வைகைக்கரை காற்றே!......045

ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின் நந்துவின் கோகுலக் கதைகள் தொடர்கின்றன. உஷா ராமச்சந்திரன் இடையில் ஓரிருமுறை ஞாபகப்படுத்தினார். கண்ணபிரான் ஏன் நானொரு நாவல் எழுதக் கூடாது என்பது போல் எழுதியிருந்தார். உண்மையில் நான் எழுதத்தொடங்கி ஒரு வருடம் இருக்கலாம். மேலாகவும் இருக்கலாம். எனது என்மடல் வலைப்பதிவில் ஆரம்பித்தேன். பிறகு எல்லோரும் தஸ்கியிலிருந்து ஒருங்குறிக்கு மாறிவிட்டனர். அதன்பின் விட்டுப் போய்விட்டது என்று எண்ணுகிறேன். இதுவொரு புதுவகையான பதிவிலக்கியம், இதை Novel + blog(ging)= Novelog அல்லது Bovel (Blog+Novel) என்றழைக்கலாம் என்று எண்ணுகிறேன். என்னடா, திடு திப்புண்ணு 45லேர்ந்து ஆரம்பிக்கிறாரேன்னு எண்ண வேண்டாம். அமீர் எனக்களித்த Any2Uni கொண்டு பழைய கதையை ஒருங்குறிக்கு கொண்டு வந்து வலையேற்றி விட்டேன். வாசிக்க கீழே சொடுக்குக:

வைகைக்கரை காற்றே!......Novelog!
சித்தியா மும்முரமாக கோயில் வேலையில் இறங்கியிருந்தார். மாக்கு, மாக்கென்று உழைத்தார். திருப்புவனத்தில் இவரது ஜோஸ்யம் பிரபலமடைய ஆரம்பித்துவிட்டது. 'பத்ம நிலையம்' திண்ணையில் உட்கார்ந்து கொண்டுதான் ஜோஸ்யம் சொல்லுவார். இவரிடம் ஜோஸ்யம் கேட்க இந்துக்கள் மட்டும் வருவதில்லை. கஷ்டம் உள்ளவர்களெல்லாம் வருவர். அதில் கிருஸ்தவருண்டு, முஸ்லும்களுமுண்டு. ஏழைக்கு மதம் ஒரு லக்சுரி. அவனுக்கு அவன் வயித்துப்பாட்டை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும். அதில் ஏதாவது தடங்கல் வரும் போது பண்டைய இந்திய நம்பிக்கைக்கள் மதம் என்பதையும் மேவி தலை தூக்கும். அச்சமயங்களில் கிச்சய்யரைப் பார்க்க வருவர். அவர்களால் என்ன கொடுத்துவிட முடியும்? கூடி, கூடிப் போனால் ஒரு ரூபாய். பெரும்பாலும் அதுவே அவர்களுக்கு பெரிய பணமாகப் படும். பெரும்பாலான பெரிசுகள் வாயில் புகையிலையை ஒதுக்கிக் கொண்டு அடிக்கொருதரம் வாசலில் போய் எச்சல் துப்புங்கள். 'ஏனிப்படி வாசலை நாசம் பண்ணறேள்' என்று அடுத்தவீட்டுப் பாட்டி கத்தும் சில நேரம். 'அட, என்னம்மா! இதை ஒதுக்கினாதானே பசி, தண்ணி இல்லாம இருக்க முடியும்!' என்று ஒரு பெரிசு பதில் சொல்லும். வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி ஐயரிடம் ஜோசியம் பார்க்க வந்திருக்கும்.

சித்தியா ஜோசியம் பார்ப்பது ஏதோ ராஜசபை நடத்துவது போன்ற தோரணையிலிருக்கும். ஒரே கெடுபிடிதான். ஜாதகம் கணிப்பது அவ்வளவு சாமானிய விஷயமில்லை. 'சரி சொல்லு, நி எப்ப பிறந்தே?' அப்படின்னு ஆரம்பிப்பார். அதுகளுக்கு வருஷம் தெரியுமா? நட்சத்திரம் தெரியுமா? அப்படி இப்படி கேட்டுவிட்டு ஒன்றும் தேறாத போது சித்தியா அப்படியே அமானுஷ்யமாக சில பதில்களைச் சொல்லி பிரச்சனையைத் தீர்த்துவிடுவார். அது எப்படி? அப்படின்னு அவருக்குத்தான் தெரியும். அவர் கதை விடுவதெல்லாம் கிராமத்து ஜனங்களிடம்தான். வீட்டில் ஒன்றும் பேசமாட்டார். ஆனால், அம்மா சொல்லியிருக்கிறாள். இவரது தாத்தா சேது சமஸ்தான ஜோஸியர். ராஜா என்றாலே விளையாட்டு புத்திதானே! ஒருமுறை ஐயரை சோதிக்க அன்று ஈன்ற கன்றின் நாளிகையை சரியாக குறிக்கச் சொல்லி, சபையில் சித்தியாவின் தாத்தாவிடம் ஒரு ஜாதகம் கணிக்க வேண்டுமே! என்று விண்ணப்பித்து இருக்கிறார். 'தாராளமாக!' என்று சொல்லிவிட்டு எழுதிய காகிதத்தை கையில் வாங்கி வைத்துக் கொண்டு ரொம்ப நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ராஜா புன்னகையுடன் என்ன ஜோஸ்யரே! பலத்த யோசனை? எப்போதும் நொடியில் கணித்து விடுவீர்களே! இன்று என்ன இவ்வளவு தாமதம்?' என்று கேட்டிருக்கிறார். அப்போது 'ஐயர்' என்று மரியாதையாக அழைக்கப்படும் வெங்கிடாசலமய்யங்கார், 'இது என்ன புதுமை? சேதுபதி சமஸ்தானத்தில் ஈன்ற கன்றிற்குக் கூட ஜாதகம் கணிக்க வேண்டுமோ?' என்று பட்டென்று பதில் அளித்திருக்கிறார். ராஜாவிற்கு ஒரே ஆச்சர்யம். ஐயருக்கு எப்படி இந்த ரகசியம் தெரிந்தது என்று!!

'குலத்தொழில் கல்லாமற் பாகம்படும்' என்ற பழமொழிக்கிணங்க, கிச்சய்யர் சில, சில அறிகுறிகளை (clues) வைத்துக் கொண்டு சரியாக பிரச்சனைக்கு விடை சொல்லிவிடுவார். ஒருவர் ஜோசியம் பார்க்கிறார் என்றால் ஒரு கூட்டமே அதில் அக்கறையுடன் கலந்து கொள்ளும். எனவே ஒருவருக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது என்றால் எல்லோருக்கும் சந்தோஷமாக இருக்கும். 'நமக்கும் இது போல் விடிந்துவிடுமென்று'! சித்தியா அங்கு ஜோசியம் என்ற பேரில் ஒரு மனோதத்துவ மருத்துவ நிலையம் நடத்திக் கொண்டிருந்தார். இன்ன பிரச்சனை என்றில்லை, எது வேண்டுமானாலும் கேட்பார்கள் கிராமத்து ஜனங்கள். 'சாமி, வீட்டுச்சாவி தொலைஞ்சு போச்சு, எங்கே போய் தேடறது?' என்பது மாதிரி. இவரும் அதற்கு பதில் சொல்லுவார். சாவி கிடைத்துவிடும். இது ஏதோ புரியாத கலை என்பது மட்டும் நந்துவிற்கு உள்ளத்தில் பட்டது.

