வைகைக்கரை காற்றே!......046

அன்று ஞாயிற்றுக் கிழமை. நந்துவிற்கு பள்ளிக்கூடம் கிடையாது. அச்சகத்திற்கு போய் உதவி செய்யலாமென்று மெதுவாகக் கிளம்பினான். அப்போது விசாலாட்சி அச்சகம் அக்கிரகாரத்தின் ஒரு கோடியில், பிள்ளையார் கோயிலுக்கருகில் அமைந்திருக்கும் வீட்டில் இருந்தது. இரண்டு சகோதரர்கள் சேர்ந்து சுயமாக நடத்தும் அச்சகம் அது. பெரும்பாலும் எவரெஸ்ட் டூரிங் டாக்கிஸ் அனுமதி டிக்கெட்டு அங்குதான் அடிப்பார்கள். அதுபோக வீட்டு விசேஷங்களுக்கு, கடைகளுக்கு வேண்டிய ரசீதுச் சீட்டு போன்றவை அங்கு அச்சடிக்கப்பட்டு விநியோகமாகும். நந்துவிற்கு அங்குள்ள புதிய, புதிய மெஷின்களைப் பார்க்கப் பிடிக்கும். மேலும் அவர்களுக்கு உதவினால் வருடக் கடைசியில் உப்யோகிக்காமல் விட்டுப் போன வெள்ளைத் தாள்களை வைத்து புதிய நோட்புக் அங்கு உருவாக்கிக் கொள்ளலாம். நந்து படிக்கும் காலத்தில் நோட்டு புக் விலையெல்லாம் அதிகம். அதுவும் பைண்ட் செய்த நோட்புக் கூடுதல் விலை. நந்து வீட்டில் 'தாம், தூமென்று' செலவு செய்ய மாட்டார்கள். சட்டை கிழிந்து போனால் கைத்தையல் போட்டு பயன்படுத்துவர். பழைய நோட்டு புத்தகத்தை மீண்டும் பிரித்து, புதிதாக தைத்துப் பயன்படுத்துவர். வருமானம் இல்லாததே காரணம். ஆனால் நந்துவின் நண்பன் துரை எப்போதும் புதிய, புதிய நோட்புக் வாங்கி வருவான். நந்து வாங்கி அழகு பார்த்துக் கொள்வான்.

இப்படி, இவன் அச்சகத்தில் உட்கார்ந்திருக்கும் போது, 'ஏசுவையே துதி மனமே! ஏசுவையே துதி!' என்று யாரோ பாடிக்கொண்டு போவது காதில் கேட்டது. திரும்பினால் ஏகப்பட்ட சிறுவர் கூட்டம் அவர்களோடு சென்று கொண்டிருந்தது. இது சிவன் கோயில் பஜனை கோஷ்டி இல்லை. வாண்டுகளெல்லாம், அந்தப் பாடகன் ஏதோ துருத்தி போலும், ஹார்மோனியும் போலும் உள்ள வாத்தியத்தைக் கையில் வைத்துக் கொண்டு வாசித்துப்பாடும் புதுமையைக் காண கூடியிருந்தனர். அந்தப் பாட்டு கோஷ்டியில் சில பெண்களும் இருந்தனர். பஜனை போல் கூட்டாக பாடிக் கொண்டு போகவில்லை. நந்துவும் ஆர்வமுடன் ஏசுவை துதிக்க சேர்ந்துவிட்டான். அச்சகத்து அண்ணாம, டேய் பயலே! இருடா! என்று சொல்வதற்குள் நந்து அந்த கோஷ்டியில் சேர்ந்து வாயைப் பார்த்துக் கொண்டே தெருக்கோடிவரை போய்விட்டான். அப்படியே போயிருப்பான், ஆனால் இவன் தோளைத் தட்டிய பட்டம்மா ஒரு வெடி குண்டு போட்டாள்.

'டேய் நந்து! பெரிம்மா கூப்பிடறா. ஆத்துக்கு வா!'

'எதுக்குடி இப்ப? இவாளோட போயிட்டு வரேன்'

'அவாளோட போவேண்டாங்கறதுக்குத்தான் பெரிம்மா கூப்பிடறா, இப்ப நீ வல்லையோ, முதுகுத்தோலு பிரிஞ்சிரும்ம்னு சொல்லச் சொன்னா!'

இதுதான் அந்த அணுகுண்டு!

இந்த அம்மாவுக்கு எப்படித்தான் தெரிந்ததோ என்று வேண்டா விருப்பாகத் திரும்பினான். கோகிலத்தின் கண்களிலிருந்து எதுவும் தப்பாது. அடுக்குள்ளில் இருப்பது போலிருக்கும், வாசலில் யாரைப் பார்த்து செளந்திரம் சிரிக்கிறாள் என்பது தெரிந்துவிடும். பிறகு விஜாரணை நடக்கும்.

'எங்கடா அவாளோட போயிந்தே?' என்று காதைத் திருகினாள் கோகிலம்.

'ஏம்மா அடிக்கிறே? அவா சும்மாத்தான் பாடிண்டு போனா. கூடப்போனா தப்பா?' என்றான் நந்து.

'கூடவே போயிட வேண்டியதுதானே? இப்படி இருக்கிறவாளை அழைச்சுண்டு போகத்தானே அக்கிரகாரத்துக்கே அவா வரா? இல்லாட்ட கொல்லன் பட்டறையிலே ஈக்கு என்ன வேலை? இந்த பாரு நந்து இனிமே இவா கூட்டத்திலே சேந்து பாடிண்டு போயிடக் கூடாது. போனேனா உன்னை மதம் மாத்திடுவா. நம்மாத்துலேர்ந்து ஒன்னைப் பிரிச்சுடுவா. கிறிஸ்தவனா மாத்திடுவா. அப்புறம் ஆடி, கறி, கருவாடு எல்லாம் திங்கணும்' என்று பெரிய குண்டைப் போட்டாள் கோகிலம்.

எதை வேண்டுமானாலும் நந்து சகித்துக் கொள்வான். ஆனால் இந்தக் கருவாடு! என்ன நாத்தம்! வயித்தைக் குமட்டுதே! இதப்போய் எப்படி சாப்பிடறா? நந்துவின் இந்த அபரிதமான வெறுப்பைக் கண்டு கொண்ட ராமலிங்கம் இவனைப் பயமுறுத்த, 'டேய் ஐயரு! இந்தா பச்சக் கருவாடு' என்று பள்ளிக்குப் போகும் போதெல்லாம் வம்புக்கு இழுப்பான்.

'அம்மா! இனிமே செத்தாலும் அவாளோட போகமாட்டேன்' என்று நந்து சத்தியமே செய்துவிட்டான். வேடிக்கை என்னவெனில் அன்று கோகிலம் பயமுறுத்தியது அவன் கிருஸ்தவக் கல்லூரியில் படிக்கும் போது சாப்பல் பக்கமே போக ஒட்டாமல் தடுத்தது!பெருமாள் கோயில் புரணமைத்த பின் பெரிய கருங்கற்சுவர் வந்தது. கொத்தகைக்காரர்கள் வயக்காட்டிலிருந்து வைக்கப்போரை அங்கு கொண்டு வந்து குவித்திருந்தனர். வைக்கப் படப்பில் குதித்து விளையாட நந்துவிற்கு மிகவும் பிடிக்கும். என்ன! ஒரே பிரச்சனை, குதித்து விளையாடிய பின் வைக்கல் துகள்கள் டிராயருக்குள் போய் எங்கே, எங்கேயெல்லாமோ ஒட்டிக் கொண்டு குத்தும். திரும்ப குளிக்கணும்!

அவன் பள்ளிக்குப் போகும் குறுக்கு வழி, பெருமாள் கோயில் சுவரை ஒட்டியே இருந்தது! அது உண்மையில் வழியே அல்ல. சேர்வாரு வீட்டு ரைஸ் மில் காம்பவுண்ட் வழியாக, சின்ன கேட் வழியாகப் போனால், ஒரு சுற்றைத் தவிர்க்கலாம். நந்து விரைந்து கொண்டிருந்தான், கையில் புத்தகங்களுடன். அப்போது புத்தகங்களை கையில்தான் மாணவர்கள் தூக்கி வருவர்! அப்படி சின்சமானகேட்டு வழியாக அந்த சந்துக்குள் புகுந்தவுடன் ஒரு வித்தியாசமான காட்சி கண்ணில் பட்டது. கோயில் சுவரோரமாகப் போன சாக்கடை நீரில் ஒரு பெண், தலையில் கூடையுடன், சேலையை முட்டிக்கால் வரை தூக்கி ஒண்ணுக்குப் போய் கொண்டிருந்தாள். அது மிகவும் அசௌகர்யமான இடம், பாவனை. காலெல்லாம் வழிந்து கொண்டிருந்தது. நந்து ஆச்சர்யமாக இதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"பள்ளிக்கூடத்துப் பசங்களெல்லாம் பாக்கிறாங்களேன்னு வெட்கம் கூட இல்லாம ஒண்ணுக்கு போறாளுக!" என்று சற்று பலமாக முணு, முணுத்துக் கொண்டு ஒரு பெரிசு இவளைக் கடந்து போனது.

