அலை கடல் அமரும் தெய்வம்

மாதா நரசிம்மச்ச பிதா நரசிம்ம
ப்ராதா நரசிம்மச்ச சகா நரசிம்ம
விதயா நரசிம்மோ த்ரவிணம் நரசிம்ம
ஸ்வாமி நரசிம்ம சகலம் நரசிம்ம

என்று துதிக்கிறார் ஆதி சங்கரர். மிக அழகான தோத்திரமிது. என் அன்னை நீ, தந்தை நீ, உடன் பிறந்தோரும் நீ, நண்பன் நீ, கல்வி நீ, வாழ்வு நீ, சுவாமி நீ, எல்லாம் நீயே நரசிம்மா!

இதே பொருளில் திவ்யப் பிரபந்தத்தில் பல பாடல்களுண்டு. மிகப்பிரபலமானது,

உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை
எல்லாம் கண்ணன் எம்பிரான்

என் அப்பன், பொன்னப்பன், முத்தப்பன்...

அறிவின் பயனே அரி ஏறே!

என்பன திருவாய்மொழிகள். தேடினால் நிறையக் கிடைக்கும்.

அறிவின் பயன் இறைவன் என்பது சுவாரசியமான பிரயோகம். அறிவு இருப்பதால் ஆய்வு செய்கிறோம். ஆய்வு செய்வதால் அறிகிறோம். அறிவதால் பயன் பெறுகிறோம். இது ஆன்மீகத்திற்குப் பொருந்துவதை விட நடைமுறை வாழ்விற்கே அதிகம் பொருந்துகிறது. நான் குழந்தையாய் இருந்த போதெல்லாம் child mortality என்பது மிக அதிகம். இதனாலேயே குடும்பங்களும் அப்போது பெரிதாய் இருந்தன. இப்போது பாருங்கள், ஒரு தம்பதியருக்கு ஒன்று அல்லது இரண்டு. அவ்வளவுதான். ஏனெனில் பிறக்கும் ஒன்று தங்கும் என்ற ஸ்திர நம்பிக்கை. அதை அறிவியல்-மருத்துவம் இன்று வழங்கியுள்ளது. Vaccination என்பதனால் அதிகப் பயனுற்ற நாடுகளில் இந்தியா ஒன்று. எத்தனைக் கொல்லும் வியாதிகள் அக்காலத்தில், அம்மை, போலியோ, டிபி, மலேரியா இப்படி. இவை எல்லாவற்றையும் விஞ்ஞானம் கட்டுப்படுத்தி இந்திய வாழ்வு நிலையை மேம்படுத்தியுள்ளது. எனவே அறிவிற்குப் பயனுள்ளது.

ஆனால் ஆதிசங்கரரும், நம்மாழ்வாரும் கல்வி என்பது இறைவனே என்று சொல்லுவானேன்? பிறந்தவுடன் நாம் கேள்வி கேட்பதில்லை. இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அன்பு செய்ய ஒரு அம்மா. சம்பாதிக்க ஒரு அப்பா. சண்டை போட சகோதர, சகோதரிகள். விளையாட நண்பன். பள்ளியில் அடித்துத் திருத்த வாத்தியார் (I hate him)...இப்படி. ஆனால், அறிவு வளர, வளர கேள்வி வருகிறது! இருப்பவையெல்லாம் எப்போதும் இப்படியே இருந்தனவா? இல்லை அவை ஒன்றிலிருந்து ஒன்றென வளர்ச்சியுற்றனவா? அம்மாவிற்கு முன்னால் யார்? முப்பாட்டனாருக்கும் முன்னால் யார்? எனக்கும் நான் சுவாசிக்கும் காற்றிற்கும் என்ன சம்மந்தம்? இசம்மந்தம் எப்போது ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?

அறிவு இருப்பதாலே விஞ்ஞானியும் சிந்திக்கிறான், மெய்ஞானியும் சிந்திக்கிறான். இருவரும் இருப்பதிலேயிருந்துதான் இல்லாததைக் கண்டுபிடிக்கின்றனர். பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் என்பது வெளிப்படை உண்மை.

