வைகைப் புயல் வடிவேலும், வைகைக்கரைக் கண்னனும்

எதுக்கு கனவு வருதுன்னு தெரியலை. வாழ்விலே மூணுல இரண்டு பங்கு தூங்கிக் கழிக்கிறோம். தூங்குகிற எல்லா ஜீவனும் கனவும் காணுது!

கனவு மூளையின் பிறட்சி..அது இயற்கையின் ஒரு இயல்பான செயல் என்று சொல்வாருண்டு. இல்லை, கனவுகளுக்குச் சிறப்புப் பொருளுண்டு என்று அர்த்தம் புகட்டுவாருண்டு.

எல்லாவற்றிற்கும் பொருளுண்டு என்று காண்பதில் இன்பம் பயப்பவன் நான். அன்னையின் அன்பிற்குப் பொருளில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? சும்மா ஜீன்கள் தங்களை பரப்பிக்கொள்ள மனித உடலைக் காவு வாங்குகிறது என்பது போன்ற வரட்டு சித்தாந்தங்கள் இப்போது ருசிப்பதில்லை!

சரி..இவ்வளவும் எதற்கு?

நேற்று 'கோக்குமாக்கா' ஒரு கனவு!

வைகைப் புயல் வடிவேலு நேற்று கனவில் வந்தார். ஒரு விருந்து அதில் வெள்ளைக்காரர்களும் கலந்து கொண்டனர். வடிவேலும் வந்திருந்தார். திடீரென்று, அவர் வெள்ளைக்காரர்கள் இருக்கும் டேபிளுக்கு வந்து 'முதல்ல இவங்களை பல்லு விளக்கச் சொல்லுங்கைய்யான்னு' அவருக்கே உரிய ஸ்டைலில் சொன்னார். கொல்லென்று தமிழ் தெரிந்த எல்லோரும் சிரித்துவிட்டனர். இந்த வெள்ளைகள் அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தனர். அப்புறம் அப்படியே என் டேபிளுக்கு வந்தார். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன்!

ரொம்ப ஆச்சர்யாமா இல்லை? இப்படிப் பிரபலங்கள் சில நேரம் என் கனவில் வருவதுண்டு. இந்திரா காந்தி வந்திருக்கிறார், ராஜீவ் வந்திருக்கிறார். இப்போ வடிவேலு!

இம்சை அரசன் 23ம் புலிகேசி பற்றி இங்கு எழுத வேண்டுமென்று எண்ணியதுண்டு. அதற்காகவா? இப்படி? மனது எப்படியெல்லாம் கற்பனை செய்கிறது பாருங்கள்!! காட்சி உருவாக்கும், இயக்கம், ஜோடனைகள், கதை, உரையாடல் இன்ன பிற..

இத்தனைக்கும் அந்தப் படம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. வடிவேலுவின் திறமைக்குக் குறைவில்லை. இருந்தாலும் கொஞ்சம் 'கொச்சை' யாகப் பட்டது. தமிழ்நாட்டு ஸ்டாண்டர்ட்டுக்கு எவ்வளவோ தேவலை என்றாலும்! சில இடங்களில்தான் மனம் திறந்து சிரிக்க முடிந்தது!

ஆனாலும் ஒருமுறை பார்க்கலாம்.

6 பின்னூட்டங்கள்:

meena 8/26/2006 12:09:00 AM

\\இம்சை அரசன் 23ம் புலிகேசி பற்றி இங்கு எழுத வேண்டுமென்று எண்ணியதுண்டு. அதற்காகவா? இப்படி? //

இருக்கலாம்.

\\இத்தனைக்கும் அந்தப் படம் எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. //

பிடிக்காவிட்டாலும் நம்மை அறியாமலேயே அது மனதில் பதிந்து கனவாக வரலாமே?

(அதோடு ஏற்கனவே இந்திரா ,ராஜீவ்,இப்போ வடிவேலு என்று வேறு சொல்கிறீர்களே? :)))))

நா.கண்ணன் 8/26/2006 09:18:00 AM

இதில் (கனவு) சில அம்சங்கள் சுவாரசியமாக இருக்கின்றன.

