கல்லிலே கலை வண்ணம்! (ப.பா.க.சொ.-8)


fire
Photo by Dr.K.J.S.Sai


விண்ணும், மண்ணும் சிவந்திருந்த ஒரு பொழுதில் மலையேறினோம். கொரியா 85% மலைகள் கொண்ட பிரதேசம். மலையழகு. மலையில் தவழும் முகில் அழகு. முகில் தரும் மழை அழகு. மழை கொட்டும் அருவி அழகு. அருவி மலையிறங்கி தரையில் நடை பயிலும் நதி அழகு.


Photo by Dr.K.J.S.Sai


நதியில் துள்ளிப் பாயும் நீரின் சக்தி அளப்பரியது. நீர், மின்சாரம் தரும் எஞ்ஜிநியர்(!) மட்டுமல்ல. அது ஒரு கலைஞன் என்று அன்று கண்டு கொண்டோம். நாம் பிறப்பதற்கு முன்னிருந்து அருவி பாய்ந்து கொண்டிருக்கிறது, ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு கலைஞன், ஒரு உளி, சில மாதங்கள்! ஒரு சிலை உருவாகிவிடும். இயற்கையால் அதைவிட விரைவில் கலை வண்ணங்களை உருவாக்கிவிட முடியும். ஆனால் மேலே காணும் கலை வண்ணம் பல மில்லியன் வருடங்கள் எடுத்துக் கொண்டு செய்தது! தொடும் போதே ஒரு சிலிர்ப்பு! மனித ஜீவிதம் உருவாகும் காலத்திற்கு முன்பு இட்டுச் செல்லும் உணர்வு. ஐஸ் கட்டி நீரில் மிதப்பது போல்! ஜில்லென்று!!


Photo by Dr.K.J.S.Sai


நீர் மட்டும் வில்லாதி வில்லன் என்றால் காற்றுக் கூட கலைஞன் என்று பல கற்கள் சொல்கின்றன. இந்தக் கல்லை வடித்த காற்று கொஞ்சம் குறும்புக்காரக் காற்று என்று தோன்றுகிறது. இந்தக் கல்லைக் கரைக்க முடியுமா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. பிறகு, காற்று வடித்த மணற்கல் (sand stone) சிலைகள் பற்றிப் பேச வேண்டிவரும்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இவற்றிற்குப் பின்னால் இருக்கும் சுத்த ஞானப்பேருண்மை நினைவிற்கு வருகிறது. காற்று உளி வைத்து செதுக்கவில்லைதான். ஆனால், அதனால் படைக்க முடிகிறது. நீர் ஓர் கலைஞன் இல்லைதான். ஆனால், அரிய கலைப்பொருளை அதனால் உருவாக்க முடிகிறது. முடிவற்ற ஆய்வு செய்யலாம். எது சித், எது அசித் என்று. கல் அசித் என்று கொள்வோம். கரி அசித் என்று கொள்வோம். இவையெல்லாம் எப்படியோ சேர்ந்து ஒரு டி.என்.ஏ ஆகும் போது சித், அசித்திற்குள் புகுந்து விடுகிறது! ஒரு டி.என்.ஏக்குள் ஒரு பெரிய உயிரின் அனைத்துக் குறிப்புகளும் அடங்கியுள்ளன. தனித்தனியாக அமினோ அமிலம், கரி, நைட்டிரஜன், பாஸ்பரஸ் என்று பார்க்கும் போது, அவை ஜடம். ஆனால் அந்த ஜடத்திற்குள் உயிர்த்தன்மை எப்படி, எஞ்ஞனம் ஒட்டிக்கொள்கிறது?

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,
நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,
வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,
சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 9.6.4

நாம் வியப்பது போல் நம்மாழ்வாரும் வியக்கிறார். அவன் விராட் புருஷனாக நிற்கும் போது அனைத்துலகும் அவனுள் நிற்கிறது. அவன் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன். அவன் மாயன் அல்லவா, அதனால் அவ்வளவு பெரிய ஆள் (பெரிய ஆள்=பெருமாள்) எப்படியோ அணுவிற்குள் அணுவாகவும் நிற்கிறான். நம்மாழ்வார் போன்ற பக்தர்களின் சின்ன இதயத்திலும் குடிகொள்கிறான். எப்படி? நம்மாழ்வாரே 'அறிகிலேன்' என்கிறார். வேதமும் இதையேதான் சொல்கிறது. அவன் தன்மையை நினைக்கும் போது பிரம்மிப்பு பிரம்மித்துப் போய் ஸ்தம்பித்து விடுகிறது!

[பதவுரை: எல்லா உலகங்களும் தன்னிலே தங்கியிருக்க, அவ்வுலகத்துப் பொருட்களுக்குள் (சித்,அசித்) முறை தப்பாது தங்கியிருந்து அருள்கின்ற அருளாளன். வாசனை வீசுகிற சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்காட்கரையில் (கேரளா) எழுந்தருளியிருக்கிற என் அப்பன், சிறியேனாகிய என்னுடைய உயிர் உண்ட (என்னை முழுவதும் கவர்ந்த/ஆட்கொண்ட)திருவருளை அறிகிலேன்.]

1 பின்னூட்டங்கள்:

G Gowtham 10/26/2006 06:13:00 PM

not to publish
வணக்கம் நண்பரே
தங்கள் வலைப்பூவில் வெளியாகி இருந்த 'தம் அடிக்கும் மைனா' பற்றிய துணுக்குச் செய்தி 22.10.2006 தேதியிட்ட குங்குமம் இதழில் வெளியாகியுள்ளது. அதற்கான சிறிய சன்மானமாக ரூபாய் 100 அனுப்பவேண்டியுள்ளது. இந்திய முகவரியினையும், காசோலை யார் பெயருக்கு எடுக்கப்பட வேண்டும் என்பதையும் editorgowtham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைத்து உதவவும். நன்றி.
அழியா அன்புடன்
ஜி.கௌதம்