ஒன்றிலிருந்து தோன்றியதுதான் எல்லாம் என்று இருவருமே சொல்கின்றனர். இயற்கை (Nature) என்னும் அறிவியல் சஞ்சிகையின் 150 வருட சிறப்பு சொற்பொழிவுகளில் ஒன்று இப்பிரபஞ்சத்தைப் பற்றியது. பெருவெடிப்பில் இப்பிரபஞ்சம் தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் யூகம். இப்பிரபஞ்சம் தோன்றிய சில நொடிகள் வரை இவ்வாய்வுகள் இட்டுச் செல்கின்றன. காலம், வெளி என்பது தோன்றும் முன்புள்ள நிலையை சரியாகக் கணக்கிட முடியவில்லை. பிரபஞ்சத்தின் விஸ்தீரணம் ஓரளவு பிடிபட்டுள்ளது. கருங்குழி எனும் புதைகுழியில் விழும் ஒன்று வேறொரு பிரபஞ்சத்தில் மீள்கிறது என்கின்றனர். ஒளி என்பது சேதி. எனவே ஒளியையே கபளீகரம் செய்யும் இக்கருங்குழிகளுக்குள் விழும் தகவலின் இறுதிக்கதி என்ன? என்பது போன்ற கேள்விகள் விஞ்ஞானிகளை ஆட்டிப்படைக்கும் கேள்விகள்.

குவாண்டம் பிசிக்ஸ் எனப்படும் கற்றை இயலின் போக்கு இன்னும் விசித்திரமானது. காண்கின்றவன் இல்லையெனில் காணும் பொருள் இல்லை என்கிறது கற்றை இயல். சோதிக்கப்படும் பொருள் சோதிப்பவனைப் பொருத்து மாறுபடுகிறது என்கிறது. ஒளி கற்றையாகவும் இருக்கிறது (particle/quantum), அலையாகவும்(wave) இருக்கிறது. வெளித்தோற்றத்தில் வெளி என்பது கணக்கிடக் கூடிய ஒன்றாக இருந்தாலும் சில நேரங்களில் வெளி என்பது இல்லாதது போல் ஒளிக்கற்றைகள் நடந்து கொள்கின்றன (non-locality). இப்பிரபஞ்சம் முழுவதிலும் பரவி இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் எல்லாவற்றையும் இணைத்தால் அன்றி இது சாத்தியமில்லை என்று உணர்கின்றனர்.

இது போல் இன்னும் எத்தனையோ. சொன்னால் நீளும்.

ஒரு புளிய மரத்தின் பொந்தில் உட்கார்ந்து கொண்டு, ஆல மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, தபோவனத்தில் இருந்து கொண்டு இதையே ஒரு மெஞ்ஞானி சொல்வது நம்மை சிந்திக்க வைக்கிறது. இறைவனைப் பற்றிப் பேசும் போது, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்கின்றனர். அகிலம், அண்டம், பிரம்மாண்டம்!! பாருங்கள் இவர்களின் நீட்சியை! நாராயணன் என்றால் ஸ்திரமான பொருட்களின் இருப்பிடமாக உள்ளவன். அவனே எல்லாப் பொருட்களுக்குள்ளும் இயங்கும் சக்தி, அந்தர்யாமி. அவனின்றி அணுவும் அசையாது. அவன் உள்ளான், இல்லான். இது இரண்டும் அவன் தன்மை ஆயின. காணும் பிரபஞ்சம் முழுவதும் இறுதியில் அவனுள் அடக்கம். (இதை singularity என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்).

ஆக, நம்மாழ்வார் சொல்வது போல் அறிவின் பயன் என்பது அவனை அறிவதே என்று தெரிகிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒன்றைப் பற்றியேதான் பேசுகின்றன. ஒன்றை நோக்கியேதான் போய் கொண்டிருக்கின்றன.

ஆனால் இவர்கள் பாதை வேறு.

விஞ்ஞானி பிரகிருதி எனப்படும் பௌதீகத்தின் வழியாக சத்தியத்தை நோக்கி நடக்கிறான். பௌதீகமே இறுதிப் பொருள் என்று நம்புகிறான் (எல்லா விஞ்ஞானிகளும் இதிலடக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் பெரும்பாலானோர் 'லோகாதேயர்கள்'). ஆனால், மெய்ஞானி சுத்த ஞானமே இவற்றை இயக்கும் இறுதிப் பொருள் என்று காண்கிறான். அவனது சத்ய தரிசனம் இப்படி எங்கும் நிறைந்திருக்கும் அவ்வாத்தும சக்தியின் மூலமாக நடைபெறுகிறது. எனவேதான் புளிய மரத்தின் பொந்துக்குள் உட்கார்ந்து கொண்டு அளப்பரிய உண்மைகளைக் கொட்ட முடிகிறது.

விஞ்ஞானி தன் முயற்சியால், பௌதீகப் பொருட்களை வைத்து ஆராய்ந்து மெல்ல, மெல்ல நகர்கிறான்.

மெஞ்ஞானி 'மயர்வற மதி நலம் அருளினன்' என்று அவன் அருளால் சத்திய தரிசனம் பெறுகிறான். இது நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடக் கூடியது. அதன் பின் விழுவதெல்லாம் அருள் மழைதான்.

ஆக இரு பெரும் பாதையும் ஒன்றை நோக்கியே நடை போடுகின்றன.

இருபதாம் நூற்றாண்டில் கிழக்கும், மேற்கும் சந்தித்த போது பல நிகழ்வுகள். அதிலொன்று அமித் கோஸ்வாமி என்ற கற்றை இயல் விஞ்ஞானி இந்தியத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு இறைவனின் இருப்பை உறுதிப்படுத்தியது. இது சதா church vs science என்று சண்டை போட்டுக் கொள்ளும் மேற்குலகில் ஒரு அலையைக் கிளப்பியது. வாடிகன் இதற்கென பிரத்தியேகமாக ஒரு சபையைக் கூட்டியது.

ஆனால், அமெரிக்கப் பாதிரி ஒன்று, இதெல்லாம் அபத்தம், 'God is not a wave function' என்றது :-))

4 பின்னூட்டங்கள்:

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/11/2006 12:07:00 PM

f(x)= god என்றால், f2(x) என்ன என்று கேட்பது போல் உள்ளது, அந்த அமெரிக்கப் பாதிரி கேட்டது!

விஞ்ஞானம், மெய்ஞானம் அருமையாகத் தொட்டுச் சென்றுள்ளீர்கள் கண்ணன் சார்!
particle vs wave என்று அடித்துக் கொள்ளத் தான் முடியுமா? :-)

அப்படியே அமித் கோஸ்வாமி பற்றியும் ஒரு பதிவு இடுங்களேன் நேரம் கிடைக்கும் போது!

இதோ "தாய், தந்தை, எல்லாம் நீ", ஸ்டைலில் வரும் நம்மாழ்வாரின் பாசுரம்! :-)
மாயா வாமனனே மதுசூதா நீயருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவையென்ன நியாயங்களே

நா.கண்ணன் 11/11/2006 12:50:00 PM

கண்ணபிரான் நன்றி

இதுதான் சத்சங்கம் என்பது. எவ்வளவு அழகான பாசுரத்தை எடுத்துத் தந்துள்ளீர்கள்! கடைசியில் இது என்ன நியாயம்? என்று கேட்கிறார் சடகோபன். இது அவரது recurrent விளிப்பு. ஏதோ தன் இருப்பு என்று ஒன்று இருப்பது போல் இவர் அவனிடம் போக வேண்டியது. அவன் இவரை அல்வா முழுங்குவது போல் முழுங்கிவிட வேண்டியது. அப்புறம் இவராக பிரித்துக் கொண்டு அழ வேண்டியது. இதுதானே திருவாய் மொழி. இம்மானிட ஜென்மமாய் பிறந்ததின் பயனே திருவாய்மொழி கேட்டதுதான் என்று தோன்றுகிறது!

குமரன் (Kumaran) 11/30/2006 08:57:00 PM

ஆதிசங்கரரின் இந்தப் பாடலை முதன்முதலில் இப்போது தான் படிக்கிறேன் கண்னன் ஐயா. மிகச் சிறப்பாக இருக்கிறது. முக்கூர் ஆசார்யர் இந்தப் பாடலை வைத்துச் சொற்பொழிவு ஆற்றியிருந்தால் (கட்டாயம் செய்திருப்பார்) எப்படி எப்படி எல்லாம் அனுபவித்துச் சொல்லியிருப்பார் என்று எண்ணிப் பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

அறிவின் பயனே என்று எத்தனையோ முறை படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கத்தின் படி எண்ணிப்பார்த்ததில்லை. மிக்க நன்றி.

அமித் கோஸ்வாமியின் ஆராய்ச்சியைப் பற்றி மேலும் எங்கே படிக்கலாம்?

நா.கண்ணன் 11/30/2006 10:16:00 PM

குமரன்:

அமித் கோஸ்வாமி பற்றி கண்ணபிரான் அவர்களும் கேட்டிருந்தார். The Self Aware Universe என்பது அவர் எழுதிய புத்தகம். The Tao of Physics-ன் தொடர்ச்சி என்று அவரே சொல்கிறார். ஒவ்வொரு அறிவியல் மாணவனும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். சங்கர அத்வைதம், பௌத்த மார்க்கம் இரண்டையும் உள் வாங்கிக்கொண்டு, கற்றை இயல் சூத்திரங்கள் மூலம் இறைவனின் இருப்பை மிக அழகாக விளக்குகிறார். இவருக்கு ஞானக்கிருபை கிடைத்தது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஒரு பேச்சு.

நீங்கள் அமெரிக்காவில்தானே இருக்கிறீர்கள், பெரிய புத்தகக் கடைகளில் கிடைக்கும். நான் டொரொண்டோவில் வாங்கினேன். அமேசான்.காமில் கிடைக்கலாம்.

அந்தப் புத்தகம் ஜெர்மனியில் மாட்டிக் கொண்டுவிட்டது. எனவே அதிகம் இப்போது எழுதமுடியவில்லை.