சுஃபி வெளிப்பாடு (இசை)

முஸ்லிம் சாதுக்களுக்குப் பெயர் சுஃபி. தனது இருப்பு 'ஆத்மா', உடல் ஒரு கருவி என்பதில் இவர்களுக்குத் தெளிவான கருத்துண்டு. ஆனால் உடலெனும் இப்பொறி அல்லது கருவி தனது தொடர்ந்த பயன்பாட்டால், அதுவே ஒருவரது 'சுயம்' என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தருகிறது. இப்பொறியின் வல்லமையான செயலி 'எண்ணம் அல்லது சிந்தனை' என்பது. இச்சிந்தனை எனும் செயற்பாடு அடங்கும் போது 'சுயம்' இறைவனில் ஒடுங்குகிறது என்பதை அறிந்திருக்கும் சுஃபி சாதுக்கள், இச்சிந்தனையை அடக்க பல்வேறு வழிகள் கண்டனர். அவற்றுளொன்று வட்டச் சதுராட்டம் என்பது. நல்ல இசையுடன், திரும்பத் திரும்ப 'அல்லாஹு' எனும் மந்திரச் சொல்லுடன் ஆடும் போது சிந்தனை அடங்கி, உடலியக்கம் மறந்து போய் சுயம் இறைவனில் ஒடுங்குகிறது!இது துருக்கியில் மிகப்பிரபலம். மேலே உள்ள படம், Dervish எனப்படும் இச்சாதுக்கள் செய்யும் வட்டச் சதுராட்டத்தைக் காட்டுகிறது. நான் துருக்கி போயிருந்தபோது இஸ்தான்புல் போக முடியவில்லை. அங்குதான் இது பிரபலம். சுஃபி மாஸ்டர்கள் தொண்டர்களின் உடலைக் கத்தி கொண்டு கிழித்துவிட்டு அவர்களை மயக்கநிலைக்கு (trance) கொண்டுவந்துவிட்டு, சில மணி நேரம் கழித்து உடலில் ஒரு சிறு கீறல் கூட இல்லாத மாதிரி மீட்டுரு செய்யும் வித்தையை ஜெர்மன் தொலைக்காட்சியில் கண்டுள்ளேன்.

இவர்களின் அதி அற்புதமான இசை, சமீபத்தில் இந்தியா டுடேயில் கேட்கக் கிடைத்தது! நீங்களும் கேட்டு மகிழுங்கள்.இவ்விசையைக் கேட்டபின் தமிழ் சினிமாப்பாட்டு நினைவிற்கு வந்தால் ஆச்சர்யப்பட வேண்டாம். ஏ.ஆர்.ரகுமான் இவ்விசையை நிறையப் பயன்படுத்தியிருக்கிறார் (தாஜ்மாகால் படத்தில் அச்சாக இதே இசை!). துருபத் இசைப் பழக்கமுண்டா? சுஃபி இசையில் துருபத் இருக்கிறது!

மனது அமைதிப்பட வேண்டுமெனில் இவ்விசை கேட்கலாம். கொஞ்சம் mystical-லாக வேற்று உலகில் சஞ்சரிக்க வேண்டுமா இவ்விசையைக் கேட்கலாம். ஜாஸ் இசை போல் குதியாட்டம் போட வேண்டுமா, அதுவும் இவ்விசையில் செய்யலாம். கடைசியில் கொட்டம் அடங்கினால் சரி!

ஜெர்மனி வந்திருந்த போது திரு.ஏ.எல்.சுப்பிரமணியத்திடம் தியானத்திற்கு இட்டுச் செல்லும் ராகமாக வாசியுங்கள் என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, 'கண்ணன்! தியானத்திற்கு இட்டுச் செல்லாத ராகமொன்று உண்டென்றால் அதைக் கண்டு சொல்லுங்கள்' என்றார். இது என்ன ராகத்தில் அமைந்திருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? முஸ்லிம் chanting அதர்வன வேதச் சாயலுடன் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்கும்நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

என்பது திருவாய்மொழி. அவனை 'அல்லா' என்று சொன்னாலும் 'கண்ணன்' என்று சொன்னாலும், தேடுபவரின் உள்ளத்துள் வேட்கை எழுப்பி தன்னைக் காணக் கிடத்துகிறான்.

வாழ்க சுஃபிமார்கள்!

0 பின்னூட்டங்கள்: