படம் பார்த்து கதை சொல் - 5


கருடன், தன் இயற்கை சூழலில்!


இதுவொரு எதிரொலி. 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா! திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்' என்பார்கள். அது போல் திரு.கண்ணபிரான் நியூயார்க்கில் உட்கார்ந்து கொண்டு திருமலை உற்சவத்தைக் கண் முன் கொண்டு வருகிறார். இன்று கருடசேவை. மாமனும், மருமகனும் பறவையை வாகனமாகக் கொண்டவர்கள். இரண்டு பெண்டாட்டிக்காரர்கள். கள்ளக்காதலி உடையவர்கள். அப்படியே Mirror Image! அதனால்தான், அருணகிரி பேசாமல் முருகனை 'பெருமாளே! பெருமாளே!!' என்றே பாடிவிடுகிறார்.

முருகன் தேவசேநாதிபதி. நெற்றிக்கண்ணிலிருந்து உதித்தவன். எனவே காய் சினம் கொண்டவன். நம்ம ஆளு பெருமாளோ, என்.டி.ராமாராவ் மாதிரி எப்போதும் ஒரு புன்னகையுடன், நெஞ்சில் மிதிப்பவன் காலைப்பிடித்து விடுபவர். அப்படித்தானே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்? அதுதான் தப்பு. நம்மாளுக்கு 'காய்சின வேந்தன்' என்ற பெயரே உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? திருப்புளிங்குடி பெருமாள்தான் அவர். அவர் காய் சின வேந்தர் மட்டுமல்ல, அவர் ஊர்கிற ஊர்தி? அதுவும் காய்சினப்பறவை! கொத்திப்புரட்டிவிடும்! கையில் இருக்கும் சக்கரம்? அதுவும் காய்சின ஆழி!! ஆத்தாடி, ரொம்ப கோபக்கார சாமிதான் போலருக்கு! ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரத்தில் 'மகாவக்ரம், மகாகோபம்' என்று பல 'மகா' போட்டு வர்ணிக்கிறது. நரசிம்மரின் மடியில் தாயாரும், பிள்ளையும் (பிரகலாதன்) இருப்பதால் அடங்கியிருக்கிறார். இல்லையெனில், எந்தத் தூண் வெடிக்குமோ? எந்த உயிர் மடியுமோ!!

இதோ நம் நெஞ்சுக்கினிய சடகோபன் காய்சின வேந்தன் பற்றிப்பாடும் பாசுரம்:

காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்
மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங்
கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே! கதிர்முடி யானே.
கலிவயல் திருபுளிங் குடியாய்,
காய்சின ஆழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் இடர்கடி வானே. 9.2.6

கருடன் சாமானியப்பட்டவனில்லை. பல நேரங்களில் பெருமாளுக்கு வேலையே கொடுக்காமல் துஷ்டநிக்ரகத்தில் தானே எல்லாவற்றையும் முடித்துவிடுவார். பறவைகளில் மிக எழிலானது, கம்பீரமானது கருடன். கருடன் பறக்கின்ற உயரத்தில் வேறு எந்தப்பறவையும் பறப்பதில்லை. அதனால்தான் தெய்வங்களில் பெரியவரான பெருமாளுக்கு, பறவைகளில் பெரியவரான கருடன்! கருடனுக்கு வேகமுமுண்டு, நிதானமமுண்டு. கோபமும்முண்டு, அழகுமுண்டு.

அவர்மீது பெருமாள் வருவது ஒரு பொன்மலைமீது கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். என்ன சேவை! அடடா!

ஒரு காலத்தில் மாலி, சுமாலி (ஆப்பிரிக்க பெயர் போலில்லை?) என்று இரண்டு அரக்கர்கள் கவர்பட (என்ன usuage இது?) கனன்று, பயப்படாமல் முன்நின்ற (இப்போதுள்ள பயந்தாங்கொளி புஷ் போலல்லாமல்) காய்சினவேந்தன்! கதிர்முடியான். பொன் போன்று ஜொலிக்கின்ற முடியுடையவன். இவனை 'மின்னுருவம்' என்றே திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

கலி வயல் = மிக செழுமையான வயல்வெளிகளுள்ள திருப்புளிங்குடியில் உறைபவனே!

கோபாக்கினியான ஆழி (சக்கரம்), சங்கு, வாள், வில், தண்டு, கத்தி போன்ற ஆயுதங்களை தரித்திருப்பவனே!

சக்கரம் - பூமராங். அனுப்பினால் போய் ஆளை முடித்துவிட்டு விட்ட கைக்கு வந்துவிடும்.
சங்கு - குருக்ஷேத்திரத்தில் கண்ணன் சங்கை ஊதிய மாத்திரத்தில் கிலியில் பாதி சேனை ஒண்ணுக்கு போய் விட்டதாம்!
வாள் - கிட்டக்க வந்தால் வாள், வெட்ட,
கதை - எலும்பை முறிக்க (இப்போது யாரும் கதை பயன்படுத்துவதில்லை. பீம சேனன் துரியோதனன் தொடையை கதை வைத்து பிளந்தான்.
வில் - ராமரின் வில் என்னென்ன செய்யும் என்று கம்பனிடம் கேட்க வேண்டும்.

ரொம்ப violent-ஆன சாமியா இருப்பார் போலருக்கே! ஹும்! இவையெல்லாம் எதற்கு என்று கடைசி வரியில் சொல்லிவிடுகிறார் நம்மாழ்வார். 'இடர் களைய!' என்று. நம்மை போன்ற பக்தர்களுக்கு ஒரு திறமையும் கிடையாது. ஒரு கலாட்டா என்றால் காத தூரம் ஓடுபவர்கள். சண்டைக்காரன் வரும் போது எதிர்த்து நிற்க ஒரு தைர்யசாலியாவது வேண்டாமா? அதனால் நம் திருமால், எம் பெருமாள் பஞ்சாயுதங்களும் ஏந்தி எம் இடர் களைய 'காய்சின வேந்தனாக' இருக்கிறான். அவன் காய்தல் நம்மை நோக்கி அல்ல. வஞ்சகரையும், கொடுங்கோன்மையரையும் குறித்துத்தான். 'அந்திக்காய், காய்..இத்திக்காய், காயாதே!' என்று பாடவேண்டிய அவசியமே இல்லாமல் அவன் காய்தல் எதிரிகளுக்கே!

