படம் பார்த்து கதை சொல் - 3மிக அழகான படம். மனிதனுக்கும் பிற உயிர்களுக்குமுள்ள அடிப்படை அன்பைக்காட்டும் படம். நமக்கெல்லாம் நாயிடமுள்ள உறவுதான் தெரியும். ஆனால் மேலை நாட்டில் பன்றியிடமுள்ள உறவு போற்றப்படுகிறது.

பன்றி என்ற சொல்லே இழி சொல்லாகிவிட்டது தமிழகத்தில். காட்டில் இருந்து கிழங்கு தின்று கொண்டிருந்த பன்றியை வீட்டிற்குக் கொண்டு வந்து சரியாக உணவிடாதாலால் அது பாட்டுக்கு கட்டதைத் தின்று இன்று இழி பிராணியாகிவிட்டது. காட்டுப்பன்றி மிக உக்கிரமான விலங்கு. கிட்டே சென்றுவிட முடியாது. சில நேரங்களில் சிறுத்தை போன்ற விலங்குகளை புறமுதுகிட்டு ஓடச் செய்துவிடும்.

பன்றி மண்ணைக் குடைந்து, குடைந்து கிழங்கு எடுப்பதால் அது மண்ணளந்தான் குறியீடாகிவிட்டது. பன்றி என்பது பண்டைய இந்தியாவில் லக்ஷ்மியின் குறியீடாக, வளத்தின் குறியீடாக இருந்திருக்கிறது. இன்றும் கூட அதே பொருளில் சீனா, கொரியா போன்ற நாடுகளில் பன்றி ஒரு உயர்ந்த இடத்திலுள்ளது.

பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே.

என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில். ஆண்டாளுக்கே உரிய கிண்டலும், உரிமையும் சொல்லும் பாடலது. பூமிப்பிராட்டி திருமாலின் மனைவி. எனவே திருமால் பன்றி உருவில் வந்து அவளிடம் அடிக்கடி உறவு கொள்கிறான் (மானமில்லாமல் :-) அல்லது பன்றி நிறைய குட்டி போட்டுவிட்டு, மானமில்லாமல் முலை தெரிய பால் கொடுத்துக் கொண்டிருக்கும். என்ன, உயர்வு நவிற்சி இது?

18 பின்னூட்டங்கள்:

SP.VR.சுப்பையா 9/27/2006 09:35:00 AM

இல்லை நண்பரே நாமும் கொண்டாடியிருக்கிறோம்!
வராகி அம்மன் என்று தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயத்தினுள் ஒரு சிறு கோவில் உண்டு அங்கு அம்மன் பன்றித்தலையுடன் இருப்பார் அடுத்தமுறை போனால் பாருங்கள்!

நா.கண்ணன் 9/27/2006 09:42:00 AM

அம்பாளுக்கு நாராயணின் குணங்களுண்டு. அவளை 'மாயோள்' என்று அழைக்கிறது சங்கம். வடமொழி ஸ்லோகங்களில் அவள் 'நாராயணி' என்றே அழைக்கப்படுகிறாள். எனவே 'வராகன்' இங்கு 'வராகி'யாக காட்சியளிக்கிறான்! ஒரே குறியீடுதான், அடிப்படையில். [சீதம்மா, மாயம்மா! என்ற தியாகராஜரின் கீர்த்தனை அற்புதமாக இருக்கும்]

kannabiran, RAVI SHANKAR (KRS) 9/27/2006 11:18:00 AM

உண்மை தான் கண்ணன். ஒருவன் மிகவும் தூங்கிக் கொண்டே இருந்தால், "எப்படி பன்னி போலத் தூங்கறான் பாரு!" என்று சொல்கிறார்கள்.

என்ன கண்ணன்,
ஆண்டாள் இப்படி போட்டுத் தாக்குறாங்க? பாரதி காண்பதற்கு முன்னே புதுமைப் பெண்ணோ? "பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே" என்பதன் பொருளும் சொன்னீங்கனா நல்லா இருக்கும்!

