இந்தியா சிங்கப்பூர் ஆகிவிடுமா?

'எழுச்சிரும் இந்தியா! - கீழக்காசியாவில் இந்தியா' எனும் இரண்டு நாள் பட்டறைக்கு சிங்கப்பூர் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பள்ளிப் பருவத்தில் சிங்கப்பூர் எட்டாக்கனியாக இருந்த போதும் கலைமகளின் கடாக்ஷம் கிடைத்த பின் அடிக்கடி செல்லும் வாய்ப்புக் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு முறை செல்லும் போதும் சிங்கப்பூர் புதுப்பொலிவுடன் அமைவது ஆச்சர்யம். தொடர்ந்து அந்நகரை பராமரித்து வருகிறார்கள். கொத்தவால் சாவடியை சொதப்பலாக வைத்திருக்கும் அதே தமிழர்கள் 'சின்ன இந்தியாவை' இவ்வளவு சுத்தமாக எப்படி வைத்திருக்க முடிகிறது? என்ற கேள்வி வருகிறது. 'ஒழுங்கற்ற தன்மையே' இந்தியாவின் சிறப்பு, அதன் இருப்பு என்றெல்லாம் பேசுபவர்கள் கூட சிங்கப்பூர் வரும் போது மூக்கில் கை வைக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் எமெர்ஜென்சி இருந்த போது டெல்லி ரயில் நிலையத்தில் இரவு தங்க வேண்டி வந்தது. பிளாட்பாரத்தில் பாய் விரிக்காமலே தூங்கலாம் போல் இருந்தது. ஏன் இந்தியர்கள் யாராவது சொன்னால், பிரம்பு காட்டினால் மட்டுமே சுத்தமாக இருப்பேன் என்ற மனோநிலை கொண்டிருக்கிறார்கள்? கொரியாவும் ஒரு வளரும் நாடே. கிழடு கட்டைகள் கூட வயதைப் பொருட்டாகக் கொள்ளாமல் ஏதாவது வேலை செய்து கொண்டு, கூட்டிப் பெருக்கிக் கொண்டு இருக்கின்றன. வாயிலே வெற்றிலை போட்டு, தெருவில் துப்புவது இல்லை. இந்த அடிப்படைச் சுகாதார உணர்வு இவர்களிடம் ஏனுள்ளது? ஏன் இந்தியர்களிடம் இல்லாமல் போய்விட்டது? யாரைக் குற்றம் சொல்வது? நமது தத்துவங்களையா? நமது சமூகவியல் பார்வையையா? நமது அறிவியல் பாரம்பரியத்தையா? இல்லை தமிழ்ப் பண்பாட்டையா?

பிலிப்பைன்ஸ் ஏழை நாடு. அங்கும் சேரிகளுண்டு. ஆனால், நம்ப மாட்டீர்கள், அவர்கள் சேரிகள் கூட சுத்தமாக உள்ளன. இவர்களிடம் இருக்கக் கூடிய அடிப்படை சுகாதார உணர்வு, சுத்தம், ஏன் சென்னைச் சேரி வாசிகளிடம் இல்லை? ஒரு காலத்தில் நீராடும் ஆறாக இருந்த கூவம் ஏன் நாறுகிறது? தோணிகள் ஓட்டி விளையாடிய அக்கூவம் சாக்கடையாக ஏன் மாறிப்போனது?

தமிழ்க் குடி பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள் சில அடிப்படைக் கேள்விகளை கேட்க மறந்து விடுகின்றனர். நாணயம் என்பது ஏன் தமிழ் மண்ணில் காணாமல் போய்க்கொண்டுள்ளது? சென்னை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் தகறாரு இல்லாமல் ஆட்டோ ரிக்க்ஷாவில் போக முடிகிறதா? மீட்டர் போட்டு ஓட்ட வேண்டுமென்ற அடிப்படை நாணயம் தமிழ் மண்ணை விட்டு எப்போது போனது? பெங்களூரில் ஓட்டுகிறார்கள், கேரளாவில் ஓட்டுகிறார்கள், ஆனால் தமிழ் நாட்டில் கிடையாது. சுயமரியாதைக்கென ஒரு இயக்கம் கண்ட தமிழ் மண்ணில் சுயமரியாதை என்றால் எனாவென்றே தெரியவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் செய்வது வழிப்பறி, கட்டாயப் பிச்சை என்று ஏன் உணர்வதில்லை?

