வைகைக்கரை காற்றே!......047

உலகு ஒரு அதிசயப் பொருள் போல் வாய் கொட்டாமல் பார்ப்பது நந்துவின் பலம், பலவீனம். பலம்! ஏனெனில் அவனுக்கு எல்லாமே வெடிக்கையாய் படும். ஒரு தாமரை இலைத் தண்ணீர் பாவனை. பலவீனம்! ஏனெனில் அவனை அது பல சங்கடங்களில் இட்டிருக்கிறது. காலையில் பெருமாள் கோயில் சந்தில் நின்று வேடிக்கை பார்த்திருக்கக் கூடாதுதான். பொம்பளை சமாச்சாரம் என்று போயிருக்க வேண்டும். ஆனால், அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. நந்து ஒரு ரசிகன். அந்த நீர் கால் வழியே ஓடி, சாக்கடையில் கலப்பது அழகாகப் பட்டது. அது பசங்க சுவருக்கு முன்னாடி ஒண்ணுக்கு அடிக்கிறதவிட வித்தியாசமா இருந்தது. இப்படியொரு புதிய யுத்தி உண்டென்று அன்றுதான் கண்டு கொண்டான். அந்தப் பெரிசு வந்து கெடுத்துவிட்டது. இல்லாவிடில் சின்னப்பசங்க பாத்தா பொம்பளைமார்கள் வெட்கமாக சிரித்துவிட்டுப் போய்விடுவார். பெரிசு அதை மானப் பிரச்சனையாக்கி கெடுத்துவிட்டது!

சரி, அந்தக் கலாட்டாவிலிருந்து வந்தால் கோரக்கன் கோயிலில் பெரும் கூட்டம். இன்னும் பள்ளிக்கூட மணியடிக்க அஞ்சு நிமிஷம் இருந்தது. எனவே என்ன கூட்டமென்று வேடிக்கை பார்த்தான். அங்கு ஒரு ஆடு பேந்தப் பேந்த நின்றிருந்தது. அதற்கு மாலை, மரியாதை எல்லாம் இருந்தது. நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டிருந்தது! மஞ்சள் துண்டு கழுத்தில் கட்டியிருந்தது. அதை இறுக்க ஒருவன் பிடித்திருந்தான். அந்தக் கூட்டத்தைக் கண்டு மிரண்டு அது திமிறி ஓடப் பார்த்தது. ஆனால் பிடித்தவன் கையோ வலுவாக இருந்தது. ஆடு அழுமா என்று தெரியவில்லை. அதன் மிரட்சியைப் பார்த்தால் அழுவது போலிருந்தது. கோயிலுக்குளிருந்து ஒரு குடம் நீர் கொண்டு வந்து அதன் தலையில் கொட்டினான் ஒருவன். அது சமயம் பார்த்து ஒருவன், 'படையலுக்கு ஒத்துக்கிறயா?' என்று கேட்டான். ஆடு தன் தலையில் கொட்டிய நீரை உதறத் தலையாட்டியது. அவ்வளவுதான், "ஐயா! பலிக்கு ஒத்துக்கிரிச்சி" என்றான் ஒருவன். கண் வெட்டும் நேரத்தில் எங்கிருந்தோ பூசாரி ஒரு கொடும் வாளினைக் கொண்டு வந்து ஆட்டின் தலையைச் சீவிவிட்டான். பீரிட்டு எழுந்த ரத்தம் அங்கிருந்த பலரின் வேட்டியைக் கரையாக்கியது.

