மொழியும் உயிர்ப்பிரிகையும் (Language & Biodiversity)

உலகில் எவ்வளவுக்கெவ்வளவு வேறுபட்ட உயிரினங்கள் உள்ளனவோ அவ்வளவுக்கவ்வளவு ஆக்கையின் (life on earth) இருப்பு சாத்தியம். உயிர்ப்பிரிகை (biodiversity) சுருங்கும் போது வாழ்வும் சுருங்குகிறது. உலகெங்குமுள்ள மேம்பாட்டுத் திட்டங்களினால் (developmental activities) இந்த உயிர்ப்பிரிகை சோதனைக்கு உள்ளாகிறது. எனவே உயிர்ப்பிரிகை பாதுகாப்பு என்பது இப்போது உலகின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்று.

இந்த உயிர்ப்பிரிகைக்கும் மொழிக்கும் தொடர்புண்டு என்றால் நம்புவீர்களா?

இருக்கிறது! அழிந்து வரும் மொழிகளுடன் அவ்வட்டார தாவர, விலங்குகள் பற்றிய அறிவும் அழிந்துவிடுகிறது என்கிறது ஒரு ஆய்வு! உயிர்ப்பிரிகை அதிகமுள்ள இந்தோனீசியா, பப்புவா நியூ கினி போன்ற நாடுகளிலுள்ள பழம்குடிகளின் இருப்பும், அவர்கள் மொழியும் அழிந்து வருகிறது. இம்மொழிகள் அழியும் போது உயிர்ப்பிரிகை அறிவும் அழிந்துவிடுகிறது.

எனவே உயிர்ப்பிரிகை பாதுகாப்பும் மொழிப்பாதுகாப்பும் இணைந்தே செயல்படுகின்றன. அழிந்துவரும் மொழிகளைக் காக்க யுனெஸ்கோவில் பெரிய திட்டமே உள்ளது!


சங்க காலத்தமிழில் தமிழ் நாட்டின் தாவர, விலங்கினங்கள் பற்றிய பெயர்கள், ஞானம் மண்டிக்கிடக்கிறது. சங்கத்தமிழ் அறிந்தோர் கூட்டம் குறைந்தது மட்டுமல்ல, அந்த அறிவியல் ஞானம் குறைந்தது மட்டுமல்ல, அக்காலத்தில் தமிழகத்திலிருந்த மூலிகைகள், விலங்கினங்கள் போன்றவையும் குறைந்து விட்டன. இது பற்றித் தெளிவாக உணர வேண்டுமெனில் முதலில் சங்க கால தமிழ் நில அமைவின் குறிப்புகளை நவீன தமிழில் கொண்டு வந்து ஆராய வேண்டும். தமிழ் மண்ணின் உயிர்ப்பிரிகை என்னவென்று தமிழ் அறிந்தால்தானே உணர முடியும். பயோமெடிகல் ஆராச்சியாளர்கள் உச்சி பீடத்தில், நுனிப்புல் ஆங்கிலம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. நம்ம ஊர் தமிழ் பண்டிதருக்கோ தமிழ் பேசுவதனால், தமிழ் மட்டுமே அறிந்திருப்பதால் தாழ்வு மனப்பான்மை. இதை எப்படி நாம் நிவர்த்தி செய்யப் போகிறோம். வெறித்தனமான மொழிப்பற்றும், போலித்தனமான ஆங்கில மோகமும் தமிழ் மொழிக்கும் நல்லதல்ல, தமிழ் நாட்டின் உயிர்ப்பிரிகைக்கும் நல்லதல்ல. பல்கலைக் கழகங்களில் கிராம மக்கள் மீது அவர்களின் பாரம்பரிய அறிவின் மீது மதிப்பும் நம்பிக்கையும் வர வேண்டும். கிராம மக்களுக்கும் பல்கலைக் கழகங்கள் என்றால் என்ன? தன் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு செயற்பாட்டில் தன் பங்களிப்பு என்ன என்ற மதிப்பீடு வேண்டும்.

மொழிப்பாதுகாப்பு பற்றிப் பேசுவோர் வீட்டில் மாட்டிக் கொள்ள யுனெஸ்கோ ஒரு போஸ்டர் போட்டுள்ளது. அதை இங்கே வைத்துள்ளேன். அச்சடித்துக் கொள்ளுங்கள். அதில் தமிழ் மொழி உள்ளது (திருப்திதானே!)

0 பின்னூட்டங்கள்: