நான் யார்?

ஒரு சினிமாவிலே எம்.ஜி.ஆர் பாடுவார்:

நான் யார்? நீ யார்? நான் யார்?
நாலும் தெரிந்தவர் யார், யார்?
தாய் யார், மகன் யார் தெரியார்?
தந்தை என்றால் அது யார், யார்?

இப்படியே போகும் இது. பார்த்தா கண்ணதாசன் போல் படுகிறது. சில நேரம் வாலி கூட நல்ல பாட்டெல்லாம் எழுதுவார்.

சினிமாவிலிருந்து, சித்தாந்தம் வரை, அன்று தொட்டு இன்று வரை இந்தியச் சிந்தனையை உலுப்பும் கேள்வி இது. நான் யார்? என்பது.

இந்த நான் என்பது எவ்வளவு தெளிவா இருக்கோ, அது போலவே மறைவாகவும் இருக்கு. அதனாலேயே, இந்த 'நான்' யார் என்பதை விளக்கும் சாஸ்திரங்கள் 'மறை' என்று அழைக்கப்படுகின்றன.

நான் யார் என்பது கண்ணாடியைப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது (மூக்குக் கண்ணாடியை எடுத்துவிட்டால் அவ்வளவு தெளிவில்லை, ஆனாலும் நான் இருப்பதை உணர்கிறேன் :-)

இப்படித்தான் திரிசங்கு என்பவன் உடலோடு சொர்க்கம் போகமுடியுமா? என்று எல்லோரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு இம்சைப் படுத்தியிருக்கான். உடல்தான் நான் என்று தெரிகிறது. ஆனால், காலொடிந்து போய் விட்டால் 'என் கால் ஒடிஞ்சு போச்சு' என்கிறோமே தவிர, உடைந்து போன காலோடு 'நான்' போய் விட்டேன் என்று யாரும் சொல்வதில்லை. ஆக உடல் 'நான்' இல்லை என்று தெரிகிறது.

சரி, மூச்சுக்குள்ளே 'நான்' இருக்கிறேனா? என்றால் அங்கும் இல்லை. ஏண்டா 'என்' பிராணனை எடுக்கிறே!' என்கிறோம். ஆக இந்தப் பிராணன் நான் இல்லை என்று தெரிகிறது.

உசுரு?ஹூம்..அதுவும் இல்லை. ஏன்னு என் உசிரை வாங்காதீங்கோ :-) !! [அப்ப, 'என்' உசிருன்னு சொல்லும் போது அதுவும் என்னிலிருந்து அந்நியப்பட்டுப் போகிறது)

அப்ப அது என்ன? அது என்னன்னு 'என்' மனசு கிடந்து அடிச்சுக்குது!! ஓகோ! அப்ப, 'மனசும்' நான் இல்லை என்று தெரிகிறது.

செத்துப் போறதுக்கு முன்னாடியும், செத்துப்போனவுடனும் எடை எடுத்துப் பார்த்தார்கள், ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் ஏதோ போய் விட்டது தெரிகிறது! லேசா, ஊது வத்தி முனை பட்டுட்டாக் கூட துடித்துப்போகும் உடல், சிதையில் வைத்து எரிக்கும் போது, ஐயோ! அப்பா! என்று அலறுவதில்லை. நன்றாக வக்கணையாக (குறை சொல்லிக்கொண்டேனும்)சாப்பிடும் ஆசாமி, வாக்கரிசி போடும் போது உண்பதில்லை. விட்ட பால் வழிந்து விடுகிறது. உள்ளே போவதில்லை.

'உடலுக்கு உயிர் காவல்' ன்னு ஒரு பி.பி.எஸ் பாட்டு. அருமையா இருக்கும். பார்த்தா உண்மையில் உடலுக்கு போஷனம் (சத்து) உணவு இல்லை என்று தெரிகிறது. இந்த 'நான்' என்கிற சமாச்சாரம் உள்ளே இருக்கும்வரைதான் எந்தச் சாப்பாட்டையும் ரசிக்க முடிகிறது.

இந்த நான் இருட்டில் கூட 'உணர்வாகப்' புரிகிறது! யாரும் இருட்டில் சுயம் காணாமல் போனதாக கதை இல்லை. பயித்தியங்களுக்குக் கூட இந்த 'நான்' தெளிவாகவே இருக்கிறது. 'நான்' டாக்டர், 'நான்' முதலாளி என்று சொல்லத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் 'தான்' இருக்கிறோம் என்ற உணர்வுண்டு. நெருப்பு சுட்டால் கையை எடுக்கத் தெரிகிறது. [வேடிக்கை என்னவெனில் இப்படி 'நான்' டாக்டர் என்று பெருமைப்படும் நபர்களுக்கு பட்டங்கள்தான் 'நான்' என்ற உணர்வு. உண்மையில் அதுவல்ல அவர்]

ஆக, இந்த நான் என்ற ஒன்று சுயப்பிரகாசமாக, ஞான சொருபமாக உள்ளே உறைந்துள்ளது.அதுதான் அதன் பெருமை!

உண்மையில் இந்த 'நான்' எத்தகையது?

இது ஜடமா? இல்லை! என்பது தெளிவாகவே புரிகிறது. எனவே அது 'சித்து'. ஆங்கிலத்தில் 'sentinel' என்று சொல்லலாமா? அதற்கு தான் இருப்பது தெரிகிறது, பிற இருப்பதும் தெரிகிறது. இதைப் பார்க்கமுடியவில்லையே தவிர அது இருப்பது எல்லோருக்கும் தெரிகிறது. இதை யாரும் மறுப்பதில்லை. அது 'மறைவாக' உள்ளது.

சரி, இந்த 'சித்', ஜீவன் எங்கும் பரந்துள்ளானா? இல்லை என்று தெரிகிறது. அது கட்டுப்பட்டு இருக்கிறது. உடலோடு கட்டுப்பட்டு இருக்கிறது. பிறக்கிறது, இறக்கிறது, மீண்டும் பிறக்கிறது. எனவே அதற்கு போக்கு, வரவு இருக்கிறது. போக்கும், வரவும் உள்ள ஒன்று particle state-ல் இருக்க வேண்டும். மாறாக இறைவன் wave function-ஆக இருக்கிறான். 'போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே!' என்கிறார் மாணிக்கவாசகர். 'பிறப்பிலி' என்கின்றனர் ஆழ்வார்கள். ஆக, இறைவன் எல்லா இடத்திலும், எப்போதும் இருக்க முடிகிறது. மனிதனுக்கு ஒரு இடத்தில், ஒரு பொழுதில் இருக்கவே முடிகிறது.

எனவே இதிலிருந்து இந்த 'நான்'க்கு மேற்பட்ட ஒன்று இருப்பது தெரிய வருகிறது. (இதற்குள் இப்போது போக வேண்டாம்). அதைப் பார்க்கும் போது 'இது' அடக்கத்துடன் இருக்க வேண்டியது புரியாமலே தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.

ஒருமுறை ஒரு வைணவப் பெரியவரிடம் இம்மாதிரி ரகஸ்ய கிரந்தங்களை அறிந்து கொள்ள ஒரு சீடன் புறப்பட்டு இருக்கிறார். போய் கதவைத் தட்டி இருக்கிறார். 'யார்?' என்று குரல் உள்ளேயிருந்து. 'நான்' கிருஷ்ணமாச்சாரி வந்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். உள்ளேயிருந்து பதில், 'நான் செத்த பின் வா!

இவர் பாவம் என்ன அபச்சாரமோ! என்று பயந்துவிட்டார். விவரம் தெரிந்தவர்களிடம் தம் சம்சயத்தைக் கேட்டிருக்கிறார். ஆச்சாரியர் சொன்னது 'நான்' என்ற மடமை செத்த பின் வா! என்பதே என்று சொல்லி, 'நான்' என்ற ஜீவன், ஆத்மா எப்போத்ம் இறைவனுக்கு 'தொண்டு பட்டே' உள்ளது. இறைவன் என்ற பரமாத்மா இல்லாவிடில், 'நான்' என்ற ஜீவாத்மாவிற்கு தனி இருப்பு இல்லை. எனவே அடுத்தமுறை செல்லும் போது, 'யார்?' என்று கேட்டால், 'அடியேன்' என்று பதில் சொல். அதுவே இந்த 'நானின்' உண்மை சொரூபம் என்று இவனின் சொரூப லட்சணத்தைக் காட்டி அருளியிருக்கின்றனர்.

இப்படி நமக்கு, நமது சொரூப லட்சணத்தைக் காட்டுபவன், ஆச்சார்யன். நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவைக் காட்டுபவன் ஆச்சார்யன். எப்படி அப்பாவைக் காட்டுபவரை 'அம்மா' என்று அழைக்கின்றோமோ அது போல் இறைவன் எனும் தந்தையைக் காட்டும் ஆச்சார்யனையும் தாய் என அழைப்பது சாலப் பொருந்துமே. இதனாலேயே வைணவ மரபில் எல்லோருக்கும் முதன்மையாக இருக்கும் சடகோபன் (நம்மாழ்வார்)'முதல் தாய்' என்று அழைக்கப்படுகிறார். இராமானுஜரை 'இதத்தாய்' என்று சொல்லும் வழக்கமுண்டு (தயோ சிந்தோ).

உடலுக்கு உயிர் காவல்
உலகிற்கு ஓளி காவல்
கடலுக்கு கரை காவல்
கண்ணுக்கு இமை காவல்

மழலைப் பருவத்தில் தாய் காவல்
வளர்ந்துவிட்டால் தன் மனம் காவல்
இளமையிலேயே ஒரு துணை காவல்
இறந்துவிட்டால் பின் யார் காவல்?

