனக்கு அது அதீத, அசட்டுத்தனமென்று தோன்றியது. ஒரு வெகுளித்தனம் அதிலிருந்தது. சென்றமுறை சிக்காகோ வந்து இறங்கிய போது, "எதற்கு ஜெர்மனியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். அமெரிக்கா வந்து விடு" என்று இம்மிகிரேஷன் ஆபீசர் என்னிடம் சொன்னார். இப்படிப் பேசுவது சாத்தியமா? என்றிருந்தது. சிடு, சிடு ஜெர்மன் அதிகாரிகளையே பார்த்திருந்த எனக்கு அது பெரும் மாறுதலாக இருந்தது. இன்னொருமுறை கருத்தரங்கிற்கு விசா வாங்கப்போனபோது, ஹாம்பர்க் அமெரிக்கன் கான்சுலேட்டில், 'என்ன இரண்டு வாரத்திற்கு விசா கேட்கிறாய், இன்று விசா ஆன் சேல் (Sale), 10 வருடத்திற்கு வாங்கிக்கோ!' என்றார்கள். அதுவும் சத்தமாக. அடடா! அமெரிக்கா என்றால் அதன் மறுவார்த்தை சுதந்திரம் என்று எண்ணினேன். அது இப்போது மாறிவிட்டது. 9/11க்குப் பிறகு தலை கீழாக மாறிவிட்டது! ஒரு பீதியில் (fear pschychosis) அந்த நாடு உள்ளது. அந்த வெகுளித்தனம் போச்சு, அந்த சுதந்திரம் போச்சு, இம்மிகிரேஷன் அதிகாரிகளின் புன்னகை போச்சு. இதற்கெல்லாம் அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளைக் காரணமாகச் சொல்கின்றனர். அதுதான் காரணமா என்று கீழுள்ள வீடியோ கேட்கிறது. அதற்கு முன்....


வெள்ளை மாளிகை (போஸ்டரைக் கவனியுங்கள்)


வாஷிங்டன் டி.சி யூனியன் ஸ்டேஷனிலிருந்து என்னை அழைத்துச் சென்ற கருப்பு டாக்சி ஓட்டுநர், 'இதுதான் கொள்ளையர்களின் வீடு' என்று வெள்ளை மாளிகை நோக்கிக் காட்டினான். 'அப்படித் தெரிந்தும் ஏன் மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்று கேட்டேன். 'அதுதான் கருப்பர்களின் பிழை. இவர்கள் காசு கொடுத்து தேவாலயம் வந்த பக்தர்களை புஷ்ஷுக்கு ஓட்டுப்போடுமாறு பாதிரியாரை மாற்றிவிட்டனர்' என்றார். கடந்த தேர்தலில் 30%தான் ஓட்டுப்பதிவு என்று எண்ணுகிறேன். இந்தியாவே தேவலாமென்றிருக்கிறது! ஈராக் யுத்தத்திற்கு முன் கலிபோர்னியா போயிருந்தேன். செம்மரக்காடுகளில் உலாவும் போது ஒரு அமெரிக்க மூத்த தம்பதியரைச் சந்தித்தேன். நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன் என்றவுடன். 'எவ்வளவு நல்லது. இங்கே பார்! ஒரு கௌ பாய்யை (மாட்டுக்காரன்) முதல்வராக வைத்துக் கொண்டு அவதிப்படுகிறோம்!' என்றார்கள்.


வெள்ளை மாளிகை அருகே சாகும்வரை உண்ணாவிரதம் (16வது நாள்)


எல்லோருக்கும் தெரிகிறது. ஆனாலும், மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றனர். வியட்நாம் போருக்குப் பின்னாவது புத்தி வந்திருக்க வேண்டும். குவெவைத், ஆப்கான், ஈராக் என்று தொடர்ந்து போர்கள். எண்ணைக்கான போர் என்கிறார் புஷ். ஆனால் அதன்பின்தான் எண்ணை விலை எக்கு தப்பாக ஏறிவிட்டது. இந்தியாவில் 55 ரூபாய், அங்கு 45 ரூபாய். என்ன பெரிய வித்தியாசம்? இப்போதுதான் சாதரண அமெரிக்கனுக்கு சுருக்கு என்று தைக்கிறது. அந்தப் பொருளாதாரமே கார்களை நம்பியுள்ள பொருளாதாரம். எண்ணை தவிர்த்து மாற்று சக்தியைக் கண்டறிய எவ்வளவு நேரமாகும்? ஆனால் அரசியலுக்காக அதை நிருவாகம் செய்யாது!


