அமெரிக்கா வாட்ச் (2)

America Watch

அமெரிக்க வாழ்வு ஐரோப்பிய ஒழுங்கு முறையில் இயங்குகிறது. இன்றைய அமெரிக்காவை உருவாக்கியவர்கள் அவர்களே! அதை உருவாக்கும் போது தங்களது நாடுகளில் தாங்கள் கண்ட பிற்போக்குத்தனங்களையெல்லாம் மாற்றி அமெரிக்காவை ஒரு புதிய உலகமாக்க வேண்டும் என்ற கனவில் உருவாக்கியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜெபர்ஸன் சொன்னதுபோல் 'எல்லா மக்களும் சமமாக உருவாக்கப்பட்டுள்ளனர்' (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - வள்ளுவன்). எனவே ஐரோப்பாவில் கண்ட அடக்குமுறைகளற்ற ஒரு புதிய வாழ்வை அவர்கள் இங்கு உருவாக்க முயன்றனர். முதலில் ஐரோப்பியர்கள் (பழங்குடிகள் பற்றிய கதைக்கு இப்போது வரவில்லை), பின் கருப்பர், பின் ஆசியர் என்று படிப்படியாக வந்து குடியேறினர். புதிதாக ஐடி அலையில் அமெரிக்கா வந்து இறங்கியிருக்கும் பலருக்கு அமெரிக்கா பற்றி ஒன்றும் தெரியாது. அதே போல், அவுட் சோர்ஸிங் முறையில் அமெரிக்க ஊழியனாக சென்னையில் இயங்கும் தண்டபாணிகளுக்கும் அமெரிக்கா பற்றி ஒன்றும் தெரியாது. இதனாலேயே, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமெரிக்காவில் குதித்தவுடன் ஒன்றும் புரிவதில்லை.

இந்த முறை அமெரிக்க இந்தியர்களுடன் பேசிய போது இதன் பல்வேறு பரிமாணங்கள் புரிந்தன. அமெரிக்க வாழ்வு முறை தெரியாமல் அமெரிக்க அன்றாட ஒழுங்கமைப்பில் பங்கு கொள்ளும் ஒரு புதிய பொறுப்பை காலம் அவுட் சோர்ஸிங் மூலம் இந்தியர்களுக்கு வழங்கியுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கிடைக்கவில்லையா? கேட்டால் இந்தியப் பலுப்பலுடன் ஒரு இந்தியன் 'கவலை வேண்டாம், ஜரிதா பீடா போட்டுக்கோ! என்று சொல்கிறான் என்கின்றனர் சில அமெரிக்கர்கள். ஜெர்சியில் வாழ்பவர்கள், இந்நகரத்தை குப்பை, கூளங்களுடன் அப்படியே இந்தியக் குப்பமாக்கிவிட்டனர் என்று சிலர் கம்ப்ளெயிண்ட். சார்! இங்கதான் சார்! நம்ம ஊர் போலவே எதற்கெடுத்தாலும் ஹார்ன் அடித்துக்கொண்டு, இடித்துக் கொண்டு ஓட்டுவது! என்று ஒரு குரல்.

கல்யாணமாகி வந்து சேரும் பெண்கள் பாடோ அதைவிட திண்டாட்டம்! வீட்டிலே தனியாக இருப்பது எப்படி? என்று இந்தியாவில் யாரும் கற்றுத் தருவதில்லை! அமைதி, தனிமை, பிரைவசி இவையெல்லாம் தமிழ்ப் பெண்கள் அறியாத ஒன்று. இப்படி வந்து அவதிப்படும் ஒரு பெண்ணை சமாளிக்க ஒரு தமிழர் அம்மா, அப்பா, அப்புறம் சித்தப்பா, சித்தி இப்படி ஊரிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் வந்து சேரும் சித்தப்பாக்கள் படுத்தும் அவஸ்தையைப் பார்த்தால் எங்காவது ஓடிவிடத் தோன்றும்.

'நீங்களும் மதுரைக்காரர்தான். நான் சொல்வது புரியும். என்ன சார்? காலற நடந்து வரலாம்ன்னா, ரோட்டிலே நடக்கக்கூடாதுங்கறாங்க! நம்ம ஊரிலே மாட்டுக்கு, பன்னிக்கு இருக்கிற உரிமை கூட இங்க மனிதருக்கு இல்லை! சரி, பசிச்சா, தெருவோரமாப் போய் ஒரு வாழைப்பழம் வாங்கி வரலாம்ன்னா....எதுக்கெடுத்தாலும் சாம்ஸ், வால்மார்ட், கோஸ்ட்கோ ன்னு போக வேண்டியிருக்கு. அள்ளிட்டு வந்து பிரிட்ஜ்ஜிலே வச்சு திங்க வேண்டிருக்கு!' என்று என்னிடம் ஒரு பெரிசு அங்காலாய்த்தது. இது அமெரிக்க சரித்திரம் புரியாமல் வந்து விட்டதன் விளைவு! இவரைப் பார்த்தவுடன்தான், சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' கதைக்குப் பின்னால் உள்ள அங்காலாய்ப்பு புரிந்தது.


Mall in Cary, NC

4 பின்னூட்டங்கள்:

கல்வெட்டு (எ) பலூன் மாமா 8/09/2006 09:54:00 PM

Cary Towne Center ??

Mouls 8/09/2006 10:10:00 PM

Your writting is too good. I'm new to Tamil blogs and typing in Tamil, sorry for that.

நா.கண்ணன் 8/10/2006 07:56:00 AM

கல்வெட்டு: அது கேரியா? ஏபெக்ஸ்-ஆன்னு சரியாக ஞாபகமில்லை. மிக அழகான மால். அமெரிக்க வாழ்வு இத்தகைய அங்காடிக் குடும்பங்களையே அண்டியே வாழ்கிறது என்பதைச் சுட்டவே அப்படம். மேலும் அதுவொரு அழகான கோணம்!

நா.கண்ணன் 8/10/2006 07:58:00 AM

Mouls: நன்றி! தமிழில் தட்டச்சுவது எளிது. ஏ-கலப்பை அல்லது முரசு அஞ்சல் பயன்படுத்துங்கள். (Search Google: download e-kalappai or murasu anjal)