11 பின்னூட்டங்கள்:

பத்மா அர்விந்த் 11/10/2006 06:51:00 AM

Kannan
Nice to read. Have you heard " cut I clean (a)cross"
Padma

நா.கண்ணன் 11/10/2006 08:21:00 AM

Cut I clean (a)cross?

புரியலையே? ;-0

துளசி கோபால் 11/10/2006 08:41:00 AM

//செத்துப் போறதுக்கு முன்னாடியும், செத்துப்போனவுடனும் எடை எடுத்துப் பார்த்தார்கள்,
ஒரு வித்தியாசமும் தெரியவில்லை//

அப்ப... 'பொணங்கனம் கனக்கறது ' சொல்றமே, அது என்ன(வாம்)?:-)))

நல்ல பதிவு கண்ணன். நான் என்ற அகந்தை இல்லாமப் போகணும். அப்பத்தான்
எல்லாமே நல்லது.

பத்மா அர்விந்த் 11/10/2006 09:08:00 AM

இங்கே பொதுவாக நான் (I) இழந்தால்தான் சிலுவையை அடைய முடியும் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்.

நா.கண்ணன் 11/10/2006 09:11:00 AM

துளசி!

நன்றி. நம் உடல் கனம் எவ்வளவு என்று உயிருடன் இருக்கும் போது தெரிவதில்லை. பயணப்படும் போது சூட்கேஸ் 10-15 கிலோ இருந்தால் எளிதாக இருக்கும். 20 கிலோ கொஞ்சம் கஷ்டம். 25 கிலோ எனும் போது ரொம்ப கஷப்பட்டும். சில சூரர்கள் பெரிய பொட்டியில் அடைத்து 40 கிலோ தூக்கிக்கொண்டு வருவார்கள்.

நாம் ஒவ்வொருவரும் 50-90 கிலோ வரை இருக்கிறோம். அப்ப என்ன கனம் கனக்கும்? சும்மா, விளையாட்டாக ஒருவரை படுக்கச் சொல்லி அவரின் தலையை உங்கள் கையால் தூக்கிப் பாருங்கள். 5 நிமிடம் தூக்க முடிகிறதா பாருங்கள்!!

இதை உணர்ந்துதான் யோக அப்பியாசத்தில் உடலின் கனத்தையே பயன்படுத்தி பயிற்சிகள் அமைந்துள்ளன. இதற்கென தனியாக 'வெயிட்' அவசியமே இல்லை.

இப்பப் புரிகிறதா? பொணம் கனம் எங்கிருந்து வருகிறது என்று!!

நான் என்பது தப்பில்லை. தலைக்கனம் கூடாது. பேரரளுளானனுக்கு உடமைப் பட்டவர்கள் என்ற ஞானம் எப்போதும் இருக்க வேண்டும். நம் கையில் உண்மையில் ஒன்றுமே இல்லை!

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/10/2006 10:14:00 AM

ரொம்பவும் எளிமையாச் சொல்லி இருக்கீங்க கண்ணன் சார்!

"நானாக நான் இல்லை தாயே!
நல்வாழ்வு தந்தாயே நீயே" என்று ஒரு படத்தில் கமல் பாடுவது தான் நினைவுக்கு வருகிறது! அதை அப்படியே உல்ட்டா செய்து பக்திப் பாடலாக்கிப் பார்த்தால் நீங்கள் சொல்வதும் அப்படியே பொருந்துகிறது!

எல்லாம் அற "என்னை இழந்த" நலம்
சொல்லாய் முருக சுர பூபதியே!

நா.கண்ணன் 11/10/2006 10:21:00 AM

நானாக நான் இல்லாமல் இருத்தல்!

சுவாரசியமாக இருக்கிறது!

அப்போது என்ன நடக்கிறது?

எல்லாமும், யாவையுமாய் நாம் இருக்கிறோம். அப்பாடா! எவ்வளவு பெரிய ஆள் நாம, ஆனால் இந்த அகங்காரம் உள்ளே புகுந்து ஆளைச் சுருக்கி விடுகிறதே!

(உங்களிடமிருந்து பாசுரம் மேற்கோள் வருமென்று பார்த்தேன் ;-)

கால்கரி சிவா 11/24/2006 08:31:00 AM

//சரி, இந்த 'சித்', ஜீவன் எங்கும் பரந்துள்ளானா? இல்லை என்று தெரிகிறது. அது கட்டுப்பட்டு இருக்கிறது. உடலோடு கட்டுப்பட்டு இருக்கிறது. பிறக்கிறது, இறக்கிறது, மீண்டும் பிறக்கிறது. எனவே அதற்கு போக்கு, வரவு இருக்கிறது. போக்கும், வரவும் உள்ள ஒன்று particle state-ல் இருக்க வேண்டும். மாறாக இறைவன் wave function-ஆக இருக்கிறான். 'போக்கும் வரவும் இல்லாப் புண்ணியனே!' என்கிறார் மாணிக்கவாசகர். 'பிறப்பிலி' என்கின்றனர் ஆழ்வார்கள். ஆக, இறைவன் எல்லா இடத்திலும், எப்போதும் இருக்க முடிகிறது. மனிதனுக்கு ஒரு இடத்தில், ஒரு பொழுதில் இருக்கவே முடிகிறது.
//

இந்த வரிகள் சிறுவயதில் படித்த The wave-particle duality of light and matter ஞாபகம் வருகிறது. மேலும் ஹைசன்பெர்க்கின் நிலையில்லா தன்மைகளை பற்றியும் ஞாபகம் வருகிறது.

பொருளாகவும் அலையாகவும் உள்ளாய் என்பது படைத்தவனாகவும் படைப்பாகவும் (Creator and Creation) உள்ளவன் நீயே என்ற சைவசித்தாந்தையும் நினைவூட்டுகிறது.


மொத்தத்தில் அதிக சிந்தனைகளை தூண்டிவிட்ட பதிவு.நன்றி. அடுத்த முறை அமெரிக்கா வரும் போது கால்கரிக்கும் வாருங்கள்

நா.கண்ணன் 11/24/2006 09:09:00 AM

நன்றி சிவா:

இந்த மாதம் மொண்ரியலில் ஒரு கருத்தரங்கம் இருந்தது. போகவில்லை. அடுத்தமுறை கனடா வரும்போது கால்கரி வந்து சந்திக்கிறேன். கதைக்கலாம்.

குமரன் (Kumaran) 11/30/2006 08:53:00 PM

கண்ணன் ஐயா. இந்தத் தொடரில் அடாத மழை போல் விடாது பொழிந்து விட்டீர்கள். அதனால் உடனுக்குடன் படித்துப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றாகத் தாள்பிரதி எடுத்துப் படித்தேன். இப்போது தான் பின்னூட்டங்கள் இட முடிந்தது. தாமதத்திற்கு மன்னித்துவிடுங்கள்.

இந்த 'நான்' என்ற ஒன்றைப் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ முறை சொல்லிவிட்டார்கள். அதெல்லாம் கேள்வி ஞானமாய் நின்று விடுகிறதே ஒழிய அனுபவத்தில் என்னவோ மனம், மொழி, மெய் இவற்றையே 'நான்' என்று எண்ணிக் கொண்டு அந்த வகையிலேயே வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. படித்ததெல்லாம் அறிவின் அளவிலேயே நின்று கொண்டிருக்கிறது. அனுபவத்தில் இன்னும் வரவில்லை. ஆனால் என்ன அவனருளாலே அவன் தாள் வணங்கும் நேரம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

முத்தத்துவங்களில் சித் என்பது ஜீவனை மட்டுமே குறித்தாலும் அது பரமாத்ம குணங்களிலும் ஒன்று தானே. ஞான ரூபமாய் நிற்பதில் ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் வேறுபாடு இல்லை; சாம்யம். ஆனால் நீங்கள் சொன்னது போல் ஜீவன் போக்கும் வரவும் உடையது; ஈஸ்வரன் அப்படி இல்லாதது. என்று ஒரு நல்ல எடுத்துக்காட்டைச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

அடியேன்.

நா.கண்ணன் 11/30/2006 10:10:00 PM

குமரன்:

நன்றி.

சங்கரரின் கீதா பாஷ்யத்தில் ஜீவனை வைத்துத்தான் ஈஸ்வரனை விளக்குகிறார். அப்படித்தான் விளங்கிக் கொள்ளமுடியும். ஒன்று விஸ்வரூபன், மற்றது, பெரியாழ்வார் சொல்வது போல் பட்டினத்துச் சொந்தக்காரன். இவன் ராஜ்யம் சிறியது. அவன் உலகு அளப்பவன். ஆயினும் இந்தச் செத்ததின் (போக்கு வரவுடைய) உடலிலும் அவன் உறைவது அவன் கிருபை. அதனால் அவனே ஜீவனுக்கு தாரக போஷனன். நிறைய பரிபாஷை பயன்படுத்துகிறேன். அது இல்லாமல் இதை விளக்கவியலாது. இப்ப என்ன அவசரம் மெதுவாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். பின்னூட்டம் என்பது ஒரு திண்ணைப் பேச்சு. அது ஞான போதனம். அது எப்போதும் அவசியமில்லை. நீங்கள் ஆத்மா என்று பார்த்துப் பழகிக் கொள்ளுங்கள். வந்துவிடும்.