ஆன்மீக முதுசொம் வைகுந்தம்!

இறைவனின் இருப்பைப் பற்றிப் பேசுகிற வேத, உபநிடதங்கள் இருவகையான நிலைகளைச் சொல்லுகின்றன. ஒன்று நித்ய விபூதி, மற்றது லீலா விபூதி. நித்ய விபூதி என்பது மனோலயமான, மாற்றமில்லா உலகம். அங்கு வேண்டுதல், வேண்டாமை, அழுக்காறு, அவா, சீற்றம் போன்ற குணங்கள் ஏதும் கிடையாது. அதுவே வைகுந்தம். அங்கு பிறப்பு, இறப்புக் கிடையாது. மற்றது லீலா விபூதி. அதுவே பிராகிருதமான, பருப்பொருள் உலகம் (material world). என்னமோ கதை விடறாங்க என்பது போல் இல்லை?

ஆனால்,வைகுந்த வருணனை செய்யும் ஆதி சங்கரர் இதை சத்தியம், ஞானம், அனந்தம், நித்யம், மனகாசம், பரமாகாசம் என்கிறார். அவர் சத்தியம் எனும் போது இது விளையாட்டு அல்ல எனப்புரிந்து கொள்ள வேண்டும் (சங்கரர் ரொம்ப சீரியஸான குரு. 32 வயதிற்குள் ஒரு நூற்றாண்டு வேலையை முடித்துவிட்டுப் போனவர். சிவபெருமானின் அம்சம்). இதைப் புரிந்து கொள்ள முடியாத அளவு சிக்கலும் அல்ல. நமது தினப்படி வாழ்விலே இதை இரண்டையும் காண்கிறோம். மனோலயமான பொழுதுகள். வேர்வை சிந்தும் பொழுதுகள். இரண்டும் பட்டறிவுக்கு புலப்படுவவையாகவே உள்ளன. எனவே இவர்கள் வேண்டுமென்று கதை சொல்லவில்லை.

இரண்டாவது பிரபஞ்ச விஞ்ஞானமும் matter x anti-matter பற்றிப் பேசுகிறது. அடுத்த நூற்றாண்டின் ஆய்வு பொருள் என்று இந்த ஆண்டி மேட்டரை Science எனும் சஞ்சிகை பேசுகிறது. அதாவது, காணுகிற உலகு போலவே, புலப்படாத உலகு ஒன்று இருப்பதை அறிவியல் மறுக்கவில்லை.

நமது பிரயாசையெல்லாம் பிறப்பில்லா அவ்வுலகிற்குப் போவதே. இல்லை, எனக்கு வாழ்வின் கஷ்ட நஷ்டங்களே போதும். இதுவே பிடித்திருக்கிறது என்றால் அதற்கும் இறைவன் சம்மதிக்கிறான். ஏனெனில் இது அவனின் லீலா விபூதி. சும்மாக்காச்சும் விளையாட்டுக்கு. நாமதான் ஒரு வாழ்வு முடிப்பதற்குள் மூச்சு முட்டிப்போகிறோம். அவனது ஆளுமையில் இதுபோல் ஆயிரம் அண்டங்கள்! வானவியலர் கார்ல் சாகன் ஒரு பேச்சில், புளோட்டோ கிரகத்தின் அருகாமையிலிருந்து பூமியை எடுத்த போட்டோவைக் காட்டுவார். பூமி, இத்துணூண்டு. சுண்டைக்காய். அவர் சொல்லுவார், இந்த சுண்டைக்காய் உலகில்தான் நமது சண்டைகளும், சச்சரவுகளும், சரித்திரமும், கொடுமைகளுமென்று! மனிதனுக்கு அடக்கம் தேவை என்று முடிப்பார் அவ்வுரையை! இதைத்தான் இந்திய மெஞ்ஞானமும் திரும்பத் திரும்பச் சொல்கிறது! இருள் சேர் இருவினைகள் என்று வள்ளுவன் பேசும் அவ்வினைகள் நம்மிடம் ஒண்டி இருக்கும்வரை பிறப்பிற்குக் குறைவே கிடையாது. பிரளய காலம் வரை செத்து, மடிந்து, உயிர்த்து, செத்து..இப்படி எண்ணிலா சுழற்சி..போய்க்கொண்டே இருக்கும். பிரளயம் முடிந்து ஒடிங்கிய பின்னும் அடுத்த உயிர்தலுக்கு அதுவே காரணமுமாகிறது.

ஆயினும், முமுட்சு எனும் விவரமான ஆசாமிகள், இந்தச் சுழற்சியில் பட்டது போதும். இனி நித்ய ஆனந்தத்தில் இருக்க விரும்புகிறேன் என்கிறார்கள். அவர்களுக்குத்தான் மோட்சம். பசித்தவனுக்கே உணவு. இங்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நமக்கு எந்த உலகு என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். வைகுந்தம் என்பது சொர்க்கமல்ல. சொர்க்கம், நரகம் என்பது வினைப் பயனால் ஜீவன் சென்று இருக்கின்ற சுற்றுலாப் பிரதேசம். சுற்றுலாப் போனவன் திரும்பி வந்தாக வேண்டும்.

எனவேதான் முமுட்சுக்கள் பிராணப் பிரயாண காலம் பற்றி ஆராய்கிறார்கள். நிறைய ஆய்வுகள் இருக்கின்றன. சமிஸ்கிருதத்திலும், தமிழிலும் இருக்கின்றன. சுருக்கமாக இறைவனின் நினைவுடன் சாகும் போது அவன் வாழும் இடத்திற்குப் போகிறோம் என்பது கருத்து. வெறும் நினைவு மட்டும் இருந்தால் போதாது. அது பற்றிய தெளிந்த ஞானம் வேண்டும். அதுவொரு ஞான உலகம். அங்கு அறிவிலிகளுக்கு இடமில்லை. நித்ய ஆனந்தத்தைச் சுகிக்கும் வல்லமையை முதலில் பெற வேண்டும். எனவேதான், இத்தனை பிரயாசையும். அறிவின் பயனே அரியை அறிந்து கொள்ளுதல் என்கிறது திருவாய்மொழி. வாழ்வின் செயற்பாடு அது குறித்தே இருக்க வேண்டும். வெட்டிக் கனவுகள் காணாமல் பன்னெடுங்காலமாக போற்றி, சேகரித்துள்ள இந்திய மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டும். அது மானுடர் எல்லோருக்கும் பொது. கிறிஸ்தவம், இஸ்லாம் சொல்லுவது போல் 'நம்புவனுக்கு மட்டுமே சொர்க்கம், மற்றவர்க்கு நரகம்' என்று இந்திய மெய்ஞானம் உருப்பினர் சீட்டு வழங்குவதில்லை. அது நமது தாயாதி சொத்து என்கிறது. ஒருவகையில் வைகுந்தம் நமது பிதுர்ராஜ்ஜியச் சொத்து. முதுசொம். வேண்டி, அறிந்து கொள்ளும் போது அது இயல்பாக வந்து சேருகிறது.

இன்னும் பேசுவோம்...

38 பின்னூட்டங்கள்:

ஜடாயு 11/24/2006 12:11:00 PM

அற்புதமான கருத்துக்கள் கண்ணன் அவர்களே.

நீங்கள் குறிப்பிட்ட அதே சங்கரர் பாடலின் (கோவிந்தாஷ்டகம்) மூன்றாம் அடியில் "மாயா கல்பித நானாகாரம் அனாகாரம் புவனாகாரம்" என்றும் சொல்கிறார். மாயையினால் கற்பிக்கப் பட்ட படைப்பின் பல்வேறு பேதங்களாகவும், எதுவுமே இல்லாத சூனியமாகவும், எல்லாமே ஆன் புவனமாகவும் இருக்கும் பரம்பொருள் என்று சொல்வது முன்பு சொன்ன சத்யம், ஞானம் என்பதன் அழகிய தொடர்ச்சி.

வைகுந்தம், கயிலாயம் என்பது சராசரி மனித மனம் எண்ணும் "சொர்க்கம்" அல்ல என்றி மிக அழகாக விளக்கியுள்ளீர்கள். இதற்கான அவசியமும் இப்போதுள்ள சூழலில் உள்ளது.

// பன்னெடுங்காலமாக போற்றி, சேகரித்துள்ள இந்திய மெய்ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டும். அது மானுடர் எல்லோருக்கும் பொது. கிறிஸ்தவம், இஸ்லாம் சொல்லுவது போல் 'நம்புவனுக்கு மட்டுமே சொர்க்கம், மற்றவர்க்கு நரகம்' என்று இந்திய மெய்ஞானம் உருப்பினர் சீட்டு வழங்குவதில்லை. //

உண்மை. மிகவும் தெளிவாகக் கூறி விட்டீர்கள். கண்டிப்பாக. இதே கருத்தைத் தான் எனது "அண்டம் அளாவிய காதல்" என்னும் இந்தப் பதிவின் இறுதியில் சொல்லியிருந்தேன்
http://jataayu.blogspot.com/2006/11/blog-post_08.html

// அது நமது தாயாதி சொத்து என்கிறது //

ஆம். பக்த துகாராம் "பண்டரீ ஆம்சா மாஹேர்" என்று பாடுவார் "பண்டரி என் பிறந்த வீடு, என் தாய்வீடு" என்று! அதே ஆன்மீக அனுபவம் உங்கள் வார்த்தைகளில் மிளிர்கிறது.

நா.கண்ணன் 11/24/2006 12:43:00 PM

அன்பின் ஜடாயு:

எப்படி, இப்படியொரு அழகான பெயரைப் பிடித்தீர்கள்? ஜடாயு இந்தோனிசிய விமானமும் கூட!

சங்கரர் கோவிந்தாஷ்டகத்தில் 'சைவம்' கேவலம் என்று சொல்கிறார். அதாவது சைவம் பேசுவது கேவல மோட்சமென்று. கைலாயம், பிரம்மலோகம் இவையும் பிரள காலத்தில் நாரணனிடம் ஒடுங்கிவிடுகின்றன. ஆனால், பிரபஞ்ச சிருஷ்டிக்குள் விழாமல் அவனுக்கென்று ஒரு உலகம் வைத்திருக்கிறான். அதுவே வைகுந்தம். அது பிராகிரதமானதல்ல. அங்குள்ள நாராணன் அப்பிராகிருத மங்கள விக்ரகம். அனுபவத்திற்காக உள்ள உலகம். கேவல மோட்சத்தில் ஒன்று மட்டுமே எஞ்சுகிறது. அனுபவம் கிடையாது.

சத்சங்கத்தில் சேர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டமிடுங்கள். உங்கள் இடுகைகளுக்கு தொடுப்பு அவ்வப்போது கொடுங்கள். ஒரு விர்சுவல் சத்சங்கம் பகவான் அருளால் அமையட்டும். நன்றி.

துளசி கோபால் 11/24/2006 01:21:00 PM

ஆமாம், அது கருடா இல்லையா?

ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்லாதீங்க. ஸ்பெல்லிங் வேறயாக்கும்:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/24/2006 01:27:00 PM

//ஒரு விர்சுவல் சத்சங்கம் பகவான் அருளால் அமையட்டும். நன்றி//

கண்ணன் சார்; அந்த விர்சுவல் சத்சங்கத்தில் அடியேனையும் ஒரு ஓரமாய்ச் சேர்த்துக் கொள்ள மறவாதீர்கள் சார்! அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

//அதுவே வைகுந்தம். அது பிராகிரதமானதல்ல//
பரமபதம் என்று அழைப்பது இது தானே சார்?
பின்னும் மேல் உலகினருக்காக பாற்கடலில் கிடக்கின்றான்.
அது போதாதென்று விபவ அவதாரங்கள்!
நமக்காக அர்ச்சை ரூபம்; அந்தர்யாமி வேறு!
இவ்வளவு கருணை வேறு யாருக்கு வரும்?

இது பற்றிய நீண்ட பரிமாற்றம் சுப்ரபாதப் பதிவில் நடந்தது! உங்களை அப்பதிவிற்கு மீண்டும் அழைக்க எண்ணினேன்; நீங்கள் அங்கு முதல் ஆளாய் ஏற்கனவே வந்துவிட்டீர்கள்! அதனால் பின்னால் நடந்த பரிமாற்றங்களை நீங்கள் அறிய இதோ சுட்டி!

நா.கண்ணன் 11/24/2006 01:31:00 PM

சரணம் தாயே!!

தப்பு, தப்பு (கன்னத்திலே போட்டுகிறது கேக்குதா?)

ஏதோ வேலை நேரத்திலே எழுதினது. ஒரு கருத்தரங்கம் போயிக்கிட்டு இருக்கு. அது கருடா! இவர் ஜடாயு. ரெண்டும் வேறு, வேறுதான்.

ஜடாயு என்பது கழுகு. கருடன் என்பது பருந்து. இரண்டும் ஒரு ஜாதிதான்..ஹீ.ஹீ..

நா.கண்ணன் 11/24/2006 01:38:00 PM

கண்ணபிரான்!

நீங்கதான் ஏற்கனவே இருக்கீங்களே! இது என்ன கேள்வி. எனக்கு ஜடாயு இப்பத்தான் அறிமுகம். அதனால்.

வைகுந்தம், பாற்கடல், விபவம், அர்ச்சம் என்பது போக அவன் ஸ்வேதத்தீபம் போன்று வேறு பல உலகங்கள் வைத்திருப்பதாக பாகவதம் சொல்கிறது. விபவத்தில் ஈடுபட்டு முக்தி அடைபவர்களுக்கு ராமனாக, கிருஷ்ணனாக காட்சியளிக்கிறான் இறைவன். அது போல் பிற அவதார உலகங்களுமுண்டு. ஹயக்கீரிவர் உலகிற்கு ஓர் முறை போன அனுபவம் உண்டு. ஆண்டாள் ஸ்டைலில். முக்தியடைந்து போனால் அடையாளம் கண்டுகொள்வேன்!!

kannabiran, RAVI SHANKAR (KRS) 11/24/2006 01:47:00 PM

//புளோட்டோ கிரகத்தின் அருகாமையிலிருந்து பூமியை எடுத்த போட்டோவைக் காட்டுவார். பூமி, இத்துணூண்டு. சுண்டைக்காய்//

//பிரபஞ்ச விஞ்ஞானமும் matter x anti-matter பற்றிப் பேசுகிறது//

இது போல விஞ்ஞானமும் கணிதமும் கூட மெய்ஞானத் தூண்டுதலுக்கு உதவியாத் தான் இருக்கு பாத்தீங்களா சார்!
கணிதத்தில் வ்ரும் infinity number concept கூட இதையே சொல்லும்; சில முக்கிய சூத்திரங்களுக்கு (theorems), infinity மிகவும் அவசியம். Limits tending to infinity என்று சொல்லி அதை solve செய்வார்கள்!
infinity minus infinity வகுப்பில் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது "பூர்ணஸ்ய பூர்ணமாதய" தான்!

