படம் பார்த்து கதை சொல் - 4பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

பறவைகள் சுதந்திரமானவை. எல்லை இல்லாதவை. வலசை என்ற யாத்திரையில் கண்டம் விட்டுக் கண்டம் பறப்பவை (non-stop flights!). அவை அழகானவை, வலுவானவை, இலகுவானவை. பறவைகளுடன் எனக்கு அதிகம் பழக்கம் கிடையாது. கிராமத்து வாழ்வில் கிளிகள் மாமரத்தில் உட்கார்ந்திருப்பது பிடிக்கும். சிவன் கோயில் மதிலில் நிறைய மயில்கள் வந்து போகும். மயில்கள் ராஜ பறவைகள். கம்பீரமானவை, மிடுக்கானவை (முருகா! சரியான தேர்வு!) மதில் சுவரில் புறாவிற்கென்று பொந்து அமைத்திருப்பார்கள். எப்போது பார்த்தாலும் 'உக்கும், உக்கும்' என்று ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும். குட்டிக்குருவி வேடிக்கையானவை. தொப்பை உள்ள சிறு வாண்டுகள் போல அவை தொப்பையுடன் நடமாடுவது வேடிக்கையாய் இருக்கும். சமீபத்தில் ஆஸ்திரேலியா போயிருந்த போது வித்தியாசமான, மிக அழகான, பெரிய கிளிகளைப் பார்த்தேன். கூண்டில் இல்லை. சுதந்திரமாக வந்து போயின. மனித உலகில் பிற உயிரினங்களுக்கு அதிகம் இடமில்லை. அவன் வாழ்வு ஒரு யந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அவன் நினைப்பதைவிட பறவைகள் புத்திசாலியானவை, அழகானவை, வலுவானவை. இவன் கண்ட அறிவியலை நாள் தோறும் பயன்படுத்துபவை.

உதாரணமாக, ஏரிக்கரையில் உட்கார்ந்து கொண்டு விண்ணைப் பார்த்தால் நீண்ட வரிசையில் பறவைகள் பறந்து செல்லும். அவற்றில் ஒன்று முன் செல்லும். மற்றவை ஒரு அம்பு போல் தொடரும். அம்பு கிழிக்கக்கூடியது. காற்றை கிழித்துக் கொண்டு செல்ல இந்த வியூகமே மிகச் சிறந்தது என்பதை எங்கும் போய் aerodynamics பாடங்கள் கற்றுக் கொள்ளாமல் செயல்படுத்துபவை.

இந்தப் படத்தில் வேடிக்கை என்னவெனில், ஸ்விஸ் நாட்டுக்காரர் மிக இலகுவான விமானத்தில் பறக்கிறார். இப்பறவைகள் அதை வேடிக்கை காண்பது போல் மேலே பறக்கின்றன. இந்த விமானமும் ஒரு பறவை என்று அவை கருதியிருக்கலாம். ஒருவகையில் இது மானுட வெற்றி. ஏனெனில் 'பறவையைக் கண்டான், விமானம் படைத்தான்!' என்பது தெளிவு. இந்த விமானத்தைப் பறவை என்று பறவைகள் சொல்வதே சாலப் பொருந்தும்.

பறவைகளுக்கு இன்னொரு பழக்கமுண்டு. முட்டை வெடிக்கும் போது, யார் முகத்தைப் பார்க்கிறதோ அதையே உறவு என்று கொள்ளும். பெரும்பாலும் தாய் பறவைதான் முட்டை பொறிக்கும் போது இருப்பதால் தாயைத் தொடரும் சேயாக அது வாழும். சில நேரங்களில் முட்டை பொறிக்கும் போது மனிதர்கள் தென்படுவதுண்டு. பின் அவர்களையே தொடரும். இதை முதன் முதலில் ஒரு ஜெர்மன் விஞ்ஞானி உலகிற்குக் காண்பித்தார். பின்னால் வால்ட் டிஸ்னி கார்ட்டூனில் அதிகம் பயன்படுத்தப்பட்டது! இப்படத்தில், இயல்பாக இப்பறவைகள் சின்ன விமானத்தை ஒரு முதன்மைப் பறவையாக (leading bird) எடுத்துக்கொண்டு பறப்பது அழகு.