19ம் நூற்றாண்டு ஐரோப்பிய நூற்றாண்டு. இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க நூற்றாண்டு. இருபத்தியோராம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு. சீனா, கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளில் அடிக்கடி பயணப்படும் என்னால் இதை உணர முடிகிறது. இனிமேல் சௌகர்யங்களை அனுபவிக்க அமெரிக்கா போக வேண்டிய அவசியமே இல்லை. காற்செலவில் அதே வசதியை இந்நாடுகளில் (ஜப்பான் தவிர) பெற முடிகிறது. வசதிக்கு வசதி, பண்பாட்டிற்கு பண்பாடு, ஆசிய உணவிற்கு உணவு...இங்கெல்லாம் அமெரிக்கா போக வேண்டுமென்ற உணர்வு குறைந்து வருகிறது. தங்கள் நாடுகளை அமெரிக்கா அளவிற்கு உயர்த்த வேண்டுமென்ற உணர்வு இவர்களிடமுள்ளது.

2020-ல் இந்தியா வளர்ந்து விட்ட நாடாகிவிடுமென்ற தேசியத்தலைவர் கனாக்காணச் சொல்கிறார். ஒரு நாடு வளர்ந்த நாடா இல்லையா என்பது பொருளாதார வசதியை மட்டும் வைத்துக் கணிப்பதல்ல. பின் எது வளர்ச்சியைக் குறிக்கிறது?

1. குடியுரிமை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,
2. சுதந்திரம் கேட்டுப் பெறாமல் இயல்பாக அமைய வேண்டும்,
3. தனிமனித சுதந்திரமும், சுய மரியாதையும் வளர்ச்சியுற்று இருக்க வேண்டும்,
4. ஒவ்வொரு உயிரும் மதிக்கப்பட வேண்டும்,
5. அடிமைக்குணமும், அடிமைத்தனும் அடியோடொடு அகன்றிருக்க வேண்டும்,
6. பெண்களும், குழைந்தைகளும் நிம்மதியாய் எந்தப் பொழுதிலும் தெருவில் நடமாடவேண்டும்,

இவற்றுடன்,

7. அடிப்படை வசதிகளான இருப்பிடம், நீர், மின்சாரம், போக்குவரத்து, வாகன வசதிகள் இருக்க வேண்டும்.

இதை 2020க்குள் இந்தியா பெற்றுவிடுமா? இதை தற்போதுள்ள ஜனநாயக அமைப்பு பெற்றுத் தருமா? இந்திய அரசியல் பண்பாடு இதை வழங்குமா? கிட்டப்பார்வையிலே மக்களைச் சுரண்டும் குணம் இந்தியாவை விட்டு அகலுமா? கோடி கோடியாக இந்தியாவில் சுருட்டிய பணத்தை சுவிஸ் பாங்கில் போட்டால், அந்த நாடுதான் வளரும், இந்தியா வளராது! ஒரு கட்டை வண்டி ஓட்டக் கூட லாயக்கில்லாத ரோடுகள் உள்ள நாட்டில் மெர்சிடஸ் வைத்துக் கொண்டு என்ன பயன்?

இந்தியா பாலிவுட், கோலிவுட் என்று கனவுகளை தயாரித்து இந்தியாவை ஏமாற்றியது மட்டுமல்லாமல், உலகையும் ஏமாற்றத் தொடங்கிவிட்டது.

இந்தியா வளர்ச்சியுற்ற நாடாக வேண்டுமெனில் அது டாக்டர் அப்துல் கலாம் கனவில் மட்டும் இருந்தால் போதாது! ஒவ்வொரு இந்தியனின் செயலில் இருக்க வேண்டும். சொர்க்கம் என்பது வேறெங்கும் இல்லை. நம்மை, நம் சூழலை நாம் எப்படி வைத்துக் கொள்கிறோம் என்பதே நாம் சொர்க்கத்தில் இருக்கிறோமா? இல்லை நரகத்தில் இருக்கிறோமா? என்பதை தீர்மானிக்கிறது

சிங்கப்பூர் என்ற சொர்க்கபுரியை நிர்மாணித்தவர்கள் தமிழர்கள். இப்போது பராமரித்து வருபவர்கள் தமிழர்கள். சீன, மலேய் சமூகங்களுடன் ஒட்டுறவாடி இதை அவர்களால் சாதிக்க முடியும் போது, கள்ளன், பறையன், செட்டியார், ஐயர் இவர்களுடன் சேர்ந்து தமிழ் மண்ணில் ஏன் நிர்மாணிக்க முடியவில்லை?

2020-ல் இந்தியா எங்கு நிற்கும்? இந்தியா சிங்கப்பூர் ஆகிவிடுமா? முடியும் என்று தெரிகிறது. எப்படி என்பதைப் பற்றியே இவர்கள் கவலை கொள்ள வேண்டும், இனி.

10 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் 11/05/2006 12:12:00 PM

நம்ம ஊரில் ரோட்டில் துப்பும் அதே மக்கள்ஸ், சிங்கை வந்தால் ( எங்கே ஃபைன் போட்டுருவானோ? என்ற
நினைப்பில்) நாலுநாள் ஒழுங்கா இருந்துட்டு, மறுபடி ஊருக்குப் போனதும் 'பழைய ***** கதவைத் திறடி' தான்(-:

'ஊதுற சங்கை ஊதியாச்சு'ன்னு சொல்லிக்கவா?