//நித்ய ஆனந்தத்தைச் சுகிக்கும் வல்லமையை முதலில் பெற வேண்டும்//
நீங்கள் சொல்லச் சொல்ல, எனக்கு திருவாய்மொழியில் இவை தான் நினைவுக்கு வருகிறது.

"இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே"

"அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃதென்று அடங்குக வுள்ளே"

குமரன் (Kumaran) 11/24/2006 04:23:00 PM

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்ற மூத்தோர் சொல்லினை மிக அழகாக விவரித்துவிட்டீர்கள் கண்ணன் ஐயா.

இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

நா.கண்ணன் 11/24/2006 04:47:00 PM

குமரன்:

வாழ்த்திற்கு நன்றி. எவ்வளவு அழகான சம்பிரதாயம் நம்முடையது. நண்பனை வாழ்த்தலாம், குருவை வாழ்த்தலாம். இறைவனையே வாழ்த்தலாம்!

இது இப்படி இருக்கும் போது தமிழகத்தில், 'வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!' என்று மேடையில் காலைப் பிடிக்கிறார்கள். வாழ்த்த வேண்டுமெனில் வாயாற வாழ்த்த வேண்டியதுதானே! அதுதானே தமிழ் மரபு! திராவிட கழகம் என்று பெயர் வேறு வைத்துக் கொண்டுள்ளார்கள், தமிழ் மரபு தெரியாமல்!!

ஜடாயு 11/25/2006 02:28:00 PM

// எப்படி, இப்படியொரு அழகான பெயரைப் பிடித்தீர்கள்? ஜடாயு இந்தோனிசிய விமானமும் கூட! //

கண்ணன், நீங்கள் சொன்னதும் சரியே !! இந்தோனேசியாவின் முக்கிய அரசு விமானம் "கருடா". ஆனால் அதே நாட்டில் சுரபாயா, ஜகார்தா போன்ற நகரங்களுக்கு இடையில் விமானம் விடும் சிறிய விமானக் கம்பெனி Jatayu Airines! கூகிளீல் தேடினால் கிடைக்கும்.

பெயர் பள்ளிப் பருவத்திலேயே தேர்ந்தெடுத்தது. கம்பனின் தாக்கம்.

// கைலாயம், பிரம்மலோகம் இவையும் பிரள காலத்தில் நாரணனிடம் ஒடுங்கிவிடுகின்றன. ஆனால், பிரபஞ்ச சிருஷ்டிக்குள் விழாமல் அவனுக்கென்று ஒரு உலகம் வைத்திருக்கிறான். அதுவே வைகுந்தம். அது பிராகிரதமானதல்ல. //

இது வைணவக் கருதுகோளாக இருக்கலாம். ஆனால் தாயுமானவர் சித்தாந்தத்தில் வைகுந்தம், கைலாயம், பிரம்மலோகம் எல்லாம் ஒரே போன்ற ஆன்ம படி நிலைகளே. நான் சொன்னது இந்த அர்த்தத்தில் தான்.

// சத்சங்கத்தில் சேர்ந்தமைக்கு நன்றி. பின்னூட்டமிடுங்கள். உங்கள் இடுகைகளுக்கு தொடுப்பு அவ்வப்போது கொடுங்கள். ஒரு விர்சுவல் சத்சங்கம் பகவான் அருளால் அமையட்டும். நன்றி //

கண்டிப்பாக. நன்றி.

நா.கண்ணன் 11/25/2006 03:56:00 PM

அன்பின் ஜடாயு:

// கைலாயம், பிரம்மலோகம் இவையும் பிரள காலத்தில் நாரணனிடம் ஒடுங்கிவிடுகின்றன. ஆனால், பிரபஞ்ச சிருஷ்டிக்குள் விழாமல் அவனுக்கென்று ஒரு உலகம் வைத்திருக்கிறான். அதுவே வைகுந்தம். அது பிராகிரதமானதல்ல. //

////இது வைணவக் கருதுகோளாக இருக்கலாம். ஆனால் தாயுமானவர் சித்தாந்தத்தில் வைகுந்தம், கைலாயம், பிரம்மலோகம் எல்லாம் ஒரே போன்ற ஆன்ம படி நிலைகளே. நான் சொன்னது இந்த அர்த்தத்தில் தான்////

புரிந்து கொண்டேன். இருந்தாலும் கடைசியில் மூன்று இருக்க வாய்ப்பில்லை. ஒன்றில் அடங்கியே ஆக வேண்டும். இது பற்றி தாயுமானவர் என்ன சொல்கிறார் என்று அறிய ஆவல்.

சைவ சிந்தாந்ததில் முரணாகப் படுவது, பசு, பதி, பாசம் மூன்றும் அநாதி என்பது! எப்படி இருக்க முடியும்? பின் இவைகளைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டிய கேள்வி வருகிறதே?

கேள்விகள் அறியாமையிலிருந்து தோன்றுபவையே. ஆனால் அறிந்து கொள்ள வேண்டுமென்ற உந்துதலே அதற்குக் காரணமென்று உணர்க.

நன்றி.

நேச குமார் 11/25/2006 05:23:00 PM

கண்ணன்,


//புரிந்து கொண்டேன். இருந்தாலும் கடைசியில் மூன்று இருக்க வாய்ப்பில்லை. ஒன்றில் அடங்கியே ஆக வேண்டும். //லேபிளை மாற்றுகின்றன சைவ/வைணவங்கள். இதனால் விஷயம் மாறிவிடுமா என்ன?

வைணவர்களின் விஷ்ணு சைவர்களின் சிவமாகிறார். சைவர்களின் விஷ்ணு வைணவர்களின் சிவனாகிறார்.

அதாவது ஒவ்வொரு மார்க்கமும், தம்முடைய இஷ்ட தெய்வத்தை 'இறை' யாகவும், ஏனைய கடவுள்களை உபகடவுள்களாகவும் பாவிக்கின்றது.

திருமூலரைப் பார்க்கின் தெரியும். சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் இந்த மூன்றையும் பரிபாலித்து, அப்பாற்பட்டு மேலே நிற்கும் 'பெரிய' கடவுளாக விவரிக்கப் படுகின்றார். கீதையிலோ 'என்னை வணங்குபவர் மட்டுமே என்னிடம் வருகின்றனர்' என்று சொல்லும்போது கண்ணன், அந்தப் 'பெரிய' கடவுளாக -இறையாக தம்மைக் குறிக்கிறான், வெறும் 'காத்தலோடு' நிறுத்திக் கொள்ளவில்லை என்பதைக் கவனிக்கவும்.

இந்த நுட்பம் ஆபிரகாமிய மதங்களில் அறிந்தோ அறியாமலோ மாறி அசுரத்தன்மை பெறுகிறது(ஒரு காலத்தில் அங்கும் இது போன்றே இருந்திருக்கக் கூடுமோ என்கிற ஐயம் எனக்கு உண்டு).


அது போன்றே, லோகங்களைக் கடந்த நிலையையே வைகுந்தம் என்கின்றனர் என்பதுதான் உங்களின் எழுத்துக்களைப் படித்து நான் புரிந்து கொள்வது.

நாம ரூபங்களை அனுபவிக்க (சுவர்க்கம்) மனமிருக்க வேண்டும். குறைந்த பட்சம் ட்ரேஸாவது இருக்க வேண்டும். முழு ஆனந்தத்தை அனுபவிக்க எதுவும் வேண்டியதில்லை, ஆனந்தம் நமது இயல்பான நிலையாதலால் என்று தோன்றுகிறது. எனவே மனமழியும் போது மோட்சம் என்கிற சைவசிந்தாத்தத்தின்(மூலர்) மூலத்தோடு நீங்கள் சொல்வது ஒத்துப் போகிறதென்றே கருதுகிறேன்.

நா.கண்ணன் 11/25/2006 05:34:00 PM

அன்பின் நேசகுமார்:

லேபிளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் வைகுந்தம் ஏகின்ற நம்மாழ்வார் 'முனியே, முக்கண்ணா, என் பொல்லாக் கருமாணிக்கமே' என்கிறார். பரம்பொருளின் இடபாகம் சிவன், நாபியில் பிரம்மா, மார்பில் திருமகள் என்று கூறு போட்டு இருப்பதாக நம்மாழ்வார் சொல்கிறார். அதில் எனக்கு பிரச்சனையே இல்லை.

ஆனால், தத்துவார்த்தமாக விளக்கும் போது புரிவதில்லை. அதுதான்.

இந்த லேபல் விவகாரம் பற்றிய என் கருத்தொன்றுண்டு. போட்டால் வம்பு வரும். எதற்கு? :-))

நேச குமார் 11/25/2006 10:12:00 PM

கண்ணன்,


நான் சொன்னது:

//அதாவது ஒவ்வொரு மார்க்கமும், தம்முடைய இஷ்ட தெய்வத்தை 'இறை' யாகவும், ஏனைய கடவுள்களை உபகடவுள்களாகவும் பாவிக்கின்றது.

//


நீங்கள் சொல்வது://பரம்பொருளின் இடபாகம் சிவன், நாபியில் பிரம்மா, மார்பில் திருமகள் என்று கூறு போட்டு இருப்பதாக நம்மாழ்வார் சொல்கிறார். அதில் எனக்கு பிரச்சனையே இல்லை.

//கவனியுங்கள், நான் சொன்னதை நம்மாழ்வார் நிரூபிக்கின்றார். மூலரின் வாக்கில் சிவனை இங்கு ரீப்ளேஸ் செய்கிறார் விஷ்ணு. அதாவது விஷ்ணுவை இறையாக கருதும், வணங்கும் நம்மாழ்வாருக்கு சிவன் உபகடவுளாக, கடவுளின் 'பாகமாக' ஆகிறார்.


எப்படி நீங்கள் கருதுகிறீர்களோ, அதற்குத் தக்கவாறு லேபிள் மாறுகிறது , லேபிள் மட்டும்தான் மாறுகிறது என்று இதைத்தான் சொன்னேன்.

நா.கண்ணன் 11/25/2006 11:27:00 PM

அன்பின் நேசகுமார்:

இந்த இந்தியப் பண்பு நான் முன்பு அறிந்ததே. பௌத்தம் அழிந்த போது அதை இந்து மதம் உள்வாங்கிக் கொண்ட அழகுதான் புத்தனை ஒரு அவதாரமாக்கியது. நான் வியட்நாம் சென்றபோது ஒரு புத்த கோயிலில் சில படங்கள் பார்த்தேன். அதில் புத்தர் பரம் பொருளாக இருக்க விஷ்ணு அவரை வழிபடுகிறார். சைவக் கோயில்களில் வேண்டுமென்றே பெருமாளையும், தாயாரையும் பிரகார மூர்த்தியாக்கி வைத்திருக்கின்றனர். இப்படி வைணவக் கோயில்களில் செய்வதில்லை. திருமந்திரத்தில் நான் இவ்வளவு எழுதியதும் அப்படியே 'உல்டா' ஆகும். அதுவும் எனக்குத் தெரியும்.

ஆனால், நம்மாழ்வார் பெருமாளே என்று சொல்ல வேண்டியிருக்க, முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா என்று சொல்வது வைகுந்த நாதனாக மூவரையுமே காண்பதுதான். அது ஒரு நொடி, பின் அவரின் 'கருமாணிக்கமே' அங்கு நிற்கிறது. திருமந்திரத்தில் ஒரு பாடலில் இதே போன்று வருகிறது. ஆனால், பொருளுரைக்கும் போது 'திருத்தி' விடுகின்றனர். இது நூற்றாண்டு தமிழகச் சண்டை. ஒரு ஆதிக்க அரசியல். ஒரு ஜாதி அரசியல். அதற்குள் இப்போது போக வேண்டாம். 'சொன்னால் விரோதமிது' (திருவாய்மொழி).

குமரன் (Kumaran) 11/25/2006 11:30:00 PM

கண்ணன் ஐயா. சைவ சிந்தாந்தம் கூறும் பசு, பதி, பாசம் என்பவற்றை வைணவமும் வேறு பெயர்களில் சொல்கிறதே.

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத் தியல்.

இங்கே மிக்க இறைநிலை என்பது பதி, உயிர் நிலை என்பது பசு, தடையாகித் தொக்கியலும் ஊழ்வினை என்பது பாசம். நடுவே மெய்யாம் என்ற சொல் வருகிறது பாருங்கள். உயிர் நிலை என்று நிலையாக அனாதியாக இருப்பது என்பது வைணவக் கருத்தும் ஆகும். சித் அசித் ஈஸ்வரன் மூன்றுமே அனாதி என்று இன்னோர் இடத்தில் சொல்லியிருப்பார்கள்.

நீங்கள் முரண் என்று எதனைக் குறிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

நா.கண்ணன் 11/25/2006 11:58:00 PM

குமரன்:

அழகான விளக்கம்.ஸ்ரீவைஷ்ணவமும், சைவ சித்தாந்தமும் தென்னகத்தில் தோன்றியவை. தமிழ் மறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவையிரண்டும் ஒன்றைத்தான் சொல்கின்றன எனப் பல நேரம் எனக்கும் தோன்றுவதுண்டு. ஆயினும், இராமானுஜருக்கு ஒரு அனுகூலம் என்னவெனில் நாரணன் பரம் என்று வேதம் தொகை செய்த வியாசர் சொல்லிவிடுகிறார். அவர் பிள்ளை பாகவதம் எழுதிவிடுகிறார். அதனால் வேத மார்க்கத்தில் போய் விஷிட்டாத்துவைதம் என்று சித்தாந்தம் பண்ணமுடிகிறது. எனவே சர்வமும் நாரணனுள் அடக்கம் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விட முடிகிறது. ஆனால், இந்தப் பின்புலம் இல்லாத சைவம் (தென்னிந்திய சைவ சித்தாந்தம்) சிவனில் கொண்டு ஒருமைப்படுத்த சிரமப் படுகிறது. அப்படிச் செய்தால் அது அத்வைதமாகிப் போகும். அவர்கள் அத்வைதத்தை முழுமனதுடன் ஒத்துக் கொள்வதில்லை. அப்படிச் சொல்லப்புகுந்த வள்ளலாரின் திருவருட்பா, மருட்பாவாகியது. மிக்க அரசியல் சூழ்ந்து தென்னிந்திய சைவ சித்தாந்தம் சிரமப்படுகிறது. இது ஸ்ரீவைஷ்ணவத்திற்கில்லை. ஒன்றே தேவன் என்ற திருமூலர் வாக்கியம் பெருமாள் கோயில்களில்தான் செயல்படுகிறது. சிவன் கோயிலில் இல்லை. அங்கு எல்லாத் தெய்வங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியுள்ளது! கோளறு திருப்பதிகம் எழுதிய பின்னும் அங்கு நவக்கிரக வழிபாடு இன்றளவும் நடக்கிறது. வைணவக் கோயில்களில் கிடையாது (with few exceptions). அதே போல் சிவனைப் பிரகார தெய்வமாக பெருமாள் கோயில்களில் வைப்பதில்லை. இராமானுஜர் மிகக்கவனமாக கோயில் நிர்வாகத்தைக் கவனித்து இருக்கிறார். இது பெரிய கதை, குமரன்.

