கல்லிலே கலை வண்ணம்! (ப.பா.க.சொ.-8)


fire
Photo by Dr.K.J.S.Sai


விண்ணும், மண்ணும் சிவந்திருந்த ஒரு பொழுதில் மலையேறினோம். கொரியா 85% மலைகள் கொண்ட பிரதேசம். மலையழகு. மலையில் தவழும் முகில் அழகு. முகில் தரும் மழை அழகு. மழை கொட்டும் அருவி அழகு. அருவி மலையிறங்கி தரையில் நடை பயிலும் நதி அழகு.


Photo by Dr.K.J.S.Sai


நதியில் துள்ளிப் பாயும் நீரின் சக்தி அளப்பரியது. நீர், மின்சாரம் தரும் எஞ்ஜிநியர்(!) மட்டுமல்ல. அது ஒரு கலைஞன் என்று அன்று கண்டு கொண்டோம். நாம் பிறப்பதற்கு முன்னிருந்து அருவி பாய்ந்து கொண்டிருக்கிறது, ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு கலைஞன், ஒரு உளி, சில மாதங்கள்! ஒரு சிலை உருவாகிவிடும். இயற்கையால் அதைவிட விரைவில் கலை வண்ணங்களை உருவாக்கிவிட முடியும். ஆனால் மேலே காணும் கலை வண்ணம் பல மில்லியன் வருடங்கள் எடுத்துக் கொண்டு செய்தது! தொடும் போதே ஒரு சிலிர்ப்பு! மனித ஜீவிதம் உருவாகும் காலத்திற்கு முன்பு இட்டுச் செல்லும் உணர்வு. ஐஸ் கட்டி நீரில் மிதப்பது போல்! ஜில்லென்று!!


Photo by Dr.K.J.S.Sai


நீர் மட்டும் வில்லாதி வில்லன் என்றால் காற்றுக் கூட கலைஞன் என்று பல கற்கள் சொல்கின்றன. இந்தக் கல்லை வடித்த காற்று கொஞ்சம் குறும்புக்காரக் காற்று என்று தோன்றுகிறது. இந்தக் கல்லைக் கரைக்க முடியுமா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. பிறகு, காற்று வடித்த மணற்கல் (sand stone) சிலைகள் பற்றிப் பேச வேண்டிவரும்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இவற்றிற்குப் பின்னால் இருக்கும் சுத்த ஞானப்பேருண்மை நினைவிற்கு வருகிறது. காற்று உளி வைத்து செதுக்கவில்லைதான். ஆனால், அதனால் படைக்க முடிகிறது. நீர் ஓர் கலைஞன் இல்லைதான். ஆனால், அரிய கலைப்பொருளை அதனால் உருவாக்க முடிகிறது. முடிவற்ற ஆய்வு செய்யலாம். எது சித், எது அசித் என்று. கல் அசித் என்று கொள்வோம். கரி அசித் என்று கொள்வோம். இவையெல்லாம் எப்படியோ சேர்ந்து ஒரு டி.என்.ஏ ஆகும் போது சித், அசித்திற்குள் புகுந்து விடுகிறது! ஒரு டி.என்.ஏக்குள் ஒரு பெரிய உயிரின் அனைத்துக் குறிப்புகளும் அடங்கியுள்ளன. தனித்தனியாக அமினோ அமிலம், கரி, நைட்டிரஜன், பாஸ்பரஸ் என்று பார்க்கும் போது, அவை ஜடம். ஆனால் அந்த ஜடத்திற்குள் உயிர்த்தன்மை எப்படி, எஞ்ஞனம் ஒட்டிக்கொள்கிறது?

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 9.6.4

நாம் வியப்பது போல் நம்மாழ்வாரும் வியக்கிறார். அவன் விராட் புருஷனாக நிற்கும் போது அனைத்துலகும் அவனுள் நிற்கிறது. அவன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். அவன் மாயன் அல்லவா, அதனால் அவ்வளவு பெரிய ஆள் (பெரிய ஆள்=பெருமாள்) எப்படியோ அணுவிற்குள் அணுவாகவும் நிற்கிறான். நம்மாழ்வார் போன்ற பக்தர்களின் சின்ன இதயத்திலும் குடிகொள்கிறான். எப்படி? நம்மாழ்வாரே 'அறிகிலேன்' என்கிறார். வேதமும் இதையேதான் சொல்கிறது. அவன் தன்மையை நினைக்கும் போது பிரம்மிப்பு பிரம்மித்துப் போய் ஸ்தம்பித்து விடுகிறது!