கொரியப்போரின் நினைவுச்சின்னம், வாஷிங்டன். டி.சி.


அமெரிக்க அரசியல் போர்களையே நம்பி உள்ளது. சுதந்திரமென்று பேசிக்கொண்டு உலகின் அயோக்கியர்களுடன் அது உறவு கொள்கிறது. தீவிரவாதத்தைக் காரணம் காட்டும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் உறவு கொள்கிறது. கம்யூனிஸ்டுகளான சீனாவுடன் உறவு வைத்துக் கொள்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா காலம், காலமாக பாகிஸ்தான், தீவிரவாதம் பற்றிச் சொல்லி வந்தாலும் அது 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போலாகிவிட்டது! இவர்கள் ஒரு 9/11 நடக்க வேண்டுமென்று காத்திருந்தது போல் படுகிறது. உண்மையா? கீழுள்ள வீடியோ பாருங்கள். 2 மணி நேரமாகலாம்!"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

வாழ்க சுதந்திரம்! வாழ்க குடியரசு!

அமெரிக்கா வாட்ச் (4)


பாலநீர் எனும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீநிவாசன்


அமெரிக்காவிற்கு தல யாத்திரை கொள்கிறேன் என்று சொல்லித்தான் கிளம்பினேன். இந்தியாவில் இல்லாத கோயில்களா? என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால், தமிழக ஜனத்தொகையிலும், கலாச்சார புரட்சியிலும் கோயில்கள் தங்கள் புனிதத்தை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் என் சிறுவயது குடிலாக இருந்த மீனாட்சி கோயில் இனிமேல் நுழைய முடியாத அளவு கூட்டம் கொண்டு வர ஆரம்பித்துவிட்டது. திருப்பதி பற்றி சொல்லவே வேண்டாம். குருவாயூர் கூடவா? கூட்டமில்லாத புதிய (பழைய) தமிழகக் கோயில்களைக் கண்டறிய போதிய நேரமில்லை (இனிமேல் NRI களுக்கு என்று பல நல்ல பழைய கோயில்களை ஒதுக்கிவிடலாம். இவர்கள் அதைப் பராமரித்து வழிபட்டு வரலாம்). நிற்க.

அமெரிக்காவில் கோயில்கள் புதிது. மிகப்பழமையான நியூயார்க் பிளெஷ்ங் பிள்ளையார் கோயில், பிட்ஸ்பெர்க் பெருமாள் கோயில் இவையெல்லாம் 25 வருடப் பழமையானவையே! அமெரிக்காவே 200 வருடப் பழமையில் நிற்கும் போது இவை சரித்திர காலத்துக் கட்டிடங்களாகிவிடுகின்றன! ஐரோப்பாவைக் கண்ணுறும் வேளையில் அமெரிக்கக் கோயில்கள் ஆயிரம் மடங்கு சிறப்பானவை. நிறையக் காணி வாங்கி, நன்றாகக் கோயில் கட்டி நிர்வகித்து வருகின்றனர். கோயில் நிருமானம் ஒரு வருவாய் உள்ள தொழில் என்று இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கண்டு விட்டனர். இது ஆபத்தான பாதை. கோயில் நிருவாகம் எப்படி இருக்க வேண்டும், அதில் ஊழல் வராமல் எப்படி பாதுக்காக்க வேண்டுமென்று ஸ்ரீராமானுஜர் 'கோயில் ஒழுகு' என்று மேனேஜ்மெண்ட் புத்தகம் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை இந்தியர்கள் வாசிக்கிறார்களோ என்னவோ, அமெரிக்கத்தமிழர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்! ஸ்ரீரங்கம் கோயில் நிருவாகத்தில் கிடைத்த அனுபவித்தில் ஒரு சந்நியாசி எழுதி வைத்தது. இப்போது நம் எல்லோருக்கும் ரொம்பப் பயன்படும்.