பத்மா அர்விந்த் 11/26/2006 12:09:00 AM

கண்ணன்
இந்த குழுவில் சேர்ந்து கொள்ள எனக்கும் அனுமதி உண்டா? தெரிந்து கொள்ள நிறைய செய்திகள் இருக்கும் என்ற ஆர்வத்தினால் கேட்கிறேன். மாணவியாய் இருந்துவிட்டு போவதில் ஆட்சேபனை ஏதும் இல்லைதானே

enRenRum-anbudan.BALA 11/26/2006 03:58:00 AM

கண்ணன் சார்,

தங்கள் பதிவு மற்றும் பின்னூட்டங்கள் வாயிலாக பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அருமையான பதிவுக்கு நன்றி ! தங்கள் நிலைப்பாட்டை பலப்படுத்தும் வகையில் குருகூர் பிரானே திருவிருத்தத்தில் ஒரு பாசுரம் அருளியுள்ளார் :)

2573@
வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96

தொடர்புள்ள இன்னொரு திருவாய்மொழிப் பாசுரம்:

2722
தானோர் உருவே தனிவித்தாய்த்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந்தன் எம் பெருமானே

ஆதிபிரானே நாம் காணும் உணரும் அனைத்துக்கும் முதற்காரணனாய், துணைக்காரணனாய், நிமித்த காரணனாய் திகழ்கிறான். தானே பிரம்மன், ஈசன், இந்திரன் ஆகிய மூவராகி, அதன் மூலம் தேவர்களையும், முனிவர்களையும், மற்றும் மனிதர்களையும், விலங்குகளையும், ஏனைய அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் படைப்பிக்க வேண்டி ஓர் பிரளய வெள்ளத்தை உருவாக்கி, அதில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவன் ! நித்யசூரிகளின் தலைவனான, எம்பெருமான் உணர்வதற்கரிய, அதிசயமான குணங்களை உடையவன் ! அப்பெருமானே பேரின்ப வீடான பரமபதத்தின் நாயகனும் ஆவான் !
******************

அதே நம்மாழ்வார், இணக்கம் வேண்டி, இதையும் அருளிச் செய்கிறார் !

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே.

நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

எ.அ. பாலா

ஜடாயு 11/26/2006 04:53:00 AM

அன்புள்ள கண்ணன்,

இந்து ஒற்றுமை, இந்து தர்ம சம்ரட்சணம், இந்துத்துவம் இவற்றோடு தெளிவாக என்னை அடையாளப் படுத்திக் கொள்பவன் நான். அதனால் இது போன்ற இந்து தர்மத்தின் மார்க்க பேதங்கள் பற்றிய விவாதங்களைப் பெரும்பாலும் தவிர்த்து, அந்த பேதங்களின் அற்புதமான அழகை ரசித்தும், போற்றியும் வருகிறேன். கருத்துக் கூறும் முன் இந்தப் பின்னணியைச் சொல்லிவிட்டால் நல்லது என்பதால் கூறினேன்.

// ஆனால், இந்தப் பின்புலம் இல்லாத சைவம் (தென்னிந்திய சைவ சித்தாந்தம்) சிவனில் கொண்டு ஒருமைப்படுத்த சிரமப் படுகிறது. //

எல்லா வேதாங்த தத்துவப் பிரிவுகள் போல சைவ சித்தாந்தத்திற்குப் பின்புலம் உபநிஷதங்களே. மெய்கண்ட தேவர்
கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்ட சொத்தாய்
அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணர
என்னும்போது "நேதி நேதி" என்பதையே சுட்டுகிறார். சைவத்தில் கரைகண்ட ஜாவாகுமார் போன்ற பெருமக்கள் இதற்கு இன்னும் விரிவான விளக்கம் அளிப்பார்கள்.

// அப்படிச் செய்தால் அது அத்வைதமாகிப் போகும். அவர்கள் அத்வைதத்தை முழுமனதுடன் ஒத்துக் கொள்வதில்லை. //

சமயம், தத்துவம் இரண்டும் இணையும்போது எல்லாவிதமான சேர்க்கைகளும் சாத்தியமாகலாம். "நீலகண்டர்" என்றூ சைவ விசிஷ்டாத்வைதி ஒருவரே இருந்தார். அதே போல "மதுசூதன சரஸ்வதி" என்ற வைணவ அத்வைதியும் இருந்தார்.

தமிழ்நாட்டில் தான் ஸ்ரீவைஷ்ணவம் விசிஷ்டாத்வைதத்துடன் பின்னிப் பிணைந்தது, அதனால் நீங்கள் இவ்வாறு வாதிடுகிறீர்கள். வல்லபாச்சாரியாரின் வைணவம் "சுத்தாத்வைதம் (சுத்த அத்வைதம்)" என்றும் நிம்பார்க்கர் உருவாக்கிய வைணவப் பிரிவு த்வைதாத்வைதம் என்றும் அழைக்கப் படுகிறது. இரண்டுமே குஜராத்திலும், வடநாட்டிலும் இன்றும் பெருமளவு மக்களால் பின்பற்றப் படும் வைணவ மார்க்கங்கள்.

// அப்படிச் சொல்லப்புகுந்த வள்ளலாரின் திருவருட்பா, மருட்பாவாகியது. மிக்க அரசியல் சூழ்ந்து தென்னிந்திய சைவ சித்தாந்தம் சிரமப்படுகிறது. //

இது அருட்பா பற்றிய மேலோட்டமான கருத்து. வேறு பல காரணங்களால் அரசியல் தோன்றியிருக்கலாம். ஆனால் தத்துவம் இதற்குக் காரணமல்ல.

// இது ஸ்ரீவைஷ்ணவத்திற்கில்லை. ஒன்றே தேவன் என்ற திருமூலர் வாக்கியம் பெருமாள் கோயில்களில்தான் செயல்படுகிறது. சிவன் கோயிலில் இல்லை. அங்கு எல்லாத் தெய்வங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியுள்ளது! //

நீங்கள் வைணவத்தை ஆபிரகாமிய மதங்களின் "ஏக இறைவன்" ரேஞ்சுக்கு வைத்துப் பேசுவது போன்று தோன்றுகிறது. இது அபாயகரமானது !
"ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க" என்பது திருவாசகம். ஒரே தெய்வசக்தி பல உருவங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க எழுந்தருளுகையில் அவற்றில் தான் ஏற்கும் எல்லா மூர்த்தங்ளையும் வழிபடுவது மேன்மையான, பண்பட்ட சமய சிந்தனை. பாகன் மதங்களின் பெரும் விசேஷத் தன்மையே இது தானே!!

// கோளறு திருப்பதிகம் எழுதிய பின்னும் அங்கு நவக்கிரக வழிபாடு இன்றளவும் நடக்கிறது. வைணவக் கோயில்களில் கிடையாது (with few exceptions). அதே போல் சிவனைப் பிரகார தெய்வமாக பெருமாள் கோயில்களில் வைப்பதில்லை. இராமானுஜர் மிகக்கவனமாக கோயில் நிர்வாகத்தைக் கவனித்து இருக்கிறார். //

அந்த exceptions ஏன் வந்தன - அது பற்றி யோசியுங்கள்.

சைவக் கோயில் ஆகமங்கள் வருவதற்கு முன்னாலேயே பல சிவன் கோயில்கள் இருந்தன (ராஜராஜன் கால்த்திற்கு முற்பட்ட கோயில்கள்). அவற்றில் நவக்கிரக, விஷ்ணு மூர்ததங்களும் இருந்ததால், பின்னர் ஆகமங்களை உருவாக்கியவர்கள் அவற்றை ஏற்றுக் கொண்டார்கள், வழிபடும் விக்கிரகங்களைத் தூக்கி எறிவது எந்த இந்து மதப் பிரிவும் செய்யாத செயல்.

இதை ஒப்பிடுகையில், வைணவக் கோயில்களின் காலம் பிற்பட்டது. வரையறையை வைத்துக் கொண்டு அவை எழுந்ததால் அவை மிகவும் இறுகிய அமைப்பைக் கொண்டிருந்திருக்கலாம்.

ஒரு வார்த்தை. இந்து தர்மத்தின் எந்த சமயப் பிரிவிலுமே கறுப்பு-வெள்ளை என்ற srtict பாகுபாடு இல்லை. எல்லாமே நெகிழ்ச்சித் தன்மை கொண்டவை தான். காலம், இடம் இவற்றைப் பொறுத்து சில பிரிவுகளில் இறுக்கம் அதிகமாக இருக்கலாம். அதை வைத்துக்கொண்டு superiority வாதம் செய்வது இந்து தர்மத்தை இன்னும் பலவீனப் படுத்தும் செயல் என்பதே என் தாழ்மையான எண்ணம்.

நேச குமார் 11/26/2006 08:34:00 AM

கண்ணன்,


//அதில் புத்தர் பரம் பொருளாக இருக்க விஷ்ணு அவரை வழிபடுகிறார்.//


நல்ல தகவல், நன்றி. பவுத்தத்தில் வேறு மாதிரி. புத்தனை கடவுள்கள் வணங்குவது, ஞானியின் ஏவலை மேற்கொள்ள கடவுள்கள் காத்திருக்கின்றனர் என்ற பண்டைய இந்தியத்தத்துவம்தான்.


ஆனால், அங்கு அது விகாரப்பட்டுப் போய், 'இந்து' கடவுள்கள் சில சமயம் உபதேவதைகள் ரேஞ்சுக்கு விவரிக்கப்படுவதும் உண்டு.

அது சரி, பவுத்தம் அழிந்த பிறகுதானா புத்தர் அவதாரமானார்? இது எனக்குப் புதிய செய்தி. பொதுவாக எல்லா ஞானிகளையும் அவதாரமாகக் காண்பது இந்தியப் பண்பு. பின்னாளில் அரசியல் காரணங்களுக்காக இப்படி அவதாரமாக்கி 'இந்து மதம்' புத்தரை உள்வாங்கிக் கொண்டது என்ற பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்பது எனது எண்ணம்.

பாகவதத்தில் பத்து அவதாரங்கள் மட்டும் இல்லை, கடற்கரையில் இருக்கும் மணலையொத்த எண்ணிக்கையில் அவதாரங்கள் வந்துள்ளனர் என்று சொல்லியிருப்பதாக எங்கோ படித்த நினைவு. அது போன்றே புத்தரும் பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்(அவதாரமாக) என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்(இது குறித்து எனக்கு சந்தேகம் உண்டு பாகவதம் படித்த நண்பர்கள் தாம் தெளிவிக்க வேண்டும்).

குமரன், பாலா ஆகியோருக்கும் நன்றி.

நேச குமார் 11/26/2006 08:38:00 AM

//சைவக் கோயில்களில் வேண்டுமென்றே பெருமாளையும், தாயாரையும் பிரகார மூர்த்தியாக்கி வைத்திருக்கின்றனர். இப்படி வைணவக் கோயில்களில் செய்வதில்லை. //

ஏன் கருவறைக்குள்ளும் தான் உண்டு, சைவத்தில்.

அனைத்தையும் அரவணைத்துச் செல்வது சைவம் என்று நான் இங்கே சொன்னால் அது சண்டைக்கு வித்திடும் :-)

ஆதலால், இது தவறான புரிதல் (என்று தோன்றுகிறது) என்பதை மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி :-)

நா.கண்ணன் 11/26/2006 09:23:00 AM

அன்பின் பத்மா:

//இந்த குழுவில் சேர்ந்து கொள்ள எனக்கும் அனுமதி உண்டா?//

இது என்ன கேள்வி? ஒரு தாயைப் பற்றி பிள்ளைகள் பேசி மகிழ்தல் போன்றதுதானே நற்சங்கம் (சத்சங்கம்) என்பது. அசூசை இல்லாமல் ஞான, பக்தி மார்க்க சபைதான் நற்சங்கம். நமக்கு முன்னோடி வள்ளலார்.

அங்கு எல்லோரும் மாணவர்தாம். கற்றது கைமண் அளவுதானே! நம்ம நற்சங்க co-ordinator, கண்ணபிரான். அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம் ;-)

நா.கண்ணன் 11/26/2006 09:28:00 AM

அன்பின் பாலா:

திருக்குருகூர் சடகோபனை 'முதற்தாய்' என்று வாயா வார்த்தையாகச் சொல்லவில்லை. இந்திய மெஞ்ஞானக் காட்டிற்குள் நுழைய ராஜபாட்டை போட்டுத் தந்திருக்கிறார் எம் சடகோபன். இ-சுவடியில் எழுதும் பினாங் லோகநாதன், எப்படி சைவ சித்தாந்தக் கருத்துகள் திருவாய்மொழியில் புதைந்துள்ளன என்று மாக்கு, மாக்கு என்று எழுதிக் கொண்டிருக்கிறார். அவரை role model-ஆக தேர்ந்தெடுத்த நாதமுனிகளை வணங்க வேண்டும். இல்லையெனில், அடியார்க்கு அடியார் என்று ஒரு புளிய மரப்பொந்தை விட்டகலா சடகோபனின் மொழிகள் இன்று இந்தியாவை இயக்குமா?

நா.கண்ணன் 11/26/2006 09:36:00 AM

நேசகுமார்:

உங்கள் பின்னூடத்திற்கு பதிலாக ஒரு பதிவு செய்து விடலாமென்று தோன்றுகிறது. நன்றி.

கால்கரி சிவா 11/26/2006 10:09:00 AM

சத்சங்கத்தில் LKG யில் தயவு செய்து என்னையும் அட்மிட் செய்து கொள்ளுங்கள். கற்பதற்கு நிறைய இருக்கிறது.

நன்றி

நா.கண்ணன் 11/26/2006 10:36:00 AM

ஒரு யோசனை!

குமரன், பாலா, ரவி போன்றோர் நாலாயிரத்தையும் கரைத்துக் குடித்திருப்பது தெரிகிறது. எனவே இந்த சத் சங்கத்தை ஒரு multi-author blog-ஆக வெளிக் கொண்டுவந்தால் என்ன? அதாவது, இது முழுக்க, முழுக்க ஆன்மீகப் பதிவுகள் கொண்ட ஒரு புளோக். நம் பதிவுகளில் லௌகீகமும் இருக்கிறது, ஆன்மீகமும் இருக்கிறது. அதற்குப் பதில் நமது ஆன்மீக எண்ணங்களை, கட்டுரைகளை அங்கு பதிவு செய்வோம். அது குளித்து, திருநீறு (நாமம் இடுதலையும் நீறு என்று நம்மாழ்வார் பயில்கிறார்) அணிந்து காலையில் பார்க்கும் ஒரு இடமாக அமையட்டும். காலையில் நல்ல சிந்தனைகள் கொண்டு நாளைத் தொடங்குவது நன்று அல்லவா? நமது பழைய புளொக்குகளில் வழமையான விஷயங்களை, கொஞ்சம் லைட்டான விஷயங்களைப் போட்டுக் கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள்? தமிழில் இப்படியொரு முயற்சி புதுமையாக இருக்கும்.

சாதிச் சண்டைகளில், இலக்கிய சர்ச்சைகளில், அரசியல் விவாதங்களில், தனிமனித விரோதங்களில் புண்பட்டுத் திரும்பும் ஒரு தமிழனுக்கு சரணாலயமாக இந்த புளோக் இருக்கட்டும். இந்த புளோக் நிறைய முமுட்சுக்களை உருவாக்கட்டும்.

நம் சிந்தனைகளை திறந்த மனத்துடன், மற்றவர் நோகா வண்ணம் சொல்லிப் பழகுவோம்.

இந்த புதிய முயற்சிக்கு (புளோக்கிற்கு) என்ன பெயர் சூட்டலாம்?

யோசித்துச் சொல்லுங்கள்.

நம் எல்லோருக்கும் சொல்லும் திறன் இருப்பதால் content என்பது நிறைய வரும். பின்னால் அச்சில் கூட கொண்டு வரலாம். Multi-authored books என்பதும் தமிழில் குறைவே!

ஏதோ தோன்றுகிறது. அவனருள் வேண்டும்.

enRenRum-anbudan.BALA 11/26/2006 03:51:00 PM

கண்ணன் சார்,
அன்புக்கும், அழைப்புக்கும் நன்றி. தாங்கள், குமரன், கண்ணபிரான் ஆகியோர் எழுதும் பதிவுகளை வாசிப்பதற்கே (அதோடு, கிரகித்துக் கொள்ளவே) எனக்கு நேரம் போதவில்லை. பின்னூட்டங்களே முடிந்தபோது தான் இட முடிகிறது.

ஆனால், என்னால் இயன்ற பங்களிப்பேன், அவ்வப்பொழுது.

பத்மாவையும், கால்கரி சிவாவையும் (இவர் LKGயில் தன்னை சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினாலும், ஐந்தாம் வகுப்புக்குரிய ஞானம் வாய்க்கப் பெற்றவர், தன்னடக்கத்தில் இவ்வாறு கூறுகிறார் !!!!) சத்சங்கத்தில் சேர்த்துக் கொள்ள தலைவரான தங்களுக்கு பலமாக பரிந்துரைக்கிறேன் :)))))

எ.அ.பாலா
*******************************

ஜடாயு 11/26/2006 09:09:00 PM

அன்புள்ள கண்ணன்,
மார்க்க பேதங்கள் பற்றிய என் பின்னூட்டத்தைத் தாங்கள் பதிப்பிக்கவில்லையே? பின்னூட்டம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன் (ப்ளாக்கர் அப்படித் தான் சொன்னது).

நா.கண்ணன் 11/26/2006 09:18:00 PM

அன்பின் ஜடாயு, நேசகுமார்:

உங்கள் இருவரின் பின்னூட்டங்கள் என்னை மேன்மைப்படுத்தின. கற்றது கைமண் அளவு! நான் முன்பு சொல்லிய மாதிரி நான் பலக்க சிந்திப்பவன். அது அறிந்து கொள்ளும் வண்ணமே. எனக்குள் எந்த பேதமும் கிடையாது.

காலையிலிருந்து blogger தகராறு. நான் இது குறித்த என் கருத்துக்களை ஒரு பதிவாக்கி பொத்தானைத் தட்டினால், 'அம்பேல்'. போச்சு. மீண்டும் எழுத ஆர்வமில்லை. வேண்டுமெனில் அடுத்த முறை வேறொரு சமயத்தில்.

நா.கண்ணன் 11/26/2006 09:24:00 PM

நேசகுமாருக்கு:

வைணவ கோயில்கள் காலத்தால் பிற்பட்டவை என்று சொல்வது தவறு. சங்கப்பாடலான பரிபாடல் முழுக்க, முழுக்க நாராணனின் அந்தர்யாமித்துவத்தைச் சொல்லும் நூல். மணிமேகலை சொல்லுவாள் பூம்புகார் நகரில் கடல் வண்ணன் புராணம் ஓதும் பௌராணிகர்கள் இருந்தார்களென்று. மேலும் கா.பார்த்தசாரதி என்பாரின் PhD பட்ட நூல், பனைக்கொடி கொண்ட பலராமன், கண்ணன் கோயில்கள் சங்க காலத்தில் இருந்தன என்று செப்புகிறது.

வைணவம் அன்றிலிருந்து ஒருவனே தேவன் என்ற கோட்பாடு கொண்டது. காரணம் கண்ணன் முல்லைத் தெய்வம். முல்லையின் மாண்பு "கற்பு".

எந்த சிவன் கோயில் கருவறையில் பெருமாள் இருக்கிறார் என்பதை அறிய ஆவலாயுள்ளேன் (சங்கரநாரயணர் கோயில் என்று சொல்லிவிடாதீர்கள் :-))

நா.கண்ணன் 11/26/2006 09:36:00 PM

அன்பின் பாலா:

உங்கள் கருத்துக்களுக்கான பாராட்டு ஜடாயுவிற்கு போய்விட்டது. அவருக்கும் ஒரு சபாஷ் உண்டு :-) ஜாவா பாலா வீரசைவர் :-) நரசிம்மரை கிழித்துப்போட ரெடியாக இருப்பார் :-) இவைகளில் எனக்கு நாட்டமில்லை. அது சிலுவைப் போர் ரேஞ்சுக்குப் போய்விடும். நீங்கள் சொன்ன விளக்கங்களே போதுமானவை.

திருமாலியம் அன்றிலிருந்து ஒருவனே தேவன் என்றுதான் சொல்கிறது. அதற்காக pluralism இல்லை என்று சொல்லவில்லை. அவன் வேற்றுமைகளிலும் அந்தர்யாத்மியாக இருக்கிறான் என்று காண்கிறது. இது செமித்திய கருத்துடன் ஒன்று படுவதல்ல. திருமாலியம் முல்லைப் பண்பு கொண்டது. ஒரு கணவனுக்கு ஒரு மனைவி எனும் கற்பு நெறி கொண்டது. இப்போதும் வைஷ்ணவம் பேசுகிற பெரியவர்கள் ஸ்ரீ தர்மத்தை வைத்தே அதை விளக்குவர்.

ஜடாயு 11/28/2006 04:13:00 PM

// எந்த சிவன் கோயில் கருவறையில் பெருமாள் இருக்கிறார் என்பதை அறிய ஆவலாயுள்ளேன் (சங்கரநாரயணர் கோயில் என்று சொல்லிவிடாதீர்கள் :-)) //

எல்லாச் சிவன் கோயில்களிலும் தான்!!! இதற்கு 2 விதமாக விளக்கம் அளிக்கலாம்

1) லிங்கம் சதாசிவ ஸ்வரூபம். ப்ரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற மூன்று மூர்த்திகளும் இணைந்த, அவற்றைக் கடந்தும் நிற்கும் உருவம் அது. அதனால் அதில் விஷ்ணு இருக்கிறார்!

2) லிங்கம் சிவசக்தி ஸ்வரூபம், ஐக்கியம். சைவ, சாக்தக் கருதுகோள் படி சக்தி என்பவள் விஷ்ணுவின் அம்சமே, அதனால் தான் விஷ்ணுவின் தங்கை ஹரி ஸோதரி) என்று போற்றப் படுகிறாள்.

"அரியிலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" - அப்பர் தேவாரம்

"பார்யா த்வம் ஆர்யாபதே" - சங்கரர், சிவானந்தலஹரி

வைஷ்ணவீ விஷ்ணுரூபிணீ -லலிதா சகஸ்ரநாமம்

நேசகுமார் சொன்னது சரிதான், சைவம் விஷ்ணுவைக் கருவறைக்குள்ளும் வைத்துப் பூஜிக்கிறது என்பது.

நா.கண்ணன் 11/28/2006 04:25:00 PM

"நேசகுமார் சொன்னது சரிதான், சைவம் விஷ்ணுவைக் கருவறைக்குள்ளும் வைத்துப் பூஜிக்கிறது என்பது."

அப்படிப் பார்த்தால் நாராயணனின் பாதி சிவனுக்குச் சொந்தம் என்கிறார் நம்மாழ்வார். எனவே எல்லாப் பெருமாள் கோயிலிலும் சிவன் இருக்கிறார். இதை அநுஷ்டித்துதான் வேங்கடவனுக்கு வில்வ பூஜை நடக்கிறது.

சைவத்தல மையமான சிதம்பரத்தில் பிரதான சந்நியாக கோவிந்தப் பெருமாள் சந்நிதி உள்ளது!

திருப்பரங்குன்றத்தில் கருவறையில் ஸ்ரீமன் நாராயணன் இருக்கிறார். ஆனால் அது மாமா, மச்சான் உறவு! அதுவேற. அருணகிரி அதை உணர்ந்துதான் 'பெருமாளே! பெருமாளே!' என்று பாடித்தீர்த்துவிட்டார்.

எல்லாவற்றிலும் பெருமாள் இருப்பதுதானே அழகு. அப்படித்தானே கீதையிலும் சொல்கிறான். எல்லாத் தெய்வங்களிலும் அந்தர்யாமியாக நானே இருக்கிறேன் என்று!

ஜடாயு 11/29/2006 04:45:00 PM

// அப்படிப் பார்த்தால் நாராயணனின் பாதி சிவனுக்குச் சொந்தம் என்கிறார் நம்மாழ்வார். எனவே எல்லாப் பெருமாள் கோயிலிலும் சிவன் இருக்கிறார். இதை அநுஷ்டித்துதான் வேங்கடவனுக்கு வில்வ பூஜை நடக்கிறது. //

நல்ல விஷயம். அதனால் சண்டைக்கு இடமே இல்லை.

இதை விதண்டாவாதத்திற்காகச் சொல்லாமல் மனப்பூர்வமாகச் சொல்லுகிறீர்கள் என்றே நம்புகிறேன்.

// எல்லாவற்றிலும் பெருமாள் இருப்பதுதானே அழகு. அப்படித்தானே கீதையிலும் சொல்கிறான். எல்லாத் தெய்வங்களிலும் அந்தர்யாமியாக நானே இருக்கிறேன் என்று! //

இங்கே "பெருமாள்" என்பதை பரம்பொருள் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன். அதில்லாமல் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வணங்கும் தெய்வம் என்ற நோக்கில் கொண்டால் "எல்லாவற்றிலும் இருப்பது" என்ற அந்தத் தன்மையே பொய்யாகிவிடும். எல்லாவற்றிலும் இருக்கும் பொருள் எல்லாமாகவுமே இருக்க வேண்டும்!

சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணு
விஷ்ணோ: ஹ்ருதயம் சிவ:

சிவ த்ரோஹி மம தாஸ் கஹாவா (சிவ துரோகி என்னுடைய தாசன் அல்ல) : ஸ்ரீராமன் வாக்காக் துளசி ராமாயணத்தில் வருவது

அத்வைத தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களும், சைவத்தைக் கடைப் பிடிக்கும் பெரும்பாலானவர்களும் இதை உணர்ந்தே பெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபடுகிறார்கள். எத்தனையோ விஷ்ணு பக்தர்களும் சிவன் கோயில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள். அற்புதமாக சிவ விஷ்ணு கோயில்கள் உலகெங்கும் எழுகின்றன.

இது பாராட்டப் பட வேண்டிய, கடைப்பிடிக்கப் படவேண்டிய விஷயம், கேலி செய்யப் படவேண்டிய ஒன்றல்ல; இது ஏதோ சமய, தத்துவத் தெளிவு இல்லாமையால் செய்வது என்பது போன்று நீங்கள் எழுதியது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.

அதனாலேயே விவாதத்திற்காகச் சிலவற்றைச் சொல்ல வேண்டியும் ஆயிற்று.

வாதோ நாவலம்ப்ய: - நாரத பக்தி சூத்திரம்

நா.கண்ணன் 11/29/2006 05:01:00 PM

"இது பாராட்டப் பட வேண்டிய, கடைப்பிடிக்கப் படவேண்டிய விஷயம், கேலி செய்யப் படவேண்டிய ஒன்றல்ல; இது ஏதோ சமய, தத்துவத் தெளிவு இல்லாமையால் செய்வது என்பது போன்று நீங்கள் எழுதியது எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியது"

இது மிகவும் சுவாரசியமான விஷயம். அவதாரங்கள் வடக்கே நடக்கின்றன. ஆச்சார்யர்கள் தெற்கே உதிக்கின்றனர். சமய தத்வத் தெளிவையும் தருகிறார்கள், குழப்பத்தையும் தருகிறார்கள்:-)

தமிழ்நாட்டில் மட்டுமே இந்தச் சண்டை :-)

"இங்கே "பெருமாள்" என்பதை பரம்பொருள் என்பதாகவே எடுத்துக் கொள்கிறேன்"

அதுதான் definition. அப்படித்தான் வியாசர் சொல்கிறார்!

It will be interesting to find out what hurts when 'icons' are interchanged! Why should 'icon' be so important in our lives (to an extent of giving ones life for it?)

வடுவூர் குமார் 11/29/2006 05:14:00 PM

இங்குள்ளதில் பல எனக்கே தெரியாமல்/புரியாமல் இருக்கிறது,இதை எப்படி நான் என் பையனுக்கு கொண்டு போகப்போகிறனோ தெரியவில்லை.
எனினும் ஒரு நல்ல பதிவையும்,ஜடாயு அவர்களின் பின்னூட்டத்தையையும் ஞாபகம் வைத்துக்கொள்ள இந்த பதிவு உதவியது.

நா.கண்ணன் 11/29/2006 05:25:00 PM

"இங்குள்ளதில் பல எனக்கே தெரியாமல்/புரியாமல் இருக்கிறது,இதை எப்படி நான் என் பையனுக்கு கொண்டு போகப்போகிறனோ தெரியவில்லை"

என்னுடைய புதிய கட்டுரையை வாசியுங்கள். எங்கு ஆய்வு இருக்கிறதோ அங்கு துறைகள் தேவை. இந்தியா இந்த விஷயத்தில் பன்னெடும் காலமாக ஆராய்ந்து வருகிறது.

நான் என் பதிவை ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் 'ஆராய்ந்து அருளிய வண்ணம்' (திருப்பாவை) உங்களுக்கு அளித்தேன்.

தத்வத்ரய ரகஸ்யம் என்ன சொல்கிறது என்பதே அத்தொடரின் அடிக்கோடு. நான் சமரச சன்மார்க்கம் என்று பேச வரவில்லை. அது வேறு விஷயம். அதுவும் பேசலாம்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஸ்டைலில் இதை எல்லாம் கிண்டலும் அடிக்கலாம். ஆனால், இப்போதைய என் ருசி ஆழ்வார்களில் நிற்கிறது. அது இனி அசையாது. அப்புட்டுத்தேன்!