கோகுலாஷ்டமி பட்சணங்கள்

சிஃபி டாட் காம் கிருஷ்ண ஜெயந்தி மலரிலிருந்து எடுத்தது.
அடுத்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு உதவுமே என்ற நோக்கில்.....கை முறுக்கு

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
உளுந்து 1 ஸ்பூன்
உப்பு 1/4 ஸ்பூன்
பெருங்காயம் மிளகளவு
வெள்ளை எள் 1 ஸ்பூன் (வறுத்தது)
வெண்ணெய் ஒரு பெரிய ஸ்பூன்/ பொறிக்கும் எண்ணெய் 1 லிட்டர்.

முதலில் அரிசியை நீரில் நனைத்து, வடிகட்டி, நிழலில் காயவைத்து ஓரளவு ஈரத்துடன் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கல் இருக்கக்கூடாது. உளுந்தை வறட்டு வாணலியில் சிவப்பாக வறுத்துப்பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். அரிசியை மிக்ஸிசியில் மாவாக்கி சலித்து வைத்துக் கொள்ளுங்கள். நீரில் பெருங்காயத்தைக் கரைத்து மாவில் போட்டுக் கொள்ளுங்கள். இதிலேயே வறுத்த உளுந்துப் பொடியைச் சேர்த்து உப்பு, வெண்ணெய், எள் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்டியாகப் பிசைந்து ஈரத்துணியால் மூடி வைத்து, அவ்வப்போது எடுத்து கையால் முறுக்குச் சுற்றலாம். கையால் சுற்றத் தெரியாதவர்கள், கைமுறுக்கு அச்சு என்று கடையில் விற்கும் அச்சினை (இதை நாழி என்றும் சொல்வார்கள்) பயன்படுத்தி வாணலியில் காயும் எண்ணெயில் பிழிந்து சிவக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் இரண்டு மூன்று விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வெண்ணெய், உளுத்தமாவு ஆகியவை அளவுக்குக் கொஞ்சமும் அதிகமாகக்கூடாது. அப்படிச் செய்தால் மொறமொறப்பு வராது. எண்ணெய் புகையக்கூடாது. அரிசி அதிகப் பழசாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் முறுக்கு சிவந்து விடும்.முள் முறுக்கு

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு (பாசிப்பருப்பு) 1/4 ஆழாக்கு
சீரகம்/எள் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1/2 கிலோ அல்லது லிட்டர்

அரிசியையும் பயத்தம்பருப்பையும் கலந்து மெஷினில் மாவாக்கிக் கொள்ளுங்கள். சீரகமானால் வறுக்காமலும் எள்ளானால் வறுத்தும் போட்டுக் கொள்ளுங்கள். உப்பு போட்டுக் கொள்ளுங்கள். விருப்பமிருந்தால் பெருங்காயத்தூள் கலந்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெயை பொரியப் பொரியக் காய வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கரண்டியை எடுத்து மேற்கூறிய மாவில் போட்டுக் கொள்ளுங்கள். பிசைந்து, மேலும் நீர்விட்டுப் பிசைந்துக் கொள்ளுங்கள். முறுக்கு நாழி (அச்சு)யில் போட்டு எண்ணெயில் பிழிந்து சிவக்காமல் எடுத்துக் கொள்ளுங்கள்.


சீடை (உப்பு)

கைமுறுக்குக்குரிய அதே முறையில் மாவைத் தயாரித்து சின்னஞ்சிறு உருண்டைகளாக்கி புகையும் எண்ணெயில் போட்டால் சீடை தயார். ஆனால் மாவு சரியாக சலிக்கப்படாமல் இருந்தால் சீடை வெடிக்கும். கவனம் தேவை.வெல்லச் சீடை

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
உளுந்து 1 ஸ்பூன்
வெல்லம் 1/2 ஆழாக்கு
எள் 1 ஸ்பூன் (வெள்ளை எள்)

அரிசியைக் களைந்து நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உளுந்தை வறட்டு வாணலியில் சிவப்பாக வறுத்துக் கொள்ளுங்கள். எள்ளை வறுத்துக் கொள்ளுங்கள். அரிசியையும் உளுந்தையும் மட்டும் நன்றாய் மாவாக்கிக்கொண்டு அதில் வறுத்த எள்ளைப் போட்டுக் கொள்ளுங்கள்.