அதற்கு மேல் நந்துவால் அந்தக் கோரத்தைக் காண முடியவில்லை. ஏன் இப்படி வேடிக்கை பார்க்கும் புத்தி போகவில்லையென்று தன்னையே நொந்து கொண்டான் நந்து. இவன் பள்ளிக்குள் விரையவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. முதல் வகுப்பு ஆங்கிலம். ஏதோ சொல்லிக் கொடுத்தார். எதுவும் நந்துவின் மண்டையில் ஏறவில்லை. அடுத்த வகுப்பு கணக்கு. சுப்பையா வாத்தியார் கையில் மூங்கில் பிரம்புடன் உள்ளே வந்தார். கணக்கை விட அந்தப் பிரம்புதான் எல்லோரையும் பயமுறுத்தியது. நந்து ஏற்கனவே பயந்திருந்தான். வீட்டுக் கணக்கைக் காட்டு என்று ஒவ்வொரு பெஞ்சாக வந்து பார்த்தார் சுப்பையா வாத்தியார். நந்து கணக்கில் வீக் என்றாலும், ரொம்ப வீக் இல்லை. வீட்டுக் கணக்குப் போட்டிருந்தான். ஆனால் வாத்தியார் பின்னால் பிரம்பை உருட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தவுடன் கோரக்கன் கோயில் கொலை ஞாபகத்திற்கு வந்துவிட்டது. அந்த மிரளும் கண்கள். பயப் பீதி! அப்படியே இவனுள் புகுந்து கொண்டது. வாத்தியார் இவன் நோட்டு புத்தகத்தை எடுக்கவும் நந்து குபுக்கென்று வாந்தி எடுக்கவும் சரியாக இருந்தது!

இவனோ பயத்தில் வாந்தி எடுக்கிறான். ஆனால் வாத்தியாருக்கோ தன் வேட்டி அழுக்காகிப் போச்சு என்ற கடுப்பு. முதுகில் ஒன்று வைத்தார். 'அம்மா! என்று நந்து கத்தினான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்று தமிழ் வாத்தியார் அடிக்கடி சொல்வது இதுதான் என்று உணர்ந்து கொண்டான். இன்னொரு 'பளார்!' அவ்வளவுதான் நந்து ஒரே ஓட்டம், வீட்டை நோக்கி. வரும் வழியில் இரண்டு முறை வாந்தி எடுத்தான்.

கொல்லைப்புறம் வழியாக உள்ளே நுழைந்த நந்துவை பங்கஜம்தான் முதலில் பார்த்தாள். அவனது கோலத்தைக் கண்டு பதறிவிட்டாள். அவளால் இவனை அணைத்து ஆதரவு சொல்ல முடியவில்லை. ஏனெனில் எரு தட்ட மாட்டுச் சாணியை, தவிடு, வைக்கோலுடன் கலந்து கொண்டிருந்தாள். இம்மாதிரி அசிங்கமான வேலைகளை வெட்கம் பார்க்காமல் அவள் ஒருவள் மட்டுமே அந்த வீட்டில் செய்வாள். மிச்ச சகோதரிகள் நாகரீகம் கருதி மாட்டுப் பக்கமே வரமாட்டார்கள். கோகிலம் காப்பி போட்டுக் கொடுத்தால் வக்கணையாக குடிப்பர். அம்மா கூட சில நேரம் சொல்லுவாள், 'ஏண்டி பங்கஜம் இதிலே போட்டு உழண்டுண்டு. போய் குப்பையிலே கொட்டு! என்பாள். அதற்கு பங்கஜம், 'போம்மா! நான் இரண்டு விராட்டி தட்டினா அண்ணாவுக்கு செலவு மிச்சம். இல்லட்ட நீதானே இதை விலைக்கு வாங்கணும்'. பங்கஜத்தைப் போன்ற பொறுப்பு அந்த வீட்டில் யாருக்கும் கிடையாது. அவள் படிக்கவில்லையே தவிர அவள் கர்மயோகி. கடமைக்கு தயங்கியதே இல்லை அவள்.

"டேய்! நந்து! என்னடா ஆச்சு உனக்கு?" என்று பதறிவிட்டாள். "அம்மா! அம்மா! இங்கே ஓடி வந்து பாரு! நந்துக்கு என்னமோ ஆயிடுத்து!" என்று கூவினாள்.

அடுக்குள்ளில் இருந்த கோகிலம் பதறி அடித்துக் கொண்டு "என்னடி? என்ன ஆச்சு, என் நந்துவுக்கு" என்று பதற. பின் குடித்தனதிலிருந்த சித்தி, "ஐயோ! என்னடி ஆச்சு என் கண்ணுகுட்டிக்கு?" என்று ஓடிவர, வீடே அமர்க்களப்பட்டது. கொல்லைப்புர கோனார் வீட்டு சனங்கள் கூட என்னமோ, ஏதோ என்று பதறிப் போய் கொல்லைக்கு வந்தனர்.

