அமெரிக்கா வாட்ச் - 6

நிழல் யுத்தம்

சேர சோழ பாண்டியர் காலத்திலிருந்து, ஏன் பிரித்தானிய காலனித்துவ காலத்திலிருந்தும் உலகம் மாறிவிட்டது. அப்போதெல்லாம் ஒருவனைப் பிடிக்காதென்றால் படையெடுப்பர். முன் நின்று சண்டை போடுவர். வீட்டிற்கு வந்தால் அம்மாவோ, மனைவியோ எத்தனை வெட்டு என்று கணக்குப் போட்டு விழுப்புண் வங்கியில் போடுவாள். இப்போது கோழைகள் நிரம்பிய உலகமாகிவிட்டது. ஜியார்ஜ் புஷ் ஈராக் மீது படையெடுக்கிறார் என்றால், அவர் வெள்ளை மாளிகையில் சொகுசாகக் குடியிருக்க யார் பெத்த பிள்ளையோ அங்கு போய் மடிய வேண்டியிருக்கு (போன பதிவில் பிள்ளைகள் திரும்ப வேண்டுமென ஒரு தாய் வெள்ளை மாளிகை முன் உண்ணாவிரதம் இருக்கும் காட்சியைப் படம் பிடித்துப் போட்டிருந்தேன்). இது ஒருபுறம்.

ஆனால், தீவிரவாதமென்ற பேரில் மக்கள் கூடும் சந்தையில் வெடி வெடிப்பது, விமானத்தைத் தூளாக்குவது, இரயிலில் குண்டு வைப்பது போன்ற கொடுஞ்செயல்கள் நிழல் யுத்தமாக ஆரம்பித்துவிட்டன. இதை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. 9/11 க்குப்பிறகு விமானப் பயணமென்பது இன்பம் என்பது போய் 'கொடுமை' என்றளவிற்கு வந்து விட்டது. இதைக் காட்டு, அதைக்காட்டு என்று பிடுங்குவதைப் பார்த்து விட்டு ஒரு தமிழ்த் தந்தை 'இனிமேல் கோவணத்தைக் கட்டிக்கொண்டுதான் அமெரிக்கா வரணும் போல' என்று சொன்னாராம். அது மிகையல்ல,. ரொம்பவே பிடுங்குகிறார்கள். நான் வந்த போதாவது ரெண்டு, மூணு கைப்பை கொண்டு வர முடிந்தது. இன்றைக்குப் பயணிப்பவர் எந்தக் கைப்பையும் இல்லாமல், குடிக்க நீர் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை. பயணிக்கும் முன்னரே பயணிகளின் பெயர்கள் ஊர்ஜிதமாகத் தெரிய வேண்டுமென அமெரிக்கா இப்போது உலக விமானக் கம்பெனிகளை நிர்பந்திக்கிறது. முன்போல விமானம் வரை வரமுடியாது, கடைசி நிமிடத்தில் அவசர காரியமாக விமானம் ஏற முடியாது!

இங்கிலாந்து விமான தளங்கள் சிவப்பு எச்சரிக்கையில் இருந்த போதும், வாஷிங்டன் வந்த விமானத்தில் ஒரு பெண் ஸ்கூரு டிரைவர் கொண்டு வந்திருந்தாளாம். இவளைக் கண்காணிக்க இரண்டு அமெரிக்க போர் விமானங்கள், கடைசியில் விமானம் பாஸ்டனில் இறக்கப்பட்டதாம். என்னடா? என்று கேட்டால் அவளுக்கும், சிப்பத்திக்கும் வாக்குவாதமாம். அவளுக்கு ஒரே அறையில் உட்கார்ந்திருக்க முடியாதாம்! இதற்குப்போய் இவ்வளவா? ஆமாம்! இப்ப எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மையில் அமெரிக்கா இல்லை.

தண்ணீர் கொண்டு போகக் கூடாதாம். ஏன்? தண்ணீர் போல் வெடி மருந்து இருக்காம். சரி, சீனாவில் என்ன செய்கிறார்கள்? குடிக்கச் சொல்கிறார்கள். எவ்வளவு எளிய வழி. ஆனால் அமெரிக்கா குடி பொருள் எதையும் இனி எடுத்துச் செல்லக் கூடாது என தடை விதிக்கிறது.

மடிக்கணினி, செல்பேசி கொண்டு செல்லக்கூடாதாம்? ஏன்? அதன் மூலம் வெடிக்க வைக்க முடியுமாம். சரி, கொரியாவில் என்ன செய்கிறார்கள்? மடிக்கணினியை ஆரம்பித்து வைக்கச் சொல்கிறார்கள். செல்பேசி மூலம் கூப்பிடச் சொல்கிறார்கள். ஆனால் அமெரிக்கா தடை செய்யச் சொல்கிறது

நிழல் யுத்தத்தை யார் செய்கின்றனர் என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. அவன், செய்கிறான் இவன் செய்கிறான் என்று எல்லோரும் செய்கின்றனர் இம்சைகள். வெடித்தாலும் அவதிப்படுவது பொது மக்களே! வெடிக்காவிடினும் அவதிப்படுவது பொதுஜனமே! இனிமேல் ஆத்திர அவசரத்திற்கு விமானம் ஏறிப்போக முடியாது. 3லிருந்து 4 மணி நேரம் முன்னே வரச் சொல்கின்றனர்.

சும்மாவே நம்ம ஊர் அப்பாக்கள் அமெரிக்கா வர பிகுப்பண்ணுவார்கள். இனிமேல் அதுவும் போச்சு. அமெரிக்கா போய் விட்ட பிள்ளை மார்கள் 15 நாளில் விடுமுறைக்கு வருவதிலும் இந்தக் கெடுபிடிகள் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டன. எங்கேயும் போகாமல் இருக்கும் ஊரிலேயே இருந்தால் போதும் என்றாகிவிடும்.

பிக்கு ஐயர் அவரது பத்தியொன்றில் இத்தலைமுறை 'விமானத்தளம் தாவும்' தலைமுறை என்று எழுதினார். இனிமேல் விமானத்தில் ஏறுவதே சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

வேடிக்கை என்னவென்றால் சுதந்திரம், சுதந்திரம் என்று பேசும் அமெரிக்கா, இங்கிலாந்தில் கெடுபிடிகள் கம்யூனிஸ்டு நாடுகள் போலுள்ளன. ஆனால் கம்யூனிஸ்டு நாடான சீனாவில், முன்னாள் சோவியத் யூனியனில் சுந்தந்திரமாகப் பயணிக்க முடிகிறது.

ஜேஎப்கே விமானதளம் தாண்டி நரித்தா விமான தளம் பின் அப்பாடா! என்றிருந்தது. ஜப்பானில், கொரியாவில் எல்லாமே சகஜமாக உள்ளன. எந்தக் கெடுபிடியுமில்லை. இவர்கள் உலகைக் காபந்து பண்ணுகிறேன் என்று சொல்வதற்குப் பதில் இந்நாடுகளை ஆசியர்களிடம் கொடுத்து விடலாம். ஒழுங்காக நடத்துவார்கள்.



இந்த இடைப்பட்ட இடத்தில் உலகின் உயர்ந்த இரு கோபுரங்கள் இருந்தன (Ground 0)

0 பின்னூட்டங்கள்: