படம் பார்த்து கதை சொல் - 5


கருடன், தன் இயற்கை சூழலில்!


இதுவொரு எதிரொலி. 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா! திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்' என்பார்கள். அது போல் திரு.கண்ணபிரான் நியூயார்க்கில் உட்கார்ந்து கொண்டு திருமலை உற்சவத்தைக் கண் முன் கொண்டு வருகிறார். இன்று கருடசேவை. மாமனும், மருமகனும் பறவையை வாகனமாகக் கொண்டவர்கள். இரண்டு பெண்டாட்டிக்காரர்கள். கள்ளக்காதலி உடையவர்கள். அப்படியே Mirror Image! அதனால்தான், அருணகிரி பேசாமல் முருகனை 'பெருமாளே! பெருமாளே!!' என்றே பாடிவிடுகிறார்.

முருகன் தேவசேநாதிபதி. நெற்றிக்கண்ணிலிருந்து உதித்தவன். எனவே காய் சினம் கொண்டவன். நம்ம ஆளு பெருமாளோ, என்.டி.ராமாராவ் மாதிரி எப்போதும் ஒரு புன்னகையுடன், நெஞ்சில் மிதிப்பவன் காலைப்பிடித்து விடுபவர். அப்படித்தானே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்? அதுதான் தப்பு. நம்மாளுக்கு 'காய்சின வேந்தன்' என்ற பெயரே உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? திருப்புளிங்குடி பெருமாள்தான் அவர். அவர் காய் சின வேந்தர் மட்டுமல்ல, அவர் ஊர்கிற ஊர்தி? அதுவும் காய்சினப்பறவை! கொத்திப்புரட்டிவிடும்! கையில் இருக்கும் சக்கரம்? அதுவும் காய்சின ஆழி!! ஆத்தாடி, ரொம்ப கோபக்கார சாமிதான் போலருக்கு! ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரத்தில் 'மகாவக்ரம், மகாகோபம்' என்று பல 'மகா' போட்டு வர்ணிக்கிறது. நரசிம்மரின் மடியில் தாயாரும், பிள்ளையும் (பிரகலாதன்) இருப்பதால் அடங்கியிருக்கிறார். இல்லையெனில், எந்தத் தூண் வெடிக்குமோ? எந்த உயிர் மடியுமோ!!

இதோ நம் நெஞ்சுக்கினிய சடகோபன் காய்சின வேந்தன் பற்றிப்பாடும் பாசுரம்:

காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்
மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங்
கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே! கதிர்முடி யானே.
கலிவயல் திருபுளிங் குடியாய்,
காய்சின ஆழி சங்குவாள் வில்தண்
டேந்தியெம் இடர்கடி வானே. 9.2.6

கருடன் சாமானியப்பட்டவனில்லை. பல நேரங்களில் பெருமாளுக்கு வேலையே கொடுக்காமல் துஷ்டநிக்ரகத்தில் தானே எல்லாவற்றையும் முடித்துவிடுவார். பறவைகளில் மிக எழிலானது, கம்பீரமானது கருடன். கருடன் பறக்கின்ற உயரத்தில் வேறு எந்தப்பறவையும் பறப்பதில்லை. அதனால்தான் தெய்வங்களில் பெரியவரான பெருமாளுக்கு, பறவைகளில் பெரியவரான கருடன்! கருடனுக்கு வேகமுமுண்டு, நிதானமமுண்டு. கோபமும்முண்டு, அழகுமுண்டு.

அவர்மீது பெருமாள் வருவது ஒரு பொன்மலைமீது கார்முகில் அமர்ந்திருப்பது போல் இருக்குமாம். என்ன சேவை! அடடா!

ஒரு காலத்தில் மாலி, சுமாலி (ஆப்பிரிக்க பெயர் போலில்லை?) என்று இரண்டு அரக்கர்கள் கவர்பட (என்ன usuage இது?) கனன்று, பயப்படாமல் முன்நின்ற (இப்போதுள்ள பயந்தாங்கொளி புஷ் போலல்லாமல்) காய்சினவேந்தன்! கதிர்முடியான். பொன் போன்று ஜொலிக்கின்ற முடியுடையவன். இவனை 'மின்னுருவம்' என்றே திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

கலி வயல் = மிக செழுமையான வயல்வெளிகளுள்ள திருப்புளிங்குடியில் உறைபவனே!

கோபாக்கினியான ஆழி (சக்கரம்), சங்கு, வாள், வில், தண்டு, கத்தி போன்ற ஆயுதங்களை தரித்திருப்பவனே!

சக்கரம் - பூமராங். அனுப்பினால் போய் ஆளை முடித்துவிட்டு விட்ட கைக்கு வந்துவிடும்.
சங்கு - குருக்ஷேத்திரத்தில் கண்ணன் சங்கை ஊதிய மாத்திரத்தில் கிலியில் பாதி சேனை ஒண்ணுக்கு போய் விட்டதாம்!
வாள் - கிட்டக்க வந்தால் வாள், வெட்ட,
கதை - எலும்பை முறிக்க (இப்போது யாரும் கதை பயன்படுத்துவதில்லை. பீம சேனன் துரியோதனன் தொடையை கதை வைத்து பிளந்தான்.
வில் - ராமரின் வில் என்னென்ன செய்யும் என்று கம்பனிடம் கேட்க வேண்டும்.

ரொம்ப violent-ஆன சாமியா இருப்பார் போலருக்கே! ஹும்! இவையெல்லாம் எதற்கு என்று கடைசி வரியில் சொல்லிவிடுகிறார் நம்மாழ்வார். 'இடர் களைய!' என்று. நம்மை போன்ற பக்தர்களுக்கு ஒரு திறமையும் கிடையாது. ஒரு கலாட்டா என்றால் காத தூரம் ஓடுபவர்கள். சண்டைக்காரன் வரும் போது எதிர்த்து நிற்க ஒரு தைர்யசாலியாவது வேண்டாமா? அதனால் நம் திருமால், எம் பெருமாள் பஞ்சாயுதங்களும் ஏந்தி எம் இடர் களைய 'காய்சின வேந்தனாக' இருக்கிறான். அவன் காய்தல் நம்மை நோக்கி அல்ல. வஞ்சகரையும், கொடுங்கோன்மையரையும் குறித்துத்தான். 'அந்திக்காய், காய்..இத்திக்காய், காயாதே!' என்று பாடவேண்டிய அவசியமே இல்லாமல் அவன் காய்தல் எதிரிகளுக்கே!

கருடசேவை மிக, மிக அரிதானது! காய்சினப் புள்-பெரிய திருவடியின் கருணைப் பார்வையிலும், காய்சின ஆழியின் பாதுகாப்பிலும், காய்சின வேந்தனின் வெது, வெதுப்பிலும் இன்றைய பொழுது இனிமையாய் அமைய எம் வாழ்த்துக்கள்.

6 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 9/30/2006 11:20:00 AM

அய்ய்யோ கண்ணன்.

அடடா..... இன்னிக்கு யார் முகத்தில் முழிச்சேன்?
ஒண்ணுக்கு ஒண்ணூ வாங்கலையேப்பா..........

ஒரு பக்கம் கண்ணபிரான் இன்னொரு பக்கம் கண்ணன். ஆஹாஹாஹாஹா........

கருட சேவை அக்கக்கா வருணிச்சாறது. இன்னிக்கு(எங்களுக்கு)சனிக்கிழமை வேறே.

ரொம்ப மேலே எதோ பறக்கறமாதிரி தெரியுது தோட்டத்துலெ நின்னப்ப. கருடன்னு
நானே நினைச்சுக்கிட்டு கன்னத்துலெ போட்டுண்ட்டேன்.

ஆமா, பீமனுக்கு அப்புறம் 'கதை' இல்லையா?