சித்தியா இப்படிக் காலையில் நிர்வாகம் பண்ணுகிறார் என்றால் நாராயண ஐயங்கார் மெதுவாக இரவு 8 மணிக்கு மேல் அதே திண்ணையில் அமருவார். அண்ணாவிடம் எந்த ஜபர்தசும் இருக்காது. கருமமே கண்! என்று விவசாயிகளுக்கு மனு எழுதிக்கொடுத்தல், கடன் வாங்க பாரம் (form) நிரப்பிக் கொடுத்தல், நிலம் ஜப்திக்கு வருகிறதென்றால் மேல் மனுத்தாக்கல் போன்ற விவசாயிகளுக்கு சிக்கலான சட்ட நடவடிக்களை இவர் கவனித்துக் கொடுப்பார். அண்ணாவோடது லீகல் சமாச்சாரம் என்பதால் ஒழுங்கான உபரி வருமானம் வந்துவிடும். ஐந்து பெண்களைக் கரையேற்ற வேண்டுமே! ஒரு பெண்ணிற்குத்தான் கல்யாணமாகியிருக்கிறது. அதுவும் நாளும், கிழமையுமென்றால் தவறாமல் வீட்டிற்கு வந்துவிடுகிறது. அந்தச் செலவு வேற!

இப்படி பத்ம நிலையத்தின் திண்ணை ஓயாமல் ஜனநெருக்கடியில் இருந்தது. பள்ளி நாட்களில் நந்துவிற்கு அது பிரச்சனையல்ல. ஆனால், விடுமுறை நாட்களில்தான் பிரச்சனை. ஏனெனில் நந்துவிடம் கதை கேட்க ஒரு வாண்டுப் பட்டாளமே காத்துக்கொண்டு இருக்கும். அப்போது திண்ணையில் சித்தியா தர்பார் நடத்தினால், பின் நந்துவின் தர்பார் எங்கு நடத்துவது?

பெருமாள் கோயில் பட்டாச்சாரியர் பிள்ளை ஜெயராமன் நந்துவை பார்க்கவிரும்புவதாக சேதி அனுப்பியிருந்தான். அவன் ஒரு நோஞ்சான். நந்துவைவிடப் பெரியவன். ஆனால் கூச்ச சுபாவம். யார் வீட்டிற்கும் போகமாட்டான். நந்துதான் அக்கோகுலத்தின் குலகொழுந்தாச்சே! எல்லார் வீட்டிற்கும் போவான்.

'என்னப்பா! ஜெயராமா? கூப்பிட்டாயாமே? என்றான் நந்து. 'ஆமாம், உங்க சித்தப்பா, இந்தக் கோயிலைக் கட்ட எவ்வளவு கஷ்டப்படறார்ன்னு நோக்குத் தெரியும். நாமும் அவருக்கு இந்தக் கைங்கர்யத்திலே உதவி பண்ணினா என்ன?' என்றான் ஜெயராமன். அப்போதுதான் சம்பூரண ராமாயணம் வெளியான சமயம். நந்து படம் பார்த்திருந்தான். 'அப்ப, ராமருக்கு அணில் உதவின மாதிரி, கோயில் சுவர் கட்ட செங்கலடுக்கச் சொல்லறயா?' என்றான் நந்து! "பத்தியா! இந்த மாதிரி சவுடாலான பாத்திரம்தான் எனக்கு வேண்டுமென்றான்!' ஜெயராமன். 'பாத்திரமா? நீ என்ன நாடர் போல பாத்திர வியாபாரம் பண்ணப்போறயா என்ன?' என்றான் நந்து. கட, கடவென்று சிரித்துவிட்டான் நந்து. "நீ தான் அந்த கேரக்டருக்கு சரி!" என்றான் ஜெயராம, ஏதோ சினிமா டிரைக்டர் மாதிரி. "நந்து நான் ஒரு கதை எழுதி வச்சுருக்கேன். வருகிற பங்குனி உற்சவத்தின் போது நாம ஒரு டிராமா போடுவோம். அதிலே வர வருமானத்திலே, கோயில் கைங்கர்யத்திற்கு பங்களிப்போம்" என்று சொன்னான் ஜெயராமன். நந்துவிற்கு மேடைக் கூச்சமெல்லாம் கிடையாது. மானாமதுரையிலே ஒயிலாட்டம் ஆடியவன்தானே! ஆனால், வசனமெல்லாம் மனப்பாடம் பண்ணி நாடகத்திலே நடிச்சதில்லே! கொஞ்சம் பயமாக இருந்தது. "டேய் நந்து! பயப்படாதே! இன்னும் ஒரு மாசமிருக்கு, வசனத்தை நெட்டுருப் பண்ணிடலாம், சாயந்திரம் ஆத்துக்கு வா! சொல்லித்தரேன்" என்று சொல்லிவிட்டு அம்மாவிற்கு உதவிக்குப் போய்விட்டான் ஜெயராமன்.

விளையாட்டுக்கு என்று நினைத்தால் ஜெயராமன் முழுமூச்சாக நாடகத்தில் இறங்கிவிட்டான். அக்கிரகாரத்து வாண்டுப் பட்டாளம் எல்லாம் நாடகத்திற்கு நிதி சேர்க்க வீடு, வீடாகப் போக ஆரம்பித்தன. நந்துவின் ம்கத்தைப் பார்த்து சில பேரம் நன்கொடை எழுதினர், நாராயண ஐயங்கார் மீதுள்ள மரியாதை காரணமாக சிலர் நன்கொடை எழுதினர். ஜோஸ்யர் வீட்டுப் பையன், நாம நன்கொடை எழுதலேன்னு தெரிஞ்சு அவர் சபிச்சுட்டா அது பலிச்சுடும் என்று பயந்து சிலர் நன்கொடை எழுதினர். எப்படியோ பங்குனி உறசவத்தில் இவர்கள் நாடகம் அரங்கேறியது.

சித்தி பெண் பட்டம்மா நன்றாக 'டான்ஸ்' ஆடுவாள். எனவே முதலில் அவளது நாட்டியம். பழைய படத்திலிருந்து கண்ணன் வெண்ணெய் திருடும் சம்பவத்தை அழகாக கண்களை உருட்டி, உருட்டி நாட்டியம் ஆடினாள். ஏகப்பட்ட கைதட்டு. அடுத்து நாடகம். நந்துவிற்கு காமெடி ரோல்! அவ்வப்போது புகுந்து கலாட்டாப்பண்ணும் ரோல். நந்துவின் மாம்பழக்கன்னமும், முட்டைக்கண்களும் எல்லோருக்கும் சிரிப்பை வரவழைத்தன. ஜெயராமன் நல்ல காமெடி வசனம் எழுதியிருந்தான். நந்து பிழையில்லாமல் எல்லாவற்றையும் சொன்னான். ஒரே விசில்! ஒரே கைதட்டல். எவரெஸ்ட் டூரிங் டாக்கிஸ் முன்னால இருக்கும் ஒரு மேடையில் நாடகம் நடந்தது. சினிமாவிற்கு வர கூட்டம்வேற. இடைவேளையின் போது மறக்காமல் ஜெயராமன் பொதுமக்களை பெருமாள் கோயில் கட்ட நிதி உதவி செய்யக் கோரினான்.

இந்த உற்சாகத்தில் சித்தியா இன்னும் ஜரூராக வேலை செய்யத் தொடங்கினார். இவர்கள் மூதாதையர்களுக்குச் சொந்தமான ஸ்ரீரெங்கநாதப் பெருமாள் கோயில் நந்துவின் காலத்தில் மீண்டும் புதுப்பொலிவு பெற்றது.

கோயில் நிர்மான வேலைகள் நடக்கும் போது கோயில் உள்ளே முடிக்காத வேலைகளுக்குக்கிடையில் கிடக்கும் உள்வெளிகளில் நந்து தன் அக்கிரகாரத்துத் தோழிகளுடன் 'அப்பா-அம்மா' விளையாட்டு விளையாடினான். யாருக்கும் தெரியாத மன்மத ரகசியமென்றுதான் அவன் நம்பியிருந்தான். வீட்டிற்குள் சாயந்த்ரம் நுழையும் போது, கமலா மெதுவாக, நந்து இங்கே வா! உங்கிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள். என்ன இது, என்றைக்கும் இல்லாத வழக்கமா கமலா பேசனம்ங்கிறாள்! என்று யோசித்தவாரே அவளிடம் போனான். சொல்லி வைத்த மாதிரி, செல்லம்மா, சைளந்திரம், பங்கஜம் எல்லோரும் இருந்தனர். கோகிலம் அடுக்குள்ளில். கமலா, அம்மாவிற்குக் கேட்கும்படி, 'ஆமா! இன்னக்கி அந்த கிரிஜா, மீனாவோட பெருமாள் கோயில் உள்ளே என்ன பண்ணிண்டு இருந்தே?' என்றாள். திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி இருந்தது நந்துவிற்கு. அடச்சே! இவ எல்லாத்தையும் பாத்துட்டாளா? இல்ல, சும்மா குருட்டாம்போக்கிலே மடக்கப்பாக்கிறாளா?' என்று இனம் காணமுடியாம. 'ஏன்? சும்மத்தான் விளையாடிண்டு இருந்தோம்! இப்ப அதுக்கென்ன? என்றான் நந்து. 'சும்மாவா விளையாடிண்டு இருந்தே? என்று கமலா கண்ணைச் சிமிட்டியதும் நந்துவிற்கு மானமே போய்விட்டது. 'டீ! விடுடி, நான் ஒண்ணும் பண்ணலே!' என்று திமிறினான். கமலா, எல்லோரும் கேட்கிறமாதிரி பெரிதாக இவன் அவாளோட அம்மா-அப்பா விளையாட்டு விளையாடிண்டு இருந்தான், இருட்டிலே! என்று கூவினாள்.நந்துவிற்கு கோகிலத்தின் இரும்படியை நினைத்தவுடன் அவனறியாமல் டிராயருக்குள் ஈரமாக்கிவிட்டான். 'டீ நந்து அழறாண்டி! விடுடி! என்றாள் பங்கஜம். உள்ளேயிருந்து கோகிலம், 'அங்கேயென்ன விசாரணை? அவன் ஆம்பிளைப் புள்ளைதானே! விளையாண்டா என்ன தப்பு?' என்று ஒரு போடு போட்டாள். நந்துவிற்கு தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது போலிருந்தது!

கமலாதான் முணு, முணுத்தாள், 'அது என்ன ஓரவஞ்சணை! எங்கள மட்டும் இங்க போகாதே, அங்க திரும்பாதேன்னு சொல்லற இவன் கெட்டவார்த்தை விளையெட்டால் விளையாடறான், அடிக்காம சும்மா விடறே!' என்றாள். உள்ளேயிருந்து அரசி கட்டளை வந்து, 'மேல, மேல பேசிண்டு இருந்தே, உனக்கு விழும் அடி!'

அதான் அடிவாங்கரதுக்குன்னே நாங்க நாலு பேரு பொறந்திருகோமே! என்று அங்காலாய்த்துவிட்டு கமலா கொல்லைப்புறம் போனாள்.

7 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/22/2006 11:39:00 PM

ஆகா...கண்ணன் சார்! பால்ய லீலைகள் இவ்வளவு இருக்கா?:-))
வரக் கொஞ்சம் தாமதமாகி விட்டது!
வந்து பாத்தா, ஒரு மினி மால்குடி டேஸே போட்டிருக்கீங்க!

அதுவும் அந்த நந்து பையனின் ஃபோட்டோ தானே அது? துளசி டீச்சர் பாத்தாங்களான்னு தெரியலையே; இருங்க போட்டுக் கொடுத்துட்டு மீண்டும் பத்ம நிலையம் வருகிறேன்! அதுக்குள்ள அடுத்த நாடகத்துக்கு நந்து ஓடிறப் போறா(ர்)...கொஞ்சம் புடிச்சி வையுங்க!:-))))))

நா.கண்ணன் 11/23/2006 07:41:00 AM

ரவி:

உஷா, மீனா இவங்கதான் இத்தொடரின் ரசிகர்கள். எங்கே அவங்களைக் காணோம். துளசி இத்தொடரை முன்பு வாசித்து இருக்காங்களான்னு தெரியாது ;-)

ஜெயஸ்ரீ 11/23/2006 08:43:00 AM

கண்ணன் ஐயா,

உங்கள் வைகைக்கரைகாற்றே தொடரைப் பற்றிய அறிமுகம் பல மாதங்களுக்கு முன் திண்ணை யில் கிடைத்தது. முழுவதையும் படித்து ரசித்திருக்கிறேன். கண்ணபிரான் சொன்னதுபோல் ஒரு மினி மால்குடி டேஸ்தான் . தொடர்வதில் மிக்க மகிழ்ச்சி.

மிகவும் இயல்பாகவும், சுவையாகவும் எழுதியிருக்கிறீர்கள்

.

நா.கண்ணன் 11/23/2006 08:58:00 AM

நன்றி ஜெயஸ்ரீ

தொடர்கிறேன், உற்சாகத்துடன்.

ramachandranusha 11/23/2006 09:19:00 PM

உள்ளேன் ஐயா! மீனா எங்கே காணோம்.மினாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.....

கண்ணபிரான், சார் ஓரிரு முறை என்று நான் நினைவூட்டியதாய் சொல்வதை நம்பாதீங்க. அஞ்சாறு முறை, அதுவும்
கதை நல்ல கட்டத்தில் வரும்பொழுது நிறுத்தி தொலைத்துவிட்டார் ;-)))

நா.கண்ணன் 11/23/2006 09:33:00 PM

உஷா!

க்ஷமிக்கணும்! இவ்வளவு சொன்னதுக்கு அப்புறம்... இனிமே முடிக்கும்வரை நிறுத்தப் போவதில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள். நந்துவிடம் போனால் கூடுவிட்டுக் கூடு பாய வேண்டியுள்ளது. சில நேரங்களில் அங்கேயே வாழ்ந்துவிட நேர்ந்துள்ளது. நான் இந்த அவஸ்தையிலிருந்து முழுவதும் விடுபட்டுவிட்டேன் எனும் போது ரவி உள்ளே தள்ளிவிட்டார். உங்களுக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற ஒரு உறுத்தல் எப்போதுமுண்டு.ஆக, மீண்டும் கூடு விட்டுக் கூடு பாய வேண்டியதுதான்.

எனக்கு இப்போது மறந்துவிட்டது. 45-ல் வருகிற பெருமாள் கோயில் சமாச்சாரம் முன்னமே எழுதிவிட்டேனா? கொஞ்ச நாள் wordpress-ல் பதிப்பித்துக் கொண்டிருந்தேன். அதை அழித்துவிட்டேன் (spam தொல்லை). இந்த வாரம் இன்னொரு எபிசோடு தரேன்.

meena 11/24/2006 12:35:00 AM

'உஷா குரல் கேட்டு இதோ ஓடியே வந்துட்டே...ன்'

'அட!
ஒரு வழியா ரெண்டு வருஷத்துகப்புறம்
மறுபடி ஆரம்பிச்சுட்டீங்களா?

\\ கண்ணபிரான், சார் ஓரிரு முறை என்று நான் நினைவூட்டியதாய் சொல்வதை நம்பாதீங்க. அஞ்சாறு முறை, \\

உஷா மட்டுமா? நானும்தான் பல முறை கேட்டேன்.

துளசியும் வாசித்து பின்னூட்டமெல்லாம் கூட வைத்திருக்காங்க.