நா.கண்ணன் 9/27/2006 11:37:00 AM

அன்பின் கண்ணபிரான்:

பாரதி ஒரு மாபெரும் மரபின் நீட்சி. எனவேதான் அவர் 'ஆரிய மைந்தர்கள்' நாம் என்று பெருமை கொண்டாடுகிறான் (ஆரிய என்றால் மதிப்பிற்குரிய என்று பொருள்). பாரதியின் மிகவும் பிரபலமான வரிகள் "தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா!" என்பது. இது அப்படியே, அச்சாக பாராங்குச நாயகியாக பாவித்து நம்மாழ்வார் சொல்வது. பாரதியின் புதுமைப்பெண் கருத்தில் ஆண்டாள் நிச்சயமாக ஆதர்சமாக இருந்திருக்க வேண்டும். பாரதி வைணவம் பற்றி அதிகம் பேசாவிடினும் பண்டை மரபுப்படி அவன் நெஞ்சுள் ஒரு வைணவனாக வாழ்ந்திருக்கிறான் (சாதிக்கு எதிரான போக்கு, ஆழ்வார்கள் போக்கு; இறைவனைத் தோழனாக பாவிக்கும் போக்கு வைணவ நோக்கு. அவன் இறக்கும் தருவாயில் நாராயண மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான் என்று செல்லம்மாள் பாரதி குறிக்கின்றார்.)

துளசி கோபால் 9/27/2006 08:03:00 PM

இந்தப் பன்றிக்குட்டிகள் நாய்க்குட்டிகளைப்போலவே நல்ல நட்பும் பாராட்டும்.
வீட்டைக் காவல் காக்கவும் செய்யும்.

நா.கண்ணன் 9/27/2006 08:58:00 PM

கண்ணபிரான்:

ஆண்டாள் கண்ணனின் சகி. எனவே இவளுக்கு ரொம்ப உரிமை உண்டு. நாம் செல்லமாக 'போடி கழுதை' என்று காதலியைத் திட்டுவது போல் தன் காதலனை 'மானமில்லாப் பன்றி' என்கிறாள். 'உலகமுண்ட பெருவாயன்' அவன். அவனுக்கு எதுவும் பொருந்தும். அடுத்த பாட்டில் இன்னும் எக்காளமாக, 'திண்ணாந்திருந்த சிசுபாலன் தேசழிந்து' என்று நக்கலடிக்கிறாள். சிசு பாலன் மேலே அண்ணாக்க பார்த்திருந்த போது சத்தம் போடாமல் கண்ணன் ருக்மிணியைக் கடத்திக் கொண்டு போய் விடுகிறானாம். இந்த விட்டு சித்தரும், ஆண்டாளும் திருமாலைக் கொஞ்சுகிற கொஞ்சு யாராலும் முடியாது.

'பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே' என்று கீதையை நினைவு கூர்கிறாள்.

"கடல் வண்ணன் பண்டொருநாள் கடல் வயிறு கலக்கினையே!...
நாராயணாவென்னா நாவென்ன நாவே!" என்கிறார் சிலம்புச் செல்வர் இளங்கோவடிகள். அதுபோல் இவளும் பண்டொருநாள் பாசி பூர்த்திருந்த உலகை தனது 'சந்தான அநுகிரகத்தால்' மலரச் செய்கிறான் இறைவன் என்று சொல்கிறாள். பன்றி ஒரு குட்டி போடாது! அதற்கு சந்தான அநுக்கிரகமுண்டு. எனவே திருமால் தொட்டதால் பல்கிப்பெருகும் உயிர்நிலை பூமியில் என்பதைச் சொல்லி, அவன் பெருமைகள் பேசாத நாவு என்ன? [அவன் பெருமையன்றி பெயர்க்கவும் வேறு உண்டோ?] என்பது போல் கேட்கிறாள் என்று நினைக்கிறேன். பூர்வாச்சர்யர்களின் வியாக்கியானம் என்னவென்று தெரியவில்லை. இது கடைநிலை மாணாக்கனின் விளக்கம்!

நா.கண்ணன் 9/27/2006 09:00:00 PM

துளசி:

பன்றி வீட்டைக் காக்குமா? இது எனக்கு புதுச்சேதி. பன்றி சுவாரசியமான பிராணிதான். அதை ஒழுங்காக வைத்து நமக்கு பராமரிக்கத் தெரியவில்லை என்று தோன்றுகிறது!

kannabiran, RAVI SHANKAR (KRS) 9/29/2006 10:55:00 AM

//கடைநிலை மாணாக்கனின் விளக்கம்!//
மிகவும் சுவையாகவே இருக்கு. பூர்வாசார்ய பாசுரப்படிகளைத் தேடிப் பிடிக்க, படிக்க வேணும்!

