படம் பார்த்து கதை சொல் - 1இந்தியர்களுக்கு யானை பிடிக்கும் என்பது இத்தாலியனுக்கு ஒயின் பிடிக்கும் என்று சொல்வது போல்! யானை தெய்வமாக நிற்கிறது; யானை தெய்வ வழிபாடு நடத்துனராக உள்ளது; யானை தெருவில் போவோருக்கு வேடிக்கைப் பொருளாக, சர்க்கஸ் கோமாளியாக உள்ளது; ஒரு காலத்தில் குற்றவாளிகளின் தலையை சதுர் தேங்காய் போல் உடைக்கவும், போரில் கோட்டை, கொத்தளங்கள் கதவை உடைக்கவும் பயன்பட்டிருக்கிறது.

யானை தெய்வமாக நிற்கும் வரை யானைக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், மேற்சொன்ன பிற பயன்பாடுகளில் யானைக்கு அவஸ்தையே!

மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த காலத்தில் யானை, சிங்கம் இவைகளில் ஆய்வு செய்த ஒரு பேராசிரியர் அங்கு வந்து சொற்பொழிகள் செய்தார். இவை தனது சுயமான இருப்பிடத்தில் எப்படி வாழ்கின்றன என்பது பற்றி நிறையச் சொன்னார். அப்போது, இப்போதுள்ளது போல் வன விலங்குகள் பற்றிய விரிவான படங்கள் பொதுச்சந்தைக்கு வரவில்லை.

யானைக்கு தாய் தந்தை, பாட்டி, அத்தை, சகோதர உறவுகள் பற்றிய தெளிவு உண்டு. ஏறக்குறைய நாம் வாழ்வது போல், பல நேரங்களில் நம்மை விட சிறப்பாக இவ்வுறவுகளை மதித்து வாழ்கின்றன. இவைகளைப் பிடித்து, அதன் குடும்பத்தை விட்டுப் பிரித்து, அனாதை ஆக்கிவிட்டு, அதைக் கோயிலில் வைத்துக் கும்பிட்டாலும் குற்றம் குற்றமே! கோயிலில், காற்சங்கிலியுடன் தலையை ஆட்டி, ஆட்டி நிற்கும் யானை சோகத்தில், வேதனையில் உள்ளது என்பதை அடுத்த முறை பார்க்கும் போது புரிந்து கொள்ளுங்கள். அது மட்டுமல்ல, இந்த அவஸ்தை போதாது என்று இதற்கு வடகலை நாமம் போடலாமா? தென்கலை நாமம் போடலாமா என்று கோர்ட்டுக்குப் போகும் பிரகிருதிகளை என்ன சொல்வது? யானையைக் கேட்டால், 'நரி வலப்ப்பக்கமா போனால் என்ன, இடப்பக்கமா போனால் என்ன? மேலே விழுந்து கடிக்காமல் போனால் போதும்!' என்பது போலவே எண்ணும்.

யானையைப் பார்க்க வேண்டுமெனில் நாம் காட்டிற்குப் போகவேண்டுமே தவிர, அதன் குடும்பங்களைப் பிரிக்கக் கூடாது. இந்தக் குட்டி யானையின் பயம் இப்போது புரிகிறதா?

5 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 9/24/2006 10:28:00 AM

யானைன்னதும் ஓடிவந்தேன்.

பதிவும் அருமை, படமும் அருமை.

எவ்வளவு சோகத்தை அதோட வாழ்க்கையிலே மனிதன்
பதிச்சாட்டான் பார்த்தீங்களா? (-:

SP.VR.சுப்பையா 9/24/2006 10:43:00 AM

அஞ்சறிவுதான்னு ஒதுக்க முடியாம - இப்படி ஒரு சோகம் இருக்கா?

இத்தனை நாள் தெரியாம போச்சே சாமி!

நா.கண்ணன் 9/24/2006 10:50:00 AM

உண்மை திரு.சுப்பைய்யா:

இன்னொரு கதை சொல்கிறேன்.

யானை இறந்து விட்டால், அதன் சுற்றம், நட்புகள் வந்து இறுதி மரியாதை செய்யும். அவை யானையின் உடல் மேல் படாமால், அவுரா என்று சொல்வார்களே, அதைத் தொட்டு இறுதி அஞ்சலி செய்து விட்டுப் போகும். இறந்த யானையின் எலும்புகளை சில காலம் கழித்து வந்து பொறுக்கி, பல்வேறு இடங்களில் போட்டு விட்டுப் போகும் (அஸ்தி கரைப்பது போல்).

இதை ஐந்து அறிவு என்று எப்படிச் சொல்ல முடியும்? மனிதன், தனது மெய்யறிவுத் திறனை விட்டு விலகி விட்டான். ஒவ்வொரு உயிரும் மிகச் சிறப்பான திறன்களைக் கொண்டுள்ளன.

கடைசி பக்கம் 9/25/2006 12:56:00 AM

haa

கடைசி பக்கம் 9/25/2006 12:58:00 AM

ஹலோ K

உண்மையிலே நல்ல தகவல் தந்தீர்கள்!

யானையை காட்டில் வைத்து ரசிப்பதே தகும்.

news and lession!

keep it up