அமெரிக்கா வாட்ச் (5)


வாஷிங்டன் டி.சி. கேபிடொல் கட்டிடம்


ஒரு நாட்டின் தலைநகர் எப்படி இருக்க வேண்டுமென்று கேட்டால் அது வாஷிங்டன், டி.சி போல் இருக்க வேண்டுமென்று தயங்காமல் சொல்லுவேன். ஆனால், ஒரு நாடு எப்படி இருக்க வேண்டுமென்று கேட்டால் அமெரிக்கா போல் இருக்க வேண்டுமென்று சொல்லத் தயங்குகிறது. 70/80களில் நான் அப்படி சொல்லியிருக்கலாம். 9/11க்குப் பிறகு அமெரிக்காவே மாறிவிட்டது! இனம் புரியா கலவரம் அவர்கள் மனதில்! யாரும், யாரையும் இனிமேல் நம்பத்தயாராக இல்லை. எல்லோரையும் முஸ்லிம் வன்முறையாளர் என்றே பார்க்கின்றனர். பாவம், டர்பன் வைத்திருந்த நம்ம நாட்டு சீக் ஒருவரை முஸ்லிம் என்று கொன்றுவிட்டனர். அது உச்சக் காச்சலின் குறி. கமலஹாசன் கூட அமெரிக்கா நுழையமுடியாமல் திரும்பிவிட்டார் என்பார்கள். பெயர் முஸ்லிம் பெயர் போல் உள்ளது என்று! உண்மையில் முஸ்லிம்கள் வில்லன்களா? என்பதை கீழே கொடுத்திருக்கும் வீடியோ காட்டும். அதற்கு முன்..

90 களின் ஆரம்பத்தில் கூட அமெரிக்கா வித்தியாசமாக இருந்தது. உள்நாட்டு விமான நிலையத்தில், விமானம் வரை பயணிகளின் நண்பர்கள்/உறவினர்கள் வந்து விடை கொடுக்கலாம். ஐரோப்பாவிலிருந்து சென்ற எனக்கு அது அதீத, அசட்டுத்தனமென்று தோன்றியது. ஒரு வெகுளித்தனம் அதிலிருந்தது. சென்றமுறை சிக்காகோ வந்து இறங்கிய போது, "எதற்கு ஜெர்மனியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய். அமெரிக்கா வந்து விடு" என்று இம்மிகிரேஷன் ஆபீசர் என்னிடம் சொன்னார். இப்படிப் பேசுவது சாத்தியமா? என்றிருந்தது. சிடு, சிடு ஜெர்மன் அதிகாரிகளையே பார்த்திருந்த எனக்கு அது பெரும் மாறுதலாக இருந்தது. இன்னொருமுறை கருத்தரங்கிற்கு விசா வாங்கப்போனபோது, ஹாம்பர்க் அமெரிக்கன் கான்சுலேட்டில், 'என்ன இரண்டு வாரத்திற்கு விசா கேட்கிறாய், இன்று விசா ஆன் சேல் (Sale), 10 வருடத்திற்கு வாங்கிக்கோ!' என்றார்கள். அதுவும் சத்தமாக. அடடா! அமெரிக்கா என்றால் அதன் மறுவார்த்தை சுதந்திரம் என்று எண்ணினேன். அது இப்போது மாறிவிட்டது. 9/11க்குப் பிறகு தலை கீழாக மாறிவிட்டது! ஒரு பீதியில் (fear pschychosis) அந்த நாடு உள்ளது. அந்த வெகுளித்தனம் போச்சு, அந்த சுதந்திரம் போச்சு, இம்மிகிரேஷன் அதிகாரிகளின் புன்னகை போச்சு. இதற்கெல்லாம் அவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளைக் காரணமாகச் சொல்கின்றனர். அதுதான் காரணமா என்று கீழுள்ள வீடியோ கேட்கிறது. அதற்கு முன்....