சித்திதான் முதல்ல வந்து நந்துவைக் கட்டிக் கொண்டாள். சித்திக்கு நந்துவை ரொம்பப் பிடிக்கும். ஒண்ணே, ஒண்ணு, கண்ணே கண்ணு பொறந்தவன் என்று அடிக்கடி சொல்லுவாள். "ஏண்டிம்மா? என்ன ஆச்சு பள்ளிக்கூடத்திலே, வாத்தியார் அடிச்சாரா?" என்று கேட்க.

அதற்குள் கோகிலம் அங்கு வந்து விட்டாள். "டீ குஞ்சரம்! கொஞ்சம் தள்ளிக்கோ. எங்காவது அடிபட்டுருக்கானு பாரு!" என்றாள்.

உடனே சித்தி இவன் சட்டையைக் கழட்டினாள். முதுகில் பிரம்பின் அழுத்தம் பதிவாகியிருந்தது. "எவண்டா? என் புள்ளையை இப்படி மாட்டடி அடிச்சவன். அவர் வரட்டும். அவன் உத்தியோகத்தைக் காலி பண்ண வைக்கிறேன்" என்று அதிகாரம் செய்து விட்டு. நந்துவை துடைத்து சுத்தம் பண்ணும் போதே நந்துவின் உடல் அனலாய் கொதித்தது! "டீ குஞ்சரம் ஜொரம் போல இருக்கேடி. இப்ப என்ன செய்ய?" என்று பதறினாள். "அக்கா! முதல்ல குழந்தை தூங்கட்டும். கட்டாரியை விட்டு வைத்தியரை அழச்சுண்டு வரச் சொல்லறேன்" என்று கட்டாரிக்கு கட்டளை இட போய் விட்டாள்.

கொல்லையிலிருந்து கோனார் வீட்டுப் பொம்பளைக, 'ஆத்தா! புள்ள பயந்திருக்கும். முதல்ல கொளுநீர் காய்ச்சிக் கொடுங்க. திருநீறு பூசுங்க. சாமிக்கு வேண்டிக்குங்க!' என்று பல யோசனைகள் சொல்லினர். இந்தக் கொளுமோரு என்பது மோரைக்காய்ச்சிக் கொடுப்பது. பயப்பிராந்தி இருந்தால் நிவர்த்தியாகும். நந்துவிற்கு மோரு என்றாலே பிடிக்காது. கெட்டியாக தயிர் போட்டால் சாப்பிடுவான். கொளுநீர் கொடுத்தவுடன் மீண்டும் வாந்தி எடுத்தான்.

"என்னமோ ஆச்சுடி இவனுக்கு. பகவானே நீதான் காப்பதணுமென்று அம்மா, சாமி உள்ளுக்குள் போய் திருநீறு கொண்டு வந்து பூசினாள்.

பள்ளி முடிந்து வந்த சகோதரிகள் என்ன நடந்திருக்குமென்று அதற்குள் துப்பு துலக்கி வந்து சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கும் சரியாகத் தெரியவில்லை. "டேய் சேது! இங்க வா!" என்றாள் கோகிலம். "என்ன பெரிம்மா! என்று ஓடி வந்தான் சித்தி பிள்ளை சேது. என்னடா இன்னக்கி நடந்தது? வழியிலே எதாவது கலாட்டாவா?" என்றாள். "இல்ல பெரிம்மா, கோரக்கன் கோயில்ல திருவிழா. ஆடு வெட்டினாங்கலாம். சொன்னாங்க. அதை இவன் பாத்துட்டானோ என்னமோ!" என்றான். "அதாத்தான் இருக்கும். குழந்தையோல்யோ பயந்துடுத்து" என்றாள் சித்தி. உடனே கோகிலம் "அமா, இவ ரொம்ப தைர்யசாலி! ரத்தத்தைக் கண்டாலே மயக்கம் போட்டுவா!" என்றாள்.

மாலையில் அக்கிரகாரத்துக் பெண் குட்டிகள் இவா ஆத்திற்கு வந்து, 'அயிகிரி நந்தினி' ன்னு ஸ்லோகம் சொன்னதுகள். பயமிருந்தா போயிடுமாம்.