"அட போயா! ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கமுடியாதுன்னு சொல்லுவாக, உன்னைய யாரு இங்க பாக்க சொன்னா?" என்றதோடு நில்லாமல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நந்துவை முறைத்து விட்டு, "டேய்! எடுவட்ட பயலே! இங்கேன்ன வேடிக்கை"? என்றாள். இவ்வளவு நடக்கும் போதும் அவள் கூடை தலையிலேயே இருந்தது, அவள் காரியம் அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது!

"டீ! ஐயரு வீட்டுப் பிள்ளைய திட்டாதே, நாளைக்கு வம்பாகிப்போகும்" என்றாள் இன்னொருத்தி.

"ஐயருன்னு நெத்தியிலே எழுதியா ஒட்டிருக்கு" என்றாள் அவள்.

சரி, இனி அங்கிருந்தால் பெரிய சண்டையாகிவிடுமென்று நினைத்து நந்து திரும்பினான். அங்கே ராமலிங்கம். டேய்! அவனைப் புடிடா! பச்சைக் கருவாடு வச்சிருக்கேன்! என்றான். அவ்வளவுதான்! எடுத்தானே ஒரு ஓட்டம்.

கோரக்கன் கோயில் வந்துதான் நின்றான். அங்கும் ஒரு கூட்டம். என்னடா என்று பார்க்கப்போக ஒரு கொலை விழுமென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை!

3 பின்னூட்டங்கள்:

ramachandranusha 11/25/2006 10:25:00 PM

கண்ணன் சார், இன்னும் கொஞ்சம் பெரியதாய் போடலாம். ரெண்டே நிமிடத்தில் படிச்சிட்டேன்.
ஆமாம், முன்பு போட்ட கடைசி அத்தியாயத்தில் டிரவுசர் கிழிந்த மர்மத்தை சொல்லாமல் விட்டு விட்டீர்களே ;-))) (இப்பொழுதுதான் நினைவு வந்தது)

நா.கண்ணன் 11/25/2006 11:15:00 PM

அப்பாடி! இந்த உஷா ரொம்ப டிமாண்டிங்! :-) உங்க யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டுக் கொண்டு இருப்பது தெரிகிறது. உங்கள் வாசக வேகத்துடன் போட்டிபோடும் அளவு என் type writing skills போதாது!

மேலும் இது Nolvelog. சின்னச் சின்னதாகத்தான் chapters வரும்!!

என்ன ஞாபகம்! அம்மாடி!! சரி சொல்லிவிடுகிறேன், ஒரு அத்தியாயத்தில்.

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/26/2006 04:51:00 PM

//இந்தா பச்சக் கருவாடு//

உங்களுக்குப் புடிக்கலின்னா ஏன் வேஸ்ட் சேசேனு? இப்படிக் கொடுங்க! :-)))))))

அருமையாப் போது Novelog!
நான் கேட்க நினைச்சேன்; உஷா கேட்டுட்டாங்க! No Escape!:-))

//என்ன! ஒரே பிரச்சனை, குதித்து விளையாடிய பின் வைக்கல் துகள்கள் டிராயருக்குள் போய் எங்கே, எங்கேயெல்லாமோ ஒட்டிக் கொண்டு குத்தும். திரும்ப குளிக்கணும்//

எங்க ஊரு வாழைப்பந்தல்; அங்கியும் இது தான் பிரச்னை! ஆனா இதுக்கு எல்லாம் பயப்படுவமா? வைக்கப் போருலே ஏறிக் குதிக்கும் சுகம் cushion bed இல் தான் வருமா? ஆடி முடிச்சதும் பம்பு செட்டுல பாஞ்சு பாஞ்சு குளிச்சாப் போச்சு!