( எங்க வீட்டு ஆஞ்சநேயருக்கு (விக்ரஹத்தைச் சொன்னேன்) ரிமூவபிள் கதை இருக்காக்கும்.
ஒரு நாள் ரைட் கை ன்னா ஒரு நா லெஃப்ட்)

இப்போ தமிழிலே எழுதி தமிழ்'மணம்'பரப்புறோமே கதைகதையாய்:-)))))

அது கணக்கிலே வராதோ?

நா.கண்ணன் 9/30/2006 11:28:00 AM

வாங்க துளசி:

நீங்க இப்படி ஆதரவா நிற்கும் போது, சத் சங்கம் ஜொலிக்காமல் என்ன செய்யும்!

எனக்கும் சனிக்கிழமைதான். முதல் வேளையா லக்ஷ்மிநரசிம்ம கராவலம்பம் முடிச்ச கையோட கண்ணபிரான் தரும் கருடசேவை. உடனே எம் நெஞ்சை விட்டகலா சடகோபன் பாசுரம் ஞாபகம் வந்தது. எழுதிவிட்டேன். [மற்ற வேலைகள் தங்கிப் போய்விட்டன. இதுதான் இங்கி பிரச்சனையே :-)

குமரன் (Kumaran) 9/30/2006 11:48:00 AM

கண்ணன் ஐயா. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நம்மாழ்வாரின் பாசுரம் என்ன சொல்கிறது என்பது உங்கள் சொற்களில் அப்படியே பிரதிபலிக்கிறது.

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச்சாபம்

நா.கண்ணன் 9/30/2006 11:50:00 AM

கண்ணபிரான் தளத்தில் உங்கள் பாசுர அபிமானம் புரிந்தது. இங்கும் பொழிக, பொழிக, இன்னமுதம் தருக!

kannabiran, RAVI SHANKAR (KRS) 9/30/2006 01:55:00 PM

எதிரொலிப் பதிவு அருமையோ அருமை.
ரொம்ப அருமையா தொடர்பு படுத்தி உள்ளீர்கள், முருகனையும், மாயனையும்!

காய்சின வேந்தன்! காய்சினப் பறவை!
நல்ல தலைவன் நல்ல தொண்டன் போங்கள்!
"காய்சின வேல்கலியன் ஒலிசெய் தமிழ் மாலைபத்தும்,
மேவிய நெஞ்சுடையார் தஞ்சமாவது விண்ணுலகே" என்று திருமங்கையும் காய்சினத்தானை விடவில்லை பாருங்கள்!!

"ஆழி சங்கு வாள் வில் தண்டு" ன்னு
பஞ்சாயுதங்களை அருமையா பட்டியல் இட்டுள்ளீர்கள்! அதுவும் சக்கரத்தை பூமராங் என்று சொன்னது, சங்கினால் கெளரவர் படை - ஹிஹி!
நன்றிகள் பல!!

நா.கண்ணன் 9/30/2006 02:59:00 PM

கண்ணபிரான்:

உங்கள் புண்ணியத்தால் திருமலை பிரம்மோற்சவம் பார்க்க முடிந்தது. இருந்தாலும் 'அந்தக் கல்யாண சமையல் சாதம்!" தினமும் கல்யாணக் களைதான் கோயிலில்! அவன் ராஜ்ஜியமே தனி!!

தமிழ் வைணவ மரபைப் பேணுவதில் திருமங்கை ஆழ்வாரின் பணி அளப்பரியது. அவர் ஆழ்வாராக இருந்தது மட்டுமில்லாமல், நல்ல மேனேஜராகவும் இருந்திருக்கிறார். இராமானுசருக்கு அவர் வழிகாட்டி!

கருடப்பறவை பற்றிச் சொல்லும் போது ஒரு சேதி விட்டுப்போச்சு. கருடன் மேலே பறந்தாலும் கண்கள் பூமியில்தான். அதற்கு டெலஸ்கோப்பிக் விஷன் உண்டு. அப்படியொரு கண் அமைப்பு. ஆச்சர்யமாக இருக்கிறது நம்மவர் தேர்வுகள்!