கருடசேவை மிக, மிக அரிதானது! காய்சினப் புள்-பெரிய திருவடியின் கருணைப் பார்வையிலும், காய்சின ஆழியின் பாதுகாப்பிலும், காய்சின வேந்தனின் வெது, வெதுப்பிலும் இன்றைய பொழுது இனிமையாய் அமைய எம் வாழ்த்துக்கள்.

படம் பார்த்து கதை சொல் - 4பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

பறவைகள் சுதந்திரமானவை. எல்லை இல்லாதவை. வலசை என்ற யாத்திரையில் கண்டம் விட்டுக் கண்டம் பறப்பவை (non-stop flights!). அவை அழகானவை, வலுவானவை, இலகுவானவை. பறவைகளுடன் எனக்கு அதிகம் பழக்கம் கிடையாது. கிராமத்து வாழ்வில் கிளிகள் மாமரத்தில் உட்கார்ந்திருப்பது பிடிக்கும். சிவன் கோயில் மதிலில் நிறைய மயில்கள் வந்து போகும். மயில்கள் ராஜ பறவைகள். கம்பீரமானவை, மிடுக்கானவை (முருகா! சரியான தேர்வு!) மதில் சுவரில் புறாவிற்கென்று பொந்து அமைத்திருப்பார்கள். எப்போது பார்த்தாலும் 'உக்கும், உக்கும்' என்று ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும். குட்டிக்குருவி வேடிக்கையானவை. தொப்பை உள்ள சிறு வாண்டுகள் போல அவை தொப்பையுடன் நடமாடுவது வேடிக்கையாய் இருக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலியா போயிருந்த போது வித்தியாசமான, மிக அழகான, பெரிய கிளிகளைப் பார்த்தேன். கூண்டில் இல்லை. சுதந்திரமாக வந்து போயின. மனித உலகில் பிற உயிரினங்களுக்கு அதிகம் இடமில்லை. அவன் வாழ்வு ஒரு யந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவன் நினைப்பதைவிட பறவைகள் புத்திசாலியானவை, அழகானவை, வலுவானவை. இவன் கண்ட அறிவியலை நாள் தோறும் பயன்படுத்துபவை.

உதாரணமாக, ஏரிக்கரையில் உட்கார்ந்து கொண்டு விண்ணைப் பார்த்தால் நீண்ட வரிசையில் பறவைகள் பறந்து செல்லும். அவற்றில் ஒன்று முன் செல்லும். மற்றவை ஒரு அம்பு போல் தொடரும். அம்பு கிழிக்கக்கூடியது. காற்றை கிழித்துக் கொண்டு செல்ல இந்த வியூகமே மிகச் சிறந்தது என்பதை எங்கும் போய் aerodynamics பாடங்கள் கற்றுக் கொள்ளாமல் செயல்படுத்துபவை.

இந்தப் படத்தில் வேடிக்கை என்னவெனில், ஸ்விஸ் நாட்டுக்காரர் மிக இலகுவான விமானத்தில் பறக்கிறார். இப்பறவைகள் அதை வேடிக்கை காண்பது போல் மேலே பறக்கின்றன. இந்த விமானமும் ஒரு பறவை என்று அவை கருதியிருக்கலாம். ஒருவகையில் இது மானுட வெற்றி. ஏனெனில் 'பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்!' என்பது தெளிவு. இந்த விமானத்தைப் பறவை என்று பறவைகள் சொல்வதே சாலப் பொருந்தும்.

பறவைகளுக்கு இன்னொரு பழக்கமுண்டு. முட்டை வெடிக்கும் போது, யார் முகத்தைப் பார்க்கிறதோ அதையே உறவு என்று கொள்ளும். பெரும்பாலும் தாய் பறவைதான் முட்டை பொறிக்கும் போது இருப்பதால் தாயைத் தொடரும் சேயாக அது வாழும். சில நேரங்களில் முட்டை பொறிக்கும் போது மனிதர்கள் தென்படுவதுண்டு. பின் அவர்களையே தொடரும். இதை முதன் முதலில் ஒரு ஜெர்மன் விஞ்ஞானி உலகிற்குக் காண்பித்தார். பின்னால் வால்ட் டிஸ்னி கார்ட்டூனில் அதிகம் பயன்படுத்தப்பட்டது! இப்படத்தில், இயல்பாக இப்பறவைகள் சின்ன விமானத்தை ஒரு முதன்மைப் பறவையாக (leading bird) எடுத்துக்கொண்டு பறப்பது அழகு.

Glider என்று சொல்லக்கூடிய விமானத்தில் நானும், எனது பெண்ணும் ஸ்விஸ் நாட்டில் பறந்திருக்கிறோம். படங்களில் பார்க்கும் போது இருக்கிற மகிழ்ச்சி நேரில் இல்லை. காரணம், சின்ன விமானம், ஒரே இரைச்சல், ஆட்டம். நான் தரையில் இருக்கவே விரும்புகிறேன். ஆயினும் கனவுகளில் பறக்கிறேன்.