[பதவுரை: எல்லா உலகங்களும் தன்னிலே தங்கியிருக்க, அவ்வுலகத்துப் பொருட்களுக்குள் (சித்,அசித்) முறை தப்பாது தங்கியிருந்து அருள்கின்ற அருளாளன். வாசனை வீசுகிற சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்காட்கரையில் (கேரளா) எழுந்தருளியிருக்கிற என் அப்பன், சிறியேனாகிய என்னுடைய உயிர் உண்ட (என்னை முழுவதும் கவர்ந்த/ஆட்கொண்ட)திருவருளை அறிகிலேன்.]

கவிதை பழகுவீர்!

இந்த யாக்கை சுவாரசியமாக உள்ளது!
சுடரும் அறிவைத் தந்து, குழந்தையின் கூர்மையை தந்து உலகை வியக்க வைக்கிறான் இறைவன். அவன் உண்டு, இல்லை என்று பட்டிமன்றம் வைக்கும் அளவு வின்முட்டும் சுதந்திரம்.
மனது களிமண் போல் உள்ளது. சத் சங்கத்தில் இருக்கும் போது சுட்டத்தங்கமாக சுடர் விடுகிறது. நல்ல இசையில் லயிக்கும் போது இலகுவாகி, சிறகு போல் மிதக்கிறது.
ஓவியத்தில் தோயும் போது வண்ணமாய் மிளிர்கிறது.
வெளி, புறம் என்பது கூட பார்வை சம்மந்தமானதே.
மனது சில நேரம் தெளிவாக உள்ளது, கரையில்லா வானம் போல்.
அதுவே பல நேரம் குழம்பித் தவிக்கிறது. மேகம் மூடிய வானம் போல அல்லது மஞ்சு போர்த்திய பூமி போல.
ஏற்றம் இறக்கம் கலந்தே வாழ்வு ஓடுகிறது. கடல் நீர் கூட இறங்கிவிடுகிறது. நீர் தளும்பி சில நேரம் கரையைக் கரைக்க தயாராக உள்ளது.
இந்த நிலை தாண்டி மனது போர் வெறி கொள்கிறது, மத வெறி கொள்கிறது. மொழி வெறி கொள்கிறது. காம வெறி கொள்கிறது.
சுழன்றடிக்கும் காற்று போல, வின்னைக் கலக்கும் புயல் போல.
யாக்கை மிக சுவாரசியமாகவே உள்ளது.

எனவேதான் மனதைக் கண்டுபிடிகும் கலையே விஞ்ஞானம் என்று இந்திய மெஞ்ஞானம் சொல்கிறது. என் கண் முன்னே பறக்கும் கொக்கு எனக்காகவே பறக்கிறது.
கரையில் நடக்கும் என்னுடன் போட்டி போட்டுக் கொண்டு நீரில் தாவும் மீன் எனக்காகவே அப்படியொரு spectacular காட்சி தருகிறது.
முழு நிலா எனக்காகவே உதயமாகி ஜொலிக்கிறது.
காலைச் சூரியன் என்னை எழுப்பவே வருகிறான்.
காலையில் நான் கேட்கும் சுப்ரபாதம் என்னை எழுப்பவே.
என்னுள் உறக்கம் இயல்பாகவே அமைகிறது. அது உண்மையில் தூக்கமில்லை. இயக்கமில்லாத ஒரு செயல் இப்பிரபஞ்சத்தில் கிடையாது. எல்லாம், எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.
என் விழிப்பு என்பது மனதின் இன்னொரு நிலை. அவ்வளவே.
விழித்தால் பார்க்க முடிகிறது. வண்ணக் களஞ்சியமாக ஒரு பரபஞ்சம் எனக்காக உருவாகிக் காத்துக்கிடக்கிறது.
எனவே கவிதை பழகுவீர் தோழரே! தோழியரே!

படம் பார்த்து கதை சொல் - 7குழந்தை உறங்குகிறது. எங்கு? விலங்குக்காட்சி சாலையில்! அதுவும் தூங்கும் பாண்டாவுடன்!! துயில் கொள்ளுதல், அதுவும் குழந்தைகள் துயில் கொள்ளுதல் ரசிக்கத்தக்கது! குழந்தைகள் எங்கே வேண்டுமேனாலும் தூங்கிவிடும். விலங்குகளில் பல இதே போலவே இருக்கின்றன. துயில்கின்ற விலங்குகளுடன் நம்மை எளிதாக அடையாளம் காண முடியும். நாய், பூனை, பன்றி, கரடி இப்படி. எல்லா பாலூட்டிகளும் இப்படித் தூங்குவதில்லை. நிற்கின்ற விலங்குகள் பெரும்பாலும் நிம்மதியாய் தூங்குவதில்லை. குதிரை, யானை இவையெல்லாம் சும்மா கோழித் தூக்கம்தான்.

