குண்டுப் பாப்பா

இதுவொரு குண்டுப் பாப்பாக்கள் உலகமாக மாறிவருகிறது. பட்டினி போய்விட்டது என்று சொல்ல வரவில்லை. உணவு உலகில் அபரிதமாகக் கிடைக்கிறது என்று சொல்கிறேன். பணக்கார வியாதிகளான 'சக்கரை வியாதி' இப்போது மத்திமர் வியாதியாகி, சேரி வரை சென்று விட்டது. அமெரிக்கா சென்றால் குண்டர்களைக் காணலாம் என்பது உண்மை. ஆனால், உலகமெங்கும் குண்டர்கள் தொகை அதிகமாகிவருவதாக இக்கட்டுரை சொல்கிறது. இது கட்டாயம் எல்லோரும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வெறும் தயிர் சாதம், எலுமிச்சை ஊறுகாய். தினம்! பிறந்த நாள் கொண்டாடியதில்லை (இன்றுவரை). இந்தியா போகும்போது உருவாகிவரும் புதிய, புதிய உணவகங்கள். கெண்டகி சிக்கன், பிட்சா ஹூட் இத்யாதி. பள்ளி செல்லும் மாணவர்களில் பாதிக்கு மேல் ஓவர் வெயிட்.

மனித இனம், வறுமைக்குப் பழகியது. கிடைக்கும் கொஞ்சம் உணவையும் உடனே கொழுப்பாக மாற்றிவிடும். இக்கொழுப்பை எடுப்பது சிரமம். அப்படித்தான் நம் உடம்பு உருவாகியிருக்கிறது. இப்போது எல்லோரும் கொழுப்பை சேகரித்துவிட்டு கரைக்க முடியாமல் தவிக்கிறோம்.

நான் பள்ளி மாணவனாக இருந்த போது, தெரு ஓரத்தில் ஜடாதர ஐயர் வீடு. சொல்ப வருமானம். இதில் திவசம் போன்ற நாட்களில் யாராவது ஒருவருக்கு சாப்பாடு வேறு. அந்த மாமியின் புடவையில் பாதிக்கு மேல் தையல். ஆயினும் சிரித்துக் கொண்டு உணவிடுவார்கள். மோர் என்றால் ஒரு மோர்! அப்படியொரு நீர் மோரை நான் வாழ்வில் கண்டதில்லை. அப்போது அது வறுமை என்று காணப்பட்டது. ஆனால் கொழுப்பெடுத்துப் போன இவ்வுலகில் அதுவே இப்போது டயட் ரெசிப்பி.

அவர்களது சாப்பாட்டைவிட அவர்கள் என் மீது காட்டிய அன்புதான் இன்னும் நெஞ்சில் நிற்கிறது. சாப்பிட்டுக் கொழுப்பதற்குப் பதில் மக்கள் உணவைப் பகிர்ந்து கொண்டு, அன்பைக் கூட்டலாம். அதிக அன்பு இருந்தால் அது நன்மையே செய்யும். அதிகக் கொழுப்பு உயிரைக் கொன்றுவிடும்.

3 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 9/10/2006 01:58:00 PM

சரியாப்போச்சு.

வீட்டுக்கு நாலு குண்டு பாப்பா இருக்கறப்ப எங்கே யாருக்குன்னு நம்ம மோர் சாதத்தைக்
கொடுக்கறது?

பயந்துபயந்து தின்னாலும் உடம்புலே 'பச்சக்'குன்னு ஒட்டிக்குது. கரைக்கறதுக்குள்ளெ உன்னைப்பிடி,
என்னப்பிடிதான்.(-:

மதுமிதா 9/10/2006 02:07:00 PM

ஆமாங்க கண்ணன்
அதே சமயம் டயட் இருக்கிறேன் பேர்வழின்னு, எலும்பும் தோலுமாய்
ஒல்லிபிச்சான்கள் அணிவகுப்பும் இந்தப் பக்கம் பெருகிக்கிட்டிருக்கிறாங்களே
அவங்களை என்ன செய்யலாம்???

நா.கண்ணன் 9/10/2006 02:52:00 PM

துளசி, மது:

இந்தியா தன்னிறைவு பெற்று பல வருடங்களாகின்றன. 60 களின் பஞ்சம் இன்னும் நெஞ்சில் உள்ளது. அது இப்போது காலாவதியான உண்மையாகிவிட்டது. இந்தியாவின் பிரச்சனை (இது உலகின் பிரச்சனையும் கூட), நமக்குக் கிடைக்கும் கூடுதல் கலோரிகளை எப்படிக் கழிப்பது என்பதே! பள்ளிகளில் இது பற்றிய பாடத்திட்டம் வர வேண்டிய காலம் வந்து விட்டது. இந்திய சூழலுக்கு, கலாச்சாரத்திற்கு ஏற்ற கலோரி குறைந்த உணவுத் திட்டம் அமுலாக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் குப்பை உணவு உடனே தடுக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் இவ்விஷயத்தில் விழித்துக் கொள்ள வேண்டும்!

மது சொல்லும் பிரச்சனை, அதீத டயட் அல்லது சுய பட்டினி. இதுவும் ஒரு பிரச்சனையே. இந்திய உடையான சாரி கொஞ்சம் பூசலான உடம்பிற்கு உரிய உடை. இந்த ஒல்லிப்பிச்சான் நடிகைகளின் இடுப்பில் புடவை தங்க மாட்டேன் என்கிறது. பார்க்க பரிதாபமாக உள்ளது.