//மானமிலாப் பன்றியாம்//
பாசி தூர்த்துக் கிடந்த பூமியைக் காக்க, மானம் பார்க்காது, சகதி போன்றவற்றில் இறங்கத் தயாராக இருந்த பன்றி. காப்பதில் தான் அவனுக்கு என்ன உறுதி!
மானம் பாக்காது பின்னொரு நாள் தூதும் சென்றானே!

//திண்ணாந்திருந்த சிசுபாலன் தேசழிந்து//
கலாய்த்தல் old technology தானோ? சிரித்து விட்டேன்!

பிரம்மோற்சவப் பதிவுகளுக்குத் தாங்கள் வந்து, ஆழ்வார் பாடல்களுக்கு ஆழ்கருத்து தூண்டினால், பெரிதும் மகிழ்வேன்.

நா.கண்ணன் 9/29/2006 11:11:00 AM

அன்பின் கண்ணபிரான்:

திருவாய்மொழி வியாக்கியானம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தமிழின் அளப்பரிய செல்வம் நம் பூர்வாச்சார்யர்களின் உரைகள். மணிப்பிரவாளத்தில் இருப்பதால் வடமொழி அறிந்த பெரியவர்கள் வாயால் கேட்க வேண்டும். எவ்வளவு ஆழமாக உட்சென்று ஆழ்வார்களின் மனோநிலையைப் படம் பிடிக்கிறார்கள். பாடம் கேட்டால் இப்படிக் கேட்க வேண்டும். பாடல் உயிர் பெறுதல் என்பது இதுதான். நம்மையெல்லாம்விட பெரிய பிஸ்தாக்கள் நம் முன்னோர்கள். நாமெல்லாம் வெறும் மடிசஞ்சிகள். செமத்திய கிறிஸ்தவ, முஸ்லிம் விழுமியங்களை உள்வாங்கிக்கொண்ட மடிசஞ்சிகள். பூர்வாச்சார்யர்கள் பார்வையில் தெளிவு, எளிமை, பாசாண்டித்தனம் இல்லாமை, ஞானம் இன்னும் என்ன என்னவோ இருக்கிறது. அவர்கள் முன் நாமெல்லாம் தூசு.

**பிரம்மோற்சவப் பதிவுகளுக்குத் தாங்கள் வந்து, ஆழ்வார் பாடல்களுக்கு ஆழ்கருத்து தூண்டினால், பெரிதும் மகிழ்வேன்**

இப்படி அழைத்தவுடன் கண்ணீர் மல்கிவிட்டேன். எப்படியான அழைப்பு. இதையெல்லாம் விட வாழ்விற்கு வேறு பொருளுண்டோ? எங்கு வர வேண்டும். வலைத்தள முகவரி தாருங்கள். அடியார்களுடன் இன்புறுதல் என்பதே வைணவ சித்தாந்தம். இறைவனின் சேஷபூதனாக இருந்து கூடி மகிழ்தலே வாழ்வின் சாரம். அது ராதா பாவம். கோபியர் பாவம். அதுவே மிக உயர்ந்த பாவம்.

kannabiran, RAVI SHANKAR (KRS) 9/29/2006 11:52:00 AM

வாருங்கள் கண்ணன் சார்; இதோ சுட்டி
http://madhavipanthal.blogspot.com/

என் profile-இலும் இந்தச் சுட்டி உள்ளது. வாருங்கள், தாருங்கள்; காத்து இருக்கிறேன்!

"நின் அருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே?"

