பராசக்தி (பட நினைவுகள்)

சமீபத்தில் சிங்கை சென்ற போது நண்பர் நாராயண மூர்த்தி இயக்கிய "சிவாஜி கணேசன் - ஒரு பண்பாடியற்குறிப்பு" எனும் குறும்படம் காணும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சினிமாவுடன் வளர்ந்தவன். சிவாஜியுடன் வளர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். என் பால்ய நண்பன் சண்முகவரதன்தான் என்னைப் பிடித்து இழுத்து சிவாஜி படத்திற்குக் கூட்டிப் போவான். நான் அப்போது எம்.ஜி.ஆர் ரசிகன். Mr.Bean எனும் பாத்திரம் போல் 9 வயது மனோநிலையில் நிற்பவர்களுக்கு எம்.ஜி.ஆர் ஒரு வரப்பிரசாதம். அப்போது எனக்கு அந்த வயதுதான்! சிவாஜி படம் பெரியவர்களுக்கு. வாழ்வில் இன்ப துன்பம் அனுபவித்தவர்களுக்கு. எனக்கேது துன்பம் அப்போது?

கா.சிவத்தம்பி சிவாஜி கணேசன் பற்றி சிலாகித்துப் பேச இடையிடையே சிவாஜி படம் ஓடும் வண்ணம் அக்குறும்படம் ஓடியது. பராசக்தி சிவாஜியின் முதல் படம் என்று யாருமே சொல்ல முடியாது. அன்று தொடக்கம், கடைசிவரை சோடை போகாத பிறவி நடிகர் சிவாஜி. இப்போது அவரது பழைய படங்களைக் காண வேண்டுமென்று ஆசை. கொரியாவில் சில தமிழ் அன்பர்கள் கொடுத்த பல தமிழ்ப் படங்களுள் பராசக்தியும் ஒன்று.கலைஞர் வசனம். பிரசார நடையின் தொடக்க காலம். கிருஷ்ணன் பஞ்சு எப்படி இப்படியொரு பிரச்சாரப் படத்தை, அதுவும் கழகத்திற்கு துணை போகும் வண்ணம் எடுத்தார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பண்டரிபாய் அழகி. ஆனால் கொஞ்சம் வசனம் மெதுவாய்தான் பேசுவார். ஒரு இடத்தில், இதுவெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்? என்று குணசேகரன் கேட்க, "எல்லாம் அண்ணா சொன்னது!" என்பாள். ஆகா! ஆரம்பிச்சுட்டாங்கைய்யா! அப்போதிலிருந்து ஒரு மூளைச் சலவையை!

கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதி. இப்படத்தில் இரண்டு பெரிய கவிஞர்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை இழிவு படுத்துவதுடன், சேர வேண்டிய புகழை மறைக்கிறார். மார்கழிக் குரலோன் சி.எஸ்.ஜெயராமன் குரலில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' பாடலை மிக அழகாக வாயசைத்துப் பாடுவார் சிவாஜி. கடைசியில் யார் பாடியது என்ற கேள்வி வரும் போது, வேறொருவர் பாடியது என்று எழுதி விடுகிறார் கலைஞர். கலைஞரின் அக்கால மேடைப்பேச்சில் மேற்கோள் காட்டாமல் பாரதியைப் பயன்படுத்துவார். சிறுவனான நான் நீண்ட நாட்களாக 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!' என்ற வசனம் கலைஞரின் வசனம் என்றே எண்ணியிருந்தேன், பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கும்வரை. தி.க பாசறையிலிருந்த அவர் ஒரு ஐயர் கவிஞரை முன்னிருத்த விரும்பவில்லை (அரசியல்வாதிதானே அவர்).

சரி, பாரதிதாசனையாவது ஒழுங்காக அறிமுகப்படுத்துகிறாரா? ஒரு விதவையைக் கூட நினைக்கும் ஒரு கயவனின் வசனமாக 'கோரிக்கையற்றுக் கிடக்குதன்னே வேரில் பழுத்த பலா' என்ற பாரதிதாசனின் சமூகக் குமுறலை கொச்சைப் படுத்தி வசனமாக்கிவிடுகிறார். படத்தின் கடைசியில் அப்பட்ட விளம்பரம். கலைஞர், அண்ணா பேச்சு. இது பின்னால் இவர்களாகச் சேர்த்ததா இல்லை, மூலத்தில் உண்டா என்று நான் அப்போது அறிந்திருக்க முடியாது. ஏனெனில் நான் கைக்குழந்தை அப்போது.

அதிலும், அரசியல் மாறுதல் பூடகமாக சித்தரிக்கப் படுகிறது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மேடையில். அவர் குலத்தையே நாசமாக்க முனைந்து நிற்கும் ஈ.வே.ரா அதே மேடையில். இவர்களைப் புறம் தள்ளி சாகசமாக தமிழக ஆட்சியைப் பிடிக்கும் அண்ணா, அவருக்குப் பின்னால் அவர் பெயரைச் சொல்லி (அன்பிற்கு மூன்றெழுத்து, அறிவிற்கு மூன்றெழுத்து, எம் அண்ணாவிற்கு மூன்றெழுத்து...) நாற்காலியில் அமரப்போகும் கலைஞர். எல்லாம் நிழலாக பராசக்தியில் ஓடியது!

ஐயர் வைத்த தேதி! மாற்றினால் பிரச்சனை வரும்!
அம்பாள் என்றடா! பேசினாள்!
இப்போதெல்லாம் கல்யாணம் செய்து கொள்ள ஒரு மேடை, ஒரு பேச்சாளர் போதும்.

இப்படி ஒரே விளம்பரம். பாவம், தயாரிப்பாளர்களுக்கு விவரம் போதாது. எவ்வளவு பெரிய மாய வலையை அவர் பராசக்தியின் மூலம் விரிக்கிறார் என்று தெரியாமல் படம் எடுத்திருக்கிறார்கள்!

இவ்வளவையும் மீறி, சிவாஜி என்ற சுத்த நடிகன் பிரகாசிக்கிறான். சகஸ்ரநாமம் கூட நீதிபதியாக தன் தங்கை என்று அறியாது அவள் வாழ்வைத் திசை திருப்பிவிட்டதை அறியும் போது உணர்ச்சிபூர்வமாக நடித்திருக்கிறார்.

எப்படி சிவாஜிக்கு அது முதலும், முன்னேறும் படமுமாக அமைந்ததோ, அதே போல் ஸ்ரீரஞ்சனிக்கு அதுவே 'அழுகை' சீரிஸீஸ் படங்களின் தலையாய நாயகியாக முன்னேற வழி வகுத்தது என்று சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆரைப் பிடித்ததற்கு இந்த ஸ்ரீரஞ்சனியும் ஒரு காரணம். 'நான் ஆணையிட்டால்!' என்று அண்ணன் கையில் சாட்டையைச் சுண்டுவதைப் பார்ப்பானா? ஸ்ரீரஞ்சனியின் ஒழிவில்லா அழுகையைப் பார்ப்பானா?

பராசக்தியை பார்த்தவுடன், சிவாஜி என்ற தன்னிகற்ற கலைஞனைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதா? என்றொரு கேள்வி என் மனதில் எழுந்தது!

11 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் 11/17/2006 11:14:00 PM

நீங்கள் கடைசியாக கேட்ட கேள்விக்கு பதில் "பட்டாகத்தி பைரவன் " என்ற படம் சேலத்தில் பார்க்க நேர்தது.படத்தில் பாடல்கள் "எங்கெங்கோ செல்லும்" மாதிரி பாடல்களை போட்டு இசைஞானி அசத்தியிருந்தார் ஆனால் சிவாஜி நடிப்பு அப்போது கோரமாக இருந்தது.ஒரே சத்தம் தான் திரை அரங்கில்.
பிறகு வயதான பிறகு தான் தெரிந்தது,அந்த கதாபாத்திரம் அவ்வளவு தான் வரும் என்று.

மணி ப்ரகாஷ் 11/17/2006 11:41:00 PM

உங்களின் வலைப் பக்கத்தில்
முதல் வாசித்தல் இதான்

1.சந்தோசம்:

தமிழ் எங்கும் வியாபித்து இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு இருக்கையினில் South korea விலும் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதனை பார்க்கையில் மிகவும் சந்தோசம் அடைந்தேன்

2.50 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு படத்தினை பார்த்து, அக் கலைஞனைப் பற்றியும்,கலையினை பற்றியும் ஆராய்வதில் கலை வயதினை சார்ந்தது அல்ல(படத்தின் காலம்) என்று நிருபிக்கிறது உங்களின் நினைவுகள்...

3. எல்லா மனிதர்களும் இவ்வாறே. எந்த ஒரு சகமனிதனையும் பாராட்டி பேசவது இல்லை.எங்கே தன் நாற்காலிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று.


4.//சிவாஜி என்ற தன்னிகற்ற கலைஞனைத் தமிழகம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டதா//

பயன் படுத்திக் கொண்டது..ஆம் சிலை அமைத்து.......

சிந்தனையினை தூண்டியது..இன்னும் ஏராளமான ஆழமான பதிவுகளை கண்டேன்.. வாசித்து எழுதுகிறேன்..

ஜோ / Joe 11/18/2006 12:25:00 AM

பதிவுக்கு நன்றி ஐயா!

ஜோ / Joe 11/18/2006 12:54:00 AM

ஐயா,
"சிவாஜி கணேசன் - ஒரு பண்பாடியற்குறிப்பு" குறும்படம் சிங்கையில் எங்கு கிடைக்கும் ?விவரம் தர முடியுமா ?

-'சிவாஜி ரசிகன்' ஜோ

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/18/2006 01:11:00 AM

//சிவாஜி படம் பெரியவர்களுக்கு. வாழ்வில் இன்ப துன்பம் அனுபவித்தவர்களுக்கு. எனக்கேது துன்பம் அப்போது?//

இது; இது;
இதைத் தான் நாங்களும் செஞ்சோம்;
கமல் படம் எல்லாம் கலா ரசிகர்களுக்கு!
எங்களுக்கு ஸ்டைல் மன்னன் ரஜினி தான்!
எங்களுக்கேது துன்பம் அப்போது?

இப்ப தான் குருதிப்புனல், மகாநதி, அன்பே சிவம், எல்லாம் பாத்து அட நல்லா இருக்கே சொல்ல "வயசு" வந்துருக்கு :-))

பத்மா அர்விந்த் 11/18/2006 06:50:00 AM

"சிறுவனான நான் நீண்ட நாட்களாக 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!' என்ற வசனம் கலைஞரின் வசனம் என்றே எண்ணியிருந்தேன், பாரதியின் பாஞ்சாலி சபதம் படிக்கும்வரை"} Me too.

துளசி கோபால் 11/18/2006 11:16:00 AM

சபாஷ்!

சரியாப்போச்சு. நான் அங்கே 'ஹரிதாஸ்' போட்டுட்டு இங்கே வந்தா....

பராசக்தி!

நா.கண்ணன் 11/19/2006 11:36:00 AM

பொதுவாக:

பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி. கா.சிவத்தம்பி சொல்வது போல் சிவாஜி தமிழ்ப் பண்பாட்டின் ஒரு குறியீடு. அவன் ஒரு "தமிழ்" நடிகன். ஒரு பெரிய பாரம்பரியத்தின் நீட்சி.

திரு.நாராயண மூர்த்தி அப்படத்தை மேலும் செம்மை செய்து கொண்டு இருக்கிறார். எப்படி, எங்கு வெளியிடுவார் என்ற விவரத்தை அடுத்தமுறை அவருடன் பேசும் போது கேட்டுச் சொல்கிறேன்.

ramachandranusha 11/19/2006 02:23:00 PM

கண்ணன் சார், தமிழ் திரைப்படம் உலகம் சிவாஜியை தன்னால் முடிந்தளவு நன்றாக பயன்படுத்திக்கொண்டது என்று நினைக்கிறேன். இன்றும் யாருடைய பேட்டியாவது தொலைக்காட்சியில் காணும்போது, கட்டாயம் சிவாஜியைக் குறிப்பிடாமல் இருப்பதில்லை.
தமிழ் நடிகர் என்று சொல்லும்பொழுது சிவாஜியை ஒதுக்கி தமிழ் திரைப்பட உலகம் இல்லை. இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவர் விரும்பிய "பெரியார்" வேடத்தில் நடிக்காமல் மறைந்தது நமக்கு ஒரு பேரிழைப்புதான்.

கருணாநிதியை சந்தர்ப்பவாதி என்று சொல்வதைவிட, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்ட சாமார்த்தியசாலி
என்று சொல்லலாமே :-) அரசியல் என்னும் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயமல்லாவா இது

இப்படம் சென்னையில் எங்கு கிடைக்கும் என்றுக் கேட்டு சொல்லுங்கள்

நா.கண்ணன் 11/19/2006 02:42:00 PM

"கருணாநிதியை சந்தர்ப்பவாதி என்று சொல்வதைவிட, கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்ட சாமார்த்தியசாலி
என்று சொல்லலாமே :-) அரசியல் என்னும் வியாபாரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கிய விஷயமல்லாவா இது"

சாமர்த்தியசாலி என்பதைத்தான் காலம் காட்டிவிட்டதே! எனக்கு ஷாக் என்னவென்றால், தி.க பாசறையின் முக்கிய கவிஞரான பாரதிதாசனை கொச்சைப்படுத்தியதுதான். அவரது வெளியீடுகளின் தலைப்புகளை பெண்ணாட வசதியான வசனமாக கலைஞரால் எப்படிப் பயன்படுத்த மனது வந்தது? பாரதிதாசன் ஒரு சமூக மாற்றத்திற்காக தலைப்புக் கொடுத்தால் அதையே செக்ஸ் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாமா? பாரதிதாசன் எப்படி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கோபக்கார கவிஞராச்சே! பாரதியைப் புறம் தள்ளுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஹும்!

இப்படம் துபாயிலேயே கிடைக்கணுமே!

ramachandranusha 11/19/2006 04:52:00 PM

கண்ணன் சார், பாரதிதாசன் திராவிட கழகத்தைச் சார்ந்தவர் என்றாலும் அண்ணா, கருணாநிதி, சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியவர்களின் டாமினேஷன் அதிகமில்லையா? பாரதிதாசன் அதனால் பேசாமல் இருந்திருக்கலாம். அக்கால பெருசுகள்
சொல்ல வேண்டும். என் இளமை பருவத்தில் கமல், ரஜினி ஆட்சிதான் :-)
மற்றப்படி பாடலை கேவலமான பாலுணர்வு வெளிப்பாட்டுக்கு உபயோகித்துக் கொண்டார் என்பதும் எனக்கு பெரிய அதிர்ச்சியாய் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை திரைப்படல் எல்லாவகையில் ஓரே கொள்கை, இதே கொள்கை.
பார்க்க, துளசியின் ஹரிதாஸ் பட விமர்சனம் ;-)))