கனவில் தொடரும் இனப்படுகொலைகள்

அதிகாலைக் கனவு பலிக்கும் என்பார்கள். இன்று அதிகாலை, நான் இலங்கையில் இருக்கிறேன். சிங்கள இராணுவம் தமிழ்க் கிராமத்தைச் சூழ்ந்து விட்டது. இங்கும் அங்கும் அலையும் கூட்டம். ஆமிக்காரன் இதோ வரான், இங்கே வரான் என்று ஒரே பீதி. நானும் திக்குத்தெரியாமல் அலைகிறேன். ஒரு தெருவில் பெரிய கோட்டைக்கான மதில்கள் தெரிகின்றன. முறையான படிகள் இல்லையெனினும் படி போன்ற அமைப்பொன்றைக் காண்கிறேன். அதில் ஏறி உள்ளே பார்த்தால் இராணுவம் மார்ச்சில் நிற்கிறது. கீழே இருப்பவர்களிடம் சொல்கிறேன். ஆமிக்காரன் உள்ளே இருக்கான் என்று. தெருவைக் கடக்கலாமென்றால் தெருவில் டாங்குகளின் நடமாட்டம். உயிர்ப்பதட்டம் உள்ளே, வெளியே. எங்கு செல்வது? எப்படி தப்பிப்பது? வழி தெரியாத ஒரு இம்சை. முழித்துவிட்டேன். மீண்டும் உறங்கிய போது இக்கனவே தொடர்ந்தது.

நான் இலங்கை போனதில்லை. அது என்ன இடமென்றும் தெரியவில்லை. ஆனால் உள் மனது இலங்கை என்று கண்டு கொள்கிறது. அக்காட்சியுடன் இயைந்து மனது பட்டபாடு! ஆச்சர்யம். கனவுகள் என்பது 'கூடு விட்டுக் கூடு' பாய்தல் என்று புரிந்தது. எனது குடியுரிமை அடையாளங்கள் கனவிலும் நினைவிற்கு வந்தாலும், தமிழன் என்பது தெளிவாக உணரப்பட்டதால் ஆமிக்காரன் சுட்டுவிடுவான் என்ற கொலைப்பயம் கனவு முழுவதும் இருந்தது.

என்னைப் பொருத்தவரை விடிந்த போது அது கெட்ட கனவு. ஆனால், அங்குள்ளோர்க்கு அது கனவில்லை. நிஜம்.

என்ன வாழ்க்கை இது! என்று மனிதன் இக்கொலை வெறியிலிருந்து மீண்டு நாகரீகமடைவான்.

இப்பதிவு எழுதும் போதுகூட அக்கனவின் அதிர்வுகளை உணர்கிறேன்!

[இது இரண்டாவதுமுறை இலங்கைப் பயணம். முதல்முறை அநுராதபுரத்திற்கு பண்டொருநாள் (சரித்திர காலம்) சென்றேன். எப்படி கனவு காலத்தைக் கணிக்கிறது, இடத்தை உணர்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஈழத்து நண்பர்களுடன் போர்க்கால நடவடிக்கைகள் பற்றிப் பேசியது ஒரு புறக்காரணம். உள் மனது சொல்கிறது, இதற்கு இன்னும் ஆழமாக காரணங்கள் உண்டு என்று]

படம் பார்த்து கதை சொல் - 3மிக அழகான படம். மனிதனுக்கும் பிற உயிர்களுக்குமுள்ள அடிப்படை அன்பைக்காட்டும் படம். நமக்கெல்லாம் நாயிடமுள்ள உறவுதான் தெரியும். ஆனால் மேலை நாட்டில் பன்றியிடமுள்ள உறவு போற்றப்படுகிறது.

பன்றி என்ற சொல்லே இழி சொல்லாகிவிட்டது தமிழகத்தில். காட்டில் இருந்து கிழங்கு தின்று கொண்டிருந்த பன்றியை வீட்டிற்குக் கொண்டு வந்து சரியாக உணவிடாதாலால் அது பாட்டுக்கு கட்டதைத் தின்று இன்று இழி பிராணியாகிவிட்டது. காட்டுப்பன்றி மிக உக்கிரமான விலங்கு. கிட்டே சென்றுவிட முடியாது. சில நேரங்களில் சிறுத்தை போன்ற விலங்குகளை புறமுதுகிட்டு ஓடச் செய்துவிடும்.

பன்றி மண்ணைக் குடைந்து, குடைந்து கிழங்கு எடுப்பதால் அது மண்ணளந்தான் குறியீடாகிவிட்டது. பன்றி என்பது பண்டைய இந்தியாவில் லக்ஷ்மியின் குறியீடாக, வளத்தின் குறியீடாக இருந்திருக்கிறது. இன்றும் கூட அதே பொருளில் சீனா, கொரியா போன்ற நாடுகளில் பன்றி ஒரு உயர்ந்த இடத்திலுள்ளது.

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே.

என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில். ஆண்டாளுக்கே உரிய கிண்டலும், உரிமையும் சொல்லும் பாடலது. பூமிப்பிராட்டி திருமாலின் மனைவி. எனவே திருமால் பன்றி உருவில் வந்து அவளிடம் அடிக்கடி உறவு கொள்கிறான் (மானமில்லாமல் :-) அல்லது பன்றி நிறைய குட்டி போட்டுவிட்டு, மானமில்லாமல் முலை தெரிய பால் கொடுத்துக் கொண்டிருக்கும். என்ன, உயர்வு நவிற்சி இது?

லலிதா, பத்மினி, ராகினி


பத்மினி


சென்னை வந்திருந்த பத்மினி 74 வயதில் காலமாகியிருக்கிறார்.