சிகாகோ அரோரா தலத்தில் நிற்கும் பாலாஜி


கோயில்களின் புனிதம் ஆகம விதிகளையும் விட பக்தனின் இதயத்தில்தான் இருக்கிறது. போக பூமியான அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மிக எளிதாக போகித்துப் போகிறார்கள். அதே நோக்கில் கோயில்களையும் ஒரு நுகர் பொருள் போல் கருதினால் எம்பெருமான் அங்கு வர மாட்டான். அது 'மால்' கலாச்சாரம். அது 'திருமால்' கலாச்சாரமாக வர பக்தி வேண்டும். உதாரணமாக அரோரா கோயிலை இவ்வளவு அழகாகக் கட்டிவிட்டு, வாசலை அடைத்து விட்டனர். கோயில் நுழைவாயில் ரெஸ்டாரெண்டுக்குள் இருக்கிறது! மை காட்! என்கிறீர்களா?


பெருமாள் கோயில் லட்டு, போளி, வடை, இட்லி...இவைதான் முதலில் மனதைக் கவர்கின்றன.


அமெரிக்காவிலே கற்றுக் கொள்ள பிற கோயில்கள் இருக்கின்றன. ஸ்ரீபிரபுபாதா ஆரம்பித்து நடத்தப்படும் ஸ்ரீகிருஷ்ண கோயில்களில் பக்தி இருக்கிறது, ஒழுங்கு இருக்கிறது, முறையான வழிபாடு இருக்கிறது. தமிழர்கள் கட்டும் கோயில்களில் குருக்கள் சட்டை இல்லாமல் இருந்து அர்ச்சனை செய்தால் போதுமென்று எண்ணுகிறார்கள். அரை டிராயர் கொல்டிகள், கன்னடிகாஸ், வீரத்தமிழர்கள் வந்து பெருமாளை 'விசிட்' செய்து விட்டு, தங்களது விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு திருஷ்டி சுற்றி, பரிகார நிவர்த்தி செய்துவிட்டுப் போகின்றனர். இந்தியர்கள் வளமாக இருக்கின்றனர். பெருமாள் அவர்களை வளமாக வைத்திருக்கிறான். அதற்கு அவன் வேண்டுவது இரண்டு துளசி, இரண்டு சொட்டுக் கண்ணீர். அவ்வளவுதான். அதைத்தவிர பிற எல்லாவற்றையும் தர முயல்கிறார்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் அங்கு தோன்ற வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கு பக்தி பந்தாதிகளைச் சொல்லித்தர வேண்டும்.


ஸ்வாமி நாராயணர் கோயில், சிகாகோ.


குஜராத்திகள் நடத்தும் ஸ்வாமி நாராயணர் கோயில் இந்த ஒழுங்கில் நடைபெறுகிறது. அங்கு அரை டிராயர், ஜீன்ஸ் கோஷ்டி போகமுடியாது! கேரளா கோயில்கள் போல் மாற்று உடை வேண்டுகிறார்கள் பக்தர்களிடம். இக்கோயில்கள் கலை மிளிர்கின்றன. இந்திய அறிவியல் பற்றிப் பேசுகின்றன. ஸ்வாமி நாராயணன் என்ற சிறுவன் பக்த பிரகலாதன் போல் ஸ்ரீமன் நாராணன் துணை மட்டுமே கொண்டு காடுகளிலும், மலைகளிலும் சஞ்சரித்த சரிதம் ஐமேக்ஸ் படமாக உருவாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு காட்டப்படுகின்றன. தென்னிந்தியக் கோயில்களில் இம்மாதிரிப் பெரும் முயற்சி நடப்பதாகத் தெரியவில்லை. கோயிலுக்குப் போய் விட்டு, புளியோதரை, போளி சாப்பிட்டு விட்டு வந்தால் போதுமென்று நினைக்கிறார்கள்.

அமெரிக்கா வாட்ச் (3)

இந்தப் பொல்லாத பின் லாடன் அமெரிக்காவுக்கு ஆப்பு வச்சாலும் வச்சான், அவதிப்படுவது என்னவோ ஜியார்ஜ் புஷ் அல்ல, நாம்தான். இப்போ அமெரிக்காவில் செக்குயீரிடி பெர்சனல் என்பவர்கள் ஈ, எறும்பு, [தாவரங்களை] விட அதிகமாக உலவுகிறார்கள். எங்கே பார்த்தாலும் இவங்க ஜபர்தஸ்துதான். நியூயார்க் ஸப்வே யில் போய்க் கொண்டு இருக்கும் போது கண்ணுக்கு லட்சணமான ஒரு லத்தின் அமெரிக்க சிட்டு 'பெண் காவலாளியாக உள்ளே நுழைந்தது (அதற்கு ஒரு காவல் போல் இன்னொரு ஆம்பிளை செக்குரிட்டியும் வந்தது) சும்மா இல்லாமல் கண்ணு சைட் அடிக்கப் போனது! அப்புறம் எதுக்கு உள்ளே தள்ளிடப்போறாங்க என்று 'யூதர்களுக்கு ஏசு' என்னும் விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினேன். என் மருமான் சொல்லியிருந்தான், அமெரிக்காவில் செக்குரிட்டி பிடித்தால் அது நம்ம 'தடா' சட்டம் போல்! பெயில் கூட கிடைக்காது என்று. இந்த புஷ் கோஷ்டி சுதந்திரம், சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு சாதாரண பிரஜைகளின் சுதந்திரத்தை சுத்தமாக போக்கிவிட்டனர். ரஷ்யாவிற்கு கூட எந்தச் சங்கடமும் இல்லாமல் போய் வந்து விடலாம் போல. அமெரிக்கா ஒரு சர்வதிகார நாடு போல் நடந்து கொள்வது பயமாக இருந்தது!

அமெரிக்காவில் கால் வைத்தவுடனேயே இந்த பயம் தொற்றிக்கொள்கிறது!

ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இறங்கியவுடன் முதலில் கேட்பது நம் 'கைநாட்டு'தான். பயோமெறிக்ஸ் என்று சொல்லும் இந்தப்பதிவின் மூலம் நம்ம பூர்வாசரம் முழுவதும் அங்கு பதிவாகிவிடுகிறது. நான் கைநாட்டு வைத்தது இல்லை. ரொம்ப கேவலமாக இருந்தது. ஒரு பேராசிரியரை இப்படித்தான் இந்த நாடு மதிக்குமா?

"திருப்புவனம் எங்கு இருக்கிறது?" இது பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியுள்ள இம்மிகிரேஷன் ஆபீசர்.

"அது இந்தியாவில் இருக்கிறது"

"அப்படியெனில் ஜெர்மன் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு ஏன் அலைகிறாய்?" இது நான் எதிர்பார்க்காத முதல் அதிர்ச்சி!

"ஏனெனில் நான் ஜெர்மனில் 13 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன்!" இது நான்.

"என்ன? முப்பது வருடமா?" இது அவள். சரி, காதில் விழவில்லை போலுமென நெருங்கினேன்.

"கிட்டே வராதே" அவளின் அதட்டல்!

"நீ எத்துறையில் வேலை செய்தாய்?"

"கடல் வேதிமம்"

"கடல் வேதிமமா? அப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே! அது என்ன புதுத்துறை?"

விடிஞ்சது போ! இவளுக்கு எப்படி நான் இதை விளக்கப்போகிறேன்? என்று குழம்பியபோது...

"உன் பாஸ்போர்டில், டாக்டர் என்று போட்டிருக்கிறதே? நீ எம்.டி இல்லையா"

"இல்லை நான் மருத்துவனில்லை. இது வேற டாக்டர்"

"சரி, கைநாட்டு வைத்துவிட்டு, அந்தக் கேமிராவைப்பார்!" என்று போட்டோ பிடித்துக் கொண்டாள்.

ஐரோப்பியர்களுக்கு விசா தேவையில்லை என்று சந்தோஷமாக வந்த என்னை என் 'இந்திய முகவெட்டு' கெடுத்துவிட்டது.

இவ்வளவு அமர்களம் நடந்து கொண்டிருக்கும் போது, சத்தமில்லாமல் ஒரு கருப்புக் கிழவி என்னைக் கடந்து போனாள், எல்லோருக்கும் 'டேக்கா' கொடுத்து விட்டு :-)

"மிஸ், மிஸ்" எங்கே போறீங்க? என்றான் காவலாளி. அவள் பிரெஞ்சில் ஏதோ சொன்னாள். உனக்கு விசா இருக்கா? என்றான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி! பாஸ்போர்ட்டவது இருக்கா? அவள் பேந்தப் பேந்த விழித்தாள்.