அப்போ இவன் பள்ளிக்கூடத்திற்கு புதிதாக வந்திருக்கும் தமிழ் வாத்தியார் அந்தப் பக்கம் போனார். சும்மாப் பேசினவரிடம் செல்லம்மா விஷயத்தைச் சொல்லியிருக்கிறாள். வந்து பார்த்தார். அவர் நாயுடு. மிகவும் சாது. சுப்பையா வாத்தியாரும் நாயுடுதான், ஆனால் முரடு. நந்துவைப் பார்த்து இந்தத் தமிழ் வாத்தியார் வாஞ்சையுடன், மணிவண்ணா! இங்கே வா!' என்றுதான் அழைப்பார். குழந்தைகள் மகிஷாசுரமர்த்தினி அப்போதுதான் சொல்லி முடித்தன.

"இதல்லாம் எதுக்கும்மா? அந்தக் கண்ணன் பேரைச் சொன்னா போதாதா? சௌந்திரம் பட்டர்பிரானோட 'பட்டிணம் காப்பு' சொல்லும்மா, போதுமென்றார்.

இவர் எந்த பட்டிணத்தைச் சொல்கிறார் என்று அவளுக்குப் புரியவில்லை. அவள் ஏதாவது உளறிக் கொட்டப் போகிறாளே என்று செல்லம்மா முந்திக் கொண்டாள். 'சார்! அது அவளுக்குப் பாடமில்லை. நீங்க எழுதிக் கொடுத்தா, நான் படிக்கிறேன்' என்றாள்.

"வீட்டில் திவ்யப்பிரபந்தம் இல்லே? நீங்க வைணவங்கதானே?" என்றார். இவளுக்கு தர்ம சன்கடமாய் போச்சு. 'இல்லே சார்! அது இருக்கு. எங்காவது பரண்லே இருக்கும். இல்லாட்டி தாத்தா எடுத்துட்டுப் போயிருப்பர்ர்' என்றாள். மார்கழி மாதத்து அனுபவித்தில் அவளுக்கு திருப்பாவை மட்டும்தான் தெரியும்.

"அப்படினா சரி, நான் எழுதி படி எடுத்துத்தரேன். வாசியுங்க. எல்லாம் சரியாப் போயிடும். அதான் அவர் கவசம் எழுதி வச்சுருக்காரே. வேற என்ன வேணும் நமக்கு?" என்று போய்விட்டார்.

அன்று இரவு செல்லம்மா, பெரியாழ்வாரின் பட்டிணம் காப்பு செய்யுளை நந்துவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சொல்லிக் கொண்டிருந்தாள். இவ்வளவு அரவணைப்பின் மத்தியில் நந்து நிம்மதியாகத் துயில் கொண்டான். காய்ச்சல் இறங்க ஆரம்பித்தது!

4 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/28/2006 04:30:00 AM

//அவள் படிக்கவில்லையே தவிர அவள் கர்மயோகி. கடமைக்கு தயங்கியதே இல்லை அவள்.//

எல்லார் வீட்டுலேயும் பாவம் இப்படி ஒருத்தர் இருக்காங்கப்பா! நான் எப்பவுமே இவுங்க கட்சி தான்! யாராச்சும் இவுங்கள சீண்டினா...அவ்வளவு தான்! :-))

பட்டிணம் காப்பா? கேள்விப்பட்டா மாதிரி தான் இருக்கு! பெரியாழ்வார் பாசுரம் தானே சார்?

"உற்ற உறுபிணி நோய்காள்
உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார்
பேணும் திருக்கோயில் கண்டீர்"

என்று வருமே! கரெக்டா சார்?

நா.கண்ணன் 11/28/2006 08:18:00 AM

"பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்!

அதே! அதே! இது குறித்து முன்பொரு பாசுர மடல் எழுதியுள்ளேன். மேற்சொன்ன வரிகளுடன் அப்படியே ஒத்துப்பொகும் திருமூலர் பாடலுண்டு

"ஊனுடம்பு ஆலயம்" என்று வரும்.

ஜெயஸ்ரீ 11/28/2006 08:35:00 AM

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே

நா.கண்ணன் 11/28/2006 09:42:00 PM

உடனே எடுத்துத் தந்தமைக்கு நன்றி ஜெயஸ்ரீ

பெரியாழ்வார் உடலை ஏன் பட்டினம் என்கிறார்? ;-)