சரி, நம்ம குழந்தைகளின் தூக்கத்திற்கு வருவோம். பெரியவர்களால் தூங்கிக்கொண்டே சாப்பிட முடியாது, சாப்பிட்டுக்கொண்டே தூங்க முடியாது. ஆனால் குழந்தைகள் செய்யும். அம்மாவிடம் பால் குடித்துக்கொண்டே தூங்கிவிடும். சரி, தூங்கிவிட்டதே, தூளியில் போடலாமென்றால், எடுக்கவிடாமல் மீண்டும் பால்குடிக்க ஆரம்பிக்கும். குடித்துக்கொண்டே தூங்கிப் போகும். இதையெல்லாம் நம்மை விட ரசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டர் ஒருவர் இருக்கிறார்.


தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா!


நம்மாளு தூங்குவது போல கொட்டாவி விடுகிறார். உண்ட முலைப்பால் இன்னும் இதமான சூடில் இருக்கிறது. குழந்தை தூங்கிவிட வேண்டும் என்பதே தாயின் அவா. இவனோ, தூங்குவது போல் தூங்குபவன். யோக நித்திரையில் தூக்கம் என்பது கிடையாதே. இவன் தூங்கிவிட்டால் பிறகு நம்ம எப்படி விழித்திருக்க முடியும்? எனவே யசோதைக்கு (அதாவது பெரியாழ்வாருக்கு) இவன் தூங்காவிடில் யார் மீதாவது பழி போட வேண்டும். கிடைத்தான் மதி! டேய் சந்திரா! என் குழந்தை தூங்கப் போவது போல் கொட்டாவி விடுகிறான். முலைப்பால் சூடு ஆறுமுன் அவன் தூங்க வேண்டும், இல்லையென்றான்றால் நீ மாட்டிக்கொள்வாய் என்கிறாள் தாய்! சும்மாவே மதி சாது! இதிலே, நம்மாளு, தண்டு, சக்கரம், சார்ங்கம் (வில்) எல்லாம் வெச்சு இருக்கிற ஆளுன்னு வேறு அவனுக்கு ஞாபகப் படுத்த வேண்டுமா? பாவம் மா மதி! இவன் உறங்கும் வரை கொட்டக்கொட்ட விழித்திருக்கிறது!

என்ன காட்சி, என்ன வருணனை! நம்ம பட்டரை அடிச்சுக்க இன்னொரு ஆளு வரணும்!

கரடித் தாதிஇவர் போன பிறவியில் கரடியாக இருந்திருப்பாரா? இல்லை,
கரடி மனிதராக இருந்திருக்குமா? :-)

படம் பார்த்துக்கதை சொல் 6பாண்டாக் கரடிகள் பற்றி அமெரிக்க, பி.பி.சி தொலைக்காட்சிகள் மூலம் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் அதைக்காணும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப cute! அது
கரடியே இல்லை. சும்மா இலையை நிமிண்டிக்கொண்டு, தூங்கிக்கொண்டு இருக்கும் ஒரு விலங்கு. குழந்தைகளின், பெரியவர்களின் ரசிப்பிற்கென்றே உருவான விலங்கு போல் தோன்றுகிறது! இது சீனாவில் அதிகமாக வாழ்கிறது. மூங்கில் காடுகளில் வாழும் விலங்கு. எல்லா மிருகங்களுக்கும் நேர்ந்தது போல் மனித மேம்பாட்டுத்திட்டங்களினால் இவைகளுக்கும் ஆபத்து இப்போது. காடுகள் அழிந்து வருவதாலும், மனித நெருக்கடியின் விளைவினாலும் வனவிலங்குகளுக்கு போறாத காலமிது. இந்தியாவில் 1 பில்லியனுக்கும் கூடுதலாக மனிதர்கள் வாழும்போது வனமாவது, விலங்காவது! எல்லாம் கதையாய், பழம் கனவாய்...

இருந்தாலும் இதன் சுற்றுலா வருமானத்தைக் கணக்கில் கொண்டு இப்போது செயற்கைச் சினை முறையில் இவற்றின் இருப்பை தக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கரடிக்கு வந்த வாழ்வு! இப்போது இக்கரடிகளுக்கென்று மருத்துவ நிலையம், நர்சுகள் இத்யாதி.

யானைக்கொரு காலமென்றால் கரடிக்கொரு காலம் வர வேண்டாமா!