13 மணி நேரப் பயணத்திற்குப் பின் அலுத்துப் போயிருந்த எனக்கு அது பெரிய காமெடியாக இருந்தது. முன்பொருமுறை துபாய் வழியாக ஜெர்மனி போனபோது மும்பாய் விமான நிலையத்தில் நார் பாயில் தன் கொஞ்ச நஞ்ச உடைமைகளை ஒரு தாம்புக் கயிறினால் கட்டிய வண்ணம் ஒரு கிராமத்துக்காரன் பயணப்பட்டுக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது!

உலகம் விசித்திரமானது. அமெரிக்காவும்தான்!!

நான் கண்ட ஆஸ்திரேலியா

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 13)


உலகின் ஐந்து கண்டங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவிற்குப் பணி நிமித்தமாகச் சென்ற நா.கண்ணன், அங்கு தான் கண்டுணர்ந்தவற்றை இந்தப் பதிவில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

ஒரு மாதம் பார்த்தாலும் தீராத இந்தப் பெரு நிலப்பரப்பை இரண்டு நாளில் கூடியமட்டும் பார்த்து வந்திருக்கிறார். மெல்போர்ன், சிட்னி நகரங்கள், சிட்னியில் ஈழத் தமிழர்கள் கட்டிய முருகன் கோயில், வனவிலங்கு நிலையம், பழங்குடி மக்கள் வாழும் கடம்ப வனத்தின் நீல மலை, கதை சொல்லும் மூன்று சகோதரிகள் என்ற மூன்று குன்றுகள், மிக அழகான மழைக் காடுகள்... எனப் பலவற்றை அவர் அழகாக விவரிக்கிறார்.

ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் தென்னிந்தியப் பழங்குடியினருக்கும் இடையே பல ஒற்றுமைகள் உண்டு என்பதற்கான ஆராய்ச்சி முடிவுகளை நா.கண்ணன் நினைவுகூர்கிறார். ஆஸ்திரேலிய பழங்குடியினரின் கண்டுபிடிப்புதான் பூமராங் என்ற செய்தியையும் அளிக்கிறார். மகாவிஷ்ணுவின் சக்கராயுதம், ஒரு வகையில் பூமராங்தான் என்ற தன் புதிய கோணத்தையும் எடுத்து வைத்துள்ளார்.

இங்கிலாந்தைப் போலவே ஆஸ்திரேலியா இருக்கிறது என்கிறார். அதை இரு நாடுகளுக்கும் சென்று வந்த அவரால்தான் சொல்ல இயலும். இடையே பழங்குடியினரின் இசையையும் ஒலிக்கவிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியக் கடம்ப வனத்தின் காட்சிகளைப் படம்பிடித்து வந்து ஒரு சலனப் படமாகவே காட்டியுள்ளார். அந்த வகையில் இது பல்லூடகப் பதிவாகவும் உங்கள் முன் மலருகிறது.

ஆஸ்திரேலியா பற்றிய நா.கண்ணனின் உரையை இங்கே கேளுங்கள்:

பேச்சு -

this is an audio post - click to play


நேர அளவு: 19.09 நிமிடங்கள்.

கடம்ப வனத்தின் காட்சிகளைக் காண இங்கே சொடுக்குங்கள்:

புழக்கடை சினிமா -

நேர அளவு: 02.03 நிமிடங்கள்.

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

இரங்கல்

தமிழ் யுனிகோடு வார்ப்பு 'தேனீ' மூலம் நம் அனைவருக்கும் நன்மை பயத்த உமர் தம்பி இறந்துவிட்டார் என்ற திடுக்கிடும் செய்தியை திசைகள் இதழில் வாசித்தேன். கட்டுரை ஆசிரியர் சுரதா யாழ்வாணன் அவரது இறப்பிற்கான காரணங்களை இணையம் மூலம் அறியமுடியவில்லை என்று எழுதியிருக்கிறார்.

உமருடன் எனக்கு தொடர்பு இருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளையின் தஸ்கி இணையப் பக்கங்களை யுனிகோடிற்கு மாற்ற அவரது 'any2uni' செயலி உதவியது. அது சமயம் வார்ப்பு தொழில் நுட்பம் பற்றி நிறைய அலசியிருக்கிறோம். தமிழ் இணையம் தோன்றி நிலை பெற்றுவிட்ட காலங்களில் தோன்றிய நம்பிக்கை நட்சத்திரம் உமர். அவர் இப்படி, இவ்வளவு சீக்கிரம் போவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. யுனிகோடு இன்று வலைப்பதிவுலகில் இவ்வளவு வீச்சலுடன் இருப்பதற்கு உமர் நிச்சயம் ஒரு காரணம். இணையத்தொழில் நுட்பத்தில் காசு திறட்டலாம் என்று பலர் இருக்கையில் அவர் 'தேனீ' வார்ப்பை இலவசமாக்கி, பல தமிழ் இணையப்பக்கங்கள் உருவாக வித்திட்டார். தன் காலத்தை பொது நன்மைக்கு செலவிடும் குணம் ஒரு சிலருக்கே வருகிறது. அவர்களைக் காலம் நினைவு கொள்ளும்.

அவர் மறைவு குறித்த மேலதிக விவரமறிந்தால் பின்னூட்டத்தில் தாருங்கள்.

ஏன் மனது இதற்கு ஏங்குகிறது என்று யோசித்துப் பார்த்தேன். கடைசில் எல்லோரும் இப்படிக் 'கதையாய்! பழம் கனவாய்' மாறிப்போவதே இயற்கை விதி என்றறிந்தேன். ஒருவர் இருக்கும்வரை பேசுவோம். இறந்தபின் கொஞ்ச காலம் பேசுவோம். பின் நினைவுகள் பின் தள்ளிப்போக நாம் மறந்துவிடுவோம். காலம் என்றென்றைக்கும் மறக்காமல் இருக்கும் படி ஒரு வாழ்வை வழி அமைத்துக் கொள்ள வேண்டுமெனில் அளப்பறிய பங்களிப்பு செய்ய வேண்டும். அல்லது அநியாயம் செய்ய வேண்டும்! மற்றபடி காலம் நம் எல்லோரையும் மறந்துவிடும். எல்லோரும் எல்லோரையும் நினைத்துக் கொண்டு இருக்கமுடியாது என்பதை ஒரு சூத்திரத்தின் மூலம் வள்ளுவன் சொல்கிறான்.

'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து உலகு'

[இப்போது வாழ்வோரை விட இறந்தோரின் எண்ணிக்கையே அதிகம்]

எனவே உமர் 'காலமாகிவிட்டார்'.

இருந்தாலும் நாம் வலைப்பதிவு, இணையம் எனும் நினைவுக் கிட்டங்கியில் அவர் நினைவுகளை தேக்கி வைப்போம். அது அழியாது என்ற நம்பிக்கையில்!

அமெரிக்கா வாட்ச் (2)

America Watch

அமெரிக்க வாழ்வு ஐரோப்பிய ஒழுங்கு முறையில் இயங்குகிறது. இன்றைய அமெரிக்காவை உருவாக்கியவர்கள் அவர்களே! அதை உருவாக்கும் போது தங்களது நாடுகளில் தாங்கள் கண்ட பிற்போக்குத்தனங்களையெல்லாம் மாற்றி அமெரிக்காவை ஒரு புதிய உலகமாக்க வேண்டும் என்ற கனவில் உருவாக்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜெபர்ஸன் சொன்னதுபோல் 'எல்லா மக்களும் சமமாக உருவாக்கப்பட்டுள்ளனர்' (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - வள்ளுவன்). எனவே ஐரோப்பாவில் கண்ட அடக்குமுறைகளற்ற ஒரு புதிய வாழ்வை அவர்கள் இங்கு உருவாக்க முயன்றனர். முதலில் ஐரோப்பியர்கள் (பழங்குடிகள் பற்றிய கதைக்கு இப்போது வரவில்லை), பின் கருப்பர், பின் ஆசியர் என்று படிப்படியாக வந்து குடியேறினர். புதிதாக ஐடி அலையில் அமெரிக்கா வந்து இறங்கியிருக்கும் பலருக்கு அமெரிக்கா பற்றி ஒன்றும் தெரியாது. அதே போல், அவுட் சோர்ஸிங் முறையில் அமெரிக்க ஊழியனாக சென்னையில் இயங்கும் தண்டபாணிகளுக்கும் அமெரிக்கா பற்றி ஒன்றும் தெரியாது. இதனாலேயே, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமெரிக்காவில் குதித்தவுடன் ஒன்றும் புரிவதில்லை.

இந்த முறை அமெரிக்க இந்தியர்களுடன் பேசிய போது இதன் பல்வேறு பரிமாணங்கள் புரிந்தன. அமெரிக்க வாழ்வு முறை தெரியாமல் அமெரிக்க அன்றாட ஒழுங்கமைப்பில் பங்கு கொள்ளும் ஒரு புதிய பொறுப்பை காலம் அவுட் சோர்ஸிங் மூலம் இந்தியர்களுக்கு வழங்கியுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கிடைக்கவில்லையா? கேட்டால் இந்தியப் பலுப்பலுடன் ஒரு இந்தியன் 'கவலை வேண்டாம், ஜரிதா பீடா போட்டுக்கோ! என்று சொல்கிறான் என்கின்றனர் சில அமெரிக்கர்கள். ஜெர்சியில் வாழ்பவர்கள், இந்நகரத்தை குப்பை, கூளங்களுடன் அப்படியே இந்தியக் குப்பமாக்கிவிட்டனர் என்று சிலர் கம்ப்ளெயிண்ட். சார்! இங்கதான் சார்! நம்ம ஊர் போலவே எதற்கெடுத்தாலும் ஹார்ன் அடித்துக்கொண்டு, இடித்துக் கொண்டு ஓட்டுவது! என்று ஒரு குரல்.

கல்யாணமாகி வந்து சேரும் பெண்கள் பாடோ அதைவிட திண்டாட்டம்! வீட்டிலே தனியாக இருப்பது எப்படி? என்று இந்தியாவில் யாரும் கற்றுத் தருவதில்லை! அமைதி, தனிமை, பிரைவசி இவையெல்லாம் தமிழ்ப் பெண்கள் அறியாத ஒன்று. இப்படி வந்து அவதிப்படும் ஒரு பெண்ணை சமாளிக்க ஒரு தமிழர் அம்மா, அப்பா, அப்புறம் சித்தப்பா, சித்தி இப்படி ஊரிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் வந்து சேரும் சித்தப்பாக்கள் படுத்தும் அவஸ்தையைப் பார்த்தால் எங்காவது ஓடிவிடத் தோன்றும்.

'நீங்களும் மதுரைக்காரர்தான். நான் சொல்வது புரியும். என்ன சார்? காலற நடந்து வரலாம்ன்னா, ரோட்டிலே நடக்கக்கூடாதுங்கறாங்க! நம்ம ஊரிலே மாட்டுக்கு, பன்னிக்கு இருக்கிற உரிமை கூட இங்க மனிதருக்கு இல்லை! சரி, பசிச்சா, தெருவோரமாப் போய் ஒரு வாழைப்பழம் வாங்கி வரலாம்ன்னா....எதுக்கெடுத்தாலும் சாம்ஸ், வால்மார்ட், கோஸ்ட்கோ ன்னு போக வேண்டியிருக்கு. அள்ளிட்டு வந்து பிரிட்ஜ்ஜிலே வச்சு திங்க வேண்டிருக்கு!' என்று என்னிடம் ஒரு பெரிசு அங்காலாய்த்தது. இது அமெரிக்க சரித்திரம் புரியாமல் வந்து விட்டதன் விளைவு! இவரைப் பார்த்தவுடன்தான், சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' கதைக்குப் பின்னால் உள்ள அங்காலாய்ப்பு புரிந்தது.


Mall in Cary, NC

அமெரிக்கா வாட்ச் (1)

America Watch

அமெரிக்கா ஏன் போக வேண்டும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை முதன்மையாகப்படுவது அமெரிக்கா உலக மக்களின் சங்கமமாக இருப்பதுவே. எப்படி 'திரிவேணி சங்கமத்தில்' குளிப்பது புண்ணியமோ அது போல் அமெரிக்கா போதுவதும் புண்ணியமே :-) இறங்கியவுடனேயே முதலில் படுவது இந்த மானுட சங்கமமே! எத்தனை முகங்கள். எத்தனை நிறங்கள். எத்தனை உடைகள், எத்தனை அலங்காரங்கள். எத்தனை வித அணுகுமுறைகள்! வேகாத வெய்யிலிலும் கருப்பு கோட், டை கட்டித்திரியும் ஜெண்டில்மேன்கள், நம்ம ஊர் பிச்சைக்காரர்கள், நரிக்குரவர்கள் எல்லாம் 'இங்கே' எங்கே வந்தார்கள்! என்று வியக்க வைக்கும் மனிதர்கள். இராமாயண காவியத்தில் வரும் தாடகை, இடும்பை போன்ற பாத்திரங்களைக் கூட அடிக்கடி சந்திக்கலாம். திடீரென்று தேவ கன்னிகை போல் ஒரு பெண் போவாள். உலக விசித்திரங்களின் சங்கமம் அமெரிக்கா! அங்கு போனவுடன் 'நான்' என்பது அழிந்துவிடுகிறது (சில நொடிகளேனும்:-) செட்டியார், அய்யர், கவுண்டர்..ம்..ம்..எல்லாம் கரைந்து போய் வெறும் மனிதாக நிற்க வைக்கும் பூமி. ஒரு கருப்பன் நம்மிடம் வந்து 'என்ன பிரதர்! சவுக்கியமா?' என்று தோழமையுடன் கேட்டால் நாம் கருப்பர் போல் அவனுக்கு தோற்றம் தருகிறோம் என்று பொருள். யாராவது வந்து அரேபிய மொழியில் பேசினால் நாம் மத்திய கிழக்கு போல் இருக்கிறோம் என்று பொருள்! மட, மடவென்று யாராவது வந்து உங்களுடன் ஸ்பானிஷ் பேசினால் உங்களை மெக்கிசிகோ என்று நினைத்துவிட்டார் என்று பொருள். நாம் யார் என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாவிடில் நாம் வெறும் மனிதரே!

எடிசன், நியூசெர்சியில் உள்ள ஒரு பேரங்காடியில் ஒரு வடகலைத் திருமண்ணைக் கண்டேன். 'சார்! தமிழா!' என்று கேட்டேன். அவர் பயந்து விட்டார். ஏனெனில் நான் தமிழனாக இருப்பேனோ? என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. மேலும், 'கடை, கண்ணியில் யாரோடும் பேசக்கூடாது' என்று பிள்ளைகள் எச்சரித்து இருக்கலாம் (பெற்றோர்கள் குழந்தையை எச்சரிப்பது இந்தியாவில் இருக்கும் வரைதான். அமெரிக்காவரும் பெற்றோர்களை பிள்ளைகள்தான் எச்சரித்து நடத்துகிறார்கள்!). பின் மெதுவாக பேசினார். அதற்குள் கல்லா பெட்டி வந்துவிட்டது, 'சார் மதுரையாம்! என்று அங்கு அரை டிராயர் போட்டுக்கொண்டு நிற்கும் நாற்பது வயது பிள்ளையிடம் அறிமுகப்படுத்தினார். அவர் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, 'மேல் வம்பு வேண்டாம்' என்று அவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்!
Washington DC -ல் ஒரு தெரு!

பாகுன்னாரா?

தினமும் பல் தேய்ப்பது போல் இங்கு எழுத வேண்டுமென்று ஆசை! ஆனால் அது முடிவதில்லை. வேலை, அசதி, சோம்பல் etc. எண்ணத்தை அப்படியே பதிவாக்க முடிந்தால் எவ்வளவு சௌகர்யம்!

ஒரு மாதமாக அமெரிக்காவில் சுற்று. தேன் துளி பத்மா, பாஸ்டன் பாலா, செகுவாரா இரமணீதரன், வேந்தன் என்று பல இணைய நண்பர்கள் உற்சாகப்படுத்த அமெரிக்கா போய் ஊர் சுற்றி விட்டு வந்து விட்டேன். Watch America! என்ற தலைப்பில் சில இடுகைகள் இனி வரும். அங்கேயிருந்து எழுதமுடியவில்லை. ஒரே சுற்று. இடையில் முதுகுப் பிடிப்பு வேறு! (நாரணன் நான் சொல்வதைக் கேட்பார்! ஏனெனில் அவர் காலைப் பிடிக்கும் அனுமனின் தந்தை என்னைப் பிடித்துக் கொண்டிருந்ததால்!! - விடை தெரியாவிடில் பிகு பார்க்கவும்).என்ன ஏதோ ஸ்பீல்பெர்க் மூவி மாதிரி இருக்கா? நாங்க போயிருந்த போது சிக்காகோ இப்படி இருந்தது! ஐபீல் கோபுர உயரத்திற்கு உயர்ந்திருந்த ஒரு கட்டிடத்தின் மேலிருந்து எடுத்த படம். கோடை வெயிலில் மழை நன்கு பெய்து உலர்ந்திருந்த பொழுது!


பிகு: வாயுப் பிடிப்பு
பாகுன்னாரா? = நலமா? (தெலுங்கு)