அமெரிக்கா வாட்ச் (3)

இந்தப் பொல்லாத பின் லாடன் அமெரிக்காவுக்கு ஆப்பு வச்சாலும் வச்சான், அவதிப்படுவது என்னவோ ஜியார்ஜ் புஷ் அல்ல, நாம்தான். இப்போ அமெரிக்காவில் செக்குயீரிடி பெர்சனல் என்பவர்கள் ஈ, எறும்பு, [தாவரங்களை] விட அதிகமாக உலவுகிறார்கள். எங்கே பார்த்தாலும் இவங்க ஜபர்தஸ்துதான். நியூயார்க் ஸப்வே யில் போய்க் கொண்டு இருக்கும் போது கண்ணுக்கு லட்சணமான ஒரு லத்தின் அமெரிக்க சிட்டு 'பெண் காவலாளியாக உள்ளே நுழைந்தது (அதற்கு ஒரு காவல் போல் இன்னொரு ஆம்பிளை செக்குரிட்டியும் வந்தது) சும்மா இல்லாமல் கண்ணு சைட் அடிக்கப் போனது! அப்புறம் எதுக்கு உள்ளே தள்ளிடப்போறாங்க என்று 'யூதர்களுக்கு ஏசு' என்னும் விளம்பரத்தைப் படிக்கத் தொடங்கினேன். என் மருமான் சொல்லியிருந்தான், அமெரிக்காவில் செக்குரிட்டி பிடித்தால் அது நம்ம 'தடா' சட்டம் போல்! பெயில் கூட கிடைக்காது என்று. இந்த புஷ் கோஷ்டி சுதந்திரம், சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு சாதாரண பிரஜைகளின் சுதந்திரத்தை சுத்தமாக போக்கிவிட்டனர். ரஷ்யாவிற்கு கூட எந்தச் சங்கடமும் இல்லாமல் போய் வந்து விடலாம் போல. அமெரிக்கா ஒரு சர்வதிகார நாடு போல் நடந்து கொள்வது பயமாக இருந்தது!

அமெரிக்காவில் கால் வைத்தவுடனேயே இந்த பயம் தொற்றிக்கொள்கிறது!

ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இறங்கியவுடன் முதலில் கேட்பது நம் 'கைநாட்டு'தான். பயோமெறிக்ஸ் என்று சொல்லும் இந்தப்பதிவின் மூலம் நம்ம பூர்வாசரம் முழுவதும் அங்கு பதிவாகிவிடுகிறது. நான் கைநாட்டு வைத்தது இல்லை. ரொம்ப கேவலமாக இருந்தது. ஒரு பேராசிரியரை இப்படித்தான் இந்த நாடு மதிக்குமா?

"திருப்புவனம் எங்கு இருக்கிறது?" இது பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து அமெரிக்கா வந்து குடியேறியுள்ள இம்மிகிரேஷன் ஆபீசர்.

"அது இந்தியாவில் இருக்கிறது"

"அப்படியெனில் ஜெர்மன் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு ஏன் அலைகிறாய்?" இது நான் எதிர்பார்க்காத முதல் அதிர்ச்சி!

"ஏனெனில் நான் ஜெர்மனில் 13 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறேன்!" இது நான்.

"என்ன? முப்பது வருடமா?" இது அவள். சரி, காதில் விழவில்லை போலுமென நெருங்கினேன்.

"கிட்டே வராதே" அவளின் அதட்டல்!

"நீ எத்துறையில் வேலை செய்தாய்?"

"கடல் வேதிமம்"

"கடல் வேதிமமா? அப்படி நான் கேள்விப்பட்டதே இல்லையே! அது என்ன புதுத்துறை?"

விடிஞ்சது போ! இவளுக்கு எப்படி நான் இதை விளக்கப்போகிறேன்? என்று குழம்பியபோது...

"உன் பாஸ்போர்டில், டாக்டர் என்று போட்டிருக்கிறதே? நீ எம்.டி இல்லையா"

"இல்லை நான் மருத்துவனில்லை. இது வேற டாக்டர்"

"சரி, கைநாட்டு வைத்துவிட்டு, அந்தக் கேமிராவைப்பார்!" என்று போட்டோ பிடித்துக் கொண்டாள்.

ஐரோப்பியர்களுக்கு விசா தேவையில்லை என்று சந்தோஷமாக வந்த என்னை என் 'இந்திய முகவெட்டு' கெடுத்துவிட்டது.

இவ்வளவு அமர்களம் நடந்து கொண்டிருக்கும் போது, சத்தமில்லாமல் ஒரு கருப்புக் கிழவி என்னைக் கடந்து போனாள், எல்லோருக்கும் 'டேக்கா' கொடுத்து விட்டு :-)

"மிஸ், மிஸ்" எங்கே போறீங்க? என்றான் காவலாளி. அவள் பிரெஞ்சில் ஏதோ சொன்னாள். உனக்கு விசா இருக்கா? என்றான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சரி! பாஸ்போர்ட்டவது இருக்கா? அவள் பேந்தப் பேந்த விழித்தாள்.

13 மணி நேரப் பயணத்திற்குப் பின் அலுத்துப் போயிருந்த எனக்கு அது பெரிய காமெடியாக இருந்தது. முன்பொருமுறை துபாய் வழியாக ஜெர்மனி போனபோது மும்பாய் விமான நிலையத்தில் நார் பாயில் தன் கொஞ்ச நஞ்ச உடைமைகளை ஒரு தாம்புக் கயிறினால் கட்டிய வண்ணம் ஒரு கிராமத்துக்காரன் பயணப்பட்டுக்கொண்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது!

உலகம் விசித்திரமானது. அமெரிக்காவும்தான்!!

2 பின்னூட்டங்கள்:

Boston Bala 8/13/2006 08:22:00 AM

அமெரிக்க குடிமகன் (இந்திய வம்சாவழியாக இருந்தாலும்) என்றால் தனீஈஈஈஈஈ மரியாதை. அசலூர் என்றால் ஏலியன் (Alien) என்று விளிப்பதில் ஆரம்பித்து மற்ற எல்லமும் தனீஈஈஈ மரியாதை ;-)

நா.கண்ணன் 8/13/2006 10:49:00 AM

பாலா!
உலகம் பூரா அப்படித்தான் இருக்கு. ஜப்பானில் இருந்தால் 'கைஜின்', ஜெர்மனியில் இருந்தால் 'அவுஸ்லாண்டர்' அமெரிக்காவிற்கு வந்தால் ஏலியன். ஆனால், அமெரிக்காவில் அது இம்மிகிரேஷன் வரைதான். அதன்பின், யாரும் அமெரிக்கராக இருக்கலாம். அந்த உணர்வு எனக்கு எப்போதும் பிடிக்கும். யாரும் அமெரிக்க பிரஜையாக உலாவலாம். ஒரு கதை உண்டு, பின்பு சொல்கிறேன். புஷ்ஷோட அப்பா காலத்திக் கதை!