அமெரிக்கா வாட்ச் (4)


பாலநீர் எனும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஸ்ரீநிவாசன்


அமெரிக்காவிற்கு தல யாத்திரை கொள்கிறேன் என்று சொல்லித்தான் கிளம்பினேன். இந்தியாவில் இல்லாத கோயில்களா? என்று கேட்கலாம். உண்மைதான். ஆனால், தமிழக ஜனத்தொகையிலும், கலாச்சார புரட்சியிலும் கோயில்கள் தங்கள் புனிதத்தை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் என் சிறுவயது குடிலாக இருந்த மீனாட்சி கோயில் இனிமேல் நுழைய முடியாத அளவு கூட்டம் கொண்டு வர ஆரம்பித்துவிட்டது. திருப்பதி பற்றி சொல்லவே வேண்டாம். குருவாயூர் கூடவா? கூட்டமில்லாத புதிய (பழைய) தமிழகக் கோயில்களைக் கண்டறிய போதிய நேரமில்லை (இனிமேல் NRI களுக்கு என்று பல நல்ல பழைய கோயில்களை ஒதுக்கிவிடலாம். இவர்கள் அதைப் பராமரித்து வழிபட்டு வரலாம்). நிற்க.

அமெரிக்காவில் கோயில்கள் புதிது. மிகப்பழமையான நியூயார்க் பிளெஷ்ங் பிள்ளையார் கோயில், பிட்ஸ்பெர்க் பெருமாள் கோயில் இவையெல்லாம் 25 வருடப் பழமையானவையே! அமெரிக்காவே 200 வருடப் பழமையில் நிற்கும் போது இவை சரித்திர காலத்துக் கட்டிடங்களாகிவிடுகின்றன! ஐரோப்பாவைக் கண்ணுறும் வேளையில் அமெரிக்கக் கோயில்கள் ஆயிரம் மடங்கு சிறப்பானவை. நிறையக் காணி வாங்கி, நன்றாகக் கோயில் கட்டி நிர்வகித்து வருகின்றனர். கோயில் நிருமானம் ஒரு வருவாய் உள்ள தொழில் என்று இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கண்டு விட்டனர். இது ஆபத்தான பாதை. கோயில் நிருவாகம் எப்படி இருக்க வேண்டும், அதில் ஊழல் வராமல் எப்படி பாதுக்காக்க வேண்டுமென்று ஸ்ரீராமானுஜர் 'கோயில் ஒழுகு' என்று மேனேஜ்மெண்ட் புத்தகம் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். இதை இந்தியர்கள் வாசிக்கிறார்களோ என்னவோ, அமெரிக்கத்தமிழர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும்! ஸ்ரீரங்கம் கோயில் நிருவாகத்தில் கிடைத்த அனுபவித்தில் ஒரு சந்நியாசி எழுதி வைத்தது. இப்போது நம் எல்லோருக்கும் ரொம்பப் பயன்படும்.


சிகாகோ அரோரா தலத்தில் நிற்கும் பாலாஜி


கோயில்களின் புனிதம் ஆகம விதிகளையும் விட பக்தனின் இதயத்தில்தான் இருக்கிறது. போக பூமியான அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மிக எளிதாக போகித்துப் போகிறார்கள். அதே நோக்கில் கோயில்களையும் ஒரு நுகர் பொருள் போல் கருதினால் எம்பெருமான் அங்கு வர மாட்டான். அது 'மால்' கலாச்சாரம். அது 'திருமால்' கலாச்சாரமாக வர பக்தி வேண்டும். உதாரணமாக அரோரா கோயிலை இவ்வளவு அழகாகக் கட்டிவிட்டு, வாசலை அடைத்து விட்டனர். கோயில் நுழைவாயில் ரெஸ்டாரெண்டுக்குள் இருக்கிறது! மை காட்! என்கிறீர்களா?


பெருமாள் கோயில் லட்டு, போளி, வடை, இட்லி...இவைதான் முதலில் மனதைக் கவர்கின்றன.


