சுதந்திரமான கோகுலாஷ்டமி

இன்று இந்தியா சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. சஷ்டியப்த பூர்த்தி. தாத்தாவிற்கு வாழ்த்து. எம் தந்தையர் நாடு!

இன்று கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். என்ன பொருத்தம். தாத்தாவிற்கு 60 வயதானாலும் இந்தியா ஒரு இளமையான நாடு. இந்திய சுதந்திரம் இன்னும் வளரும் கன்னி. கோகுலம் என்பது சுதந்திரத்தின் குறியீடு. எம் எல்லோருக்குமே இளமைக்கால நினைவுகளே மிச்ச நாட்களை ஓட்ட உதவுகின்றன. ஒரு வகையில் கோகுலாஷ்டமி என்பது யசோதை தினம். அம்மாக்கள் நாள். அப்படியொரு தாய், அப்படியொரு பிள்ளை. மானாமதுரையில் கோகுலாஷ்டமியன்று ஒயிலாட்டம். ஏதோ ஒரு கிராமத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஆடிக்கொண்டிருந்தோம். அம்மா அனுப்பிசாங்கன்னு ஒரு சிப்பந்தி வந்து பை நிறைய வெல்லச் சீடை, முருக்கு, அப்பம் கொடுத்துவிட்டுப் போனார். அப்படியொரு அன்னை. அப்படியொரு கோகுலாஷ்டமி. கோகுலாஷ்டமி என்றால் அந்த சின்னச் சின்ன பாதங்களை மறக்க முடியுமா? கண்ணன் அல்லால் சரன் இல்லை கண்டீர் என்பதைச் சுட்டும் வண்ணம் சின்னப் பாதங்கள்.

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போலெங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரே!
ஒண்ணுதலீர்! வந்து காணீரே!

(பெரியாழ்வார் திருமொழி)

பிருந்தாவனம், கண்ணன் பிறப்பு எல்லாமே சுந்தந்திரக் குறியீடுகள். கண்ணன் பாலகன். ஆயின் அவனைக் கொல்ல எத்தனை சதிகள்! ஆனால் மாயக்கண்ணன் எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் தப்பித்து ஆயர்பாடி மக்களைக் காக்கிறான். இந்தியா என்ற சுதந்திரக் குழந்தைக்கும் தினந்தோரும் ஆபத்துக்கள். ஆயின் தெய்வ பலத்தாலும், ஒற்றுமை உணர்வாலும் இந்தியா வன்முறை ஒழித்து செம்மையாய் உயர்ந்து நிற்கும்.

முடிந்தால் ஒரு நடை சிஃபி டாட் காம் போய் சுந்தந்திர தின சிறப்பிதழைக் காணுங்கள்.

வாழ்க எம் கண்ணன்!
வாழ்க இந்திய சுதந்திரம்!

4 பின்னூட்டங்கள்:

Anitha Pavankumar 8/15/2006 01:16:00 PM

nalaikkuthane gokulasthami

நா.கண்ணன் 8/15/2006 01:24:00 PM

தமிழ் நாட்காட்டி இன்று என்று சொல்கிறது!

விட்டம் கழிந்த எட்டாம் நாள் கிட்டன் பிறந்தநாள் எனும் முதுமொழிப்படி, நாளை 16ம் நாள்.

துளசி கோபால் 8/15/2006 01:37:00 PM

இன்னிக்கு சப்தமி. நம்ம காலண்டர்படி நாளைக்குத்தான் அஷ்டமி. அதுதான் இன்னிக்கு, சுதந்திரத்தினத்துக்குத் தனிப்பதிவு
போட்டாச்சே. இனிமேல் நாளைக்குத்தான் 'கண்ணனுக்கு'ப் புதுப் பதிவு:-))))
( இன்னிக்கு இன்னும் முறுக்குவேற செய்யலை)

அது என்ன இன்னிக்கு 16ஆம் நாள்? எதுக்கு?

எங்கள் அன்பான சுதந்திரதினம் & கோகுலாஷ்டமி வாழ்த்து(க்)கள்.

நா.கண்ணன் 8/15/2006 02:02:00 PM

துளசி:

கோகுலாஷ்டமின்னா அம்மா நாள்ன்னு நான் சொன்னது எவ்வளவு சரி! இன்னும் முறுக்கு செய்யலைங்கற கவலை இருக்கு பாருங்கோ!

இன்னிக்கி காலையிலே முத்தமிழ் மடலாடற்குழு விஜி, கண்ணன் பிறந்ததின வாழ்த்து சொன்னாங்க. அப்புறம் சிஃபி காலண்டர் பார்த்தேன். இன்னக்கி கோகுலாஷ்டமின்னு போட்டிருந்தது!

அப்புறம் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் அரட்டைக்கு வந்தார். அவர் பிரதமை...சப்தமி..அஷ்டமி கணக்கு சொல்லி நாளை என்று காட்டினார். நமக்கு நாட்காட்டியை விட பஞ்சாங்கமே முக்கியம். எனவே நாளைதான் கோகுலாஷ்டமி. என்ன கொரியாவிலே இன்னக்கே பொறந்துட்டான்னு வச்சுப்போம் :-))