Glider என்று சொல்லக்கூடிய விமானத்தில் நானும், எனது பெண்ணும் ஸ்விஸ் நாட்டில் பறந்திருக்கிறோம். படங்களில் பார்க்கும் போது இருக்கிற மகிழ்ச்சி நேரில் இல்லை. காரணம், சின்ன விமானம், ஒரே இரைச்சல், ஆட்டம். நான் தரையில் இருக்கவே விரும்புகிறேன். ஆயினும் கனவுகளில் பறக்கிறேன்.

4 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 9/29/2006 07:46:00 AM

சுதந்திரமா வெளியில் இருக்கும் பறவைகளே எனக்குப் பிடிக்கும்.

கடற்கரையிலும், ஊர் பூராவும் ஸீ கல்லும், ஆல்பட்ராஸும் இருக்கு.
அதுக்காக ப்ரெஞ்சு ஃப்ரை வாங்கிப் போடணும். இல்லேன்னா என்னைத்
திட்டும் பாருங்க, காது கொடுத்துக் கேக்க முடியாது:-)

ஒரு நாள் தெரியாத்தனமா சாதம் போட்டுட்டேன். அன்னைக்குக் கிடைச்ச திட்டை
ஆயுசுக்கும் மறக்கமுடியாது.

திட்டுனது யாரு? வேற யாரு? இந்த ஸீ கல்லுங்கதான்:-)

நம்ம வீட்டிலும் கொலு வச்சுருக்கு. முடிஞ்சா ஒரு நடை வந்துட்டுப் போங்க.

நா.கண்ணன் 9/29/2006 08:27:00 AM

அன்பின் துளசி:

ஜோனாதன் ஸீகல் - அப்படின்னு ஒரு நாவல். ரொம்ப அற்புதமான நாவல். ஸீகல் மிகவும் நட்பான பறவைதான். இங்கு அதிகமில்லை. ஜெர்மனியிலுண்டு. மச்சம் சாப்பிடும் ஸீகல்லுக்கு சாதம் போட்டால் திட்டாமல் என்ன செய்யும். (டாக்டர் டூ லிட்டில் ஞாபகம் வருகிறது! எட்டி மர்பி நன்றாகவே நடித்திருப்பார்)

ஆக, கொலு வைச்சாச்சு. இப்படி நீங்க கூப்பிடறது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. பழைய ஞாபகமெல்லாம் வருது. வைகைக்கரை காற்றைத்தொடர வேண்டியதுதான் :-)

சிறப்பாக கொலு இருக்க என் வாழ்த்துக்கள். அஷ்டலக்ஷிமிகளும் அருள் தருவதாக.

Johan-Paris 9/29/2006 09:41:00 PM

கண்ணன் அண்ணா!
இப் பறவைகள் கனடிய வாத்துக்கள் எனும் அதிக தூரம் பறக்கக்கூடியவை! இப்படத்தில் பறப்பவை தற்செயலாக நடந்ததல்ல. ஒரு ஜேர்மன் தம்பதிகள் இவ்வினத்தின் முட்டைகளை எடுத்துச் செயற்க்கை முறையில் பொரிக்கவைத்து, ஒரு விசில் போன்ற கருவியால் தாய்ப்பறவை போல் ஒளியெழுப்பி; பொரித்த நாள்முதல் அதனுடனே; தடாகங்களருகில் வாழ்ந்து பறக்கக்கூடிய வயது வரும் போது இவ்விமானத்தைச் செலுத்தி அவ்வொலியை எழுப்பியதும்; யாவும் சுமார் 15 ஒன்றாக அவர் பின் பறந்தன. இதைப் பின் " எனும் இடம் பெயரும் பறவைகள் பற்றிய விவரணப்படத்தில் சேர்த்தார்கள்.நான் இதை தொலைக்காட்சியிலும்; அப்படத்தைத் திரையிலும் பார்த்தேன்.
யோகன் பாரிஸ்

நா.கண்ணன் 9/29/2006 10:23:00 PM

யோகன்:

தகவலுக்கு மிக்க நன்றி.

கலிபோர்னியா சாந்தாகுரூஸ் ஆய்வகத்தில் இப்படி டால்பின்னைப் பயன்படுத்தும் விதத்தைக் கண்ணுற்றேன். அது அமெரிக்க கடற்படை, டால்பின் எனும் பாலூட்டியை ஒற்றனாக பயன்படுத்த பழக்கிக்கொண்டிருந்தனர் (நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டு சொல்லும் திறன் அதற்குண்டு!)