விவரம் தெரியாத வயதில் டூரிங்க் டாக்கீஸீல் பார்த்தது முதலில். ஏனோ எனக்கு பத்மினியை விட லலிதாவைத்தான் பிடிக்கும். ராகினியைப் பிடிக்காது. பத்மினி அழகு திகட்டும் அழகு! ரவிவர்மா ஓவியம் போல, கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பம் போல, தாஜ்மகால் போல், குறை சொல்ல முடியாத அழகு. அந்தக் காலத்தில் நடித்த நடிகைகள் போல தெளிவாகத் தமிழ் பேசக் கூடியவர். சிவாஜிக்கு சவால் கொடுத்து நடிக்கக் கூடிய அழகி. இப்போதுள்ள நடிகைகளெல்லாம் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும். ஒரு திறமையும் இல்லாமல், வெள்ளைத் தோலும், குறைந்த இடையும், பரந்த மார்பகமும், தடித்த தொடையும் இருந்துவிட்டால் நடிகை என்று வந்து விடுகிறார்கள். மேலை நாட்டில் போர்னோ நடிகைகள் கூட இவர்களை விட அழகாக இருக்கிறார்கள். ஏதோ தமிழக போறாத காலம், தமிழ் பேசி, நடிக்கத் தெரிந்தும், பெரிய பாத்திரங்களை சவாலாக எடுத்துக் கொண்டும் நடிக்கக் கூடிய நடிகைகளெல்லாம் மறைந்து கொண்டு வருகிறார்கள். பத்மினியை பவித்திரமான பாத்திரங்களில் மட்டுமே பார்த்திருந்த இளவயது நான், மேரா நாம் ஜோக்கரில் கிழிந்த ஜாக்கெட்டில் அவர் மார்பகம் பார்த்தபின், ஏனோ ஆர்வம் குறைந்து விட்டது. இது அவர் குறை அல்ல. மீடியா என் மீது ஏற்படுத்தியிருந்த தாக்கம். வடக்கு அப்போது தெற்கைப் பயன்படுத்திய காலம். இப்போ தெற்கு அதற்கு பழி வாங்கிக்கொண்டிருக்கிறது! ஆனால், ஒரு வித்தியாசம் பத்மினி, ஹேமமாலினி, வைஜெயந்திமாலா போன்றோர் ஹிந்தியும் அழகாகப் பேசக்கூடியவர்கள். சிம்ரன் மாதிரி, எனக்கு டமில் தெரியாது! என்று சொல்லிக் கொண்டு குப்பை கொட்டியவர்கள் அல்ல!

பத்மினியுடன் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. சிவாஜிக்கு 'பப்பி' மீது ஒரு கண்தான். ஆனாலும் அவர் தேவர், இவர் மேனன். சரிப்பட்டு வராது (இது பத்மினி சொன்னது).

இரண்டு வாரம் முன்தான், தில்லானா மோகனாம்பாள் பார்த்தேன். என்ன அசத்தலான நடிப்பு. பதிமினியின் சௌந்தர்யம் பார்க்க பழைய படங்கள் பார்க்க வேண்டும் (எம்.ஜி.யார் பாவடை கட்டி நடிக்கும் படங்கள் :-).

பத்மினி என்றால் சம்பூர்ண ராமாயணம்தான் ஞாபகம் வருகிறது. சீதை என்றால் அவள் 'பத்மினி' மாதிரிதான் இருந்திருப்பாள். லக்ஷ்மி களை என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டு பத்மினி.

காலம் எல்லாவற்றையும் கொண்டு போய் விடுகிறது. திருவாங்கூர் சகோதரிகள் ஒருவரும் இல்லை. நினைவுகள் மட்டும்...

படம் பார்த்து கதை சொல் - 2பறவைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் :-)

பெரும்பாலான பறவைகள் கூச்ச சுபாவமுள்ளவை. மனிதனுக்கு 10 அடி தள்ளியே இருக்கும். இங்கு நான் காணும் கடற்கொக்கு நான் வருகிறேன் என்றால் 100 அடிக்கு முன்னாலேயே கூக்குரலுடன் பறந்துவிடும். இரவில் போகும் போது அது பாட்டிற்கு திடு திடுமென்று அடிக்குரலில் கூக்குரலிட்டு பறக்கும் போது பதற அடித்துவிடும் :-)

ஆனால், சில பறவைகள் மனிதருடன் கூடிக்குலாவுவதுண்டு. இந்த மைனா, ஒரு சீன மைனா. இந்த சீனாக்காரர் சிகரெட் குடிப்பதைப் பார்த்துவிட்டு, மடியில் அழகாக உட்கார்ந்து கொண்டு (அதன் நகத்தைப் பாருங்கள்!!) சிகரெட்டைப் பிடுங்கி தன் வாயில் வைத்துக் கொள்கிறது. போன ஜென்மத்தில் அவரின் மனைவியோ, பெண்ணே? யார் கண்டது? இப்படி அக்கறையாக சிகரெட் புகைக்க விடாமல் பிடுங்குகிறது!

படம் பார்த்து கதை சொல் - 1இந்தியர்களுக்கு யானை பிடிக்கும் என்பது இத்தாலியனுக்கு ஒயின் பிடிக்கும் என்று சொல்வது போல்! யானை தெய்வமாக நிற்கிறது; யானை தெய்வ வழிபாடு நடத்துனராக உள்ளது; யானை தெருவில் போவோருக்கு வேடிக்கைப் பொருளாக, சர்க்கஸ் கோமாளியாக உள்ளது; ஒரு காலத்தில் குற்றவாளிகளின் தலையை சதுர் தேங்காய் போல் உடைக்கவும், போரில் கோட்டை, கொத்தளங்கள் கதவை உடைக்கவும் பயன்பட்டிருக்கிறது.

யானை தெய்வமாக நிற்கும் வரை யானைக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், மேற்சொன்ன பிற பயன்பாடுகளில் யானைக்கு அவஸ்தையே!

மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த காலத்தில் யானை, சிங்கம் இவைகளில் ஆய்வு செய்த ஒரு பேராசிரியர் அங்கு வந்து சொற்பொழிகள் செய்தார். இவை தனது சுயமான இருப்பிடத்தில் எப்படி வாழ்கின்றன என்பது பற்றி நிறையச் சொன்னார். அப்போது, இப்போதுள்ளது போல் வன விலங்குகள் பற்றிய விரிவான படங்கள் பொதுச்சந்தைக்கு வரவில்லை.

யானைக்கு தாய் தந்தை, பாட்டி, அத்தை, சகோதர உறவுகள் பற்றிய தெளிவு உண்டு. ஏறக்குறைய நாம் வாழ்வது போல், பல நேரங்களில் நம்மை விட சிறப்பாக இவ்வுறவுகளை மதித்து வாழ்கின்றன. இவைகளைப் பிடித்து, அதன் குடும்பத்தை விட்டுப் பிரித்து, அனாதை ஆக்கிவிட்டு, அதைக் கோயிலில் வைத்துக் கும்பிட்டாலும் குற்றம் குற்றமே! கோயிலில், காற்சங்கிலியுடன் தலையை ஆட்டி, ஆட்டி நிற்கும் யானை சோகத்தில், வேதனையில் உள்ளது என்பதை அடுத்த முறை பார்க்கும் போது புரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல, இந்த அவஸ்தை போதாது என்று இதற்கு வடகலை நாமம் போடலாமா? தென்கலை நாமம் போடலாமா என்று கோர்ட்டுக்குப் போகும் பிரகிருதிகளை என்ன சொல்வது? யானையைக் கேட்டால், 'நரி வலப்ப்பக்கமா போனால் என்ன, இடப்பக்கமா போனால் என்ன? மேலே விழுந்து கடிக்காமல் போனால் போதும்!' என்பது போலவே எண்ணும்.

யானையைப் பார்க்க வேண்டுமெனில் நாம் காட்டிற்குப் போகவேண்டுமே தவிர, அதன் குடும்பங்களைப் பிரிக்கக் கூடாது. இந்தக் குட்டி யானையின் பயம் இப்போது புரிகிறதா?

உந்து பொருள் முந்திவர

உந்து பொருள் முந்திவர,
வியத்தகு திட்டம் பொருள்பட
சிந்தனை தன் களை தவிர்கிறது!

தளையற்ற மனது வரம்பு தாண்டி
விரிந்து, வியாபித்து
எண் திசையும் எம்பிப்பரந்து
புதிய, பெரிய, அரிய உலகில்
கால் வைக்கிறது.

சோம்பிக்கிடந்த உட்பொறிகள்
தெளிவு பெற
சுருங்கிப்போன உயிர்த்திறன்
விழிப்புற
தன்முகம் புதிய பொலிவுடன்
சுய தரிசனமாக
நினைத்துப்பார்த்திராத
புதிய எல்லை விளிம்பில்
நிற்க நான் கண்டேன்!

பதஞ்சலியின் இச்சூத்திரத்தை மேற்கோள் காட்டி டாக்டர் அப்துல் கலாம் கொரியாவில் உரையாற்றினார்.

"When you are inspired by some great purpose, some extraordinary project, all your thoughts break their bounds. Your mind transcends limitations, your consciousness expands in every direction, and you find yourself in a new, great and wonderful world. Dormant forces, faculties and talents come alive, and you discover yourself to be a greater person by far than you ever dreamt yourself to be."

சுஃபி வெளிப்பாடு (இசை)

முஸ்லிம் சாதுக்களுக்குப் பெயர் சுஃபி. தனது இருப்பு 'ஆத்மா', உடல் ஒரு கருவி என்பதில் இவர்களுக்குத் தெளிவான கருத்துண்டு. ஆனால் உடலெனும் இப்பொறி அல்லது கருவி தனது தொடர்ந்த பயன்பாட்டால், அதுவே ஒருவரது 'சுயம்' என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது. இப்பொறியின் வல்லமையான செயலி 'எண்ணம் அல்லது சிந்தனை' என்பது. இச்சிந்தனை எனும் செயற்பாடு அடங்கும் போது 'சுயம்' இறைவனில் ஒடுங்குகிறது என்பதை அறிந்திருக்கும் சுஃபி சாதுக்கள், இச்சிந்தனையை அடக்க பல்வேறு வழிகள் கண்டனர். அவற்றுளொன்று வட்டச் சதுராட்டம் என்பது. நல்ல இசையுடன், திரும்பத் திரும்ப 'அல்லாஹு' எனும் மந்திரச் சொல்லுடன் ஆடும் போது சிந்தனை அடங்கி, உடலியக்கம் மறந்து போய் சுயம் இறைவனில் ஒடுங்குகிறது!இது துருக்கியில் மிகப்பிரபலம். மேலே உள்ள படம், Dervish எனப்படும் இச்சாதுக்கள் செய்யும் வட்டச் சதுராட்டத்தைக் காட்டுகிறது. நான் துருக்கி போயிருந்தபோது இஸ்தான்புல் போக முடியவில்லை. அங்குதான் இது பிரபலம். சுஃபி மாஸ்டர்கள் தொண்டர்களின் உடலைக் கத்தி கொண்டு கிழித்துவிட்டு அவர்களை மயக்கநிலைக்கு (trance) கொண்டுவந்துவிட்டு, சில மணி நேரம் கழித்து உடலில் ஒரு சிறு கீறல் கூட இல்லாத மாதிரி மீட்டுரு செய்யும் வித்தையை ஜெர்மன் தொலைக்காட்சியில் கண்டுள்ளேன்.

இவர்களின் அதி அற்புதமான இசை, சமீபத்தில் இந்தியா டுடேயில் கேட்கக் கிடைத்தது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்.இவ்விசையைக் கேட்டபின் தமிழ் சினிமாப்பாட்டு நினைவிற்கு வந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் இவ்விசையை நிறையப் பயன்படுத்தியிருக்கிறார் (தாஜ்மாகால் படத்தில் அச்சாக இதே இசை!). துருபத் இசைப் பழக்கமுண்டா? சுஃபி இசையில் துருபத் இருக்கிறது!

மனது அமைதிப்பட வேண்டுமெனில் இவ்விசை கேட்கலாம். கொஞ்சம் mystical-லாக வேற்று உலகில் சஞ்சரிக்க வேண்டுமா இவ்விசையைக் கேட்கலாம். ஜாஸ் இசை போல் குதியாட்டம் போட வேண்டுமா, அதுவும் இவ்விசையில் செய்யலாம். கடைசியில் கொட்டம் அடங்கினால் சரி!

ஜெர்மனி வந்திருந்த போது திரு.ஏ.எல்.சுப்பிரமணியத்திடம் தியானத்திற்கு இட்டுச் செல்லும் ராகமாக வாசியுங்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, 'கண்ணன்! தியானத்திற்கு இட்டுச் செல்லாத ராகமொன்று உண்டென்றால் அதைக் கண்டு சொல்லுங்கள்' என்றார். இது என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? முஸ்லிம் chanting அதர்வன வேதச் சாயலுடன் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

என்பது திருவாய்மொழி. அவனை 'அல்லா' என்று சொன்னாலும் 'கண்ணன்' என்று சொன்னாலும், தேடுபவரின் உள்ளத்துள் வேட்கை எழுப்பி தன்னைக் காணக் கிடத்துகிறான்.

வாழ்க சுஃபிமார்கள்!

'நீ ஒரு மகாகா' -ஒலிப்பத்தி

தூரத்து மணியோசை (ஒலிப்பத்தி 17)


'அமெரிக்காவில் இருந்தும் எப்படி அமெரிக்கன் ஆவது?' இதென்ன விநோதமான கேள்வியாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாட்டிலும் வேற்று நாட்டிலிருந்து வந்து வசிக்கும், வேலை பார்க்கும் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுள் பலருக்கு முறையான குடியுரிமையோ, பிற உரிமைகளோ கிடையாது. அவர்கள் வெறும் கூýகள். அவ்வளவே. குடியுரிமை பெற்றிருந்தாலும் பலருக்கு மரியாதை கிடையாது. இத்தகையோரைப் பற்றி, 'தி கொரியா ஹெரால்டு' என்ற பத்திரிகையில் ஜான் ததமானில் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அக்கட்டுரையில் அமெரிக்காவில் உள்ள செனட்டர் ஜார்ஜ் ஆலன் என்பவர், அமெரிக்காவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவரைப் பார்த்து, "நீ ஒரு மகாகா" என்று கூறுகிறார். மகாகா என்பது, ஓர் இழிசொல். நீ ஒரு அமெரிக்கன் இல்லை என்று பொருள் தரக்கூடியது. இது, பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர் ஏன் அப்படி கூறினார்?

அமெரிக்கர்களின் மனோபாவம் மட்டுமில்லை; மேற்கத்திய நாடுகளுள் பலவற்றிலும் இத்தகைய மனோபாவமே உள்ளது. இந்தியாவில் கூட வெளிநா ட்டவர்கள் மீது இத்தகைய உணர்வு உள்ளது. நிற பேதமும் இன பேதமும் இன்னும் 'படித்தவர்'களிடமும் உள்ளது. இதைப் பற்றித்தான் நா.கண்ணன், இங்கே விவரிக்கிறார்.

அவருடைய ஆழமான உரையை இங்கே கேளுங்கள்:

this is an audio post - click to play


நேர அளவு: 17.28 நிமிடங்கள்

'தி கொரியா ஹெரால்டு' பத்திரிகையில் வெளியான விவாதத்திற்கு உரிய ஆங்கிலக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

முதற்பதிவு: சிஃபி ஒலிப்பத்தி

மொழியும் உயிர்ப்பிரிகையும் (Language & Biodiversity)

உலகில் எவ்வளவுக்கெவ்வளவு வேறுபட்ட உயிரினங்கள் உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு ஆக்கையின் (life on earth) இருப்பு சாத்தியம். உயிர்ப்பிரிகை (biodiversity) சுருங்கும் போது வாழ்வும் சுருங்குகிறது. உலகெங்குமுள்ள மேம்பாட்டுத் திட்டங்களினால் (developmental activities) இந்த உயிர்ப்பிரிகை சோதனைக்கு உள்ளாகிறது. எனவே உயிர்ப்பிரிகை பாதுகாப்பு என்பது இப்போது உலகின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்று.

இந்த உயிர்ப்பிரிகைக்கும் மொழிக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா?

இருக்கிறது! அழிந்து வரும் மொழிகளுடன் அவ்வட்டார தாவர, விலங்குகள் பற்றிய அறிவும் அழிந்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு! உயிர்ப்பிரிகை அதிகமுள்ள இந்தோனீசியா, பப்புவா நியூ கினி போன்ற நாடுகளிலுள்ள பழம்குடிகளின் இருப்பும், அவர்கள் மொழியும் அழிந்து வருகிறது. இம்மொழிகள் அழியும் போது உயிர்ப்பிரிகை அறிவும் அழிந்துவிடுகிறது.

எனவே உயிர்ப்பிரிகை பாதுகாப்பும் மொழிப்பாதுகாப்பும் இணைந்தே செயல்படுகின்றன. அழிந்துவரும் மொழிகளைக் காக்க யுனெஸ்கோவில் பெரிய திட்டமே உள்ளது!


சங்க காலத்தமிழில் தமிழ் நாட்டின் தாவர, விலங்கினங்கள் பற்றிய பெயர்கள், ஞானம் மண்டிக்கிடக்கிறது. சங்கத்தமிழ் அறிந்தோர் கூட்டம் குறைந்தது மட்டுமல்ல, அந்த அறிவியல் ஞானம் குறைந்தது மட்டுமல்ல, அக்காலத்தில் தமிழகத்திலிருந்த மூலிகைகள், விலங்கினங்கள் போன்றவையும் குறைந்து விட்டன. இது பற்றித் தெளிவாக உணர வேண்டுமெனில் முதலில் சங்க கால தமிழ் நில அமைவின் குறிப்புகளை நவீன தமிழில் கொண்டு வந்து ஆராய வேண்டும். தமிழ் மண்ணின் உயிர்ப்பிரிகை என்னவென்று தமிழ் அறிந்தால்தானே உணர முடியும். பயோமெடிகல் ஆராச்சியாளர்கள் உச்சி பீடத்தில், நுனிப்புல் ஆங்கிலம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. நம்ம ஊர் தமிழ் பண்டிதருக்கோ தமிழ் பேசுவதனால், தமிழ் மட்டுமே அறிந்திருப்பதால் தாழ்வு மனப்பான்மை. இதை எப்படி நாம் நிவர்த்தி செய்யப் போகிறோம். வெறித்தனமான மொழிப்பற்றும், போலித்தனமான ஆங்கில மோகமும் தமிழ் மொழிக்கும் நல்லதல்ல, தமிழ் நாட்டின் உயிர்ப்பிரிகைக்கும் நல்லதல்ல. பல்கலைக் கழகங்களில் கிராம மக்கள் மீது அவர்களின் பாரம்பரிய அறிவின் மீது மதிப்பும் நம்பிக்கையும் வர வேண்டும். கிராம மக்களுக்கும் பல்கலைக் கழகங்கள் என்றால் என்ன? தன் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு செயற்பாட்டில் தன் பங்களிப்பு என்ன என்ற மதிப்பீடு வேண்டும்.

மொழிப்பாதுகாப்பு பற்றிப் பேசுவோர் வீட்டில் மாட்டிக் கொள்ள யுனெஸ்கோ ஒரு போஸ்டர் போட்டுள்ளது. அதை இங்கே வைத்துள்ளேன். அச்சடித்துக் கொள்ளுங்கள். அதில் தமிழ் மொழி உள்ளது (திருப்திதானே!)

நடுத்தெரு நாராயணர்கள்!

ரொம்ப நாளா எனக்கு விடை கிடைக்காத கேள்வி ஒண்ணு. யாருக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

எதுக்கு தமிழ் படக் காதலர்கள் நடு ரோட்டிலே ஆடறாங்க?

இதுலே யாருக்கு கிக்? கேமிரா மேனுக்கா? இயக்குநருக்கா? இல்லை பதறிப் போய் உட்கார்ந்திருப்பாங்கன்னு நினைக்கிற ரசிகர்களுக்கா?

சுவிஸ் நாட்டில் ஒருமுறை இப்படி வளைவான ரோட்டில் திரும்பும் போது நட்ட நடு ரோட்டில் ஹிந்திக் காதலர்கள். நல்ல வேளை ஏற்றியிருப்பேன். உயிர் தப்பியது ஹிந்தி தேவி புண்ணியம் (இப்போ ஹிந்தி எதிர்ப்புக் காலம் கூட கிடையாது, பெருமையாக சொல்லிக் கொள்ள :-) நம்ம ஹீரோயின் ஐஸ்வர்யராயைக் கூட விடவில்லை (ஜீன்ஸ்). உலகப் புகழ் பெற்ற அந்தக் கலைஞரைக் கூட நம்ம ஆளுக வெள்ளைக்காரன் வேடிக்கை பார்க்க நட்ட நடு ரோட்டில் ஆட வைத்துப் பார்க்கிறார்கள், ஏன்?

இந்தக் கேள்விக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் பதில் சொல்லவில்லையெனில் தலை சுக்கு நூறாகிவிடும் (யாருக்கு?) :-))

குண்டுப் பாப்பா

இதுவொரு குண்டுப் பாப்பாக்கள் உலகமாக மாறிவருகிறது. பட்டினி போய்விட்டது என்று சொல்ல வரவில்லை. உணவு உலகில் அபரிதமாகக் கிடைக்கிறது என்று சொல்கிறேன். பணக்கார வியாதிகளான 'சக்கரை வியாதி' இப்போது மத்திமர் வியாதியாகி, சேரி வரை சென்று விட்டது. அமெரிக்கா சென்றால் குண்டர்களைக் காணலாம் என்பது உண்மை. ஆனால், உலகமெங்கும் குண்டர்கள் தொகை அதிகமாகிவருவதாக இக்கட்டுரை சொல்கிறது. இது கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வெறும் தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய். தினம்! பிறந்த நாள் கொண்டாடியதில்லை (இன்றுவரை). இந்தியா போகும்போது உருவாகிவரும் புதிய, புதிய உணவகங்கள். கெண்டகி சிக்கன், பிட்சா ஹூட் இத்யாதி. பள்ளி செல்லும் மாணவர்களில் பாதிக்கு மேல் ஓவர் வெயிட்.

மனித இனம், வறுமைக்குப் பழகியது. கிடைக்கும் கொஞ்சம் உணவையும் உடனே கொழுப்பாக மாற்றிவிடும். இக்கொழுப்பை எடுப்பது சிரமம். அப்படித்தான் நம் உடம்பு உருவாகியிருக்கிறது. இப்போது எல்லோரும் கொழுப்பை சேகரித்துவிட்டு கரைக்க முடியாமல் தவிக்கிறோம்.

நான் பள்ளி மாணவனாக இருந்த போது, தெரு ஓரத்தில் ஜடாதர ஐயர் வீடு. சொல்ப வருமானம். இதில் திவசம் போன்ற நாட்களில் யாராவது ஒருவருக்கு சாப்பாடு வேறு. அந்த மாமியின் புடவையில் பாதிக்கு மேல் தையல். ஆயினும் சிரித்துக் கொண்டு உணவிடுவார்கள். மோர் என்றால் ஒரு மோர்! அப்படியொரு நீர் மோரை நான் வாழ்வில் கண்டதில்லை. அப்போது அது வறுமை என்று காணப்பட்டது. ஆனால் கொழுப்பெடுத்துப் போன இவ்வுலகில் அதுவே இப்போது டயட் ரெசிப்பி.

அவர்களது சாப்பாட்டைவிட அவர்கள் என் மீது காட்டிய அன்புதான் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. சாப்பிட்டுக் கொழுப்பதற்குப் பதில் மக்கள் உணவைப் பகிர்ந்து கொண்டு, அன்பைக் கூட்டலாம். அதிக அன்பு இருந்தால் அது நன்மையே செய்யும். அதிகக் கொழுப்பு உயிரைக் கொன்றுவிடும்.

கொடுக்கு மீன்!

உலகம் விசித்திரமானது. உலகில் எத்தனைவகை உயிர்கள் உள்ளன என்று யாருக்கும் தெரியாது. புதிது புதிதாக ஜீவராசிகளை இனம் கண்ட வண்ணம் உள்ளது அறிவியல். சுரா மீன் வகைகளில் கொடுக்கு மீன் ஒருவகை. பார்க்க மிக அழகாக உள்ள மீனினம். ரோஜா செடிகூட ஒரு முள் வைத்திருக்கிறது. ஒவ்வொரு இனத்திற்கும் தற்காத்துக் கொள்ள ஒரு ஆயுதம் உள்ளது. சாதாரணமாக மனிதருடன் இயைந்து பழகும் இம்மீனினம், ஆஸ்திரேலிய வனவியலர் ஸ்டீவ் இர்வின் அவர்களின் உயிரைக் குடித்துவிட்டது. பாம்பு, பல்லி, முதலை என்று தரை விலங்குகளின் கொடுக்கிலிருந்து தப்பிய இவர் ஒரு படப்பிடிப்பில் கொடுக்கு மீனின் ஒரு சொடுக்கில் உயிரை இழந்திருக்கிறார். இச்சேதியை MSN மெசன்ஸர் வைத்திருப்பவர்கள் வாசித்திருக்கக் கூடும். இச்சேதி வாசித்த பின் இக்கொடுக்கு மீன் பற்றிய வீடியோ தேடினேன்.இணைத்துள்ள வீடியோவைப் பார்த்தால் அது கொல்லும் மீன் என்றா தெரிகிறது? அதன் கொடுக்கு எப்படி இருக்கும் என்று வேறு காட்டுகிறார்கள். யாருக்கு சாவு எப்படி வருமென்று யாருக்குத் தெரியும்?

வன விலங்கு பாதுகாப்பை முன்னிருத்திய ஸ்டீவ் அவர்களின் நினைவாக இம்மீன் பற்றி அறிந்து கொள்வோம்.

அமெரிக்கா வாட்ச் (9)கீழே வருவது மிக சுவாரசியமான கட்டுரை. பிலிப்பைன்ஸ் போய் விட்டு வரும் போது நாளிதழில் கண்ட கட்டுரை. இது குறித்த என் சிந்தனைகளை சிஃபி.காம் ஒலிப்பத்தியில் பகிர்ந்துள்ளேன். வெளி வந்தவுடன் இங்கு இடுகிறேன்.

இத்தலைப்பிற்கு ஏற்றாற்போல ஒரு கவிதை வெளிவந்துள்ளது. அதையும் வாசியுங்கள்!

இதோ ஆங்கிலக் கட்டுரை.....

Becoming a 'real American' in America

By John J. Thatamanil
Washington Post Service

From adolescence on, I heard a constant refrain from my Indian father: "Don't ever believe that you're really American." I found his advice peculiar, especially as I had been living in America since age 8 and had largely forgotten my time in India. To him, it did n't matter that the only language in which I could think a complex thought was English. It didn't matter that the only music I listened to was Michael Jackson, the Bee Gees and Billy Joel.

My father's dictum infuriated me, in part because I took his comment to be racist. Did he mean that only white people count as real Americans? What about African-Americans, let alone Indian-Americans? I have insisted ever since that in America, what makes someone an American is citizenship, not race or ethnicity.

This month after hearing Sen. George Allen call an Indian-American, born in this country, "macaca" I better appreciated my father's sober wisdom. What he meant to say is now apparent: "You will never be accepted as truly American." Education, meaningful work and financial success can get immigrant minorities only so far. For some, whiteness will always be a prerequisite for being American. Conveying that message might not have been Allen's intent, but it certainly was the effect.

What's the lesson to be learned from this episode? Must South Asians and other immigrants resign themselves to second-class status at least in the eyes of some? Of course "class" is the wrong word here. Indian-Americans are, statistically speaking, the wealthiest immigrant group in the nation. We do experience discrimination and, on rare occasions, violence, as some Sikhs did right after Sept. 11, 2001. But discrimination has not had marked economic consequences. It is more often experienced by South Asians as a subtle matter of failed recognition: We are either rendered hyper-visible, marked out as different as S.R. Sidarth was made to feel by George Allen or, in other circles, rendered invisible because we are accorded the status of "honorary whites." Membership in that exclusive fraternity is granted so long as difference is suppressed.

The Allen incident offers evidence that America is not now or likely to ever be a color-blind country. How are South Asians to live with this truth? Resignation is not the answer. Vigorous political participation is. My youthful intuition that what makes me as American as any Mayflower descendant is citizenship not race or ethnicity was only partly on the mark. The piece of paper that validates our identities as American citizens can do only so much if we do little to struggle for recognition.

There is also a second lesson to be learned from this incident. South Asian political engagement cannot be driven solely by the private interests of a single racial or ethnic group. America's obsession with color has a long history that South Asians forget at their peril. Indian-Americans and other affluent immigrant groups would do well to remember the civil rights struggles of African-Americans and others without whom a racially inclusive American nation would have been impossible. The Immigration and Naturalization Act of 1965, which opened the door to people from the Eastern hemisphere, must be recognized as the fruit of a larger struggle to expand the meaning of the term "American," a struggle fought on our behalf before our arrival.

The aspiration to honorary whiteness motivated by the hope that success alone will entitle Asians to equality within American life - betrays the memory of that long conflict. Only by making common cause with African-Americans, only by joining with other immigrant groups that have not been as fortunate, can South Asian immigrants resist America's troubled racial history and embrace its best aspirations for a truly democratic and inclusive future. That is a legacy I hope to transmit to my 8-year-old daughter, who is herself a lovely perpetual tan, a combination of my brownness with the lighter tone of her Ohio-born mother, who is herself part German, part English and part Native American.

In the near term, what this means is that Americans of color should work together to ensure that politicians who can see the many shades and hues of American life only as exotic, foreign or even un-American have no role in shaping our common future.

John J. Thatamanil is assistant professor of theology at Vanderbilt Divinity School in Nashville, Tennessee. He is the author of "The Immanent Divine: God, Creation, and the Human Predicament. An East-West Conversation." Ed.