படம் பார்த்து கதை சொல் - 7குழந்தை உறங்குகிறது. எங்கு? விலங்குக்காட்சி சாலையில்! அதுவும் தூங்கும் பாண்டாவுடன்!! துயில் கொள்ளுதல், அதுவும் குழந்தைகள் துயில் கொள்ளுதல் ரசிக்கத்தக்கது! குழந்தைகள் எங்கே வேண்டுமேனாலும் தூங்கிவிடும். விலங்குகளில் பல இதே போலவே இருக்கின்றன. துயில்கின்ற விலங்குகளுடன் நம்மை எளிதாக அடையாளம் காண முடியும். நாய், பூனை, பன்றி, கரடி இப்படி. எல்லா பாலூட்டிகளும் இப்படித் தூங்குவதில்லை. நிற்கின்ற விலங்குகள் பெரும்பாலும் நிம்மதியாய் தூங்குவதில்லை. குதிரை, யானை இவையெல்லாம் சும்மா கோழித் தூக்கம்தான்.

சரி, நம்ம குழந்தைகளின் தூக்கத்திற்கு வருவோம். பெரியவர்களால் தூங்கிக்கொண்டே சாப்பிட முடியாது, சாப்பிட்டுக்கொண்டே தூங்க முடியாது. ஆனால் குழந்தைகள் செய்யும். அம்மாவிடம் பால் குடித்துக்கொண்டே தூங்கிவிடும். சரி, தூங்கிவிட்டதே, தூளியில் போடலாமென்றால், எடுக்கவிடாமல் மீண்டும் பால்குடிக்க ஆரம்பிக்கும். குடித்துக்கொண்டே தூங்கிப் போகும். இதையெல்லாம் நம்மை விட ரசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டர் ஒருவர் இருக்கிறார்.


தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்
கண்துயில்கொள்ளக்கருதிக் கொட்டாவிகொள்கின்றான்
உண்டமுலைப்பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்தனில்மன்னிய மாமதீ. விரைந்தோடிவா!


நம்மாளு தூங்குவது போல கொட்டாவி விடுகிறார். உண்ட முலைப்பால் இன்னும் இதமான சூடில் இருக்கிறது. குழந்தை தூங்கிவிட வேண்டும் என்பதே தாயின் அவா. இவனோ, தூங்குவது போல் தூங்குபவன். யோக நித்திரையில் தூக்கம் என்பது கிடையாதே. இவன் தூங்கிவிட்டால் பிறகு நம்ம எப்படி விழித்திருக்க முடியும்? எனவே யசோதைக்கு (அதாவது பெரியாழ்வாருக்கு) இவன் தூங்காவிடில் யார் மீதாவது பழி போட வேண்டும். கிடைத்தான் மதி! டேய் சந்திரா! என் குழந்தை தூங்கப் போவது போல் கொட்டாவி விடுகிறான். முலைப்பால் சூடு ஆறுமுன் அவன் தூங்க வேண்டும், இல்லையென்றான்றால் நீ மாட்டிக்கொள்வாய் என்கிறாள் தாய்! சும்மாவே மதி சாது! இதிலே, நம்மாளு, தண்டு, சக்கரம், சார்ங்கம் (வில்) எல்லாம் வெச்சு இருக்கிற ஆளுன்னு வேறு அவனுக்கு ஞாபகப் படுத்த வேண்டுமா? பாவம் மா மதி! இவன் உறங்கும் வரை கொட்டக்கொட்ட விழித்திருக்கிறது!

என்ன காட்சி, என்ன வருணனை! நம்ம பட்டரை அடிச்சுக்க இன்னொரு ஆளு வரணும்!

6 பின்னூட்டங்கள்:

Anonymous 10/10/2006 12:52:00 AM

Great... Entha pattuku eppadee oru vilakam illaynna onnum puruchurukathu intha maramantaikku ...