வெல்லத்தைச் சிறிதளவு நீரில் கரைத்து, மண் இல்லாமல் மேலோடு எடுத்து, மேற்சொன்ன மாவுடன் சிறிது சிறிதாக விட்டுப் பிசைந்து கொள்ளுங்கள். சின்ன எலுமிச்சை அளவுக்கு உருட்டி ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் போட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய்யை வாணலியில் வைத்து அடுப்பில் ஏற்றி, அது புகையாமல் காய்ந்தவுடன் உருண்டைகளை மெல்லப் போடுங்கள். அது லேசாய் வாய் பிளந்தால் கவலை வேண்டாம். பிரவுன் நிறமானவுடன் எடுத்து விடுங்கள்.தட்டை

தேவை:

அரிசி 2 ஆழாக்கு
உளுந்து 1 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப/ மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப
வேர்க்கடலை 1/4 ஆழாக்கு
பொட்டுக்கடலை 1/4 ஆழாக்கு
எள் 1 ஸ்பூன்

அரிசியைக் களைந்து உலர்த்திக்கொள்ளுங்கள். உளுந்தை வறுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் மாவாக்கி நன்கு சலித்துக் கொள்ளுங்கள். உப்பு, விருப்பமிருந்தால் பெருங்காயப்பொடி, மிளகாய்த்தூள், தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வறுத்த வெள்ளை எள், ஆகியவற்றைப் போட்டு கெட்டியாகப் பிசைந்து பிளாஸ்டிக் தாளில் வட்டமாகத் தட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் எண்ணெய் வைத்து, காய்ந்தவுடன் தட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.அப்பம்

தேவை:

மைதா மாவு 1/4 கிலோ
கோதுமை மாவு 1 ஸ்பூன்
வெல்லம் 11/2 ஆழாக்கு
ஏலக்காய் 2
எண்ணெய் 1/2 லிட்டர்

வெல்லத்தை வெந்நீரில் போட்டு நன்கு கரைந்தவுடன் வடிகட்டிக்கொண்டு மைதா மாவையும், கோதுமை மாவையும் போட்டு, ஏலக்காயை நசுக்கி அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கரைசலைக் குறைந்தது அரை மணியாவது ஊற வைத்தப் பிறகு, அடுப்பில் எண்ணெய் வைத்து, ஒவ்வொரு கரண்டி எடுத்து ஊற்றி, சிவந்தவுடன் வடிகட்டி எடுத்து வைக்கவும். எண்ணெய் புகையக் கூடாது. புகைந்தால் அப்பம் ஊற்றியவுடன் பிரிந்துபோய்விடும்.

அப்பம் இன்னொரு முறையிலும் செய்யலாம். அரிசியை ஊறப்போட்டு, 20 நிமிடம் ஊறிய பிறகு ஒரு ஆழாக்குக்கு முக்கால் ஆழாக்கு என்கிற கணக்கில் வெல்லமும், தேங்காயும் போட்டு மிக்ஸியில் மைபோல் அரைத்தும் ஊற்றலாம்.

சுகியன் (அ) சிற்றுண்டை

தேவை:

மைதாமாவு 1/4 கிலோ
வெல்லம் 1/4 கிலோ
தேங்காய்த் துறுவல் 1 மூடி
ஏலக்காய் 2
எண்ணெய் 1/2 லிட்டர்

மைதா மாவை பஜ்ஜிக்குக் கரைப்பதுபோல் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துறுவி, வெல்லத்தோடு அடுப்பில் வைத்து ஐந்து நிமிஷம் கிளறி, ஒட்டாமல் வருவதற்கு ஒரு ஸ்பூன் நெய்விட்டு இறக்கிக் கொண்டால் பூரணம் போல் வரும். இதைக் கொஞ்சநேரம் ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிடிக்குமுன்பே ஏலக்காய் தூள் போடலாம்.

அடுப்பில் எண்ணெய் வைத்து, உருண்டைகளை மாவில் தோய்த்துப் போடவேண்டும். சிலர் மைதாவுக்குப் பதிலாக, அரிசி, உளுந்து ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து அந்த மாவில் தோய்த்துப் போடுவார்கள்.மேற்சொன்ன பட்சணங்கள் தவிர, அனைத்து வகைப் பழங்களும் கிருஷ்ணனுக்குப் பிரியமானவை. பிரப்பம் பழம், நாவல் பழம் ஆகியவற்றைக் கொடுத்தால் அவன் அகமகிழ்ந்து அருள் புரிவான். அவல், வெண்ணெயுடன் கலந்து நாட்டுச்சர்க்கரை ஆகியவையும் கிருஷ்ண ஜெயந்திக்கு வெகு விசேஷம்.

எதுவுமே முடியாவிட்டால் (பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக் குறிப்பிட்டபடி) துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம் அதுவும் முடியாவிட்டால் சிறிதளவு நீர் இவற்றை வைத்துப் பூஜை செய்தாலும் ஏற்றுக்கொண்டு இறைவன் வருவது நிச்சயம்.

6 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 8/18/2006 07:11:00 AM

பக்ஷணங்கள் செய்முறை கொடுத்ததுக்கு நன்றி கண்ணன்.
இப்பெல்லாம் ரெஸிபி படிச்சே தின்ன திருப்தி வந்துருது. வேற வழி?

ஆமாம்.... பிரப்பம்பழம்?

எனக்குத் தெரிஞ்ச 'பிரம்பம்'பழம் வேறயாச்சே! சின்ன வயசுலே
நிறையக் கிடைச்சது. அவ்வளவா 'ருசி' இல்லை. அனுபவிச்சுப் பார்த்தவங்களுக்குத்தான்
தெரியும்:-)))))))))

நா.கண்ணன் 8/18/2006 08:17:00 AM

"இப்பெல்லாம் ரெஸிபி படிச்சே தின்ன திருப்தி வந்துருது. வேற வழி?"

அத ஏன் கேக்கிறீங்க. அமெரிக்காவிலே பெரிய அங்காடிகளில் தின்பண்டங்களைப் பார்த்து திருப்திப்பட் வேண்டியதுதான். இல்ல தின்னே சாகணும் :-) நேத்து இவங்க சொல்லற மாதிரி அப்பம் பண்ணினேன் சரியா வரலை!

"ஆமாம்.... பிரப்பம்பழம்?"

அது என்னங்க புதுப்பழமா இருக்கு? பிரம்மாவை யாரும் பழம்ன்னு சொல்லறதில்லையே! கனியே, பாலேன்னு சொல்லறதெல்லாம் கண்ணனுக்காச்சே! :-))

துளசி கோபால் 8/18/2006 09:41:00 AM

என்னங்க, கண்ணன்னு பேர் வச்சுக்கிட்டும் பிரப்பம்பழம் தெரியாதா?

ஏன் உங்க 'நந்து'வுக்கும் நிறையக் கிடைச்சிருக்கணுமே.

நான் வேணாம் வேணாம், போதுமுன்னு சொன்னாலும் விடாம ஊட்டிருவாங்க.

செய்யற குறும்பு கொஞ்சமா இருந்தாத்தானே?

பிரம்பால் கிடைக்கும் 'அடி' பழம்தான்.

அது இருக்கட்டும், 'தொடபெல்லம்' தெரியுமா? வேணுன்னா தரேன்:-)))

எனக்கு நிறையக் கிடைச்சிருக்கு ஒரு காலத்துலே!

நா.கண்ணன் 8/18/2006 09:51:00 AM

எங்க அம்மாவோட டெக்னாலஜி தனி. அடுப்பு உள்ளிலிருந்து ராக்கெட், கையில் என்ன கிடைக்குதோ அது வந்து தாக்கும் :-)) ஆனா, இந்த பிரப்பம்பழம் தரது வாத்தியார்கள்தான். கை கன்னிப்போய்விடும்.

அது என்ன 'தொடபெல்லம்'? தொடையிலே கிள்ளறதா? எங்க கணக்கு வாத்தியார் அதிலே கில்லாடி. ரொம்ப நாளைக்கு வலிக்கும்.

துளசி கோபால் 8/18/2006 10:30:00 AM

சரியாக் கண்டுபிடிச்சதுக்கு 100 க்கு 100

நா.கண்ணன் 8/18/2006 10:40:00 AM

:-)