1. இம்சை அரசனில் வெள்ளையர்களுடன் உறவாடும் காட்சிகள் வரும். அது என் கனவிலும் வருகிறது. நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.

2. இந்திராகாந்தி எனக்குப் பிடித்த பிரதமர். ராஜீவ் மீது இரக்கம் உண்டு. பாவம் அவர் இந்தியாவின் 'அரவான்'.

இப்படி மனதில் தோன்றும் எண்ணங்கள் அத்தோடு நின்றுவிடாமல் பின் கனவாகவும் வருவது ஆச்சர்யமாக இருக்கிறது. என்ன ஜோடனை, என்ன காட்சிப் பின்புலம் :-) ஆனால், நம்மைப் பாதித்த எல்லோரும் கனவில் வருவது இல்லை! கனவுகளுக்கு என்ன காரணமென்றே தெரியவில்லை.

'வாரணம் ஆயிரம் வலம்வரக்' கனாக் கண்ட அக்கோதையின் கனவு ஒரு வகையில் பலிக்கிறது. ஆனால் அங்கும் கனவில் ஜோடனை, காட்சி அமைப்பு அற்புதமாக உள்ளது.

கனவுகள் இல்லையெனில் வாழ்க்கை ரொம்ப போரடிக்கும் :-)

Vasudevan Letchumanan 9/09/2006 07:42:00 PM

எப்போதோ படித்த ஞாபகம், டாக்டர்,
"..every dream is an unopenned letter..!" நம் பெயருக்குக் கடிதம் வந்தால் அதைத் திறந்து படிக்காமல் இருப்போமா..?

உதாரணத்திற்கு, வடிவேலு தங்கள் கனவில் வந்ததை 23-ஆம் புலிகேசியுடன் தொடர்பு படுத்தலாம்- ஏரணமாக.

வேறு எப்படிப் பார்க்கலாம்...
உங்களுக்கு ஏதோ 'வடிவான' செய்தி 'வேலுடன்' வந்திருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..!

நீங்கள் வைணவத்தைப் போற்றுபவராக இருந்தால் என்ன..கௌமாரத்துடன் கைக்குலுக்கலாமே!

(சும்மா..தமாசுக்கு)

நா.கண்ணன் 9/09/2006 08:08:00 PM

"'வடிவான' செய்தி 'வேலுடன்' வந்திருப்பதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்..!>>

சுவாரசியமாக இருக்கிறது! கனவே ஒரு படிமம். அந்தப் படிமத்திலும் இன்னொரு படிமம்! வேல் என்பது அஞ்ஞானத்தைப் போக்கி அருள் ஒளி தருவது, அதுவும் வடிவாக (முருகு என்றால் வடிவு என்றுதானே பொருள்). இதே பொருளில் முன்பொருமுறை வேறொரு கனவு வந்தது. வடிவேலுக்குள் இப்படியொரு புதையல் இருப்பதைக் காணவில்லை. நன்றி நண்பரே.

நான் கொஞ்சம் கண்ணதாசன் வகையறா. ஆரம்பதில் எல்லாத் தெய்வ வழிபாடு, இடையில் நாத்திகம், இப்போது 'கண்ணதாசன்'. அவன் அருளால் அவன் தாள் வணங்குவதே சிறப்பு.

Anonymous 11/29/2006 10:15:00 PM

சென்ற வாரம் என் கனவில் கலைஞர் கருணாநிதி வந்தார். என்ன காரணம் என்று புரியவில்லை. ஒரு வேலை அரசியலில் இறங்குவேநோ என்னவோ!!!

செந்தில் அழகு பெ., ரியாத், சௌதி அரபியா.

நா.கண்ணன் 11/29/2006 10:24:00 PM

செந்தில்:

முன்பொருமுறை கலைஞர் கனவில் வந்தார். ஆனால்! இளமைக் காலத்தில், ஆட்சியை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்ற வெறியில் இருந்த காலம். வன்முறைச் செயலில் அவர் ஈடுபடுவதைக் கனவில் கண்டேன்.