Kodana kodi nandrikal,
Siv

நா.கண்ணன் 10/10/2006 08:33:00 AM

நன்றி நண்பரே:

தமிழ் இலக்கியத்தின் மிக அரிய பொக்கிஷம், நம் பெரியவர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு உரை எழுதி வைத்தது. அவர்கள் தடம் ஒட்டி எழுதியிருக்கிறேன். ஈதெல்லாம் அவர்கள் போட்ட பிச்சை. என்னிடம் திருவாய்மொழிக்கு மட்டுமே சம்பிரதாய வியாக்கியானம் உள்ளது. எனவே, பிற பாசுரங்களைத் தொடும் போது மற்றவர்களையும் உதவிக்கு அழைக்கிறேன். நம் பெரியவர்களே பல சமயங்களில் ஒரே பாடலுக்கு பல்வேறு பாவங்கள் அருளிச் செய்துள்ளனர். இதை ரசனைப்பிரிகை எனலாம் (ரசோக்தி என்பர் வடமொழியில்). எனவே இன்னொரு ரசிகர் வந்து சேர்ந்தால் பாடலின் இன்னொரு பரிமாணம் தெரியும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) 10/10/2006 03:07:00 PM

கண்ணன் சார்
மிக அருமை. அதுவும் அந்தப் படம். சுட்டிப் பெண் தூங்கும் போது சிரிப்பைப் பாருங்கள்! தூங்கும் போது சிரிக்கும் ஜீவன்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று குழந்தை, இன்னொன்று இறைவன் (அரங்கன்). அதான் போல குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொன்னார்கள்!

என்னங்க சார் பெரியாழ்வார் சந்திரனை மிரட்டிய விஷயத்தை இப்படி பப்ளிக்கா போட்டு உடைச்சிட்டீங்களே! :-)))
மனத்துக்குள் இனிக்கும் கவிதை சார்!

பஞ்சாயுதங்களில் நைசா இரண்டை விட்டுட்டார் பாருங்க! கதை, சக்கரம், வில்லைச் சொன்னவர், சங்கை விட்டுட்டார்.
சங்கும், சந்திரனும் ஒரே பாற்கடலில் பிறந்தவர்கள் ஆயிற்றே! சரி நம்ம ஆளு ஒருவன் கண்ணன் கையில் இருக்கும் வரை நமக்கு என்ன பயம் என்ற இறுமாப்பு, சந்திரனுக்கு வந்து விட்டால்...அதான்.

வாளையும் அதே போல் அடக்கி வாசித்து விட்டார். கவிஞர்கள் பிறை வாள் நுதல் என்கிறார்களே. வாளைப் போல் மின்னி, நிலவு போல் ஒளிரும் நெற்றி! ஆக வாளுக்கும் நிலவுக்கும் சம்திங் சம்திங்! அதனால் அதுவும் கட்!!

சந்திரனுக்கு வேற வழியே இல்லை. குழந்தை தூங்கும் வரை அவனுக்குத் தூக்கம் போச்சு!

உங்கள் புண்ணியத்தில் இன்னொரு பாடல்.
சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்
எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேர் ஒவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீ, கடிது ஓடிவா

நா.கண்ணன் 10/10/2006 04:05:00 PM

என்ன இவ்வளவு நேரம் காணேமென்று காத்திருந்தேன். பார்த்தீர்களா? பஞ்சாயுதங்களில் இரண்டை ஏன் விட்டார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதில் கிடைத்து விட்டது. நன்றி.

நாம் பெரியாழ்வாருக்கு ஈடு உண்டா? எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போது "எத்தனை செய்யினும் என்மகன் முகம் நேர் ஒவ்வாய்" என்று அவர் தன் மகன் புகழ் பாடுகிறார். தாயென்றால் ஒரு தாய்! அது பெரியாழ்வார். என்ன பாவம்! என்ன பாவம்! என்ன புளகாங்கிதம்!! நேற்று இரவெல்லாம் நானொரு தாயில்லையே என்ற கவலை வந்துவிட்டது ;-)

துளசி கோபால் 10/11/2006 10:10:00 AM

ஹைய்யோ............

குமரன் (Kumaran) 10/12/2006 01:52:00 PM

கண்ணன் ஐயா. மிக நல்ல பதிவு.

பெரியாழ்வார் ரொம்பத் தான் நிலவை மிரட்டியிருக்கிறார். :-)

அடியேனின் இந்த வலைப்பூவில் இருக்கும் பதிவுகளைப் படித்துத் தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

http://vishnuchitthan.blogspot.com/