குமரன் (Kumaran) 10/12/2006 01:55:00 PM

'பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே' என்பதற்கு நீங்கள் சொன்ன மாதிரி கீதையில் சொன்ன உறுதிமொழிகள் மிகவும் நிலையானவை என்ற பொருள் கொள்ளலாம். இன்னொரு பொருளும் படித்திருக்கிறேன். இங்கே ஊடல் மனநிலையில் இருக்கும் கோதை நாச்சியார் மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் என்று கிண்டல் செய்து கொண்டே அவர் பேசியிருப்பனகள் (உறுதிமொழிகள்) எவ்வளவு தான் நாம் முயன்றாலும் நிறைவேறாது (பேர்க்கவும் பேராவே); எல்லாம் பொய்மொழிகள் என்று சொல்வதாகப் படித்திருக்கிறேன். :)

குமரன் (Kumaran) 10/12/2006 01:57:00 PM

பாரதியார் வைணவ மரபில் ஈடுபாடு கொண்டவராகத் தான் தெரிகிறார். ச்ரிசூர்ணத்துடன் அவரின் புகைப்படம் ஒன்றைப் பார்த்திருக்கிறேன். கண்ணன் பாட்டு பாடியதும் ஒரு அடையாளம். இறக்கும் தறுவாயில் எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் என்று அடியேனும் படித்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) 10/12/2006 01:58:00 PM

'நீ கொட்டாவி விட்டுக்கிட்டு இரு. அவன் கொண்டு போயிடுவான்' என்ற சொல்லாடல் இங்கிருந்து தான் தோன்றியதா? 'திண்ணாந்திருந்த சிசுபாலன் தேசழிந்து' என்பதில் அதே பொருள் தானே இருக்கிறது? :-)

நா.கண்ணன் 10/12/2006 02:01:00 PM

குமரன்:

நன்றி.

'பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே'

முதலில் 'வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா' தான் வந்தது. இப்பொருள் பற்றி நிறைய முன்பு பாசுர மடலில் எழுதி விட்டேன். எனவே சுருக்கமாக அவள் கீதையை நினைவுகூர்வதாக எழுதிச் சென்றேன். வேலை நேரங்களில் பதிலுரைக்கும் போது நீட்ட முடிவதில்லை.

நா.கண்ணன் 10/12/2006 02:05:00 PM

குமரன்:

பாரதி வேத மரபின் அடிவேர்வரை சென்று கண்டவன். வைணவனாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழியில்லை! ஆனால், அன்பையும், சாந்த வழிமுறைகளையும், வாத்சல்யத்தையும் முன்நிறுத்தும் வைணவம் பாரதி தேடிய குறுகிய காலத்திற்குள் புரட்சிக்கனலை உருவாக்கும் தடமாக இருக்க வாய்ப்பில்லை. சாக்தம், அதுவும் வங்காள சாக்தம் அதற்கு மிகப்பொருத்தம். எனவேதன் அவன் 'சக்தி, சக்தி' என்று அறைகூவினான்.

குமரன் (Kumaran) 10/12/2006 02:17:00 PM

ஐயா. பாசுர மடலுக்குச் சுட்டிகள் கிடைக்குமா? தமிழ்.நெட்டிற்குச் சென்று பார்த்தேன். எப்படி தேடிப் பிடிப்பது என்று தெரியவில்லை.

நா.கண்ணன் 10/12/2006 02:27:00 PM

அன்பின் குமரன்:

பாசுரமடல்கள் தற்போது தஸ்கி குறியீட்டில் வாசிக்கக் கிடைக்கிறது. தமிழ்.நெட்டில் வர, வர பதிவாக்கிய முயற்சி.

http://www.angelfire.com/ak/nkannan/Madals/madalindex.html

பின் கொஞ்ச காலம் யுனிகோடில் தொடர்ந்தேன்:

http://alwar.log.ag/

(தேடிப்பாருங்கள். புதிப்பிக்கவே இல்லை).

ஆழ்வார்க்கடியன் என்றொரு வலைப்பதிவு தொடங்கி இவைகளை மீண்டும் வெளியிட ஆசை (பொன்னியன் செல்வன் போல்;-)

இளைய தலைமுறையினரிடம் இவ்வளவு ஆர்வம் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை. பாசுரங்கள் பற்றி நிறையப் பதிவுகள் வருகின்றன. கண்கள் பனிக்கின்றன. அவன் அருள்.

FloraiPuyal 11/24/2006 11:22:00 PM

சாதி மதமென்னும் சேற்றில் படுத்துறங்கும்
பூதி பிடிக்காமல் போனதுவோ - பூதியில்
நன்றியே இல்லையென நாணித் துயின்றதுவோ
பன்றிமேல் பிள்ளை படுத்து.