அமெரிக்காவிலே கற்றுக் கொள்ள பிற கோயில்கள் இருக்கின்றன. ஸ்ரீபிரபுபாதா ஆரம்பித்து நடத்தப்படும் ஸ்ரீகிருஷ்ண கோயில்களில் பக்தி இருக்கிறது, ஒழுங்கு இருக்கிறது, முறையான வழிபாடு இருக்கிறது. தமிழர்கள் கட்டும் கோயில்களில் குருக்கள் சட்டை இல்லாமல் இருந்து அர்ச்சனை செய்தால் போதுமென்று எண்ணுகிறார்கள். அரை டிராயர் கொல்டிகள், கன்னடிகாஸ், வீரத்தமிழர்கள் வந்து பெருமாளை 'விசிட்' செய்து விட்டு, தங்களது விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு திருஷ்டி சுற்றி, பரிகார நிவர்த்தி செய்துவிட்டுப் போகின்றனர். இந்தியர்கள் வளமாக இருக்கின்றனர். பெருமாள் அவர்களை வளமாக வைத்திருக்கிறான். அதற்கு அவன் வேண்டுவது இரண்டு துளசி, இரண்டு சொட்டுக் கண்ணீர். அவ்வளவுதான். அதைத்தவிர பிற எல்லாவற்றையும் தர முயல்கிறார்கள். ஆழ்வார்களும், நாயன்மார்களும் அங்கு தோன்ற வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கு பக்தி பந்தாதிகளைச் சொல்லித்தர வேண்டும்.


ஸ்வாமி நாராயணர் கோயில், சிகாகோ.


குஜராத்திகள் நடத்தும் ஸ்வாமி நாராயணர் கோயில் இந்த ஒழுங்கில் நடைபெறுகிறது. அங்கு அரை டிராயர், ஜீன்ஸ் கோஷ்டி போகமுடியாது! கேரளா கோயில்கள் போல் மாற்று உடை வேண்டுகிறார்கள் பக்தர்களிடம். இக்கோயில்கள் கலை மிளிர்கின்றன. இந்திய அறிவியல் பற்றிப் பேசுகின்றன. ஸ்வாமி நாராயணன் என்ற சிறுவன் பக்த பிரகலாதன் போல் ஸ்ரீமன் நாராணன் துணை மட்டுமே கொண்டு காடுகளிலும், மலைகளிலும் சஞ்சரித்த சரிதம் ஐமேக்ஸ் படமாக உருவாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு காட்டப்படுகின்றன. தென்னிந்தியக் கோயில்களில் இம்மாதிரிப் பெரும் முயற்சி நடப்பதாகத் தெரியவில்லை. கோயிலுக்குப் போய் விட்டு, புளியோதரை, போளி சாப்பிட்டு விட்டு வந்தால் போதுமென்று நினைக்கிறார்கள்.

3 பின்னூட்டங்கள்:

Boston Bala 8/13/2006 02:21:00 PM

என்னுடைய முந்தைய பதிவு ஒன்று: E - T a m i l : 'அமெரிக்க கோயில் உலா'

இராதாகிருஷ்ணன் 8/14/2006 12:36:00 AM

வீட்டில் சாப்பிடுவது போதாதென்று கோவில்களிலும் போய் சாப்பிட நம் மக்களால் மட்டுமே முடியும். ஒரு வேளை கோயில்களில் தீனிகள் நிறுத்தப்பட்டுவிட்டால் அங்கு போவதையே நிறுத்திவிடுவார்கள் பக்த சனங்கள் ;-)

நா.கண்ணன் 8/14/2006 11:03:00 AM

பாலா சொல்வது போல் அமெரிக்கக் கோயில்களில் பல அணுகூலங்களுண்டு. கூட்டம் கிடையாது. நல்ல நிம்மதியான தரிசனம். பட்டாச்சாரியர்களும், குருக்கள்களும் முறையாக, சிரத்தையாக பூஜை செய்கின்றனர். எல்லோரையும் வளமாக வைத்திருக்கிறான் திருமால்.

நம்மவர்கள் இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு தங்கள் உண்மையான ஆன்மீக வேர்களைக் காண முயல வேண்டும். அப்போது திராவிட கலாச்சாரத்தின் மேன்மை விளங்கும். பக்தியை உலகிற்குச் சொல்லித்தந்தவர்கள் தமிழர்கள். இந்தியாவின் ஆகச் சிறந்த தத்துவ ஆசிரியர்கள் தென்னிந்தியர்கள். ஆனால், அதுவெல்லாம் நம்ம கோயில்களுக்குப் போனால் தெரியாது. புளியோதரை, இட்லி, வடைதான் தெரியுது!!