நா.கண்ணன் 11/05/2006 12:17:00 PM

துளசி!

ஊதற சங்கு இல்லை இது. எழுச்சியுறும் இந்தியா என்பது உண்மை. பெரிய எதிர்பார்ப்பும் கூட. பத்திரிக்கைகள் பேசுகின்றன. பல்கலைக் கழகங்கள் பேசுகின்றன. இந்தியா அதை எப்படி செயல் படுத்தப்போகிறது என்பது முக்கியமான கருத்து. இது பற்றிய ஆரோக்கியமான விவாதம் காலத்தின் தேவை. மார்க்கெட்டிங் என்பதில் இந்தியா எப்போதும் சொதப்பி விடுகிறது (சில துறைகள் தவிர (பாலிவுட் இதில் கில்லாடி). வளர்ச்சியுரும் இந்தியா பற்றிய ஒரு தெளிவு இந்தியர்களுக்குத் தேவை.

Sivabalan 11/05/2006 12:26:00 PM

//பிலிப்பைன்ஸ் ஏழை நாடு. அங்கும் சேரிகளுண்டு. ஆனால், நம்ப மாட்டீர்கள், அவர்கள் சேரிகள் கூட சுத்தமாக உள்ளன. //

சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அடிப்படையிலேயே அங்கே இருக்கிறது என்பது நன்றாக விளங்குகிற்து..

இது இந்தியாவில மிஸ்ங்..ம்ம்ம்ம்ம்ம்

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/05/2006 01:17:00 PM

வளர்ந்த நாடுகளில் உள்ள விழிப்புணர்ச்சியும், திட்டமிடுதலும், enforcement என்று சொல்லப்படும் நடைமுறைப்படுத்தலும் முக்கியமான காரணங்கள்!
இந்தியாவுக்குத் தேவை ஆரோக்கியமான விவாதம், திட்டமிடல், தெளிவு! தெளிந்த பின் enforcement!

குப்பைகளும், துப்புதலும், கண்ணெதிரில் நியுயார்க் நகரில் கண்டுள்ளேன்! Times Square சாலையில் குண்டு குழிகள் பிரபலம்! ஆனால் மார்க்கெட்டிங்கில் இந்நகரை மிஞ்ச முடியாது!

அருண்மொழி 11/05/2006 03:07:00 PM

சிங்கையில் பள்ளியிலேயே சுத்தம் பற்றி வகுப்புகளில் பாடம் எடுக்கப்படுகின்றது. சிறு வயதிலேயே பழக்க வழக்கங்கள் கற்று கொடுக்கப்படுகின்றன. அதுவும் ஒரு காரணம். ஆனால் இப்போது நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு வருகின்றது. 10ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுத்தம் இப்போது இல்லை. இது கவலை அளிக்கும் விஷயம். அதே நேரத்தில் மற்ற நாடுகளில் சுத்தம், சுகாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இவன் 11/05/2006 03:26:00 PM

//இந்தியா வளராது! ஒரு கட்டை வண்டி ஓட்டக் கூட லாயக்கில்லாத ரோடுகள் உள்ள நாட்டில் மெர்சிடஸ் வைத்துக் கொண்டு என்ன பயன்//

I have the same question in my mind for a quit long time. But today you asked it.

While coming to the public we will miss everything. The main thing is missing our discipline.

In my earlier days in Chennai every Saturday evening I go to Marina beach along with my room mate. If I have any snacks I won't throw any trash in the beach. But my friend does. While preaching about discipline in public place to him he will get angry and say "If you & I change is the whole India will change? No! So let’s follow the discipline of common man".

But he changed after his visit to US. If everything changes like him, in near future we can achieve the discipline in common place.

The elders are teaching the same indiscipline to the young generation to achieve them goal. In Namakkal district a young(will be 10 year old) higher secondary school which has won two State First award in +2 in a short span of time. The management of the school provides the answers for 1 mark, 2 mark questions in the public exams itself.

Is any one thing the students from this school going to achieve anything in the lawful manner? I don’t think so. The school is producing future educated criminals.

Until unless all our Indians has disciple we can’t achieve the 7 things you said
///
1. குடியுரிமை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,
2. சுதந்திரம் கேட்டுப் பெறாமல் இயல்பாக அமைய வேண்டும்,
3. தனிமனித சுதந்திரமும், சுய மரியாதையும் வளர்ச்சியுற்று இருக்க வேண்டும்,
4. ஒவ்வொரு உயிரும் மதிக்கப்பட வேண்டும்,
5. அடிமைக்குணமும், அடிமைத்தனும் அடியோடொடு அகன்றிருக்க வேண்டும்,
6. பெண்களும், குழைந்தைகளும் நிம்மதியாய் எந்தப் பொழுதிலும் தெருவில் நடமாடவேண்டும்,

இவற்றுடன்,

7. அடிப்படை வசதிகளான இருப்பிடம், நீர், மின்சாரம், போக்குவரத்து, வாகன வசதிகள் இருக்க வேண்டும்.

///

This is not a negative thought. But it’s a fact. Let’s hope for the best.

Vande Matharam
-Ivan

நா.கண்ணன் 11/05/2006 03:34:00 PM

நன்றி நண்பர்களே:

இந்தியாவில் இருக்கும் போது சில கேள்விகள் உறுத்துவதில்லை. உயிர்கள் கஷ்டத்திற்கு எளிதாகப் பழகிவிடுகின்றன (மனிதன் என்றில்லை). சுத்தம், சுகாதாரம், சுதந்திரம் என்பது ஒழுக்கம் சார்ந்தது. எனவேதான் வள்ளுவன் ஒழுக்கம் பற்றி அதிகமாகப் பேசுகிறான்.

வெளிநாடுகளில் நல்ல குடிமகனாக வாழும் நம்மால் நம் நாட்டில் ஏன் நல்ல குடிமகனாக வாழ முடியவில்லை? புற/அகக் காரணிகள் எவை?

கேள்விகள் இல்லாமல் முன்னேற்றம் இல்லை ;-)

வடுவூர் குமார் 11/05/2006 04:12:00 PM

நா.கண்ணன்
இதே கேள்வியை நான் சமீபத்தில் ஊருக்கு போன போது திரு மா.சிவகுமார் கொஞ்சம் மாற்றிக்கேட்டார்.
தமிழ் நாட்டை சிங்கப்பூராக மாற்றிக்காட்ட என்ன செய்ய வேண்டும்? அவ்வளவு வேண்டாம் சென்னையை மாற்ற என்ன செய்யவேண்டும்.
எனது பதில் சுருக்கமாக..
சென்னையை மாற்றக்கூடாது..
பக்கத்திலேயே ஒரு பெரிய நகரை நிர்மானிக்கவேண்டும்,அதை பார்த்து சென்னை திருந்தவேண்டும்.
முடியும்,முயற்சித்தால்.
இப்போது உள்ள மாதிரி போஸ்டர் கூடாது,கூட்டம் கூடாது,ஊர்வலம் கூடாது.சாலையை தோண்டக்கூடாது...இப்படி பல கூடாதுகள் அமல்படுத்தவேண்டும்.
இப்படி ஒரு இடத்தை அமைப்பது என் கனவு கூட

நா.கண்ணன் 11/05/2006 04:20:00 PM

குமார்: சமீபத்தில் நடந்து முடிந்த கருத்தரங்கில் இறுதியாகப் பேசும் போது திரு.அருண்மகிழ்நன் ஒரு கருத்தைச் சொன்னார். இந்தியர்கள் புத்திசாலிகள். ஞானப் பகிர்வில் தேர்ந்தவர்கள். ஆனால் சேர்ந்து செயல்பட வேண்டுமெனில் அவர்களால் முடியாது என்று. ஆழமான தத்துவங்கள் வந்த இந்தியாவில் ஒரு கன்பூஷியன் வந்திருந்தால் நம் நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கும். சீன வம்சாவளியினருக்கு இயல்பாகவே பெரியோர்/தலைவன் பேச்சைக் கேட்பது, கூட்டாக செயல்படுவது என்பது அமைந்திருக்கிறது. இது நம்மவரிடம் இல்லை. தண்டனை என்றால்தான் பயப்பட்டு வேலை செய்வேன் என்பது கேவலமான மனோநிலை. அது எப்படி? எப்போது நம் உள்ளத்தில் ஊறிப்போனது?

Hariharan # 26491540 11/05/2006 10:39:00 PM

உண்மையில் வருந்தத்தக்க விஷயம்.
கூவம் ஆற்றில் 0% ஆக்சிஜன்! அடையாறு நதியையும் அப்படியே நாறடித்த பெருமை கூடியிருக்கிறது.

பெரிய அளவில் அடிப்படை சமூகப் பொறுப்புணர்வு பற்றிய விழிப்பு வரவேண்டும் பள்ளியில் சொல்லித்தரும் ஆசிரியர்கள் முதலில் பயிற்சி எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கும் சொல்லித்தரவேண்டும்!

தனியார் சமூக நிறுவனங்கள் மூலமாகவும் செய்யவேண்டும்!

சரியாகும் இந்திய ஸ்டைலில் மெள்ளமாகத்தான்! அதெல்லாம் பிக்கப் ஆகிடுவோம் கண்ணன்!