வெள்ளை மாளிகை (போஸ்டரைக் கவனியுங்கள்)


வாஷிங்டன் டி.சி யூனியன் ஸ்டேஷனிலிருந்து என்னை அழைத்துச் சென்ற கருப்பு டாக்சி ஓட்டுநர், 'இதுதான் கொள்ளையர்களின் வீடு' என்று வெள்ளை மாளிகை நோக்கிக் காட்டினான். 'அப்படித் தெரிந்தும் ஏன் மீண்டும் தேர்ந்தெடுத்தீர்கள்?' என்று கேட்டேன். 'அதுதான் கருப்பர்களின் பிழை. இவர்கள் காசு கொடுத்து தேவாலயம் வந்த பக்தர்களை புஷ்ஷுக்கு ஓட்டுப்போடுமாறு பாதிரியாரை மாற்றிவிட்டனர்' என்றார். கடந்த தேர்தலில் 30%தான் ஓட்டுப்பதிவு என்று எண்ணுகிறேன். இந்தியாவே தேவலாமென்றிருக்கிறது! ஈராக் யுத்தத்திற்கு முன் கலிபோர்னியா போயிருந்தேன். செம்மரக்காடுகளில் உலாவும் போது ஒரு அமெரிக்க மூத்த தம்பதியரைச் சந்தித்தேன். நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன் என்றவுடன். 'எவ்வளவு நல்லது. இங்கே பார்! ஒரு கௌ பாய்யை (மாட்டுக்காரன்) முதல்வராக வைத்துக் கொண்டு அவதிப்படுகிறோம்!' என்றார்கள்.


வெள்ளை மாளிகை அருகே சாகும்வரை உண்ணாவிரதம் (16வது நாள்)


எல்லோருக்கும் தெரிகிறது. ஆனாலும், மீண்டும், மீண்டும் தவறு செய்கின்றனர். வியட்நாம் போருக்குப் பின்னாவது புத்தி வந்திருக்க வேண்டும். குவெவைத், ஆப்கான், ஈராக் என்று தொடர்ந்து போர்கள். எண்ணைக்கான போர் என்கிறார் புஷ். ஆனால் அதன்பின்தான் எண்ணை விலை எக்கு தப்பாக ஏறிவிட்டது. இந்தியாவில் 55 ரூபாய், அங்கு 45 ரூபாய். என்ன பெரிய வித்தியாசம்? இப்போதுதான் சாதரண அமெரிக்கனுக்கு சுருக்கு என்று தைக்கிறது. அந்தப் பொருளாதாரமே கார்களை நம்பியுள்ள பொருளாதாரம். எண்ணை தவிர்த்து மாற்று சக்தியைக் கண்டறிய எவ்வளவு நேரமாகும்? ஆனால் அரசியலுக்காக அதை நிருவாகம் செய்யாது!


கொரியப்போரின் நினைவுச்சின்னம், வாஷிங்டன். டி.சி.


அமெரிக்க அரசியல் போர்களையே நம்பி உள்ளது. சுதந்திரமென்று பேசிக்கொண்டு உலகின் அயோக்கியர்களுடன் அது உறவு கொள்கிறது. தீவிரவாதத்தைக் காரணம் காட்டும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் உறவு கொள்கிறது. கம்யூனிஸ்டுகளான சீனாவுடன் உறவு வைத்துக் கொள்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா காலம், காலமாக பாகிஸ்தான், தீவிரவாதம் பற்றிச் சொல்லி வந்தாலும் அது 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போலாகிவிட்டது! இவர்கள் ஒரு 9/11 நடக்க வேண்டுமென்று காத்திருந்தது போல் படுகிறது. உண்மையா? கீழுள்ள வீடியோ பாருங்கள். 2 மணி நேரமாகலாம்!"அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"

வாழ்க சுதந்திரம்! வாழ்க குடியரசு!

1 பின்னூட்டங்கள்:

இராதாகிருஷ்ணன் 8/15/2006 07:29:00 AM

வீடியோ சுட்டிக்கு நன்றி! முழுவதும் பார்த்தேன். முக்கியமாக அமெரிக்க மக்கள் பார்த்துப்புரிந்து கொண்டால் நல்லது.