கனவில் தொடரும் இனப்படுகொலைகள்

அதிகாலைக் கனவு பலிக்கும் என்பார்கள். இன்று அதிகாலை, நான் இலங்கையில் இருக்கிறேன். சிங்கள இராணுவம் தமிழ்க் கிராமத்தைச் சூழ்ந்து விட்டது. இங்கும் அங்கும் அலையும் கூட்டம். ஆமிக்காரன் இதோ வரான், இங்கே வரான் என்று ஒரே பீதி. நானும் திக்குத்தெரியாமல் அலைகிறேன். ஒரு தெருவில் பெரிய கோட்டைக்கான மதில்கள் தெரிகின்றன. முறையான படிகள் இல்லையெனினும் படி போன்ற அமைப்பொன்றைக் காண்கிறேன். அதில் ஏறி உள்ளே பார்த்தால் இராணுவம் மார்ச்சில் நிற்கிறது. கீழே இருப்பவர்களிடம் சொல்கிறேன். ஆமிக்காரன் உள்ளே இருக்கான் என்று. தெருவைக் கடக்கலாமென்றால் தெருவில் டாங்குகளின் நடமாட்டம். உயிர்ப்பதட்டம் உள்ளே, வெளியே. எங்கு செல்வது? எப்படி தப்பிப்பது? வழி தெரியாத ஒரு இம்சை. முழித்துவிட்டேன். மீண்டும் உறங்கிய போது இக்கனவே தொடர்ந்தது.

நான் இலங்கை போனதில்லை. அது என்ன இடமென்றும் தெரியவில்லை. ஆனால் உள் மனது இலங்கை என்று கண்டு கொள்கிறது. அக்காட்சியுடன் இயைந்து மனது பட்டபாடு! ஆச்சர்யம். கனவுகள் என்பது 'கூடு விட்டுக் கூடு' பாய்தல் என்று புரிந்தது. எனது குடியுரிமை அடையாளங்கள் கனவிலும் நினைவிற்கு வந்தாலும், தமிழன் என்பது தெளிவாக உணரப்பட்டதால் ஆமிக்காரன் சுட்டுவிடுவான் என்ற கொலைப்பயம் கனவு முழுவதும் இருந்தது.

என்னைப் பொருத்தவரை விடிந்த போது அது கெட்ட கனவு. ஆனால், அங்குள்ளோர்க்கு அது கனவில்லை. நிஜம்.

என்ன வாழ்க்கை இது! என்று மனிதன் இக்கொலை வெறியிலிருந்து மீண்டு நாகரீகமடைவான்.

இப்பதிவு எழுதும் போதுகூட அக்கனவின் அதிர்வுகளை உணர்கிறேன்!

[இது இரண்டாவதுமுறை இலங்கைப் பயணம். முதல்முறை அநுராதபுரத்திற்கு பண்டொருநாள் (சரித்திர காலம்) சென்றேன். எப்படி கனவு காலத்தைக் கணிக்கிறது, இடத்தை உணர்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது. ஈழத்து நண்பர்களுடன் போர்க்கால நடவடிக்கைகள் பற்றிப் பேசியது ஒரு புறக்காரணம். உள் மனது சொல்கிறது, இதற்கு இன்னும் ஆழமாக காரணங்கள் உண்டு என்று]

5 பின்னூட்டங்கள்:

யாரோ 9/28/2006 04:31:00 PM

ம்... உங்கள் கனவு சற்று வித்தியாசமாக இருக்கத்தான் செய்கிறது. புறக்காரணியை விடுங்கள், எனக்கென்னவோ இதுவெல்லாம் ஆழ்மன அதிர்வாகக் கூட இருக்கலாம்.

பரவாயில்லை கனவிலாவது ஈழத்து பிரச்சனையின் தாக்கம் உங்களுக்கு புரிகிறதே...

நன்றி

நா.கண்ணன் 9/28/2006 04:37:00 PM

அன்பின் யாரோ!

நான் ஈழத்து சமூகத்துடன் நெருங்கிப் பழகியவன். அவர்களின் நெஞ்சுவலி எனக்குப் புரியும். ந்னது நண்பர்கள் அனைவர் வீட்டிலும் ஒரு போர் இழப்புண்டு. ஆனால், நேற்று பட்ட அவஸ்தை ஒரு நேரடி அவஸ்தை! கழிவிரக்கம் மட்டும் போதாது என்று என் ஆன்மா அங்கு சென்று நேரடி அனுபவம் பெற்றிருக்கிறது. காணாத இடங்களை பரிச்சயப்படுத்திக் கொள்ளும் என் கனவுகளை எண்ணி வியக்கிறேன்.

யாரோ 9/28/2006 06:03:00 PM

உண்மைதான் ஈழத்தவர் நெஞ்செங்கும் போர் வலியுண்டு, இப்போது அந்த வலி அதிகமாக இருக்கிறது. காலம் பதில் சொல்லும் எல்லா நாட்களும் எங்களுக்கு இன்றுபோல் இல்லைதானே..?? நிச்சயம் விடியும்.

தங்களுக்கு எனது
அன்பான நன்றிகள்

வெற்றி 9/29/2006 02:42:00 AM

கண்ணன்,

//என்னைப் பொருத்தவரை விடிந்த போது அது கெட்ட கனவு. ஆனால், அங்குள்ளோர்க்கு அது கனவில்லை. நிஜம்.//

உண்மைதான். நானும் பல இரவுகளில் இப்படியான கனவுகள் கண்டு தூக்கத்தைத் தொலைத்திருக்கிறேன். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்து, சிங்கள இராணுவத்தின் பல கொடுமைகளை நேரில் கண்டவன். எனக்குத் தெரிந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். அதனால் இக் கனவுகள் என்னைத் துரத்துவதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் நீங்களோ இலங்கைக்கே செல்லாமல் இருந்தும் உங்களுக்கு இப்படிக் கனவு வருகிறது என்றால், ஊரில் சொல்வார்களே "தானாடாவிட்டாலும் தசை ஆடும்" என்று.உங்களின் தமிழ்மான உணர்வும் சிலவேளைகளில் ஓர் காரணமாக இருக்கலாம்.

Anonymous 9/29/2006 02:49:00 AM

Dr Kannan! Pls read Dr Uthaymoorthy's kizhkke Sooriyan uthikkenran. published in 1979.


you are our Brother and Friend.
We fight for live. Now dont try to come Sri Lanka, Even in Dream. We will invite you to see our Elam.